தாகமுள்ள அனைவரையும் அழையுங்கள்
1 இன்றைய மனித குடும்பம், ‘தண்ணீருக்கான தாகத்தால் அல்ல, ஆனால் யெகோவாவின் வார்த்தைகளைக் கேட்க வேண்டுமென்பதற்கான தாகத்தால்’ வாடிவதங்குகிறது; இதைத்தான் தீர்க்கதரிசியாகிய ஆமோஸ் முன்னறிவித்தார். (ஆமோ. 8:11, NW) ஆவிக்குரிய விதத்தில் வறட்சியான இந்த நிலைமையில் இருக்கும் மக்களுக்கு உதவ, கீழ்ப்படிதலுள்ள மனிதர்களை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்பதற்கான கடவுளது ஏற்பாடுகளைக் குறித்து அவர்களுக்கு சொல்கிறோம்; அவற்றை ‘ஜீவத்தண்ணீருள்ள நதி’ என்பதாக வெளிப்படுத்துதலின் கடைசி அதிகாரம் சித்தரிக்கிறது. நீதிக்காக தாகமுள்ள அனைவரையும், ‘ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்வதற்கு’ அழைக்கும் சிலாக்கியத்தை நாம் பெற்றுள்ளோம். (வெளி. 22:1, 17) இதை நாம் எவ்வாறு பிப்ரவரியில் செய்யலாம்? நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை, அல்லது பாதி விலைக்கோ விசேஷ விலைக்கோ கொடுக்க ஒதுக்கப்பட்டுள்ள பழைய பிரசுரங்கள் எவற்றையாவதை அளிப்பதன் மூலமே. இந்தப் புத்தகங்கள் எதுவும் உள்ளூர் மொழியில் கிடைக்காதபோது, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு அல்லது குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் அளிக்கப்படலாம். இந்தப் பிரசங்கங்களை நீங்கள் முயற்சி செய்ய விரும்பலாம்:
2 உடல்நல விஷயங்களில் அநேகர் அக்கறை காண்பிப்பதால், இந்த அணுகுமுறையை நீங்கள் பலனளிப்பதாய் காணலாம்:
◼ “தரமான உடல்நல பராமரிப்பிற்கான செலவு அதிகரித்துவருவதைக் குறித்து அநேகர் கவலைகொள்கின்றனர். ஒருவேளை நீங்களும் இதைப் பற்றி கொஞ்சம் சிந்தித்திருக்கலாம். [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு இருக்கிறதா? [பதிலுக்கு காத்திருங்கள்.] ஒரு அற்புத நம்பிக்கை இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.” வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐ வாசியுங்கள். அதன்பின் என்றும் வாழலாம் புத்தகத்தில் பக்கம் 162-ல் உள்ள படத்தைக் காட்டி, அதை விளக்குவதற்கு 164-ம் பக்கத்திலுள்ள பாராக்கள் 17 மற்றும் 18-ஐ பயன்படுத்துங்கள். இப்படிச் சொல்லி முடியுங்கள்: “இப்படிப்பட்ட நிலைமைகள் எப்படி, எப்போது வரும் என்பதை இந்தப் பிரசுரம் கலந்தாலோசிக்கிறது.” புத்தகத்தை அளித்து, மறுசந்திப்பிற்கு ஏற்பாடுகள் செய்யுங்கள்.
3 மறுசந்திப்பு செய்கையில், இப்படிச் சொல்லி நீங்கள் கலந்தாலோசிப்பைத் தொடரலாம்:
◼ “சென்ற முறை நான் இங்கு வந்தபோது, உடல்நலப் பிரச்சினைகளுக்கான ஒரு நிரந்தரத் தீர்வைப் பற்றி பேசினோம். எவருமே வியாதிப்படாத ஒரு காலம் வரும் என நீங்கள் நினைக்கிறீர்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] கருத்தைக் கவரும் இந்த வாக்கியத்தைக் கவனியுங்கள்.” ஏசாயா 33:24-ஐ வாசிக்கவும். அதன்பின் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் பாடம் 5-க்குத் திருப்பி 5-6 பாராக்களை கலந்தாலோசியுங்கள்; பாடத்தின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள அவற்றிற்கான கேள்விகளைக் கேட்டு, அங்கு குறிப்பிடப்பட்டுள்ள வசனங்கள் சிலவற்றை எடுத்துக் காட்டுங்கள். வியாதியையும் மரணத்தையும் நீக்குவது, பூமியைக் குறித்ததில் கடவுளுடைய ஆரம்ப நோக்கத்தினுடைய நிறைவேற்றத்தின் பாகமாக இருக்கிறது என்பதை குறிப்பிடுங்கள். அதே பாடத்தில் பாராக்கள் 1-4-யும் 7-ஐயும் கலந்தாலோசிப்பதற்காக மீண்டும் செல்ல ஏற்பாடு செய்யுங்கள்.
4 அகால மரணத்தைக் குறித்த ஒரு சமீப செய்தி மக்களின் மனங்களை ஆக்கிரமித்திருந்தால், இந்த அணுகுமுறையை நீங்கள் முயற்சிக்கலாம்:
◼ “நீங்கள் இதை [சம்பவத்தைக் குறிப்பிடுங்கள்] பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். வருத்தமளிக்கும் விதத்தில், வாழ்க்கை திடீரென முடிவடைகையில், இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் அளிப்பதென அநேகர் யோசிக்கின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” பதில் சொல்ல அனுமதியுங்கள். அதன்பின் அறிவு புத்தகத்தில் 86-ம் பக்கத்திற்குத் திருப்பி உயிர்த்தெழுதலைப் பற்றிய படத்தை காண்பியுங்கள். இப்படிச் சொல்லி தொடருங்கள்: “நீதிமான்களும், அநீதிமான்களும் பூமியில் பரதீஸில் வாழ மீண்டும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்பதை கற்றுக்கொள்கையில் அநேகர் ஆச்சரியப்படுகின்றனர். [87-ம் பக்கத்தில் 17-ம் பாராவில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் அப்போஸ்தலர் 24:15-ஐ வாசியுங்கள்; அதன்பின் அந்தப் பாராவில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தை அளியுங்கள்.] எதிர்காலத்தைக் குறித்த கடவுளது நோக்கத்தைப் பற்றி இன்னுமதிக ஆர்வமூட்டும் விவரங்களை இந்தப் புத்தகம் கலந்தாலோசிக்கிறது. நீங்கள் ஒரு புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு அதை வாசிக்குமாறு உற்சாகப்படுத்துகிறேன்.” மீண்டும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்; அந்த நபர் குறிப்பாக எவற்றில் அக்கறையையும் ஆர்வத்தையும் காண்பித்தார் என்பதை குறித்துவைத்துக்கொள்ளுங்கள்.
5 மறுபடியும் சந்திக்கையில், வீட்டுக்காரருக்கு ஏற்ப உங்கள் பிரசங்கத்தை மாற்றியமையுங்கள். ஒருவேளை இப்படிச் சொல்லலாம்:
◼ “சென்ற முறை நாம் பேசியபோது, பூமிக்குரிய கடவுளது நோக்கத்தைப் பற்றியதில் நீங்கள் சொன்ன ஒரு குறிப்பு எனக்கு பிடித்திருந்தது. [அந்தக் குறிப்பை மறுபடியும் சொல்லுங்கள்.] உங்களுக்காக சில தகவலைப் பார்த்துவைத்தேன், அது உங்களுக்கு ஆர்வமளிக்கும் என நினைக்கிறேன்.” தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் 5-ம் பாடத்திற்குத் திருப்புங்கள். அந்தப் பாடத்திலுள்ள பாராக்களை, வீட்டுக்காரரின் ஆர்வத்தைப் பொறுத்து, எவ்வளவு முடியுமோ அவ்வளவை வாசித்து கலந்தாலோசியுங்கள். பாடத்தைத் தொடர்ந்து கலந்தாலோசிப்பதற்கு, அடுத்த சந்திப்பிற்கான நேரத்தை தீர்மானித்தபின், சபைக் கூட்டங்கள் நடக்கும் நேரத்தைக் காண்பிக்கும் கைப்பிரதியை வீட்டுக்காரரிடம் கொடுங்கள். பொதுக் கூட்டத்தைப் பற்றி விளக்கமளித்து, அதில் கலந்துகொள்ளும்படி அவரை அழையுங்கள்.
6 பழைய புத்தகங்களை அளிக்கையில், ஒரு துண்டுப்பிரதியை உபயோகித்து எளிய பிரசங்கத்தை அளிக்க நீங்கள் விரும்பினால் இப்படிச் சொல்லலாம்:
◼ “சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை என்ற துண்டுப்பிரதியை உங்களுக்கு கொடுக்க விரும்புகிறேன்.” வீட்டுக்காரரிடம் கொடுத்து, முதல் பாராவை நீங்கள் வாசிக்கையில் அதைக் கவனிக்குமாறு அவரிடம் சொல்லுங்கள். அங்கே எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க அவரை அனுமதியுங்கள். இரண்டாவது பாராவை வாசித்து, எந்தப் புத்தகத்தை அளிக்கவிருக்கிறீர்களோ அதில் பரதீஸை சித்தரிக்கும் படத்தை காண்பியுங்கள். இப்படிச் சொல்லி தொடருங்கள்: “எதிர்காலத்தைப் பற்றி பைபிள் அளிக்கும் அற்புதமான வாக்குறுதிகளை இந்தப் புத்தகம் இன்னுமதிகமாக விவரிக்கிறது.” புத்தகத்தை அளித்து மறுசந்திப்பிற்காக ஏற்பாடு செய்யுங்கள்.
7 மற்றவர்களுக்கு நாம் விடுக்கும் கனிவான அழைப்பு, ஜீவத்தண்ணீரிடம் வருவதற்கு அவர்களை வழிநடத்தலாம்; இத்தண்ணீரை யெகோவா இன்று கிடைக்கச் செய்கிறார். ஆகவே, தாகமுள்ள அனைவரிடமும், “வாருங்கள்!” என சொல்வோமாக.—வெளி. 22:17, NW.