-
1 ராஜாக்கள் 7:15-22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 அவர் இரண்டு செம்புத் தூண்களை வார்த்தார்.+ ஒவ்வொரு தூணும் 18 முழ உயரமாக இருந்தது. ஒவ்வொரு தூணையும் அளவுநூலால் அளந்தபோது அதன் சுற்றளவு 12 முழமாக இருந்தது.+ 16 தூண்களின் உச்சியில் வைப்பதற்காக இரண்டு செம்புக் கும்பங்களை வார்த்தார். ஒவ்வொரு கும்பத்தின் உயரமும் ஐந்து முழம். 17 ஒவ்வொரு தூணின் உச்சியிலும் இருந்த கும்பத்தில் முறுக்குச் சங்கிலிகளால் ஆன வலைப்பின்னல் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது.+ ஒவ்வொரு கும்பத்திலும் ஏழு வலைப்பின்னல்கள் இருந்தன. 18 தூண்களின் மீதிருந்த அந்தக் கும்பங்களை அழகுபடுத்துவதற்காக, அவற்றின் மேலிருந்த ஒரு வலைப்பின்னலைச் சுற்றிலும் மாதுளம்பழ வடிவங்களை இரண்டு வரிசையாகச் செய்து வைத்தார். இன்னொரு தூணிலும் இதேபோல் செய்துவைத்தார். 19 நுழைவு மண்டபத்தின் முன்னால் இருந்த தூண்களின் மேலே அமைக்கப்பட்ட அந்தக் கும்பங்களில் நான்கு முழ உயரத்துக்கு லில்லிப் பூ வடிவத்தைச் செய்தார். 20 கும்பத்தின் இந்தப் பகுதி அந்த இரண்டு தூண்களின் மேல் இருந்தது, வலைப்பின்னல்களை ஒட்டியிருந்த வட்டமான அடிப்பகுதியைத் தொட்டபடி இருந்தது. ஒவ்வொரு கும்பத்தைச் சுற்றிலும் வரிசையாக 200 மாதுளம்பழ வடிவங்கள் செய்யப்பட்டிருந்தன.+
21 ஆலய* நுழைவு மண்டபத்தின் முன்னால் அந்தத் தூண்களை நிறுத்தினார்.+ ஒரு தூணை வலது பக்கத்தில்* நிறுத்தி அதற்கு யாகீன்* என்றும், மற்றொரு தூணை இடது பக்கத்தில்* நிறுத்தி அதற்கு போவாஸ்* என்றும் பெயர் வைத்தார்.+ 22 அந்தத் தூண்களின் மேற்பகுதியில் லில்லிப் பூ வடிவில் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்படி, தூண்களின் வேலையெல்லாம் செய்து முடிக்கப்பட்டது.
-
-
2 நாளாகமம் 4:11-13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 சட்டிகள், சாம்பல் அள்ளும் கரண்டிகள், கிண்ணங்கள் ஆகியவற்றையும் ஈராம் செய்தார்.+
உண்மைக் கடவுளின் ஆலயத்துக்காக சாலொமோன் ராஜா செய்யச் சொல்லியிருந்த வேலைகளை ஈராம் செய்து முடித்தார்.+ 12 இரண்டு தூண்கள்,+ அவற்றின் உச்சியில் இருந்த கிண்ண வடிவ கும்பங்கள், இரண்டு கும்பங்களையும் அலங்கரித்த இரண்டு வலைப்பின்னல்கள்,+ 13 அந்த இரண்டு வலைப்பின்னல்களிலும் தொங்கவிட 400 மாதுளம்பழ வடிவங்கள் ஆகியவற்றைச் செய்தார்;+ ஒவ்வொரு வலைப்பின்னலிலும் இரண்டு வரிசை மாதுளம்பழ வடிவங்கள் இருந்தன. தூண்களின் உச்சியிலிருந்த இரண்டு கும்பங்களைச் சுற்றிலும் இந்த வலைப்பின்னல்கள் அமைக்கப்பட்டிருந்தன.+
-
-
எரேமியா 52:22, 23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 அதன் மேலிருந்த கும்பம் செம்பினால் செய்யப்பட்டிருந்தது. ஒரு கும்பத்தின் உயரம் ஐந்து முழம்.+ கும்பத்தைச் சுற்றியிருந்த வலைப்பின்னலும் மாதுளம்பழ வடிவங்களும் செம்பினால் செய்யப்பட்டிருந்தன. மற்றொரு தூணும் இதேபோல் இருந்தது, மாதுளம்பழ வடிவங்களும் இதேபோல் இருந்தன. 23 கும்பத்தைச் சுற்றிலும் 96 மாதுளம்பழ வடிவங்கள் இருந்தன. மொத்தம், 100 மாதுளம்பழ வடிவங்கள் வலைப்பின்னலைச் சுற்றி இருந்தன.+
-