டிரூபடோர்கள்—காதல் கவி பாடுவோர் மட்டுமல்லர்
பிரான்ஸிலிருந்து விழித்தெழு! நிருபர்
கபடிரூபடோர்களும் இடம்விட்டு இடம் செல்லும் பாணர்களும்—இந்தச் சொற்கள் உங்களுக்கு எதை ஞாபகப்படுத்துகின்றன? தலைவன்-தலைவிக்கு இடையிலான காதல் பற்றியதும் சான்றோன் பற்றியதுமான கவிதைகளை ஒருவேளை ஞாபகப்படுத்தலாம். நீங்கள் நினைப்பது தவறல்ல; ஆனால், டிரூபடோர்களைப் பற்றி அதைவிட இன்னும் அதிக விஷயம் இருந்தது. அநேகமாய் அவர்கள், கான்ஸோ டாமோர் அல்லது காதல் கவிதைகளுக்கு பிரசித்தி பெற்றவர்களாய்—இவ்வாறாக கைகளில் யாழை ஒத்த இசைக்கருவியை (lute) வைத்துக்கொண்டு, ஏதாவது ஒரு பெண்ணின் பெருமையைப் புகழ்ந்து பாடுவதுபோல் மிகப் பெரும்பாலும் சித்தரிக்கப்பட்டவர்களாய்—விளங்கினாலும், காதல் என்ற விஷயத்தில் மட்டுமே அவர்கள் கரிசனையாய் இல்லை. தங்கள் நாளிலிருந்த சமூக, அரசியல், மத பிரச்சினைகள் பலவற்றில் டிரூபடோர்களுக்கு ஈடுபாடு இருந்தது.
இப்போது தெற்கு பிரான்ஸ் என்று அழைக்கப்படும் பகுதி முழுவதிலும் 12-வது, 13-வது நூற்றாண்டுகளின்போது டிரூபடோர்கள் செழித்து விளங்கினார்கள். அவர்கள், லத்தீனிலிருந்து தோன்றிய உள்ளூர் மொழிகள் அனைத்திலும் மிகவும் நேர்த்தியாய் இருந்த மொழியில் கவிதை இயற்றி இசைப்பவர்களாய் இருந்தனர். அது லேங்டோக் மொழி என அழைக்கப்பட்டது. a கிட்டத்தட்ட இதுவே, லாய்ர் நதிக்குத் தெற்கே அமைந்திருந்த பிரான்ஸ் தேசம் முழுவதிலும், மற்றும் இத்தாலி, ஸ்பெய்ன் நாடுகளின் எல்லைப்பகுதியிலும் பொது மொழியாய் இருந்தது.
“டிரூபடோர்” என்ற வார்த்தை எவ்வாறு தோன்றியது என்பதைப் பற்றி சூடாக விவாதிக்கப்படுகிறது; ஆனால், ஆக்ஸிட்டாண் வினைச்சொல்லான டிரோபார் என்ற பதத்திலிருந்து வந்திருப்பதாகத் தெரிகிறது; இது, “இயற்ற, கண்டுபிடிக்க, அல்லது தேட” என்பவற்றை அர்த்தப்படுத்துகிறது. இவ்வாறாக, டிரூபடோர்களால் தங்களது நேர்த்தியான கவிதைக்கு பொருத்தமான சொல்லையோ அல்லது செய்யுளையோ கண்டுபிடிக்க முடிந்தது. அவர்கள் இயற்றிய காவியங்கள் இசையமைக்கப்பட்டு பாடப்பட்டன. நகருக்கு நகர் பயணிக்கையில், விகடகவிகள் (jongleurs) என்று அழைக்கப்படுபவர்களான தொழில்முறை இசைக் கலைஞர்களுடன் அடிக்கடி செல்பவர்களாய், டிரூபடோர்கள் யாழ், பிடில், புல்லாங்குழல், யாழை ஒத்த இசைக்கருவி (lute) அல்லது கிடார் ஆகிய இசைக்கருவிகளின் துணைகொண்டு பாட்டுப் பாடினர். செல்வந்தர்களின் அரண்மனை அரங்குகளிலும், அதோடு சந்தைவெளிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், விவசாய பொருட்காட்சி அரங்குகள், பண்டிகைகள், விருந்துகள், போன்ற எல்லா சந்தர்ப்பங்களிலும், முறைப்படியான எந்தவொரு பொழுதுபோக்கு சம்பவங்களிலும் இசைநிகழ்ச்சி பொதுவாக இடம்பெற்றது.
வேறுபட்ட பின்னணிகள்
டிரூபடோர்கள் வெவ்வேறு பின்னணிகளிலிருந்து வந்தவர்கள். சிலர் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் பிறந்தவர்கள்; ஒருசிலர் அரசர்கள்; மற்றவர்கள் மிகவும் தாழ்குடியில் பிறந்து டிரூபடோர் என்ற நிலைக்கு முன்னேறியவர்கள். சிலருக்கு பெரிய அந்தஸ்து கிடைத்தது. அநேகர் உயர்கல்வி பயின்று பலபக்கம் பயணித்தவர்கள். அனைவருமே, பெண்பாலாரிடம் காட்டப்படும் பண்பார்வம், நல்லொழுக்கமுள்ள நடத்தை, காவியம், இசை ஆகியவை பற்றிய விதிமுறைகளில் தேர்ந்த பயிற்சி பெற்றவர்கள். ஒரு திறமையான டிரூபடோர், “நடப்புச் செய்தியை நன்கு அறிந்திருக்கவும், பல்கலைக்கழகத்திலுள்ள குறிப்பிடத்தகுந்த ஆய்வுக் கட்டுரை அனைத்தையும் சொல்லத் தெரிந்திருக்கவும், அரச பரம்பரையைச் சேர்ந்தவரைப் பற்றிய புறணிகளைப் பற்றி நன்கு தெரிந்திருக்கவும், . . . ஒரு தலைவன் அல்லது தலைவியைக் கண்டமாத்திரத்தில் அவரைப் புகழ்ந்து பாட்டு இயற்றும் புலமை பெற்றிருக்கவும், அப்போதைக்கு அரசவையில் புழக்கத்திலிருந்த இரண்டு இசைக் கருவிகளையாவது இசைக்கத் தெரிந்திருக்கவும் வேண்டும்” என எதிர்பார்க்கப்பட்டதாக ஒரு தகவல் குறிப்பு தெரிவிக்கிறது.
12-ம் நூற்றாண்டில் வணிகத்துறையில் ஏற்பட்ட முன்னேற்றம், பிரான்ஸின் தெற்குப் பகுதிகளுக்கு மிகுந்த செல்வத்தை ஈட்டித்தந்தது. அந்தச் செல்வ வளத்துடன், ஓய்வெடுத்தல், கல்வி கற்றல், கலை பயிலுவதற்கும் இனிய வாழ்விற்குமான பண்பட்ட விருப்பங்கள் ஆகியவையும் சேர்ந்தன. லேங்டோக் மற்றும் பிராவன்ஸ் மொழியைச் சேர்ந்த பெருந்தலைவர்களும் பெருந்தலைவிகளும் டிரூபடோர்கள் மிகவும் மெச்சிய ஆதரவாளர்களாயினர். அந்தக் கவிஞர்கள் மிகவும் மரியாதைக்குரியவர்களாகக் கருதப்பட்டனர்; உயர்குல ஆட்சியாளர்களது விருப்பம், பாணி, நடத்தைமுறைகள் ஆகியவற்றின்மீது பெருஞ்செல்வாக்கு செலுத்தினர். அவர்களே ஐரோப்பாவின் பால்ரூம் நடனத்தைத் தோற்றுவித்தனர். என்றாலும், த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்வது என்னவென்றால், “அரசகுல தலைவிகளின் மத்தியில், அதுவரை எதுவும் கிட்டவே நெருங்க முடியாத வகையில், பண்பட்ட மற்றும் சுமுகமான ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களுடைய அரும்பெரும் சாதனையாய் இருந்தது.”
பெண்களுக்கு புது மரியாதை
ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு கதவைத் திறந்துவிடும்போது, அவளுடைய கோட்டை மாட்டிக்கொள்ள உதவும்போது, அல்லது நூற்றாண்டுக் காலமாகவே மேற்கு ஐரோப்பாவில் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கும், “பெண்களுக்கு முதலிடம்” என்ற பண்பட்ட செயலின் அநேக முறைகளில் ஏதாவது ஒன்றைச் செய்யும்போது, டிரூபடோர்கள்தான் ஆரம்பித்து வைத்ததாகக் கருதப்படும் ஒரு பழக்கத்தையே அவன் தொடர்ந்து செய்துவருகிறான்.
பெண்ணினத்தின்மீதான இடைக்கால மனோபாவங்கள் பெருமளவில் சர்ச்சின் போதனைகளால் செல்வாக்கு செலுத்தப்பட்டன; ஆண் பாவத்துக்குள் வீழ்ந்ததற்கும் பரதீஸிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கும் பெண்தான் பொறுப்பு என்பதே சர்ச்சின் நோக்குநிலை. அவள் ஒரு சோதனைக்காரியாகவும், பிசாசின் ஒரு கருவியாகவும், தவிர்க்கமுடியாத ஒரு தீங்காகவுமே கருதப்பட்டாள். திருமணம் வாழ்க்கையின் ஒரு மட்டமான நிலையென பொதுவாக கருதப்பட்டது. சர்ச் சட்டம், மனைவியை அடிப்பதையும் விலக்குவதையும் அனுமதித்தது; இவ்வாறு பெண்கள் தாழ்த்தப்படுவதற்கும் அடக்கியாளப்படுவதற்கும் வழிவகுத்தது. கிட்டத்தட்ட எல்லா விதங்களிலும், பெண் ஆணைவிட மட்டமானவளாகவே கருதப்பட்டாள். ஆனால், டிரூபடோர்களின் தோற்றம், ஆண்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்த ஆரம்பித்தன.
முதன்முதலில் டிரூபடோர் என அறியப்பட்டவர் ஒன்பதாம் உவில்லியம்; இவர் அக்வட்டேன் சாம்ராஜ்யத்தின் சிற்றரசர். முதன்முதலாக இவருடைய காவியத்தில்தான் அன்பைப் பற்றிய டிரூபடோர்களின் தனிக்கருத்தை விவரித்த அம்சங்கள் அடங்கியிருந்தன; இதுவே தலைவன்-தலைவிக்கு இடையிலான காதல் என அழைக்கப்படலாயிற்று. பிராவன்ஸ் மொழி கவிஞர்களே அதை வரெயாமோர் (மெய்க் காதல்) அல்லது ஃபினாமோர் (இனிய காதல்) என்று அழைத்தனர். பெண் ஆணுக்கு முற்றிலும் தாழ்ந்தவள் என்ற ஒரு நிலையில் அவளை வைத்திராத விஷயத்தில் அது புரட்சிகரமாய் இருந்தது.
டிரூபடோர் காவியம் பெண்களின்மீது பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் மரியாதையையும் ஏற்படுத்தியது. அவளே உயர்ந்த மற்றும் நற்குணங்களின் உருவமானாள். சில பாடல்கள், வியந்துபாடும் அந்தக் கவியின்பால் தலைவியின் அசட்டை மனப்பான்மையைப் பற்றி புலம்பின. கொள்கையளவிலாவது, டிரூபடோர்களின் காதல் கற்புடன் நிலைத்திருக்க வேண்டியதாய் இருந்தது. அவனது முதன்மையான இலட்சியமானது, அந்தத் தலைவியை அடைய வேண்டும் என்பதற்கு மாறாக, அவள்மீது அவன் கொண்டிருந்த காதல் அவனுக்குள் ஏவின ஒழுக்கத் தூய்மையே. நாட்டம் கொண்ட கவிஞன், தன்னை தகுதியுள்ளவனாய் ஆக்குவதற்காக, தாழ்மையையும், இச்சையடக்கத்தையும், பொறுமையையும், உண்மைத்தன்மையையும் அதோடு எல்லா உயர்ந்த குணங்களையும் வளர்த்துக்கொள்ள வற்புறுத்தப்பட்டான். இவ்வாறு, ஆண்களில் மிகவும் அசிங்கத்தனமாய் இருந்தவரும்கூட காதலால் மாற்றமடைய முடிந்தது.
தலைவன்-தலைவி காதல், சமூக மற்றும் ஒழுக்க தூய்மையின் மூலகாரணமாய் இருப்பதாகவும், பண்பான செயல்களும் உயர்ந்த எண்ணங்கொண்ட நடத்தைகளும் காதலில் இருந்தே தொடங்கினவென்றும் டிரூபடோர்கள் நம்பினர். இந்தக் கருத்து வளர்ச்சியடையவே, நடத்தையின் முழு விதிமுறைக்கும் இது அடிப்படையானது. இதுவே, காலப்போக்கில், சமுதாயத்திலுள்ள பொதுமக்களின் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒழுக்கயீனமான, மிருகத்தனமான பிரபுத்துவ சமுதாயத்துக்கு முரணாக, ஒரு புதிய வாழ்க்கைமுறை ஆரம்பித்திருந்தது. பெண்கள் இப்போது தங்களுக்குத் தெரிந்த ஆண்களை சுயதியாகமுள்ளவர்களாக, கரிசனையுள்ளவர்களாக, தயவுள்ளவர்களாக—நற்பண்புகளுள்ள மனிதராக—இருக்கும்படி எதிர்பார்த்தனர்.
விரைவிலேயே, ஐரோப்பாவின் பெரும்பகுதியில் டிரூபடோர்களின் கலை கற்றுக்கொள்ளப்பட்டது. அவற்றின் கருப்பொருட்களையே ஸ்பெய்னும் போர்த்துகலும் தழுவின. வட பிரான்ஸில் டிரூவர்களும், ஜெர்மனியில் மினிஸிங்கர்களும், இத்தாலியில் டிரோவாட்டோரிகளும் உருவாயினர். டிரூபடோர்களின் தலைவன்-தலைவி காதலைக் குறித்துக்காட்டும் கருப்பொருளும் சான்றோனின் கருத்துக்களும் சேர்ந்துதான் ரொமான்ஸ் எனப்படும் ஓர் இலக்கியப் பாணி தோன்றியது. b உதாரணமாக, தலைவன்-தலைவி காதல் லட்சியத்தை, கெல்டிக் பிரிட்டானி புராணங்களோடு சேர்த்து, தயாளகுணம், பலவீனரைப் பாதுகாத்தல் ஆகிய நற்பண்புகளை வலியுறுத்தும் ஆர்தர் அரசனும் வட்ட மேஜை வீரப்பெருந்தகைகளும் பற்றிய கட்டுக்கதைகளில் உச்சக்கட்டமாக்கி வழங்கியுள்ளார் டிரூவர் கிரேட்யென் டிரவா.
சமூகத்தில் அவர்களுடைய பாதிப்பு
டிரூபடோர் பாட்டுகளில் பெரும்பாலானவை தலைவன்-தலைவி காதலின் நற்பண்புகளை மெச்சினாலும், மற்றவை அக்காலத்து சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளையும் எடுத்துக்காட்டின. டிரூபடோர்கள், ‘தங்களது காலத்தில் வாழ்ந்தவர்களை குழுக்களாகப் பிரிக்கும் போராட்டத்தில் சுறுசுறுப்பாய் பங்கேற்றனர்; மேலும் டிரூபடோர்கள் இயற்றிய இசையின் மூலமாக, அபிப்பிராய பேதம்கொண்ட பிரிவுகளில் இதுவோ அல்லது அதுவோ வெற்றிபெறவும்கூட உதவினர்’ என லா வையே ஏ லேப்பே (பிடிலும் வாளும்) என்ற பிரெஞ்சு புத்தகத்தின் ஆசிரியரான மார்ட்டண் ஓரெல் என்பவர் விளக்கினார்.
இடைக்கால சமுதாயத்தில் டிரூபடோர்களின் தனித்தன்மை வாய்ந்த நிலைகுறித்து கருத்து தெரிவிப்பவராய், ராபர்ட் ஸெபாட்டியர் கூறுவதாவது: “கவிஞர்களுக்கு முன்பு ஒருபோதும் இந்தளவுக்கு பெரும் அந்தஸ்து வழங்கப்படவில்லை; எவருக்குமே முன்பு ஒருபோதும் இந்தளவுக்கு பேச்சு சுயாதீனம் கிடைத்ததில்லை. அவர்கள் மெச்சினர், சாடினர்; மக்களின் சார்பில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்; அரசியல் கொள்கைகளின்மீது செல்வாக்கு செலுத்தினர்; புதிய கருத்துக்களைக் கடத்தும் ஊடகமாகவும் ஆயினர்.”—லா பாயேஸீ டூ ம்வாயன் ஆஜ்.
அவர்களது நாளைய செய்தி பரப்பாளர்
அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு வெகுகாலத்துக்கு முன்பு, டிரூபடோர்களும் இடம்விட்டு இடம்செல்லும் பிற இசைக் கலைஞர்களும் அவர்களது நாளைய செய்தி பரப்பாளர்களாக விளங்கினர் என்று நன்றாகவே சொல்லப்படலாம். இடைக்கால இசைக் கலைஞர்கள் சர்வதேச அளவில் பயணித்தனர். ஐரோப்பாவின் அரசவைகள் முழுவதிலும்—சைப்ரஸ் முதல் ஸ்காட்லாந்து வரை, மற்றும் போர்த்துகல் முதல் கிழக்கு ஐரோப்பா வரை, அவர்கள் சென்ற இடமெங்கும்—செய்திகளைத் திரட்டினர்; கதைகள், இனிய கீதங்கள், பாடல்கள் ஆகியவற்றை பரிமாற்றம் செய்துகொண்டனர். பாடிக்காட்டுவதன் மூலம் ஒரு விகடகவியிடமிருந்து மற்றொரு விகடகவிக்கு தீவிரமாய் பரவினதாய், டிரூபடோர்களுடைய பாடல்களின் இனிய ராகங்கள் மக்களால் கற்றுக்கொள்ளப்பட்டன; இவ்வாறு, பொதுமக்களுடைய கருத்தின்மீது மிகுதியான செல்வாக்கு செலுத்தி, ஏதாவது ஓர் இயக்கத்தில் ஈடுபடும்படி அவர்களைத் தூண்டின.
டிரூபடோர்களால் பயன்படுத்தப்பட்ட கவிதை நடைகள் பலவற்றில் ஒன்று, ஸிர்வன்ட்ட என்று அழைக்கப்படுகிறது; இதன் நேர்ப்பொருள் “தொண்டனின் பாடல்” என்பதாகும். இவற்றுள் சில பாடல்கள் ஆட்சியாளர்களின் அநீதியை அம்பலப்படுத்தின. பிற பாடல்கள் வீரம், சுயதியாகம், தயாளகுணம், இரக்கம் ஆகியவற்றை வெளிக்காட்டும் செயல்களை மெச்சின; அதே சமயத்தில் மிருகத்தனமான கொடுமை, கோழைத்தனம், மாய்மாலம், சுயநலம் ஆகியவற்றை வெளிக்காட்டும் செயல்களை இகழ்ந்தன. 13-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தைச் சேர்ந்த ஸிர்வன்ட்டகள், பேரெழுச்சியின்போது இருந்த லேங்டோக்கின் அரசியல் மற்றும் மத சூழலைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள வரலாற்று வல்லுநர்களுக்கு உதவின.
சர்ச்சின் இகழ்ந்துரை
சிலுவைப்போர்களில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, கத்தோலிக்க சர்ச்சின் ஆன்மீக மற்றும் உலகியல் அதிகாரத்தைக் குறித்து பலர் சந்தேகிக்க ஆரம்பித்தனர். தாங்கள் கிறிஸ்துவைப் பிரதிநிதித்துவம் செய்வதாக குருமார்கள் சொல்லிக்கொண்டனர்; ஆனால் அவர்களுடைய செயல்களோ நிச்சயமாகவே கிறிஸ்துவுடையதைப் போல் இல்லை. அவர்களுடைய மாய்மாலம், பேராசை, ஊழல் ஆகியவை அனைவருக்கும் அம்பலமாயின. எப்பொழுதுமே அதிக செல்வத்தையும் அரசியல் அதிகாரத்தையும் நாடி, சர்ச் பிஷப்புகளும் பாதிரிமார்களும் பணக்காரரை திருப்திப்படுத்த முயன்றனர். அவர்கள் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கங்களின் ஆன்மீக தேவைகளை அசட்டை செய்ததானது, அபிப்பிராய பேதங்கள் எழும்பியதைத் தடுக்கமுடியவில்லை.
லேங்டோக்கில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அநேகரும், அரசகுலத்தைச் சேர்ந்தவர்களும் கற்றறிந்த சான்றோராய் இருந்தனர். 12-ம் நூற்றாண்டு சர்ச், “அது பின்பற்றுவதாக சொல்லிக்கொள்ளும் பூர்வ சர்ச்சின் முன்னுதாரணத்திலிருந்து மிகவும் வேறுபட்டிருந்தது” என்ற விஷயம், கற்றறிந்த பாமரனுக்குத் தெரியவந்தது என சரித்திர வல்லுநர் எச். ஆர். டிரவர்-ரோப்பர் குறிப்பிட்டார். பலர் எவ்விதம் நினைக்க ஆரம்பித்தனர் என்பதைப் பற்றி அவர் தொடர்ந்து சொன்னதாவது: “கான்ஸ்டன்டைனுக்கு முன்பிருந்த, அரசு அங்கீகாரம் பெறாததும், அப்போஸ்தலரதும் . . . துன்புறுத்தலுக்கு உள்ளானதுமான சபை, இன்னும் எவ்வளவு வேறுபட்டதாய் இருந்தது; அது, போப் அல்லது பிரபுத்துவ முறையிலான பிஷப்புகள் இல்லாததாயும், பெருவாரியான வருமானம் இல்லாததாயும், பேய்த்தன கோட்பாடுகள் இல்லாததாயும், அதன் செல்வத்தையும் அதிகாரத்தையும் அதிகரிக்க வேண்டி இயற்றும் புதுப்புது சட்டங்கள் இல்லாததாயும் இருந்த ஒரு சர்ச்!”
லேங்டோக், சகிப்புத்தன்மைமிக்க ஒரு நாடாகும். டௌலூஸின் சிற்றரசர்களும் பிற தெற்கத்திய ஆட்சியாளர்களும் மக்களுக்கு மத சுயாதீனத்தை அனுமதித்தனர். வால்டென்ஸஸ்கள், c லேங்டாக் மொழியில் பைபிளை மொழிபெயர்த்திருந்தனர்; அதை ஆர்வத்துடன் இரண்டிரண்டு பேராக அந்தப் பகுதி முழுவதிலுமாக பிரசங்கித்தனர். காத்தரிகளும் (அல்பிஜென்சியர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்) தங்கள் கொள்கைகளை பரப்பி, அரசகுலத்தோர் மத்தியில் மதம் மாறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்படியும் செய்தனர்.
டிரூபடோர்களின் ஸிர்வன்ட்டகளில் பல, கத்தோலிக்க குருவர்க்கத்திடம் மக்கள் அடைந்த ஏமாற்றத்தையும், அதன் மீதான அவமரியாதையையும் அருவருப்பையும் படம்பிடித்துக்காட்டின. கீ ட காவாயாண் என்ற ஸிர்வன்ட்ட, மிகுதியான உலகப்பிரகாரமான அக்கறைகளுக்காக, ‘தங்கள் முதன்மை தொழிலை துறந்திருப்பதற்காக’ குருவர்க்கத்தைச் சாடுகிறது. டிரூபடோர்களின் பாடல் வரிகள் நரக அக்கினி, சிலுவை, பாவ சங்கீர்த்தனம், “தீர்த்தம்” ஆகியவற்றை பரிகாசம் செய்தன. அவை பாவமன்னிப்பு வழங்குவதையும் புனித சிலைகளையும் பற்றி கேலி செய்தன; ஒழுக்கக்கேடான பாதிரிகளையும் ஊழல் செய்யும் பிஷப்புகளையும், “களவாணிகள், பொய்யர்கள், மாய்மாலக்காரர்கள்” என்றெல்லாம் எள்ளி நகையாடின.
சுதந்திரத்துக்கு எதிராக சர்ச்சின் போராட்டம்
என்றாலும், ரோமன் சர்ச், தன்னைத்தான் எல்லா பேரரசுக்கும் அரசுக்கும் மேலானதாக கருதியது. போர் அதன் அதிகார ஆயுதமானது. மூன்றாம் போப் இன்னொஸன்ட், இளவரசர்களை அடிபணியச் செய்து, பிரான்ஸின் தென் ஆதிக்கத்திலுள்ள எல்லா அபிப்பிராய பேதத்தையும் நசுக்கும் எந்தவொரு படைக்கும் லேங்டோக் சமுதாயத்தினுடைய அனைத்துச் செல்வத்தையும் அளிக்கப்போவதாக உறுதியளித்தார். அதைத் தொடர்ந்துவந்தது, பிரான்ஸின் வரலாற்றிலேயே சித்திரவதையையும் கொலையையும் உள்ளடக்கிய மிக அதிக இரத்தஞ்சிந்துதல் நிறைந்த காலப்பகுதியே. அது அல்பிஜென்சியர்களின் சிலுவைப்போர் (1209-29) என அறியப்படலாயிற்று. d
டிரூபடோர்கள் அதை பொய் சிலுவைப்போர் என அழைத்தனர். சர்ச் அபிப்பிராய பேதம் கொண்டோரை கொடுமைப்படுத்தினதற்காகவும், பிரெஞ்சுக்காரரைக் கொன்றபிறகு, கிறிஸ்தவத்தை எதிர்ப்பவரென கருதப்பட்ட முஸ்லிம்களைக் கொன்றதற்கு செலுத்திய அதே பாவமன்னிப்பு காணிக்கையைச் செலுத்தினதற்காகவும், அவர்கள் தங்கள் பாடல்களின் மூலமாக கோபத்தை வெளிக்காட்டினர். அல்பிஜென்சியர்களின் சிலுவைப்போரின்போதும், அதைத் தொடர்ந்துவந்த ஒடுக்குமுறை விசாரணையின்போதும் சர்ச் செழித்தோங்கியது. குடும்ப சொத்துகள் பறிக்கப்பட்டன; அவற்றின் நிலமும் வீடுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
காத்தாரி சமயபேதக்காரர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டவர்களாய், பெரும்பாலான டிரூபடோர்கள் பகைமை குறைவாய் இருந்த நாடுகளுக்கு ஓடி அங்கே தஞ்சம் புகுந்தனர். இந்தச் சிலுவைப்போர் ஆக்ஸிட்டாண் நாகரிகத்துக்கும், அதன் வாழ்க்கைமுறைக்கும், அதன் காவியத்துக்கும் முடிவைக் கொண்டுவந்தது. ஒடுக்குமுறை விசாரணை சட்டமானது, ஒரு டிரூபடோரின் பாடலைப் பாடுவதையோ, அதை முணுமுணுப்பதையோகூட சட்டவிரோதமாக்கியது. ஆனால் அவர்கள் விட்டுச்சென்றவையோ தொடர்ந்தன. உண்மையிலேயே, மதகுருக்களுக்கு எதிரான அவர்களின் கவிதைகள், மறுமலர்ச்சி அடையவிருந்தவற்றை ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்துக்கு அடிகோலின. மெய்யாகவே, தங்களுடைய காதல் கவிதைகளைக் காட்டிலும் அதிகமானவற்றுக்காக டிரூபடோர்கள் நினைவுகூரப்படலாம்.
[அடிக்குறிப்புகள்]
a ரோம படைவீரர்களிடமிருந்து பெறப்பட்ட லத்தீன் மொழியே ரோமன் என்று அழைக்கப்பட்டது; இது அந்தச் சமயத்திற்குள் பிரான்ஸில் இரண்டு உள்ளூர் கிளை மொழிகளாக வளர்ந்திருந்தது; ஒன்று, பிரான்ஸின் தெற்குப் பகுதியின் லேங்டோக் மொழி (ஆக்ஸிட்டாண் அல்லது பிராவன்கல் என்றும் அழைக்கப்பட்டது); மற்றொன்று, பிரான்ஸின் வடக்குப் பகுதியின் (பழைய பிரெஞ்சு என்று சில சமயங்களில் அழைக்கப்பட்ட பிரெஞ்சு மொழியின் ஆரம்ப வடிவமான) லேங்டோயல் மொழி. இவ்விரு மொழிகளும், ஆம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினதில் ஒன்றுக்கொன்று வேறுபட்டன. தெற்கில் அது ஆக் (லத்தீன் ஹாக்-ல் இருந்து பிறந்த சொல்) எனவும்; வடக்கில், ஆயல் (லத்தீன் ஹாக் இலி-ல் இருந்து பிறந்த சொல்) எனவும் சொல்லப்பட்டன; அதுவே நவீன பிரெஞ்சின் வீ என்றானது.
b வட அல்லது தென்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மொழியில் எழுதப்பட்ட எந்தவொரு இலக்கியமும் ரோமன் என்று அழைக்கப்பட்டது. இந்த சான்றாண்மை கதைகளைப் பற்றிய அநேக கதைகளில் தலைவன்-தலைவி காதல் உணர்வு கலந்துவந்ததால், அவை ரொமான்ஸ் அல்லது ரொமான்டிக் என்று கருதப்பட்ட எல்லா இலக்கியங்களுக்கும் அடிப்படையானது.
c உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட ஆங்கில காவற்கோபுரம், ஆகஸ்ட் 1, 1981, பக்கங்கள் 12-15-ஐக் காண்க.
d காவற்கோபுரம், செப்டம்பர் 1, 1995, பக்கங்கள் 27-30-ஐக் காண்க.
[பக்கம் 18-ன் படங்களுக்கான நன்றி]
பிரிண்டரின் வேலைப்பாடுகள் /by Carol Belanger Grafton/Dover Publications, Inc.
Bibliothèque Nationale, Paris
[பக்கம் 19-ன் படம்]
12-ம் நூற்றாண்டு கையெழுத்துப் பிரதியிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சித்திரம்
[படத்திற்கான நன்றி]
Bibliothèque Nationale, Paris