கேள்விப் பெட்டி
◼ சபைக் கூட்டங்களில், கற்றுக்கொள்வதற்கேற்ற சூழல் நிலவுவதற்கு ஒவ்வொருவரும் எப்படிப் பங்களிக்கலாம்? (உபா. 31:12)
யெகோவா மீதும் அவர் ஏற்பாடு செய்துள்ள சபைக் கூட்டங்கள் மீதும் நாம் ஆழ்ந்த மரியாதை காட்ட வேண்டும். இதற்காக, கூட்டங்களுக்குச் சீக்கிரமாக வரும்படியும் அவரால் கற்பிக்கப்படுவதற்குத் தயாராய் இருக்கும்படியும் நாம் அனைவரும் உற்சாகப்படுத்தப்படுகிறோம். சிறு குழந்தைகளை வைத்திருப்பவர்களுக்கும் எப்போதாவது தாமதமாக வருபவர்களுக்கும் பின்புற இருக்கைகளை விட்டுவிட்டு, முன்புற இருக்கைகளில் உட்காருவது உதவியாய் இருக்கும். கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன், செல்ஃபோன், பேஜர் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களால் சபையாருக்கு இடையூறு ஏற்படாதபடி அவற்றை அட்ஜஸ்ட் செய்து வைக்க வேண்டும். சபையார் அனைவரும் கூட்டம் முடியும் வரையில் பயபக்தியான மனநிலையோடு இருந்தால், பெரியளவில் இடையூறுகள் எதுவும் ஏற்படாது.—பிர. 5:1; பிலி. 2:4.
புதியவர்கள் கூட்டங்களுக்கு வர ஆரம்பிக்கையில், அவர்களுக்குப் பரிச்சயமான ஒருவர் அவர்கள் பக்கத்தில் உட்கார முன்வரலாம். முக்கியமாக, பயிற்றுவிக்க வேண்டிய சிறு பிள்ளைகள் இருந்தால் அப்படிச் செய்வது மிகுந்த பயனளிக்கும். கூட்டங்களில் கலந்துகொள்வது அக்குடும்பத்தாருக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கலாம். அப்படியானால், பின்புறத்தில் உட்காருவது அவர்களுக்கு மிக வசதியாக இருக்கலாம்; ஏனென்றால், சின்னஞ் சிறுசுகளின் தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்காக இடையிடையே அவர்கள் மன்றத்தைவிட்டுச் செல்லும்போது மற்றவர்களுக்கு அது தொந்தரவாக இருக்காது. (நீதி. 22:6, 15) சிறு பிள்ளைகளை உடைய குடும்பத்தார் மன்றத்தின் தனி அறையில் உட்காரக் கூடாது; அப்படிச் செய்தால், இஷ்டம்போல் சத்தம் போடலாம் என பிள்ளைகள் நினைத்துக்கொள்வார்கள். பிள்ளைகளைக் கண்டிக்க அல்லது அவர்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்ள வெளியே அழைத்துச் சென்றாலும் மீண்டும் மெயின் ஹாலுக்கு அவர்களை அழைத்து வருவது நல்லது.
வழிபாட்டிற்கேற்ற சூழல் நிலவும்படி பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அட்டன்டென்டுகளுக்கு உள்ளது. பிள்ளைகளை உடைய குடும்பத்தாரையும் எப்போதாவது தாமதமாக வருவோரையும் பொருத்தமான இருக்கைகளில் உட்கார வைப்பதற்கு அவர்கள் உதவுகிறார்கள். எவ்வித கவனச்சிதறல்களும் இல்லாமல் வசதியாக உட்கார மற்றவர்களுக்கு உதவுகையில் சாதுரியமாகவும் விவேகமாகவும் நடந்துகொள்ள அட்டன்டென்டுகள் கவனமாக இருக்கிறார்கள். எதிர்பாராத தொந்தரவுகளை அவர்கள் சாமர்த்தியமாகச் சமாளிக்கிறார்கள். ஒரு குழந்தை மற்றவர்களுக்குத் தொல்லை உண்டாக்கினால், பிரச்சினையைச் சரிசெய்ய அவர்கள் அன்புடன் உதவுகிறார்கள்.
கூட்டங்களுக்கு வருகிற அனைவருமே, யெகோவாவைக் குறித்தும் நீதியுள்ள சமாதானமான புதிய உலகைப் பற்றிய அவருடைய நோக்கத்தைக் குறித்தும் கற்றுக்கொள்வதற்கேற்ற சூழல் நிலவுவதற்குப் பங்களிக்கலாம்.—எபி. 10:24, 25.