உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • nwt யோவேல் 1:1-3:21
  • யோவேல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யோவேல்
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
யோவேல்

யோவேல்

1 பெத்துயேலின் மகனாகிய யோவேல்* என்பவருக்கு யெகோவாவிடமிருந்து கிடைத்த செய்தி இதுதான்:

 2 “பெரியோர்களே,* இதைக் கேளுங்கள்!

தேசத்து ஜனங்களே,* கவனியுங்கள்.

உங்கள் வாழ்நாளில் இப்படியொரு காரியம் நடந்திருக்குமா?

உங்கள் முன்னோர்கள் காலத்திலாவது நடந்திருக்குமா?+

 3 உங்கள் பிள்ளைகளிடம் இதைப் பற்றிச் சொல்லுங்கள்.

அவர்கள் அவர்களுடைய பிள்ளைகளிடம் சொல்லட்டும்.

அந்தப் பிள்ளைகள் அடுத்த தலைமுறையிடம் சொல்லட்டும்.

 4 முதல் வகையான வெட்டுக்கிளிகள்* விட்டுவைத்ததை இரண்டாவது வகையான* வெட்டுக்கிளிகள் தின்றன.+

இரண்டாவது வகையான வெட்டுக்கிளிகள் விட்டுவைத்ததை மூன்றாவது வகையான* வெட்டுக்கிளிகள் தின்றன.

மூன்றாவது வகையான வெட்டுக்கிளிகள் விட்டுவைத்ததை நான்காவது வகையான* வெட்டுக்கிளிகள் தின்றன.+

 5 குடிகாரர்களே,+ எழுந்து அழுங்கள்!

திராட்சமது குடிப்பவர்களே, ஒப்பாரி வையுங்கள்!

இனி உங்களுக்குத் தித்திப்பான திராட்சமது கிடைக்காது.+

 6 பலம்படைத்த வெட்டுக்கிளிக் கூட்டம் என்னுடைய தேசத்துக்கு வந்தது.+

அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள்,+ அதன் தாடைகள் சிங்கத்தின் தாடைகள்.

 7 என்னுடைய திராட்சைக் கொடியை அது நாசமாக்கியது, அத்தி மரத்தை மொட்டையாக்கியது.

அவற்றின் பட்டைகளை மொத்தமாக உரித்துப் போட்டது.

கிளைகளையும் விட்டுவைக்கவில்லை.

 8 மணமகனை இழந்து தவிக்கும் கன்னிப்பெண் போல நீங்கள் புலம்புங்கள்.

அவள் துக்கத் துணி* போட்டுக்கொண்டு கதறுவது போல நீங்கள் கதறுங்கள்.

 9 யாருமே யெகோவாவின் ஆலயத்துக்கு உணவையும் திராட்சமதுவையும் காணிக்கையாகக்+ கொண்டுவருவதில்லை.

யெகோவாவுக்குச் சேவை செய்யும் குருமார்கள் அழுது புலம்புகிறார்கள்.

10 வயல்வெளிகள் பாழாய்க் கிடக்கின்றன, நிலங்கள் சோகத்தில் வாடுகின்றன.+

தானியம் நாசமாக்கப்பட்டது, புதிய திராட்சமது தீர்ந்துவிட்டது, எண்ணெயும் காலியாகிவிட்டது.+

11 விவசாயிகள் குழம்பித் தவிக்கிறார்கள், திராட்சைத் தோட்டக்காரர்கள் ஓலமிட்டு அழுகிறார்கள்.

கோதுமையும் பார்லியும் எங்குமே இல்லை.

வயலின் விளைச்சல் எல்லாமே அழிந்துபோனது.

12 திராட்சைக் கொடி வாடிப்போய்விட்டது.

அத்தி மரம் பட்டுப்போய்விட்டது.

மாதுளை, ஆப்பிள், பேரீச்ச மரங்களும் மற்ற எல்லா மரங்களும் காய்ந்துவிட்டன.+

சந்தோஷத்தில் துள்ளிய ஜனங்கள் அவமானப்பட்டு நிற்கிறார்கள்.

13 குருமார்களே! துக்கத் துணியைப் போட்டுக்கொள்ளுங்கள், நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுங்கள்.

பலிபீடத்தில் சேவை செய்கிறவர்களே!+ ஒப்பாரி வையுங்கள்.

என் கடவுளின் ஊழியர்களே! ராத்திரி முழுவதும் துக்கத் துணியை உடுத்தியிருங்கள்.

ஏனென்றால், யாருமே கடவுளுடைய ஆலயத்துக்கு உணவையும் திராட்சமதுவையும் காணிக்கையாகக்+ கொண்டுவருவதில்லை.

14 விரத நாளை அறிவியுங்கள், விசேஷ மாநாட்டுக்கு அழைப்பு கொடுங்கள்.+

பெரியோர்களை வரச் சொல்லுங்கள், தேசத்து ஜனங்களையும் கூப்பிடுங்கள்.

அவர்கள் யெகோவாவின் ஆலயத்துக்கு வரட்டும்,+ உதவி கேட்டு யெகோவாவிடம் கெஞ்சட்டும்.

15 ஐயோ ஆபத்து! யெகோவாவின் நாள் வரப்போகிறது.

அந்த நாள் சீக்கிரத்தில் வரப்போகிறது.+

சர்வவல்லமையுள்ளவர் அந்த நாளில் அழிவைக் கொண்டுவரப்போகிறார்.

16 நம்முடைய கண் முன்னாலிருந்து உணவும்,

நம் கடவுளுடைய ஆலயத்திலிருந்து சந்தோஷமும் காணாமல் போய்விட்டதுதானே?

17 மண்கட்டிகளுக்குக் கீழே* விதைகள்* காய்ந்து கிடக்கின்றன.

சேமிப்புக் கிடங்குகள் காலியாகக் கிடக்கின்றன.

தானியம் இல்லாததால் களஞ்சியங்கள் இடிக்கப்பட்டுக் கிடக்கின்றன.

18 வீட்டு விலங்குகள் முனகுகின்றன.

மேய்ச்சல் நிலம் இல்லாததால் மாடுகள் குழப்பத்தில் திரிகின்றன.

ஆட்டு மந்தைகளும் தண்டனை அனுபவிக்கின்றன.

19 யெகோவாவே, உங்களிடம் நான் வேண்டுகிறேன்.+

வனாந்தரத்தின் மேய்ச்சல் நிலங்கள் நெருப்புக்கு இரையாகிவிட்டன.

மரங்களெல்லாம் தீயில் தீய்ந்துவிட்டன.

20 நீரோடைகள் வற்றிப்போய்விட்டன.

வனாந்தரத்தின் மேய்ச்சல் நிலங்கள் நெருப்புக்கு இரையாகிவிட்டன.

அதனால், காட்டு விலங்குகள்கூட உங்கள் உதவிக்காக ஏங்குகின்றன.”

2 “சீயோனில் ஊதுகொம்பை ஊதுங்கள்!+

என் பரிசுத்த மலையில் போர் முழக்கம் செய்யுங்கள்.

தேசத்து ஜனங்கள்* எல்லாரும் நடுங்கட்டும்.

யெகோவாவின் நாள் வருகிறது!+ அது நெருங்கிவிட்டது!

 2 அந்த நாள் வெளிச்சமே இல்லாத நாள்.+

கார்மேகமும் கும்மிருட்டும் சூழ்ந்துகொள்ளும் நாள்.+

மலைமேல் படரும் விடியற்கால வெளிச்சத்தைப் போல மங்கலாக இருக்கும் நாள்.

பலம்படைத்த வெட்டுக்கிளிகளின்* கூட்டம் வருகிறது.+

அதைப் போன்ற ஒரு கூட்டம் இதற்குமுன் வந்ததில்லை, இனிமேலும் வரப்போவதில்லை.

எத்தனை தலைமுறை வந்தாலும் வரப்போவதில்லை.

 3 அதன் முன்னால் இருப்பதையெல்லாம் நெருப்பு பொசுக்கும்.

அதன் பின்னால் இருப்பதையெல்லாம் தீ ஜுவாலை எரிக்கும்.+

அது வருவதற்குமுன் தேசமெல்லாம் ஏதேன் தோட்டம்+ போல இருக்கும்.

வந்த பின்போ பொட்டல் காடாக மாறிவிடும்.

எதுவுமே தப்பாது.

 4 அவை பார்ப்பதற்குக் குதிரைகள்போல் இருக்கும்.

போர்க்குதிரைகள்போல் ஓடும்.+

 5 அவை மலைகள்மேல் துள்ளிவருகிற சத்தம் ரதங்களின் சத்தம் போலவும்,+

வைக்கோல் பற்றியெரிகிற சத்தம் போலவும்,

போருக்கு அணிவகுத்துச் செல்கிற வீரர்களின் சத்தம் போலவும் இருக்கும்.+

 6 அவற்றால் ஜனங்கள் கதிகலங்கிப்போவார்கள்.

எல்லாருடைய முகமும் வெளுத்துப்போகும்.

 7 அவை படைவீரர்கள் போலப் பாயும்.

ராணுவ வீரர்கள் போல மதிலைத் தாண்டும்.

ஒவ்வொன்றும் அதனதன் வரிசையில் போகும்.

பாதை மாறாமல் போகும்.

 8 ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளாமல் போகும்.

ஒவ்வொன்றும் முன்னேறிக்கொண்டே போகும்.

அவற்றில் சில, ஆயுதங்களுக்குப் பலியாகும்.

ஆனாலும், மற்றவை தளராமல் செல்லும்.

 9 அவை நகரத்துக்குள் பாயும், மதில்மேல் ஓடும்.

வீடுகள்மேல் ஏறும், திருடனைப் போல ஜன்னல்கள் வழியாக நுழையும்.

10 அவற்றைப் பார்த்து தேசம் நடுங்கும், வானம் அதிரும்,

சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்,+

நட்சத்திரங்கள் ஒளி இழந்துவிடும்.

11 யெகோவாவின் படை மாபெரும் படை,+ அதன் முன்னால் அவர் முழங்குவார்.+

அவர் சொன்னதை நிறைவேற்றுகிறவர் பலம்படைத்தவர்.

யெகோவாவின் மகா நாள் படுபயங்கரமானது.+

யாரால் அதைத் தாங்கிக்கொள்ள முடியும்?”+

12 யெகோவா இப்படிச் சொல்கிறார்: “இப்போதாவது முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்,+

விரதமிருங்கள்,+ கதறி அழுங்கள்.

13 உங்கள் உடையைக் கிழிக்காமல்+ உள்ளத்தைக் கிழியுங்கள்.+

உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் திரும்புங்கள்.

அப்போது, அவர் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு உங்களைத் தண்டிக்காமல் விட்டுவிடுவார்.*

ஏனென்றால், அவர் கரிசனையும்* இரக்கமும் நிறைந்தவர், சீக்கிரத்தில் கோபப்படாதவர்,+ மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்.+

14 ஒருவேளை அவர் தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு,*+

உங்களுக்கு ஆசீர்வாதங்களைத் தரலாம்.

பின்பு, உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு நீங்கள் உணவையும் திராட்சமதுவையும் காணிக்கையாகக் கொண்டுவரலாம்.

15 சீயோனில் ஊதுகொம்பை ஊதுங்கள்!

விரத நாளை அறிவியுங்கள், விசேஷ மாநாட்டுக்கு+ அழைப்பு கொடுங்கள்.

16 ஜனங்களை ஒன்றுகூட்டுங்கள்; சபையைப் புனிதப்படுத்துங்கள்.+

பெரியோர்களை அழையுங்கள்; பிள்ளைகளையும் பால் குடிக்கிற குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வாருங்கள்.+

மணமகன் உள்ளறையிலிருந்து புறப்பட்டு வரட்டும், மணமகளும் தன் அறையிலிருந்து வெளியே வரட்டும்.

17 யெகோவாவின் ஊழியர்களான குருமார்கள், ஆலய வாசலுக்கும் பலிபீடத்துக்கும் நடுவில் நிற்கட்டும்.+

அழுதுகொண்டே இப்படிச் சொல்லட்டும்:

‘யெகோவாவே, உங்கள் ஜனங்கள்மேல் தயவுசெய்து இரக்கம் காட்டுங்கள்.

அவர்கள் உங்களுடைய சொத்து, மற்றவர்கள் பார்த்து சிரிக்குமளவுக்கு விட்டுவிடாதீர்கள்.

மற்ற தேசங்கள் அவர்களை அடக்கி ஆள அனுமதிக்காதீர்கள்.

“அவர்களுடைய கடவுள் எங்கே போய்விட்டார்?”+ என்று யாரும் கேட்டுவிடக் கூடாதே.’

18 யெகோவா அவருடைய தேசத்துக்கு உதவி செய்ய வைராக்கியமாக இருப்பார்.

அவருடைய ஜனங்கள்மேல் கரிசனை காட்டுவார்.+

19 யெகோவா அவருடைய ஜனங்களிடம் இப்படிச் சொல்வார்:

‘நான் தானியத்தையும் புதிய திராட்சமதுவையும் எண்ணெயையும் தருவேன்.

அதைச் சாப்பிட்டுத் திருப்தியாக இருப்பீர்கள்.+

மற்றவர்கள் உங்களைப் பழித்துப் பேசுவதற்கு இனி நான் விடமாட்டேன்.+

20 வடதிசைப் படையை உங்களைவிட்டுத் தூரமாக விரட்டியடிப்பேன்.

வறண்ட வனாந்தரத்துக்கு அதைத் துரத்துவேன்.

அதன் முன்னணியைக் கிழக்குக் கடல்* பக்கமாகத் துரத்துவேன்.

அதன் பின்னணியை மேற்குக் கடல்* பக்கமாகத் துரத்துவேன்.

அதனிடமிருந்து கெட்ட வாடை வீசும்.

துர்நாற்றம் வீசிக்கொண்டே இருக்கும்.+

ஏனென்றால், கடவுள் பெரிய காரியங்களைச் செய்வார்.’

21 தேசமே, பயப்படாதே!

யெகோவா பெரிய காரியங்களைச் செய்யப்போவதால் சந்தோஷப்படு.

22 காட்டு மிருகங்களே, கவலைப்பட வேண்டாம்!

வனாந்தரத்தின் மேய்ச்சல் நிலங்கள் பச்சைப்பசேலென்று மாறும்.+

மரங்கள் காய்த்துக் குலுங்கும்.+

அத்தி மரமும் திராட்சைக் கொடியும் அமோக விளைச்சல் தரும்.+

23 சீயோன் ஜனங்களே, சந்தோஷப்படுங்கள்; உங்கள் கடவுளாகிய யெகோவாவை நினைத்து ஆனந்தப்படுங்கள்.+

அவர் பயிர்களுக்குத் தேவையான முதல் பருவ மழையைத் தருவார்.

நன்றாக மழை பெய்யும்படி செய்வார்.

முன்பு போலவே முதல் பருவ மழையையும் கடைசி பருவ மழையையும் தருவார்.+

24 களத்துமேடுகளில் தானியம் நிரம்பி வழியும்.

ஆலைகளில் புதிய திராட்சமதுவும் எண்ணெயும் வழிந்தோடும்.+

25 முன்பு என்னுடைய பெரிய வெட்டுக்கிளிப் படையை அனுப்பினேன்.+

நான்கு வகையான வெட்டுக்கிளிகள்* வந்து எல்லாவற்றையும் தின்றுதீர்த்தன.

அத்தனை வருஷங்களாக ஏற்பட்ட நஷ்டத்தை நான் ஈடுகட்டுவேன்.

26 நீங்கள் திருப்தியாகச் சாப்பிடுவீர்கள்.+

உங்களுக்காக அற்புதங்கள் செய்த உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பெயரைப் புகழ்வீர்கள்.+

என்னுடைய ஜனங்கள் இனி ஒருபோதும் அவமானப்படுத்தப்பட மாட்டார்கள்.+

27 நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறேன்+ என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

நான்தான் உங்கள் கடவுளாகிய யெகோவா,+ வேறு யாரும் இல்லை.

என்னுடைய ஜனங்கள் இனி ஒருபோதும் அவமானப்படுத்தப்பட மாட்டார்கள்.

28 அதற்குப் பின்பு, பலதரப்பட்ட ஜனங்கள்மேல் என் சக்தியைப் பொழிவேன்.+

உங்களுடைய மகன்களும் மகள்களும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்.

உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள்.

உங்கள் இளைஞர்கள் தரிசனங்களைப் பார்ப்பார்கள்.+

29 அந்த நாட்களில், எனக்கு ஊழியம் செய்கிற ஆண்கள்மேலும் பெண்கள்மேலும்

என் சக்தியைப் பொழிவேன்.

30 வானத்திலும் பூமியிலும் அதிசயங்களைச் செய்து காட்டுவேன்.

எங்கு பார்த்தாலும் இரத்தமாகவும், நெருப்பாகவும், புகைக் காடாகவும் இருக்கும்.+

31 யெகோவாவின் படுபயங்கரமான மகா நாள்+ வருவதற்குமுன்

சூரியன் இருண்டுவிடும், சந்திரன் இரத்த நிறமாகிவிடும்.+

32 யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்.+

அவர்கள் யெகோவா சொன்னபடியே சீயோன் மலையிலும் எருசலேமிலும் இருப்பார்கள்.+

அவர்கள் யெகோவாவினால் அழைக்கப்பட்டவர்கள்.”

3 “அந்த நாட்களில், சிறைபிடிக்கப்பட்டுப் போன என் ஜனங்களுக்கு விடுதலை தருவேன்.

அவர்களை யூதாவுக்கும் எருசலேமுக்கும் மறுபடியும் கூட்டிக்கொண்டு வருவேன்.+

 2 அப்போது, எல்லா தேசத்து ஜனங்களையும் ஒன்றுகூட்டுவேன்.

யோசபாத்தின்* பள்ளத்தாக்குக்குக் கொண்டுவருவேன்.

அங்கே அவர்களுக்குத் தீர்ப்பு கொடுப்பேன்.+

என் சொத்தாகிய இஸ்ரவேல் ஜனங்களுக்காக அவர்களைத் தண்டிப்பேன்.

ஏனென்றால், என் ஜனங்களை மற்ற தேசங்களுக்குத் துரத்தியடித்தார்கள்.

என் தேசத்தைத் தங்களுக்குள் பங்குபோட்டுக்கொண்டார்கள்.+

 3 என் ஜனங்களுக்காகக் குலுக்கல் போட்டார்கள்.+

விபச்சாரிக்குக் கூலி கொடுப்பதற்காகச் சிறுவனை விற்றார்கள்.

திராட்சமதுவை வாங்கிக் குடிப்பதற்காகச் சிறுமியை விற்றார்கள்.

 4 தீரு, சீதோன், பெலிஸ்தியா பகுதிகளில் வாழ்கிறவர்களே,

என்ன துணிச்சல் இருந்தால் என்னிடம் இப்படி நடந்துகொள்வீர்கள்?

என்னைப் பழிவாங்க நினைக்கிறீர்களோ?

நீங்கள் என்னைப் பழிவாங்க நினைத்தால்,

நான் சீக்கிரமாகவும் வேகமாகவும் வந்து உங்களைப் பழிவாங்குவேன்.+

 5 என்னுடைய வெள்ளியையும் தங்கத்தையும் நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள்.+

என்னுடைய விலைமதிப்புள்ள பொருள்களை உங்கள் கோயில்களுக்குக் கொண்டுபோனீர்கள்.

 6 யூதா ஜனங்களையும் எருசலேம் ஜனங்களையும் கிரேக்கர்களிடம் விற்றீர்கள்.+

தேசத்தைவிட்டு ரொம்பத் தூரத்துக்குத் துரத்தியடித்தீர்கள்.

 7 நீங்கள் விற்றுப்போட்ட இடத்திலிருந்து அவர்களை வரவழைப்பேன்.+

என்னைப் பழிவாங்க நினைத்த உங்களை நான் பழிவாங்குவேன்.

 8 உங்கள் மகன்களையும் மகள்களையும் யூதா ஜனங்களிடம் விற்றுவிடுவேன்.+

அவர்கள் உங்கள் பிள்ளைகளைத் தொலைதூரத்திலுள்ள சேபா தேசத்தாரிடம் விற்றுவிடுவார்கள்.

யெகோவாவாகிய நான் இதைச் சொல்கிறேன்.

 9 எல்லா தேசங்களிலும் இதை அறிவியுங்கள்:+

‘போருக்குத் தயாராகுங்கள்!* மாவீரர்களே, கிளம்புங்கள்!

படைகளே, ஒன்றாக அணிவகுத்து வாருங்கள்!+

10 மண்வெட்டிகளை வாள்களாகவும், அரிவாள்களை ஈட்டிகளாகவும் மாற்றுங்கள்.

பலவீனமானவன், “நான் பலசாலி” என்று சொல்லட்டும்.

11 அக்கம்பக்கத்திலுள்ள தேசங்களே, ஒன்றுகூடி வந்து+ உதவுங்கள்!’”

யெகோவாவே, உங்கள் மாவீரர்களை அங்கே அனுப்புங்கள்.

12 “தேசங்களே, யோசபாத்தின் பள்ளத்தாக்குக்குச் சீக்கிரமாக வாருங்கள்.

நான் அங்கே உட்கார்ந்து, சுற்றியுள்ள எல்லா தேசங்களுக்கும் தீர்ப்பு கொடுப்பேன்.+

13 பயிர் முற்றிவிட்டது, அரிவாளை எடுத்து அறுங்கள்.

ஆலையில் திராட்சைப் பழம் கொட்டிக்கிடக்கிறது, வந்து மிதியுங்கள்.+

திராட்சரசத் தொட்டிகள் நிரம்பி வழிகின்றன; ஏனென்றால், தேசங்களின் அக்கிரமங்கள் பெருகிவிட்டன.

14 யெகோவா தீர்ப்பு கொடுக்கப்போகும் பள்ளத்தாக்கில் ஜனங்கள் கூட்டம் கூட்டமாகக் கூடியிருக்கிறார்கள்.

அவருடைய நாள் நெருங்கிவிட்டது.+

15 அப்போது, சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்.

நட்சத்திரங்கள் ஒளி இழந்துவிடும்.

16 சீயோனிலிருந்து யெகோவா கர்ஜிப்பார்.

எருசலேமிலிருந்து சத்தமிடுவார்.

வானமும் பூமியும் அதிரும்.

யெகோவா தன்னுடைய ஜனங்களுக்கு அடைக்கலமாக இருப்பார்.+

இஸ்ரவேல் ஜனங்களைக் கோட்டைபோல் பாதுகாப்பார்.

17 உங்கள் கடவுளாகிய யெகோவா நானே என்பதை அப்போது தெரிந்துகொள்வீர்கள்.

பரிசுத்த மலையாகிய சீயோனில் நான் குடியிருக்கிறேன்.+

எருசலேம் பரிசுத்த இடமாக மாறும்.+

அன்னியர்கள் இனி அங்கு கால்வைக்க மாட்டார்கள்.+

18 அந்த நாளில் மலைகளிலிருந்து தித்திப்பான திராட்சமது சொட்டும்.+

குன்றுகளில் பால் வழிந்தோடும்.

யூதாவின் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுக்கும்.

யெகோவாவின் வீட்டிலிருந்து நீரூற்று புறப்படும்.+

சித்தீம்* பள்ளத்தாக்கில்* அது பாய்ந்தோடும்.

19 எகிப்து பாழ்நிலமாகும்.+

ஏதோம் வெறுமையான வனாந்தரமாகும்.+

ஏனென்றால், அவை யூதாவிலுள்ள ஜனங்களுக்குக் கொடுமை செய்தன.+

அப்பாவிகளைக் கொன்று குவித்தன.+

20 ஆனால், யூதாவில் ஜனங்கள் என்றென்றும் குடியிருப்பார்கள்.

எருசலேமில் தலைமுறை தலைமுறையாக வாழ்வார்கள்.+

21 அவர்கள்மேல் இருக்கும் கொலைப்பழியை* நான் நீக்குவேன்.+

யெகோவா சீயோனில் குடியிருப்பார்.”+

அர்த்தம், “யெகோவாவே கடவுள்.”

வே.வா., “மூப்பர்களே.”

வே.வா., “பூமியில் வாழ்கிறவர்களே.”

நே.மொ., “கபளீகரம் செய்யும் வெட்டுக்கிளிகள்.”

நே.மொ., “கூட்டம் கூட்டமான.”

நே.மொ., “சிறகில்லாத.”

நே.மொ., “அகோரப் பசிகொண்ட.”

சொல் பட்டியலைப் பாருங்கள்.

வே.வா., “மண்வாரிகளில் மண்ணை வாரிப் பார்க்கும்போது.”

அல்லது, “உலர்ந்த அத்திப்பழங்கள்.”

வே.வா., “பூமியில் வாழ்கிறவர்கள்.”

நே.மொ., “ஒரு ஜனத்தின்.”

வே.வா., “உங்களுக்குத் தண்டனை கொடுக்க நினைத்ததைக் குறித்து மனம் வருந்துவார்.”

வே.வா., “கனிவும்.”

வே.வா., “அவர் மனம் வருந்தி.”

அதாவது, “சவக் கடல்.”

அதாவது, “மத்தியதரைக் கடல்.”

நே.மொ., “கூட்டம்கூட்டமான வெட்டுக்கிளிகளும், சிறகில்லாத வெட்டுக்கிளிகளும், அகோரப் பசிகொண்ட வெட்டுக்கிளிகளும், கபளீகரம் செய்யும் வெட்டுக்கிளிகளும்.”

இந்தப் பெயரின் அர்த்தம், “யெகோவாவே நீதிபதி.”

நே.மொ., “போரைப் புனிதப்படுத்துங்கள்.”

அர்த்தம், “வேல மரங்கள்.”

அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கில்.”

வே.வா., “இரத்தப்பழியை.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்