உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • nwt எபேசியர் 1:1-6:24
  • எபேசியர்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எபேசியர்
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
எபேசியர்

எபேசியருக்கு எழுதப்பட்ட கடிதம்

1 கடவுளுடைய விருப்பத்தால் கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாக இருக்கும் பவுல், எபேசுவில்+ கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டிருக்கிற உண்மையுள்ள பரிசுத்தவான்களுக்கு எழுதுவது:

2 பரலோகத் தகப்பனாகிய கடவுளிடமிருந்தும் நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அளவற்ற கருணையும் சமாதானமும் கிடைக்கட்டும்.

3 நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளாகவும் தகப்பனாகவும் இருக்கிறவருக்குப் புகழ் சேரட்டும். ஏனென்றால், கிறிஸ்துவோடு ஒன்றுபட்டிருக்கிற நமக்குக் கடவுள் தன்னுடைய சக்தியின் மூலம் எல்லா ஆசீர்வாதங்களையும் பரலோகத்தில் கொடுத்து நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.+ 4 கிறிஸ்துவோடு ஒன்றுபட்டிருக்கிற நாம் அவருக்கு முன்பாக அன்பானவர்களாகவும் பரிசுத்தமானவர்களாகவும் களங்கமில்லாதவர்களாகவும்+ இருக்க வேண்டும் என்பதற்காக இந்த உலகம் உண்டாவதற்கு முன்பே நம்மைத் தேர்ந்தெடுத்தார். 5 அவருடைய பிரியத்தின்படியும் விருப்பத்தின்படியும்,*+ இயேசு கிறிஸ்துவின் மூலம் நம்மைத் தன்னுடைய சொந்த மகன்களாகத் தத்தெடுப்பதற்கு+ முன்தீர்மானித்தார்.+ 6 தனக்குப் புகழ் சேருவதற்காக, தன்னுடைய அன்பு மகன்+ மூலம் இப்படி அளவற்ற கருணையை+ நமக்குத் தயவாகக் காட்டியிருக்கிறார். 7 அவருடைய அளவற்ற கருணையின்படி, அந்த அன்பு மகன் தன்னுடைய இரத்தத்தை மீட்புவிலையாகக் கொடுத்தார்.+ அதனால் நமக்கு விடுதலை கிடைத்திருக்கிறது, அதாவது நம் குற்றங்களுக்கு மன்னிப்பு கிடைத்திருக்கிறது.+

8 எல்லா ஞானத்தோடும் புத்தியோடும்கூட* இந்த அளவற்ற கருணையையும் அவர் எங்களுக்கு அதிகமதிகமாகக் கொடுத்து, 9 தன்னுடைய விருப்பத்தை* பற்றிய பரிசுத்த ரகசியத்தைத்+ தெரியப்படுத்தினார். இந்த ரகசியம், ஒரு நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அவருடைய நோக்கத்துக்கும் பிரியத்துக்கும் ஏற்றபடி இருக்கிறது. 10 குறித்த காலங்கள் நிறைவேறும்போது அந்த நிர்வாகம் செயல்பட வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக இருந்தது. அதாவது, பரலோகத்தில் இருக்கிற எல்லாவற்றையும் பூமியில் இருக்கிற எல்லாவற்றையும்+ மறுபடியும் கிறிஸ்துவுக்குள் ஒன்றாகக் கூட்டிச்சேர்க்க வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக இருந்தது. அதன்படியே, கிறிஸ்துவுக்குள் கூட்டிச்சேர்க்கப்பட்டு 11 அவரோடு ஒன்றுபட்டிருக்கிற எங்களை வாரிசுகளாகவும் நியமித்தார்.+ எல்லாவற்றையும் தன்னுடைய விருப்பத்தின்படி* தீர்மானித்து நிறைவேற்றுகிற அவர், தன்னுடைய நோக்கத்தின்படி எங்களை முன்கூட்டியே தேர்ந்தெடுத்தார்.* 12 கிறிஸ்துமேல் முதன்முதலில் நம்பிக்கை வைத்த எங்கள் மூலம் தனக்கு மகிமையும் புகழும் சேருவதற்காக எங்களை அப்படித் தேர்ந்தெடுத்தார். 13 ஆனால் சத்தியத்தின் செய்தியை, அதாவது உங்கள் மீட்பைப் பற்றிய நல்ல செய்தியை, கேட்ட பின்பு நீங்களும் அவர்மேல் நம்பிக்கை வைத்தீர்கள். அப்படி நம்பிக்கை வைத்த பின்பு, வாக்குறுதி கொடுக்கப்பட்ட கடவுளுடைய சக்தியால் அவர் மூலம் நீங்கள் முத்திரை போடப்பட்டீர்கள்.+ 14 கடவுளுக்குச் சொந்தமானவர்கள்+ மீட்புவிலையால்+ விடுதலையாகி தங்களுடைய ஆஸ்தியைப் பெறுவார்கள் என்பதற்கு அவருடைய சக்தியே உத்தரவாதமாக* இருக்கிறது.+ கடவுள் தனக்கு மகிமையும் புகழும் சேருவதற்காக இப்படியெல்லாம் செய்தார்.

15 அதனால்தான், நம் எஜமானாகிய இயேசுவின் மேல் நீங்கள் வைத்திருக்கிற விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லார்மேலும் நீங்கள் காட்டுகிற அன்பையும் பற்றி நான் கேள்விப்பட்ட சமயத்திலிருந்து 16 உங்களுக்காக இடைவிடாமல் கடவுளுக்கு நன்றி சொல்லி வருகிறேன். என்னுடைய ஜெபங்களில் எப்போதும் உங்களை நினைத்துக்கொள்கிறேன். 17 நீங்கள் அவரைப் பற்றித் திருத்தமாகக் கற்றுக்கொள்ளும்போது,+ நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளாகவும் மகிமையுள்ள தகப்பனாகவும் இருக்கிற அவர் உங்களுக்கு ஞானத்தையும் வெளிப்படுத்துதலையும் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். 18 அவர் உங்களுடைய மனக்கண்களைத் திறந்திருக்கிறார். அவர் உங்களை அழைத்ததால் நீங்கள் பெற்றிருக்கிற நம்பிக்கை எப்படிப்பட்டது என்றும், பரிசுத்தவான்களுக்கு அவர் ஆஸ்தியாகத் தரப்போகிற மகத்தான ஆசீர்வாதங்கள் எப்படிப்பட்டது என்றும்,+ 19 விசுவாசிகளாகிய* நம்மிடம் அவர் வெளிக்காட்டுகிற மகா மேன்மையான வல்லமை எப்படிப்பட்டது என்றும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்திருக்கிறார்.+ அந்த மகா வல்லமையையும் ஆற்றலையும் 20 கிறிஸ்துவின் விஷயத்தில் கடவுள் காட்டினார். எப்படியென்றால், கிறிஸ்துவை உயிரோடு எழுப்பி, பரலோகத்தில் தன்னுடைய வலது பக்கத்தில் உட்கார வைத்தார்.+ 21 எல்லா அரசாங்கத்துக்கும் அதிகாரத்துக்கும் வல்லமைக்கும் தலைமை ஸ்தானத்துக்கும் மேலாக அவரை உயர்த்தினார். இந்த உலகத்தில்* மட்டுமல்ல, இனிவரும் உலகத்திலும்கூட, எல்லா பெயருக்கும் மேலாக இருக்கும்படி அவரை உயர்த்தினார்.+ 22 எல்லாவற்றையும் அவருடைய காலடியில் கீழ்ப்படுத்தி,+ சபை சம்பந்தப்பட்ட எல்லாவற்றுக்கும் தலையாக அவரை நியமித்தார்.+ 23 அவருடைய உடலாகிய+ சபை அவரால் நிறைந்திருக்கிறது; அவரே எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிறைவு செய்கிறார்.

2 அதோடு, குற்றங்களாலும் பாவங்களாலும் செத்த நிலையில் இருந்தபோதிலும், கடவுள் உங்களுக்கு உயிர் தந்தார்.+ 2 ஒருகாலத்தில் நீங்கள் இந்த உலகம் போகிற போக்கில் போய்க்கொண்டிருந்தீர்கள்.+ காற்றுபோல் நம்மைச் சூழ்ந்திருக்கிற உலகச் சிந்தையை,+ அதாவது கீழ்ப்படியாதவர்களிடம் இப்போது செயல்படுகிற சிந்தையை, ஆளுகிறவனுடைய விருப்பத்தின்படி வாழ்ந்துகொண்டிருந்தீர்கள்.+ 3 ஆம், ஒருகாலத்தில் நாம் எல்லாரும் நம்முடைய பாவ ஆசைகளின்படி நடந்து,+ நம்முடைய உடலும் உள்ளமும் ஆசைப்பட்டதையெல்லாம் செய்துகொண்டிருந்தோம்.+ மற்றவர்களைப் போல நாமும் இயல்பிலேயே கடவுளுடைய கடும் கோபத்துக்கு ஆளாகும் பிள்ளைகளாக இருந்தோம்.+ 4 குற்றங்களால் நாம் செத்த நிலையில்+ இருந்தபோதிலும், மகா இரக்கமுடைய கடவுள்+ நம்மேல் வைத்திருக்கிற அளவுகடந்த அன்பினால்,+ 5 கிறிஸ்துவோடு ஒன்றுபட்டிருக்கிற நமக்கு உயிர் தந்திருக்கிறார். அவருடைய அளவற்ற கருணையால் உங்களைக் காப்பாற்றியிருக்கிறார். 6 கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டிருக்கிற நம்மை உயிரோடு எழுப்பி, அவரோடு பரலோகத்தில் உட்கார வைத்திருக்கிறார்.+ 7 கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டிருக்கும் நமக்குத் தயவோடு அவர் தருகிற அளவற்ற கருணையின் ஈடில்லாத செல்வத்தை இனிவரும் உலகத்தில்* வெளிக்காட்டுவதற்காகவே இப்படிச் செய்திருக்கிறார்.

8 இந்த அளவற்ற கருணையால்தான் விசுவாசத்தின் மூலம் நீங்கள் மீட்புப் பெற்றிருக்கிறீர்கள்;+ இதை நீங்களாகவே சம்பாதிக்கவில்லை, இது கடவுளுடைய அன்பளிப்பு. 9 இதைச் செயல்களால் பெற முடியாது.+ அதனால், பெருமை பேச ஒருவனுக்கும் இடமில்லை. 10 நாம் அவருடைய கைவேலைப்பாடாக இருக்கிறோம். நல்ல செயல்கள் செய்வதற்காகப் படைக்கப்பட்டு,+ கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டவர்களாக இருக்கிறோம்.+ நாம் செய்ய வேண்டிய அந்த நல்ல செயல்களைக் கடவுள் முன்கூட்டியே தீர்மானித்திருக்கிறார்.

11 அதனால், இதை எப்போதும் மனதில் வையுங்கள்: பிறப்பால் நீங்கள் மற்ற தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தீர்கள். மனிதரால் உடலில் “விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள்” உங்களை “விருத்தசேதனம் செய்யப்படாதவர்கள்” என்று சொன்னார்கள். 12 நீங்கள் அந்தச் சமயத்தில் கிறிஸ்துவைப் பற்றித் தெரியாதவர்களாகவும், இஸ்ரவேல் தேசத்துக்கு அன்னியர்களாகவும், வாக்குறுதி அடங்கிய ஒப்பந்தங்களுக்குச் சம்பந்தமே இல்லாதவர்களாகவும்,+ நம்பிக்கை இல்லாதவர்களாகவும், கடவுளைப் பற்றித் தெரியாதவர்களாகவும் இந்த உலகத்தில் வாழ்ந்து வந்தீர்கள்.+ 13 ஆனால், ஒருகாலத்தில் கடவுளைவிட்டுத் தூரத்தில் இருந்த நீங்கள் இப்போது கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டு கிறிஸ்துவின் இரத்தத்தால் கடவுளுக்குப் பக்கத்தில் வந்திருக்கிறீர்கள். 14 கிறிஸ்துதான் நம்முடைய சமாதானத்துக்குக் காரணமாக இருக்கிறார்.+ இரண்டு தொகுதிகளுக்கும் நடுவில் இருந்த சுவரைத் தகர்த்து,+ அவரே அவர்களை ஒன்றாக்கினார்.+ 15 அவர் தன்னுடைய உடலைப் பலியாகக் கொடுத்து, பகைக்குக் காரணமானதும் கட்டளைகளும் ஆணைகளும் அடங்கியதுமான திருச்சட்டத்தை ஒழித்தார். இரண்டு தொகுதிகளையும் தன்னோடு ஒன்றுபட்ட ஒரே புதிய மக்களாக*+ உருவாக்கி சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அப்படிச் செய்தார். 16 சித்திரவதைக் கம்பத்தின்*+ மூலம் இரண்டு தொகுதிகளையும் ஒரே மக்களாகக் கடவுளோடு முழுமையாய்ச் சமரசமாக்கினார்; தன்னுடைய மரணத்தின் மூலம் அந்தப் பகையை அழித்தார்.+ 17 அதுமட்டுமல்ல, கடவுளைவிட்டுத் தூரத்தில் இருந்த உங்களிடமும் கடவுளுக்குப் பக்கத்தில் இருந்தவர்களிடமும் வந்து, சமாதானத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவித்தார். 18 இவர் வழியாகத்தான், இரண்டு தொகுதிகளைச் சேர்ந்த நாம் நம்முடைய தகப்பனை அவருடைய ஒரே சக்தியால் அணுகும் உரிமையைப் பெற்றிருக்கிறோம்.

19 அதனால், நீங்கள் இனி சம்பந்தமில்லாதவர்களும் கிடையாது, அன்னியர்களும் கிடையாது,+ ஆனால் பரிசுத்தவான்களுடைய சக குடிமக்களாகவும்+ கடவுளுடைய வீட்டாராகவும் இருக்கிறீர்கள்.+ 20 அதோடு, அப்போஸ்தலர்களையும் தீர்க்கதரிசிகளையும் அஸ்திவாரமாக வைத்துக் கட்டப்பட்டிருக்கிறீர்கள்.+ கிறிஸ்து இயேசுவே அதற்கு மூலைக்கல்லாக இருக்கிறார்.+ 21 அவரோடு ஒன்றுபட்டிருக்கிற முழு கட்டிடமும் ஒன்றாக இணைக்கப்பட்டு,+ யெகோவாவுக்கு* பரிசுத்த ஆலயமாக+ உருவாகி வருகிறது. 22 அவரோடு ஒன்றுபட்டிருக்கிற நீங்களும், கடவுள் தன்னுடைய சக்தியின் மூலம் குடியிருக்கிற இடமாக ஒன்றுசேர்த்துக் கட்டப்பட்டு வருகிறீர்கள்.+

3 இதனால்தான், மற்ற தேசத்தைச் சேர்ந்தவர்களான உங்களுடைய சார்பில் கிறிஸ்து இயேசுவுக்காகக் கைதியாய் இருக்கிற பவுலாகிய நான்—*+ 2 உங்கள் நன்மைக்காகக் கடவுளுடைய அளவற்ற கருணையால் எனக்கு நிர்வாகப் பொறுப்பு கொடுக்கப்பட்டதைப்+ பற்றி, 3 அதாவது எனக்குப் பரிசுத்த ரகசியம் வெளிப்படுத்தப்பட்டதைப் பற்றி, நிச்சயம் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதைப் பற்றி ஏற்கெனவே உங்களுக்குச் சுருக்கமாக எழுதியிருந்தேன். 4 இதை நீங்கள் வாசிக்கும்போது கிறிஸ்துவைப் பற்றிய பரிசுத்த ரகசியத்தைக்+ குறித்து நான் புரிந்துவைத்திருக்கிறேன் என்பதைத் தெரிந்துகொள்வீர்கள். 5 அந்த ரகசியம் அவருடைய பரிசுத்த அப்போஸ்தலர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் இப்போது கடவுளுடைய சக்தியால் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற அளவுக்கு, கடந்த தலைமுறையைச் சேர்ந்த யாருக்கும் வெளிப்படுத்தப்படவில்லை.+ 6 நல்ல செய்தியைக் கேட்பதன் மூலமும் கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபடுவதன் மூலமும் மற்ற தேசத்து மக்கள் அவருடைய சக வாரிசுகளாகவும், ஒரே உடலின் உறுப்புகளாகவும்,+ கடவுளுடைய வாக்குறுதியில் நம்மோடு பங்குள்ளவர்களாகவும் இருப்பார்கள் என்பதுதான் அந்த ரகசியம். 7 கடவுளுடைய அளவற்ற கருணை என்ற இலவச அன்பளிப்பின் காரணமாக நான் அந்த ரகசியத்தை அறிவிக்கும் ஊழியனாக ஆனேன். அந்த அன்பளிப்பை அவர் தன்னுடைய வல்லமையின் மூலம் எனக்குத் தந்தார்.+

8 பரிசுத்தவான்கள் எல்லாரிலும் நான் மிக மிக அற்பமானவனாக இருந்தாலும்,+ கிறிஸ்துவிடமிருந்து வரும் எல்லையில்லாத ஆசீர்வாதங்களைப் பற்றிய நல்ல செய்தியை மற்ற தேசத்து மக்களுக்கு அறிவிப்பதற்காகக் கடவுள் தன்னுடைய அளவற்ற கருணையை எனக்குத் தந்தார்.+ 9 அதோடு, எல்லாவற்றையும் படைத்த கடவுளால்* பல காலமாக மறைக்கப்பட்டிருந்த பரிசுத்த ரகசியம்+ எப்படி நிர்வகிக்கப்படுகிறது என்பதை எல்லாருக்குமே புரிய வைப்பதற்காகவும் அவர் தன்னுடைய அளவற்ற கருணையை எனக்குத் தந்தார். 10 பல்வேறு விதங்களில் வெளிப்படுகிற கடவுளுடைய ஞானம், பரலோகத்தில் இருக்கிற நிர்வாகங்களுக்கும் அதிகாரங்களுக்கும் சபையின் மூலம்+ இப்போது தெரியப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.+ 11 கிறிஸ்துவாகிய நம் எஜமான் இயேசுவின் சம்பந்தமாகக் கடவுள் ஏற்படுத்திய நித்திய நோக்கத்தின்படி இது இருக்கிறது.+ 12 அவர் மூலம் நம்மால் கடவுளிடம்* தயக்கமில்லாமல் பேச முடிகிறது; அவர்மேல் வைத்திருக்கிற விசுவாசத்தால் கடவுளை நம்பிக்கையோடு தாராளமாக அணுகவும் முடிகிறது.+ 13 அதனால், உங்களுக்காக நான் படுகிற இந்த உபத்திரவங்களைப் பார்த்து நீங்கள் மனம் தளர்ந்துவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், இவை உங்களுக்கு மகிமை சேர்க்கும்.+

14 இதனால்தான், பரலோகத் தகப்பனுக்கு முன்னால் மண்டிபோட்டு வேண்டுகிறேன். 15 பரலோகத்திலும் பூமியிலும் இருக்கிற ஒவ்வொரு குடும்பமும் அவரால்தான் உருவாகியிருக்கிறது.* 16 அளவில்லாத மகிமையுள்ள அவர் தன்னுடைய சக்தி தருகிற வல்லமையால் உங்களுக்கு மனவலிமை கொடுக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.+ 17 நீங்கள் காட்டுகிற விசுவாசத்தால் உங்கள் அன்பான இதயங்களில் கிறிஸ்துவை அவர் குடியிருக்கச் செய்யும்படியும்+ வேண்டிக்கொள்கிறேன். நீங்கள் வேரூன்றியவர்களாகவும்+ அஸ்திவாரத்தின்மேல் நிலையாய் நிற்கிறவர்களாகவும்+ இருக்க வேண்டும். 18 அப்போதுதான், பரிசுத்தவான்கள் எல்லாரோடும் சேர்ந்து கடவுளைப் பற்றிய விஷயங்களின் அகலமும் நீளமும் உயரமும் ஆழமும் என்னவென்று நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். 19 அதோடு, அறிவைவிட மிக மிக உயர்ந்த கிறிஸ்துவின் அன்பை+ நீங்கள் தெரிந்துகொள்வதற்காகக் கடவுள் தருகிற குணங்களால் நிரப்பப்படவும் முடியும்.

20 நமக்குள் செயல்படுகிற அவருடைய வல்லமையின்படி,+ நாம் கேட்பதையும் நினைப்பதையும்விட மிக அதிகமாக, பல மடங்கு அதிகமாக எல்லாவற்றையும் செய்ய வல்லவரான+ அவருக்கே, 21 சபையின் மூலமும் கிறிஸ்து இயேசுவின் மூலமும் தலைமுறை தலைமுறையாக என்றென்றும் மகிமை சேரட்டும். ஆமென்.*

4 அதனால், நம் எஜமானுக்காகக் கைதியாய் இருக்கிற நான்+ உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், உங்களுக்குக் கொடுக்கப்பட்ட அழைப்புக்குத் தகுதியானவர்களாக நடந்துகொள்ளுங்கள்;+ 2 எப்போதும் மனத்தாழ்மையாகவும்+ சாந்தமாகவும் பொறுமையாகவும்+ நடந்துகொள்ளுங்கள்; அன்பினால் ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள்;+ 3 கடவுளுடைய சக்தி தருகிற ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கும் சமாதானமாக* வாழ்வதற்கும் ஊக்கமாக முயற்சி செய்யுங்கள்.+ 4 ஒரே நம்பிக்கை உண்டு,+ அந்த நம்பிக்கையைப் பெற நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அதேபோல், ஒரே உடலும்+ ஒரே சக்தியும்+ உண்டு. 5 ஒரே எஜமானும்+ ஒரே விசுவாசமும் ஒரே ஞானஸ்நானமும் உண்டு. 6 எல்லாருக்கும் ஒரே கடவுளும் தகப்பனும் உண்டு. அவர் எல்லாருக்கும் மேலானவர், எல்லார் மூலமும் செயல்படுகிறவர், எல்லாருக்குள்ளும் செயல்படுகிறவர்.

7 அளவற்ற கருணை என்ற இலவச அன்பளிப்பு+ நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டது; கிறிஸ்து நமக்குக் கொடுத்த அளவின்படி அதைப் பெற்றுக்கொண்டோம். 8 அதனால்தான், “அவர் மேலே ஏறிப்போனபோது, சிறைபிடிக்கப்பட்ட கைதிகளைப் பிடித்துக்கொண்டுபோனார், மனிதர்களைப் பரிசுகளாகக் கொடுத்தார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.+ 9 ‘ஏறிப்போய்’ என்ற வார்த்தை, அவர் கீழே இறங்கி வந்திருந்தார் என்பதையும், அதாவது பூமிக்கு வந்திருந்தார் என்பதையும், அர்த்தப்படுத்துகிறது, இல்லையா? 10 கீழே இறங்கி வந்திருந்தவர்தான் எல்லா காரியங்களையும் நிறைவேற்றுவதற்காக எல்லா வானங்களுக்கும் மேலாக+ ஏறிப்போனவராகவும் இருக்கிறார்.+

11 அவர் சிலரை அப்போஸ்தலர்களாகவும்,+ சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும்,+ சிலரை நற்செய்தியாளர்களாகவும்,*+ சிலரை மேய்ப்பர்களாகவும் போதகர்களாகவும்+ சபைக்குக் கொடுத்தார். 12 பரிசுத்தவான்களைச் சரிப்படுத்துவதற்காகவும்,* ஊழியம் சம்பந்தமான வேலைகளைச் செய்வதற்காகவும், கிறிஸ்துவின் உடலைப் பலப்படுத்துவதற்காகவும் அவர்களைக் கொடுத்தார்.+ 13 நாம் எல்லாரும் விசுவாசத்திலும் கடவுளுடைய மகனைப் பற்றிய திருத்தமான அறிவிலும் ஒன்றுபட்டு* இருப்பதற்காகவும், கிறிஸ்து எந்தளவுக்கு முதிர்ச்சி நிறைந்தவராக இருக்கிறாரோ அந்தளவுக்கு முழு வளர்ச்சி அடைவதற்காகவும்+ அவர்களைக் கொடுத்தார். 14 அதனால், இனி நாம் குழந்தைகளாக இருக்கக் கூடாது. மனிதர்களுடைய தந்திரத்தையும் சூழ்ச்சியான ஏமாற்று வழிகளையும் நம்பி, அலைகளால் அலைக்கழிக்கப்படவோ அவர்களுடைய போதனைகளாகிய பலவிதமான காற்றால் இங்குமங்கும் அடித்துச் செல்லப்படவோ கூடாது.+ 15 அதற்குப் பதிலாக, சத்தியத்தைப் பேசி, தலையாக இருக்கிற கிறிஸ்துவின்+ கீழ் எல்லாவற்றிலேயும் அன்பினால் வளருகிறவர்களாக இருக்க வேண்டும். 16 அவரால்தான் எல்லா உடலுறுப்புகளும்,+ அவற்றுக்கு உதவி செய்கிற எல்லா மூட்டுகளாலும் ஒன்றோடொன்று இசைவாக இணைக்கப்பட்டு ஒற்றுமையாக வேலை செய்கின்றன; ஒவ்வொரு உறுப்பும் அதனதன் வேலையைச் சரியாகச் செய்வதால் முழு உடலும் வளர்ச்சியடைந்து அன்பால் பலப்படுத்தப்படுகிறது.+

17 அதனால், உலக மக்கள் தங்களுடைய வீணான எண்ணங்களின்படி+ நடப்பதுபோல் நீங்களும் இனி நடக்கக் கூடாதென்று+ நம் எஜமான் முன்னால் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். 18 அவர்கள் வேண்டுமென்றே கடவுளைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள், அவர்களுடைய இதயம் மரத்துப்போயிருக்கிறது; அதனால் அவர்களுடைய மனம் இருண்டு போயிருக்கிறது, கடவுள் தருகிற வாழ்வு கிடைக்காதபடி அவர்கள் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். 19 ஒழுக்க உணர்வு துளிகூட இல்லாமல், எல்லாவித அசுத்தமான செயல்களையும் பேராசையோடு செய்து வருவதற்காக வெட்கங்கெட்ட நடத்தைக்கு*+ தங்களையே கொடுத்துவிட்டார்கள்.

20 ஆனால், கிறிஸ்து இப்படி நடந்துகொண்டதாக நீங்கள் கற்றுக்கொள்ளவில்லை. 21 இயேசுவிடம் இருக்கிற சத்தியத்தின்படியே நீங்கள் அவரிடம் கேட்டு, அவர் மூலம் கற்பிக்கப்பட்டவர்களாக இருந்தால் அது உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். 22 உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றிக்கொள்ளவும் வஞ்சிக்கிற ஆசைகளால்+ சீரழிந்துவருகிற பழைய சுபாவத்தைக் களைந்துபோடவும் கற்பிக்கப்பட்டீர்கள்.+ 23 உங்கள் மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை* புதுப்பித்துக்கொண்டே இருங்கள்.+ 24 கடவுளுடைய விருப்பத்தின்படி,* உண்மையான நீதிக்கும் உண்மைத்தன்மைக்கும்* ஏற்றபடி உருவாக்கப்பட்ட புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்.+

25 நீங்கள் இப்போது பொய்யைக் களைந்திருப்பதால், ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் எப்போதும் உண்மை பேசுங்கள்;+ ஏனென்றால், நாம் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்கிறோம்.+ 26 பயங்கர கோபம் வந்தாலும், பாவம் செய்யாதீர்கள்;+ சூரியன் மறைவதற்கு முன்னால் உங்கள் கோபம் தணிய வேண்டும்.+ 27 பிசாசுக்கு எந்த வாய்ப்பும் கொடுத்துவிடாதீர்கள்.*+ 28 திருடுகிறவன் இனி திருடாமல் இருக்க வேண்டும்; இல்லாதவர்களுக்குக் கொடுப்பதற்காக,+ தானே தன் கையால் பாடுபட்டு நேர்மையாக உழைக்க வேண்டும்.+ 29 கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து வர வேண்டாம்.+ கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமாய் இருப்பதற்காக, சூழ்நிலைக்கு ஏற்றபடி, அவர்களைப் பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளையே பேசுங்கள்.+ 30 அதோடு, நீங்கள் மீட்புவிலையால் விடுவிக்கப்படும் நாளுக்கென்று+ முத்திரையாகப் பெற்றிருக்கிற+ கடவுளுடைய சக்தியைத் துக்கப்படுத்தாமல்* இருங்கள்.+

31 எல்லா விதமான மனக்கசப்பையும்,+ சினத்தையும், கடும் கோபத்தையும், கூச்சலையும், பழிப்பேச்சையும்,+ மற்ற எல்லா விதமான கெட்ட குணத்தையும் உங்களைவிட்டு நீக்கிப்போடுங்கள்.+ 32 ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டுங்கள்.+ கிறிஸ்துவின் மூலம் கடவுள் உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல், நீங்களும் ஒருவரை ஒருவர் தாராளமாக மன்னியுங்கள்.+

5 அதனால், அன்பான பிள்ளைகளைப் போல் கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்.+ 2 கிறிஸ்து நமக்காக* நறுமணம் வீசுகிற காணிக்கையாகவும் பலியாகவும்+ கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்து, நம்மேல்* அன்பு காட்டியது போலவே+ நீங்களும் தொடர்ந்து அன்பின் வழியில் நடங்கள்.+

3 பாலியல் முறைகேடு,* எல்லா விதமான அசுத்தம், பேராசை ஆகியவற்றைப் பற்றிய பேச்சுகூட உங்கள் மத்தியில் இருக்கக் கூடாது.+ இவை பரிசுத்தமான மக்களுக்கு ஏற்றவை அல்ல.+ 4 அதேபோல், வெட்கக்கேடான நடத்தை, முட்டாள்தனமான பேச்சு, ஆபாசமான கேலிப் பேச்சு ஆகியவை உங்கள் மத்தியில் இருக்கக் கூடாது.+ இவையெல்லாம்கூட ஏற்றவை அல்ல, கடவுளுக்கு நன்றி சொல்வதுதான் ஏற்றது.+ 5 பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவனோ,+ அசுத்தமான செயல்களைச் செய்கிறவனோ, பேராசை பிடித்தவனோ,+ அதாவது சிலை வழிபாடு செய்கிறவனோ, கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்படவே மாட்டான்*+ என்பது உங்களுக்குத் தெரியும். சொல்லப்போனால், அதை நன்றாகப் புரிந்துகொண்டும் இருக்கிறீர்கள்.

6 இப்படிப்பட்ட காரியங்களால்தான், கீழ்ப்படியாதவர்கள்மேல் கடவுளுடைய கடும் கோபம் வரப்போகிறது. அதனால், ஒருவனும் உங்களை வீண் வார்த்தைகளால் ஏமாற்றிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 7 அவர்களோடு எந்தச் சம்பந்தமும் வைத்துக்கொள்ளாதீர்கள். 8 ஒருகாலத்தில் நீங்கள் இருளாக இருந்தீர்கள். இப்போதோ நம் எஜமானோடு ஒன்றுபட்டிருப்பதால்,+ ஒளியாக இருக்கிறீர்கள்.+ தொடர்ந்து ஒளியின் பிள்ளைகளாக நடந்துகொள்ளுங்கள். 9 ஏனென்றால், ஒளி எங்கேயோ அங்கேதான் எல்லா விதமான நல்ல குணமும் நீதியும் நேர்மையும் இருக்கும்.*+ 10 நம் எஜமானுக்கு எது பிரியமானது என்பதை எப்போதும் நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.+ 11 இருளுக்குரிய பலனற்ற செயல்களை அவர்களோடு சேர்ந்து செய்வதை நிறுத்துங்கள்.+ அதற்குப் பதிலாக, அவற்றை வெட்டவெளிச்சமாக்குங்கள். 12 அவர்கள் ரகசியமாகச் செய்கிற காரியங்களைச் சொல்வதற்குக்கூட வெட்கக்கேடாக இருக்கிறது. 13 வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படுகிற* எல்லா காரியங்களும் ஒளியால் வெட்டவெளிச்சமாகின்றன. இப்படி, வெட்டவெளிச்சமாகிற எல்லாமே ஒளியாக இருக்கின்றன. 14 அதனால், “தூங்குகிறவனே, விழித்துக்கொள். மரணத்திலிருந்து எழுந்திரு.+ கிறிஸ்து உன்மேல் ஒளிவீசுவார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.+

15 அதனால், நீங்கள் ஞானமில்லாதவர்களாக நடக்காமல், ஞானமுள்ளவர்களாக நடப்பதற்கு அதிக கவனம் செலுத்துங்கள். 16 உங்கள் நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.*+ ஏனென்றால், நாட்கள் மிகவும் மோசமாக இருக்கின்றன. 17 அதனால், புத்தியில்லாமல் நடந்துகொள்ளாதீர்கள். அதற்குப் பதிலாக, யெகோவாவின்* விருப்பம்* என்னவென்று புரிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டே இருங்கள்.+ 18 அதோடு, உங்களைச் சீரழிக்கிற* குடிவெறியை விட்டுவிட்டு,+ எப்போதும் கடவுளுடைய சக்தியால் நிரப்பப்படுங்கள். 19 சங்கீதங்களையும் புகழ் பாடல்களையும் பக்திப் பாடல்களையும் ஒன்றுசேர்ந்து* பாடுங்கள்;+ உங்கள் இதயத்தில் யெகோவாவை* புகழ்ந்து+ இனிமையான பாடல்களைப் பாடுங்கள்.+ 20 நம் கடவுளாகவும் தகப்பனாகவும் இருக்கிறவருக்கு நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில்+ எல்லாவற்றுக்காகவும் எப்போதும் நன்றி சொல்லுங்கள்.+

21 கிறிஸ்துவுக்குப் பயந்து, ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு நடங்கள்.+ 22 மனைவிகளே, நம்முடைய எஜமானுக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதுபோல், உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்.+ 23 ஏனென்றால், கிறிஸ்து சபைக்குத் தலையாக இருப்பதுபோல்,+ கணவனும் மனைவிக்குத் தலையாக இருக்கிறான்.+ கிறிஸ்து தன்னுடைய உடலாகிய சபையின் மீட்பராக இருக்கிறார். 24 கிறிஸ்துவுக்குச் சபை கட்டுப்பட்டு நடப்பதுபோல் மனைவிகளும் தங்கள் கணவருக்கு எல்லா விஷயத்திலும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். 25 கணவர்களே, சபைக்காகக் கிறிஸ்து தன்னையே கொடுத்து அதன்மீது அன்பு காட்டியதுபோல்+ நீங்களும் உங்கள் மனைவிமீது தொடர்ந்து அன்பு காட்டுங்கள்.+ 26 கடவுளுடைய வார்த்தையாகிய தண்ணீரால்* சபையைச் சுத்தப்படுத்திப் புனிதமாக்குவதற்காக அவர் அப்படிச் செய்தார்.+ 27 எந்தவொரு கறையோ எந்தவொரு குறையோ இல்லாமல் பரிசுத்தமான, களங்கமில்லாத+ சபையாக அது தனக்கு முன்னால் பிரகாசிக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தார்.+

28 அதேபோல, கணவர்களும் தங்கள் சொந்த உடல்மீது அன்பு காட்டுவதுபோல் தங்கள் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும். தன் மனைவிமீது அன்பு காட்டுகிறவன் தன்மீதே அன்பு காட்டுகிறான். 29 ஒருவனும் தன் உடலை வெறுக்க மாட்டான், அதைக் கவனித்துக்கொண்டு நெஞ்சார நேசிப்பான். கிறிஸ்துவும் இப்படித்தான் சபையை நேசிக்கிறார். 30 ஏனென்றால், நாம் அவருடைய உடலின் உறுப்புகளாக இருக்கிறோம்.+ 31 “இதன் காரணமாக, மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்;* அவர்கள் இரண்டு பேரும் ஒரே உடலாக* இருப்பார்கள்.”+ 32 இந்தப் பரிசுத்த ரகசியம்+ மகத்தானது. இப்போது கிறிஸ்துவையும் சபையையும் பற்றித்தான் சொல்கிறேன்.+ 33 இருந்தாலும், நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள்மீது அன்பு காட்டுவதுபோல், உங்கள் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்;+ மனைவி தன் கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை காட்ட வேண்டும்.+

6 பிள்ளைகளே, நம் எஜமான் விரும்புகிறபடி உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கீழ்ப்படிந்து நடங்கள்,+ இதுதான் சரியானது. 2 “உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்”+ என்பதுதான் வாக்குறுதியோடு கொடுக்கப்பட்ட முதலாம் கட்டளை. 3 “நீ சீரும் சிறப்புமாக இருப்பாய்,* பூமியில் நீண்ட காலம் வாழ்வாய்” என்பதுதான் அந்த வாக்குறுதி. 4 அப்பாக்களே, உங்களுடைய பிள்ளைகளுக்கு எரிச்சலூட்டாதீர்கள்.+ அதற்குப் பதிலாக, யெகோவா* சொல்கிற விதத்தில் அவர்களைக் கண்டித்து,*+ அவர் தருகிற புத்திமதியின்படி* வளர்த்து வாருங்கள்.+

5 அடிமைகளே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதுபோல், இந்த உலகத்தில் இருக்கிற உங்கள் எஜமான்களுக்குப் பயத்தோடும் மரியாதையோடும் உண்மை மனதோடும் கீழ்ப்படிந்து நடங்கள்.+ 6 மனிதர்களைப் பிரியப்படுத்துவதற்காக, மற்றவர்கள் பார்க்கும்போது மட்டுமே கீழ்ப்படியாதீர்கள்.+ கிறிஸ்துவின் அடிமைகளாகக் கடவுளுடைய விருப்பத்தை* முழு மூச்சோடு நிறைவேற்றுங்கள்.+ 7 மனிதர்களுக்கு அல்ல, யெகோவாவுக்கே* கீழ்ப்படிவதாக நினைத்து, நல்ல எண்ணத்தோடு வேலை செய்யுங்கள்.+ 8 ஏனென்றால், அடிமையாக இருந்தாலும் சுதந்திரமானவனாக இருந்தாலும் அவனவன் செய்கிற நன்மையின்படியே யெகோவாவிடமிருந்து* அவனுக்குப் பலன் கிடைக்கும்+ என்பதை அறிந்திருக்கிறீர்கள். 9 எஜமான்களே, நீங்களும் இதை மனதில் வைத்து உங்கள் அடிமைகளை நடத்துங்கள், அவர்களை மிரட்டாதீர்கள். ஏனென்றால், அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமான் பரலோகத்தில் இருக்கிறார்+ என்பதையும், அவர் பாரபட்சம் காட்டாதவர் என்பதையும் அறிந்திருக்கிறீர்கள்.

10 கடைசியாக நான் சொல்வது இதுதான்: நம் எஜமான் தருகிற மகா பலத்தால் வலிமை+ பெற்றுக்கொண்டே இருங்கள். 11 பிசாசின் சூழ்ச்சிகளை* நீங்கள் உறுதியோடு எதிர்த்து நிற்க வேண்டுமானால், கடவுள் தருகிற முழு கவசத்தையும் போட்டுக்கொள்ளுங்கள்.+ 12 ஏனென்றால், மனிதர்களோடு* அல்ல, அரசாங்கங்களோடும், அதிகாரிகளோடும், இந்த இருண்ட உலகத்தின் தலைவர்களோடும், பரலோகத்தில் இருக்கிற பொல்லாத தூதர் கூட்டத்தோடும்+ நாம் போராட* வேண்டியிருக்கிறது.+ 13 அதனால், கடவுள் தருகிற முழு கவசத்தையும் போட்டுக்கொள்ளுங்கள்;+ அப்போதுதான், பொல்லாத நாளில் அவர்களை உங்களால் எதிர்க்கவும் எல்லாவற்றையும் முழுமையாகச் செய்து முடித்து உறுதியோடு நிற்கவும் முடியும்.

14 அதனால், சத்தியத்தை உங்கள் இடுப்புவாராகக்+ கட்டிக்கொண்டும், நீதியை மார்புக் கவசமாகப் போட்டுக்கொண்டும்,+ 15 சமாதானத்தின் நல்ல செய்தியைக் காலணியாகப் போட்டுக்கொண்டும் உறுதியாக நில்லுங்கள்.*+ 16 இவை எல்லாவற்றோடும்கூட, பொல்லாதவன் எறிகிற நெருப்புக் கணைகளையெல்லாம்*+ அணைப்பதற்காக, விசுவாசத்தைப் பெரிய கேடயமாகப் பிடித்துக்கொள்ளுங்கள்.+ 17 அதோடு, மீட்பைத் தலைக்கவசமாக அணிந்துகொள்ளுங்கள்;+ கடவுளுடைய சக்தியால் கொடுக்கப்பட்டிருக்கிற அவருடைய வார்த்தையை+ வாளாக எடுத்துக்கொள்ளுங்கள். 18 அதுமட்டுமல்ல, எல்லா சந்தர்ப்பங்களிலும் கடவுளுடைய சக்தியின் உதவியால்+ எல்லா விதமான ஜெபங்களையும்+ மன்றாட்டுகளையும் ஏறெடுங்கள். அதற்காக விழிப்புடன் இருந்து, பரிசுத்தவான்கள் எல்லாருக்காகவும் எப்போதும் மன்றாடுங்கள். 19 நல்ல செய்தியின் பரிசுத்த ரகசியத்தைத்+ தைரியமாகப் பேசுவதற்குக் கடவுள் என் வாயில் வார்த்தைகளைத் தர வேண்டுமென்று எனக்காகவும் ஜெபம் செய்யுங்கள். 20 இந்த நல்ல செய்திக்காகச் சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கிற தூதுவனாகிய+ நான், அதைப் பற்றிப் பேச வேண்டிய விதத்தில் தைரியமாகப் பேசுவதற்கு எனக்காக ஜெபம் செய்யுங்கள்.

21 நான் எப்படி இருக்கிறேன், என்ன செய்து வருகிறேன் என்பதையெல்லாம் அன்பான சகோதரரும் நம் எஜமானுடைய உண்மையுள்ள ஊழியருமான தீகிக்கு+ உங்களிடம் சொல்வார்.+ 22 எங்களைப் பற்றிய விஷயங்களைத் தெரியப்படுத்துவதற்கும், உங்கள் இதயங்களுக்கு ஆறுதல் தருவதற்கும்தான் அவரை உங்களிடம் அனுப்புகிறேன்.

23 பரலோகத் தகப்பனாகிய கடவுளிடமிருந்தும் நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் சகோதரர்களுக்குச் சமாதானமும் விசுவாசத்தோடுகூடிய அன்பும் கிடைக்கட்டும். 24 நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துமேல் அழியாத அன்பு காட்டுகிற எல்லாருக்கும் கடவுளுடைய அளவற்ற கருணை கிடைக்கட்டும்.

வே.வா., “சித்தத்தின்படியும்.”

வே.வா., “புரிந்துகொள்ளுதலோடும்கூட.”

வே.வா., “சித்தத்தை.”

வே.வா., “சித்தத்தின்படி.”

நே.மொ., “முன்தீர்மானித்தார்.”

வே.வா., “முன்பணமாக.”

வே.வா., “இயேசுவின் சீஷர்களாகிய.”

வே.வா., “சகாப்தத்தில்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.

வே.வா., “சகாப்தத்தில்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.

நே.மொ., “மனிதனாக.”

சொல் பட்டியலைப் பாருங்கள்.

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இதன் தொடர்ச்சி, வசனம் 14-ல் இருப்பதாகத் தெரிகிறது.

நே.மொ., “கடவுளுக்குள்.”

அல்லது, “மக்களிடம்.”

நே.மொ., “அவரிடமிருந்தே அதன் பெயரைப் பெற்றிருக்கிறது.”

அதாவது, “அப்படியே ஆகட்டும்.”

நே.மொ., “சமாதானப் பிணைப்பில் ஒன்றிணைக்கப்பட்டவர்களாக.”

வே.வா., “நல்ல செய்தியை அறிவிக்கிறவர்களாகவும்.”

வே.வா., “பரிசுத்தவான்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்காகவும்.”

வே.வா., “ஒற்றுமையாக.”

சொல் பட்டியலைப் பாருங்கள்.

வே.வா., “உங்கள் மனதை உந்துவிக்கிற சக்தியை.”

வே.வா., “சித்தத்தின்படி.”

வே.வா., “பற்றுமாறாத குணத்துக்கும்.”

வே.வா., “இடம் கொடுத்துவிடாதீர்கள்.”

வே.வா., “வேதனைப்படுத்தாமல்.”

அல்லது, “உங்களுக்காக.”

அல்லது, “உங்கள்மேல்.”

சொல் பட்டியலைப் பாருங்கள்.

சொல் பட்டியலைப் பாருங்கள்.

நே.மொ., “அரசாங்கத்தை ஆஸ்தியாகப் பெற மாட்டான்.”

நே.மொ., “ஏனென்றால், எல்லா விதமான நல்ல குணமும் நீதியும் நேர்மையும் ஒளியின் கனிகளாக இருக்கின்றன.”

வே.வா., “கண்டனத்துக்குரிய.”

நே.மொ., “குறித்த நேரத்தை விலைக்கு வாங்குங்கள்.”

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

வே.வா., “சித்தம்.”

வே.வா., “முரட்டுத்தனமாக நடக்க வைக்கிற.”

அல்லது, “உங்களுக்குள்.”

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

நே.மொ., “தண்ணீர் குளியலால்.”

இதற்கான மூல வார்த்தை, பசைபோல் இறுக ஒட்டிக்கொண்டிருப்பதை அர்த்தப்படுத்துகிறது.

நே.மொ., “சதையாக.”

வே.வா., “வளமாக வாழ்வாய்.”

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

‘கண்டித்தல்’ என்பதற்கான மூல வார்த்தைக்கு கட்டுப்படுத்துவது, கட்டளையிடுவது, கற்பிப்பது, திருத்துவது, அறிவுறுத்துவது, தண்டிப்பது, புத்தி சொல்லுவது, பயிற்றுவிப்பது என பல அர்த்தங்கள் இருக்கின்றன.

வே.வா., “அறிவுரையின்படி; ஆலோசனையின்படி.” நே.மொ., “அவருடைய சிந்தையை அவர்களுடைய மனதில் பதிய வைக்கும் விதத்தில்.”

வே.வா., “சித்தத்தை.”

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

வே.வா., “சதித்திட்டங்களை.”

நே.மொ., “சதையோடும் இரத்தத்தோடும்.”

நே.மொ., “மல்யுத்தம் செய்ய.”

நே.மொ., “சமாதானத்தின் நல்ல செய்தியை அறிவிக்க உங்கள் கால்களைத் தயார்நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.”

வே.வா., “அம்புகளையெல்லாம்.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்