செப்பனியா
1 யூதாவின் ராஜாவாகிய ஆமோனின்+ மகன் யோசியாவின் காலத்தில்,+ எசேக்கியாவின் எள்ளுப்பேரனும் அமரியாவின் கொள்ளுப்பேரனும் கெதலியாவின் பேரனும் கூஷியின் மகனுமாகிய செப்பனியாவுக்கு* யெகோவாவிடமிருந்து கிடைத்த செய்தி இதுதான்:
2 “நான் பூமியில் இருக்கிற எல்லாவற்றையும் அடியோடு அழித்துவிடுவேன்” என்று யெகோவா சொல்கிறார்.+
3 “மனுஷர்களையும் மிருகங்களையும் கொல்வேன்.
வானத்தில் பறக்கும் பறவைகளையும் கடலில் நீந்துகிற மீன்களையும் அழிப்பேன்.+
பொல்லாதவர்களையும் அவர்களுடைய பாவங்களுக்குக் காரணமான எல்லாவற்றையும்*+ ஒழிப்பேன்.
மனுஷர்களைப் பூமியிலிருந்து அழித்துவிடுவேன்” என்று யெகோவா சொல்கிறார்.
4 “நான் யூதாவுக்கு எதிராக என் கையை நீட்டுவேன்.
எருசலேமில் குடியிருக்கிறவர்கள்மேல் என் கையை ஓங்குவேன்.
பாகாலைச் சுவடு தெரியாமல் அழித்துவிடுவேன்.+
பொய் தெய்வ பூசாரிகளின் பெயர்களையும் போலி குருமார்களின் பெயர்களையும் ஒழித்துவிடுவேன்.+
5 மொட்டைமாடிக்குப் போய் சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் கும்பிடுகிறவர்களையும்,+
யெகோவாவை மட்டும் வணங்குவதாக அவரிடம் வாக்குக் கொடுத்துவிட்டு,+
மல்காமிடமும் அதேபோல் வாக்குக் கொடுக்கிறவர்களையும் நான் அழிப்பேன்.+
6 யெகோவாவைவிட்டு விலகிப்போகிறவர்களை+ ஒழித்துக்கட்டுவேன்.
யெகோவாவைத் தேடாமலும் அவரை விசாரிக்காமலும் இருக்கிறவர்களை+ அழித்துவிடுவேன்.”
7 உன்னதப் பேரரசராகிய யெகோவாவுக்கு முன்னால் அமைதியாக இருங்கள்; யெகோவாவின் நாள் பக்கத்தில் வந்துவிட்டது.+
யெகோவா ஒரு பலியை ஏற்பாடு செய்திருக்கிறார்; அழைக்கப்பட்டவர்களை அவர் தயார்படுத்தியிருக்கிறார்.*
8 “யெகோவாவாகிய நான் பலி கொடுக்கும் நாளில் அதிபதிகளைத் தண்டிப்பேன்.
ராஜாவின் மகன்களையும்+ மற்ற தேசத்தாரைப் போல உடை உடுத்துகிறவர்களையும் தண்டிப்பேன்.
9 அந்த நாளில் மேடைமேல்* ஏறுகிற எல்லாரையும் தண்டிப்பேன்.
எஜமானின் வீட்டை வன்முறைச் செயல்களாலும் மோசடி வேலைகளாலும் நிரப்புகிறவர்களைத் தண்டிப்பேன்.”
10 யெகோவா இப்படிச் சொல்கிறார்:
“அந்த நாளில், ‘மீன் நுழைவாசலில்’+ கதறல் சத்தம் கேட்கும்.
நகரத்தின் புதிய பகுதியில்+ ஒப்பாரிச் சத்தம் கேட்கும்.
மலைகளில் பயங்கர சத்தம் கேட்கும்.
11 வியாபாரிகள் எல்லாரும் ஒழிந்துவிட்டார்கள்.
வெள்ளியை எடை போடுகிற எல்லாரும் அழிந்துவிட்டார்கள்.
அதனால் மக்தேஷ்* ஜனங்களே, அழுது புலம்புங்கள்.
12 அந்தச் சமயத்தில் நான் விளக்குகளை ஏந்திக்கொண்டு எருசலேமெங்கும் தேடிப் பார்ப்பேன்.
அலட்சியமாக இருப்பவர்களை* கண்டுபிடித்துத் தண்டிப்பேன்.
அவர்கள் தங்களுடைய உள்ளத்தில்,
‘யெகோவா நல்லதும் செய்ய மாட்டார், கெட்டதும் செய்ய மாட்டார்’ என்று சொல்லிக்கொள்கிறார்கள்.+
13 அவர்களுடைய சொத்துகள் சூறையாடப்படும், அவர்களுடைய வீடுகள் பாழாக்கப்படும்.+
வீடுகளைக் கட்டுவார்கள், ஆனால் அவற்றில் குடியிருக்க மாட்டார்கள்.
திராட்சைத் தோட்டங்களை அமைப்பார்கள், ஆனால் அவற்றிலிருந்து கிடைக்கும் திராட்சமதுவைக் குடிக்க மாட்டார்கள்.+
14 யெகோவாவின் மகா நாள் நெருங்கிவிட்டது!+
அது மிகவும் வேகமாக வந்துகொண்டிருக்கிறது, பக்கத்தில் வந்துவிட்டது!+
யெகோவாவின் நாளில் பயங்கரமான சத்தம் கேட்கும்.+
அப்போது, போர்வீரன்கூட அலறுவான்.+
15 அது கடவுளுடைய கடும் கோபத்தின் நாள்.+
இக்கட்டும் வேதனையுமான நாள்.+
புயல்காற்றும் பேரழிவும் தாக்கும் நாள்.
அது மங்கலான நாள், இருண்ட நாள்.+
கார்மேகமும் கும்மிருட்டும் சூழ்ந்துகொள்ளும் நாள்.+
16 ஊதுகொம்பின் சத்தமும் போர் முழக்கமும் கேட்கும் நாள்.+
மதில் சூழ்ந்த நகரங்களும் உயர்ந்த மூலைக்கோபுரங்களும் தாக்கப்படும் நாள்.+
17 நான் மனிதர்களுக்கு மன வேதனையை உண்டாக்குவேன்.
கண் தெரியாதவர்களைப் போல அவர்கள் தட்டுத்தடுமாறி நடப்பார்கள்.+
ஏனென்றால், அவர்கள் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தார்கள்.+
18 யெகோவாவுடைய கடும் கோபத்தின் நாளில் அவர்களுடைய வெள்ளியோ தங்கமோ அவர்களைக் காப்பாற்றாது.+
அவருடைய வைராக்கியம் தீ போல முழு பூமியையும் பொசுக்கிவிடும்.+
பூமியின் குடிமக்கள் எல்லாரையும் அவர் பூண்டோடு அழித்துவிடுவார்; அந்த அழிவு படுபயங்கரமாக இருக்கும்.”+
2 தண்டனைத் தீர்ப்பு நிறைவேறுவதற்கு முன்பே,
பதரைப் போல அந்த நாள் பறந்துபோவதற்கு முன்பே,
யெகோவாவின் கோபம் உங்கள்மேல் கொட்டப்படுவதற்கு முன்பே,+
யெகோவாவுடைய கோபத்தின் நாள் உங்களுக்கு எதிராக வருவதற்கு முன்பே,
3 பூமியில் குடியிருக்கிற மனத்தாழ்மையுள்ள* ஜனங்களே,
யெகோவாவுடைய நீதியான சட்டங்களைப் பின்பற்றுகிறவர்களே,
யெகோவாவைத் தேடுங்கள்,+ நீதிநெறிகளைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்.
அப்போது, அவருடைய கோபத்தின் நாளிலே நீங்கள் அநேகமாக* பாதுகாக்கப்படலாம்.+
அஸ்தோத் ஜனங்கள் பட்டப்பகலில் விரட்டப்படுவார்கள்.
எக்ரோன் ஜனங்கள் அடியோடு அழிக்கப்படுவார்கள்.+
5 “கடலோரத்தில் வாழும் கிரேத்தியர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்!+
யெகோவா உங்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு கொடுத்துவிட்டார்.
பெலிஸ்தியர்களின் தேசமான கானானே, உன்னை அழிப்பேன்.
உன் குடிமக்கள் யாரையும் விட்டுவைக்க மாட்டேன்.
6 கடலோரப் பகுதி மேய்ச்சல் நிலமாக மாறும்.
அங்கே மேய்ப்பர்களுக்குக் கிணறுகளும் ஆடுகளுக்குத் தொழுவங்களும்* இருக்கும்.
சாயங்காலத்தில் அஸ்கலோனின் வீடுகளில் சொகுசாகப் படுத்துக்கொள்வார்கள்.
அவர்களுடைய கடவுளான யெகோவா அவர்களை அக்கறையோடு பார்த்துக்கொள்வார்.
சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களைத் திரும்பக் கூட்டிக்கொண்டு வருவார்.”+
8 “மோவாபின் பழிப்பேச்சுகளையும்+ அம்மோனின் அவமரியாதையான பேச்சுகளையும்+ நான் கேட்டேன்.
என் ஜனங்களைக் கேவலப்படுத்தி, அவர்களுடைய தேசத்தைக் கைப்பற்றப்போவதாக அவர்கள் பெருமையடித்தார்கள்”+ என்று கடவுள் சொல்கிறார்.
9 இஸ்ரவேலின் கடவுளாகிய பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:
“என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* மோவாப் தேசம் சோதோமைப் போல ஆகிவிடும்.+
அம்மோனியர்களின் தேசம் கொமோராவைப் போல ஆகிவிடும்.+
அது முள்காடாகவும் உப்புநிலமாகவும் மாறும், என்றென்றும் பாழாய்க் கிடக்கும்.+
என் ஜனங்களில் மீதியானவர்கள் அந்தத் தேசங்களைச் சூறையாடுவார்கள்.
என் தேசத்தில் மீதியிருக்கிறவர்கள் அவற்றைக் கைப்பற்றுவார்கள்.
10 அவர்களுடைய அகங்காரத்துக்குக் கிடைக்கும் தண்டனை இதுதான்.+
பரலோகப் படைகளின் யெகோவாவுடைய ஜனங்களுக்கு எதிராக அவர்கள் பெருமையடித்தார்களே, கேவலமாகப் பேசினார்களே.
11 யெகோவாவாகிய நான் அவர்களைப் பயந்து நடுங்க வைப்பேன்.
அவர்களுடைய தெய்வங்களெல்லாம் ஒன்றுமில்லாமல்* போகும்படி செய்துவிடுவேன்.
தீவுகளில் குடியிருக்கிற எல்லாரும் என்னை வணங்குவார்கள்.+
ஒவ்வொரு தேசத்தாரும் எனக்கு அடிபணிவார்கள்.
12 எத்தியோப்பியர்களே, நீங்களும் என் வாளால் வெட்டி வீழ்த்தப்படுவீர்கள்.”+
13 அவர் வடக்கிலிருக்கும் அசீரியாவுக்கு நேராகத் தன் கையை ஓங்கி, அதை அழிப்பார்.
நினிவேயைப் பாழாக்கி அதைப் பாலைவனம் போலாக்குவார்.+
14 அங்கே மந்தைகள் படுத்துக்கொள்ளும், எல்லாவித காட்டு மிருகங்களும் தங்கும்.
இடிந்துபோன தூண்களுக்கு நடுவே கூழைக்கடா பறவையும் முள்ளம்பன்றியும் இரவைக் கழிக்கும்.
ஜன்னல் வழியாகச் சத்தம்* கேட்கும்.
நுழைவாசல் இடிபாடுகளாகக் கிடக்கும்.
தேவதாரு மரப்பலகைகளை அவர் நாசமாக்குவார்.
15 எந்தக் கவலையும் இல்லாமல் பெருமையடித்துவந்த நகரம் அது.
‘என்னைப் போல ஒரு நகரம் உலகத்திலேயே இல்லை’ என்று அது சொல்லிக்கொண்டிருந்தது.
ஆனால், அதற்குக் கோரமான முடிவு வரும்.
அது காட்டு மிருகங்கள் தங்கும் இடமாக மாறும்!
அவ்வழியாகப் போகிறவர்கள் அதைப் பார்த்துக் கை காட்டி* கேலி செய்வார்கள்.”*+
3 கலகக்கார நகரமே, தீட்டுப்பட்ட நகரமே, அடக்கி ஒடுக்குகிற நகரமே, உனக்குக் கேடுதான் வரும்!+
2 நீ எதையும் காதில் வாங்கவில்லை,+ கண்டிக்கப்பட்டும் திருந்தவில்லை.+
யெகோவாமேல் நம்பிக்கை வைக்கவில்லை;+ உன் கடவுளிடம் நெருங்கி வரவில்லை.+
3 உன்னுடைய அதிபதிகள் கர்ஜிக்கிற சிங்கங்கள்.+
உன்னுடைய நீதிபதிகள் ராத்திரியில் நடமாடும் ஓநாய்கள்.
ஒரு எலும்பைக்கூட மிச்சம் வைக்காமல் விடியும்வரை சாப்பிடுகிற ஓநாய்கள்.
4 உன் தீர்க்கதரிசிகள் திமிர் பிடித்தவர்கள், துரோகிகள்.+
5 ஆனால், உன் நடுவே இருக்கிற யெகோவா நீதியுள்ளவர்,+ எந்தத் தவறும் செய்யாதவர்.
அவர் ஒவ்வொரு நாள் காலையிலும் தன்னுடைய நீதித்தீர்ப்புகளைச் சொல்கிறார்.+
பொழுது எப்படித் தவறாமல் விடிகிறதோ அப்படியே அவரும் தவறாமல் தீர்ப்புகளைச் சொல்கிறார்.
ஆனால், அநீதிமானுக்குச் சூடுசுரணையே இல்லை.+
6 “நான் தேசங்களை அழித்தேன்; அவற்றின் மூலைக்கோபுரங்கள் வெறுமையாகிவிட்டன.
வீதிகளைப் பாழாக்கினேன்; அவை வெறிச்சோடிப் போய்விட்டன.
நகரங்களை நாசமாக்கினேன்; அவை ஆளே இல்லாத இடங்களாகிவிட்டன.+
7 நீ குடியிருக்கும் இடம் அழியக் கூடாதென்று நினைத்தேன்.
அதனால், ‘நீ எனக்குப் பயப்பட வேண்டும், என் புத்திமதியைக் கேட்டுத் திருந்த வேண்டும்’+ என்று சொன்னேன்.
ஆனால், நீ அக்கிரமத்துக்குமேல் அக்கிரமம் செய்வதிலேயே குறியாக இருந்தாய்.+
நீ செய்த எல்லாவற்றுக்கும் தண்டனை கொடுக்காமல் விட மாட்டேன்.
8 யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘நான் எல்லாவற்றையும் சூறையாடுவதற்காக* வரப்போகும் நாள்வரை
எனக்காகப் பொறுமையோடு காத்திரு.+
தேசங்களையும் ராஜ்யங்களையும் ஒன்றுகூட்டி,
என் ஆக்ரோஷத்தையும் கடும் கோபத்தையும் அவர்கள்மேல் கொட்டுவதற்கு நான் முடிவு செய்திருக்கிறேன்.*+
என் வைராக்கியம் தீ போல முழு பூமியையும் பொசுக்கிவிடும்.+
9 நான் ஜனங்களின் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாற்றுவேன்.
அப்போது, எல்லாரும் யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்வார்கள்.
10 என் ஜனங்கள் எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கு அப்பாலிருந்து என்னிடம் வேண்டுவார்கள்.
துரத்தியடிக்கப்பட்ட என் ஜனங்கள் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவருவார்கள்.+
11 எனக்கு எதிராகக் குற்றங்கள் செய்த நகரமே!
அந்தக் குற்றங்களுக்காக அந்த நாளில் நீ அவமானம் அடைய மாட்டாய்.+
ஏனென்றால், பெருமை பேசித் திரிந்தவர்களை உன் நடுவிலிருந்து நீக்கிவிடுவேன்.
என் பரிசுத்த மலையில் இனி ஒருபோதும் நீ அகம்பாவமாக நடக்க மாட்டாய்.+
12 தாழ்மையான, பணிவான ஜனங்களை மட்டும் உன் நடுவே வாழ வைப்பேன்.+
அவர்கள் யெகோவாவின் பெயரில் தஞ்சம் அடைவார்கள்.
13 இஸ்ரவேலில் மீதியாக இருப்பவர்கள்+ எந்த அநியாயமும் செய்ய மாட்டார்கள்.+
அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள்; அவர்களுடைய பேச்சில் சூதுவாது இருக்காது.
அவர்கள் நன்றாகச் சாப்பிட்டு, நிம்மதியாகத் தூங்குவார்கள்; யாரும் அவர்களைப் பயமுறுத்த மாட்டார்கள்.”+
14 சீயோன் மகளே, சந்தோஷமாகப் பாடு!
இஸ்ரவேலே, வெற்றி முழக்கம் செய்!+
எருசலேம் மகளே, இதயம் பொங்க சந்தோஷப்படு!+
15 உனக்கு எதிரான தீர்ப்புகளை யெகோவா ரத்து செய்தார்.+
விரோதிகளை உன்னைவிட்டு விலக்கினார்.+
இஸ்ரவேலின் ராஜாவான யெகோவா உன் நடுவே இருக்கிறார்.+
ஆபத்தை நினைத்து இனி நீ பயப்பட மாட்டாய்.+
16 அந்த நாளில் எருசலேமிடம் இப்படிச் சொல்லப்படும்:
“சீயோனே, பயப்படாதே.+
மனம் தளர்ந்துவிடாதே.*
17 உன் கடவுளான யெகோவா உன் நடுவே இருக்கிறார்.+
சக்திபடைத்த அவர் உன்னைக் காப்பாற்றுவார்.
உன்னை நினைத்துப் பூரித்துப்போவார்.+
உன்மேல் கொள்ளை அன்பு காட்டுவார்.*
உன்னை நினைத்து சந்தோஷமாக முழங்குவார்.
18 உன் பண்டிகைகளுக்கு வர முடியாததை நினைத்துத் துக்கப்படுகிறவர்களை நான் கூட்டிச்சேர்ப்பேன்.+
அவர்கள் வெட்கக்கேடான நிலையில் இருந்ததால்தான் உன் பண்டிகைகளுக்கு வர முடியாமல்போனது.+
19 உன்னைக் கொடுமைப்படுத்துகிற எல்லாரையும் அந்த நாளில் தண்டிப்பேன்.+
நொண்டி நொண்டி நடப்பவர்களைக் காப்பாற்றுவேன்.+
சிதறடிக்கப்பட்டவர்களை ஒன்றுசேர்ப்பேன்.+
அவர்களுக்குப் பேரும் புகழும் கிடைக்கும்படி செய்வேன்.
தலைகுனிந்து நின்ற இடங்களில் அவர்களைத் தலைநிமிர்ந்து நிற்க வைப்பேன்.
20 அப்போது, உன் ஜனங்களை நான் கூட்டிக்கொண்டு வருவேன்.
அவர்களை ஒன்றாகக் கூட்டிச்சேர்ப்பேன்.
சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை உன் கண்ணெதிரே கூட்டிக்கொண்டு வருவேன்.
பூமியின் எல்லா தேசங்களிலும் உனக்குப் பேரும் புகழும் கிடைக்கும்படி செய்வேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.+
செப்பனியா என்ற பெயரின் அர்த்தம், “யெகோவா மறைத்து வைத்திருக்கிறார் (பொக்கிஷமாக வைத்திருக்கிறார்).”
அநேகமாக, “சிலை வழிபாட்டோடு சம்பந்தப்பட்ட பொருள்கள் அல்லது செயல்கள் எல்லாவற்றையும்.”
வே.வா., “புனிதப்படுத்தியிருக்கிறார்.”
ஒருவேளை, “சிம்மாசனத்தின் மேடைமேல்.”
அநேகமாக, “‘மீன் நுழைவாசலுக்கு’ பக்கத்திலுள்ள எருசலேமின் ஒரு பகுதி.”
வே.வா., “திராட்சை ரசத் தொட்டியின் அடியிலுள்ள வண்டல் போன்றவர்களை.”
நே.மொ., “குடல்.”
வே.வா., “சாந்தமான.”
வே.வா., “ஒருவேளை.”
இவை கற்சுவர்களால் கட்டப்பட்ட நிரந்தரத் தொழுவங்களைக் குறிக்கின்றன.
வே.வா., “நான் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
வே.வா., “தளர்ந்து.”
பறவை, மிருகம், அல்லது காற்றின் சத்தமாக இருக்கலாம்.
வே.வா., “அசைத்து.”
நே.மொ., “விசில் அடிப்பார்கள்.”
அல்லது, “நான் ஒரு சாட்சியாக.”
வே.வா., “கொட்டுவதே என் நீதித்தீர்ப்பு.”
வே.வா., “ஒற்றுமையாக அவரை வணங்குவார்கள்.”
நே.மொ., “கைகளைத் தளரவிடாதே.”
வே.வா., “உன்மேல் அன்பு காட்டுவதில் மனநிறைவு அடைவார்.”