உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • nwt கலாத்தியர் 1:1-6:18
  • கலாத்தியர்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கலாத்தியர்
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
கலாத்தியர்

கலாத்தியருக்கு எழுதப்பட்ட கடிதம்

1 மனிதனிடமிருந்தும் அல்ல, மனிதனாலும் அல்ல, இயேசு கிறிஸ்து மூலமாகவும்+ அவரை உயிரோடு எழுப்பிய பரலோகத் தகப்பனாகிய கடவுள் மூலமாகவும்+ அப்போஸ்தல நியமிப்பைப் பெற்றிருக்கிற பவுலாகிய நான், 2 என்னோடு இருக்கிற சகோதரர்கள் எல்லாரோடும் சேர்ந்து கலாத்தியாவிலுள்ள சபைகளுக்கு எழுதுவது:

3 பரலோகத் தகப்பனாகிய கடவுளிடமிருந்தும் நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அளவற்ற கருணையும் சமாதானமும் கிடைக்கட்டும். 4 இந்தப் பொல்லாத உலகத்திலிருந்து* நம்மைக் காப்பாற்ற+ நம்முடைய பாவங்களுக்காகக் கிறிஸ்து தன்னையே கொடுத்தார்.+ இதுதான் நம்முடைய கடவுளாகவும் தகப்பனாகவும் இருக்கிறவருடைய விருப்பம்.*+ 5 இவருக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக! ஆமென்.*

6 கிறிஸ்துவின் அளவற்ற கருணையால் உங்களை அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாக விட்டுவிட்டு வேறொரு நல்ல செய்தியை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டீர்களே!+ எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 7 சொல்லப்போனால், அது நல்ல செய்தியே கிடையாது. சிலர் உங்களைக் குழப்பி,+ கிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்தியைத் திரித்துச் சொல்லப் பார்க்கிறார்களே தவிர வேறொன்றும் இல்லை. 8 நாங்கள் உங்களுக்கு அறிவித்த நல்ல செய்தியைத் தவிர வேறொரு நல்ல செய்தியை எங்களில் ஒருவனோ பரலோகத்திலிருந்து வருகிற ஒரு தேவதூதனோ உங்களுக்கு அறிவித்தால், அவன் சபிக்கப்பட்டவனாக இருக்கட்டும். 9 இப்போது சொன்னதையே மறுபடியும் சொல்கிறேன்: நீங்கள் ஏற்றுக்கொண்ட நல்ல செய்தியைத் தவிர வேறொரு நல்ல செய்தியை எவனாவது உங்களுக்கு அறிவித்தால் அவன் சபிக்கப்பட்டவனாக இருக்கட்டும்.

10 உண்மையில், நான் இப்போது மனிதர்களுடைய தயவைப் பெறுவதற்கு முயற்சி செய்கிறேனா, கடவுளுடைய தயவைப் பெறுவதற்கு முயற்சி செய்கிறேனா? நான் மனிதர்களையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னமும் மனிதர்களைப் பிரியப்படுத்திக்கொண்டிருந்தால் கிறிஸ்துவின் அடிமையாக இருக்க முடியாது, இல்லையா? 11 சகோதரர்களே, நான் உங்களுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்: நான் அறிவித்த நல்ல செய்தி மனிதனிடமிருந்து வந்தது கிடையாது.+ 12 அதை நான் எந்த மனிதனிடமிருந்தும் பெற்றுக்கொள்ளவில்லை, அதை எந்த மனிதனும் எனக்குக் கற்றுக்கொடுக்கவும் இல்லை. இயேசு கிறிஸ்துதான் அதை எனக்கு வெளிப்படுத்தினார்.

13 நான் யூத மதத்தில் இருந்தபோது எப்படி நடந்துகொண்டேன் என்று நீங்களே கேள்விப்பட்டிருப்பீர்கள்.+ கடவுளுடைய சபையைப் பயங்கரமாகத் துன்புறுத்திக்கொண்டும் பாழாக்கிக்கொண்டும் இருந்தேன்.+ 14 என் முன்னோர்களுடைய பாரம்பரியங்களைக் கடைப்பிடிப்பதில் மிகவும் வைராக்கியமாக இருந்தேன்.+ அதனால், என் தேசத்தில் என் வயதிலிருந்த நிறைய பேரைவிட யூத மதத்தைப் பின்பற்றுவதில் சிறந்தவனாக இருந்தேன். 15 ஆனால், என் அம்மாவின் வயிற்றிலிருந்து என்னைப் பிரித்தெடுத்த கடவுள், 16 தன்னுடைய மகனைப் பற்றிய நல்ல செய்தியை என் மூலம் மற்ற தேசத்து மக்களுக்குச் சொல்வது நல்லதென்று நினைத்தார்.+ அதனால், அவர்களுக்கு என் மூலம் அவரை வெளிப்படுத்துவதற்காகத் தன்னுடைய அளவற்ற கருணையால் என்னை அழைத்தார்.+ நான் உடனே இன்னொருவரிடம் போய் ஆலோசனை கேட்கவில்லை. 17 எனக்கு முன்பே அப்போஸ்தலர்களாக இருந்தவர்களைச் சந்திக்க எருசலேமுக்குப் போகவுமில்லை. அதற்குப் பதிலாக, அரேபியாவுக்குப் போனேன், அங்கிருந்து தமஸ்குவுக்குத் திரும்பி வந்தேன்.+

18 மூன்று வருஷங்களுக்குப் பிறகு, கேபாவை*+ சந்தித்துப் பேசுவதற்காக எருசலேமுக்குப் போய்+ அவரோடு 15 நாட்கள் தங்கினேன். 19 ஆனால், மற்ற அப்போஸ்தலர்களில் நம் எஜமானுடைய சகோதரராகிய யாக்கோபைத்+ தவிர வேறு யாரையும் நான் பார்க்கவில்லை. 20 நான் உங்களுக்கு எழுதுகிற இந்த விஷயங்களெல்லாம் பொய் அல்ல என்று கடவுளுக்கு முன்னால் உறுதியாகச் சொல்கிறேன்.

21 அதற்குப் பிறகு சீரியா, சிலிசியா பகுதிகளுக்குப் போனேன்.+ 22 ஆனால், யூதேயாவில் இருக்கிற கிறிஸ்தவ சபைகளுக்கு நான் அதுவரை அறிமுகமாகாமல் இருந்தேன். 23 “இதற்கு முன்பு நம்மைத் துன்புறுத்தி,+ கிறிஸ்தவ மதத்தை அழிக்கப் பார்த்தவன் இப்போது அதைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்கிறான்”+ என்று மட்டுமே அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். 24 அதனால், என்னை முன்னிட்டு கடவுளை அவர்கள் மகிமைப்படுத்த ஆரம்பித்தார்கள்.

2 பதினான்கு வருஷங்களுக்குப் பின்பு, தீத்துவையும் கூட்டிக்கொண்டு மறுபடியும் பர்னபாவோடு+ எருசலேமுக்குப் போனேன்.+ 2 அங்கே போகும்படி எனக்கு வெளிப்படுத்தப்பட்டதால் போனேன். நான் மற்ற தேசத்து மக்களுக்குப் பிரசங்கித்துக்கொண்டிருக்கிற நல்ல செய்தியைப் பற்றி மதிப்புக்குரியவர்களிடம் எடுத்துச் சொன்னேன். ஆனாலும், நான் அப்போது செய்துகொண்டிருந்த ஊழியமும் அதுவரை செய்திருந்த ஊழியமும் வீண்போய்விடக் கூடாது என்பதற்காகத் தனிமையில் அவர்களிடம் எடுத்துச் சொன்னேன். 3 என்னோடிருந்த தீத்து+ ஒரு கிரேக்கராக இருந்தாலும் விருத்தசேதனம் செய்துகொள்ளும்படி யாரும் அவரைக் கட்டாயப்படுத்தவில்லை.+ 4 ஆனால், கிறிஸ்து இயேசுவின் சீஷர்களாகிய நாம் அனுபவிக்கிற சுதந்திரத்தைக் கெடுத்து நம்மை முழுவதுமாக அடிமைப்படுத்துவதற்கென்று,+ சபைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்த போலிச் சகோதரர்கள்+ பிரச்சினையைக் கிளப்பினார்கள்.+ 5 நல்ல செய்தியின் சத்தியம் உங்களிடம் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் கொஞ்சம்கூட அவர்களுக்கு அடிபணியவில்லை.+

6 இருந்தாலும், முக்கியமானவர்களாகக் கருதப்பட்டவர்கள்,+ சொல்லப்போனால் மதிப்புக்குரியவர்கள், புதிதாக எதையும் எனக்குச் சொல்லவில்லை. (முன்பு அவர்கள் எந்த நிலையில் இருந்தார்கள் என்பது எனக்கு முக்கியமல்ல. ஏனென்றால், மனிதர்கள் பார்க்கிற விதமாகக் கடவுள் பார்ப்பதில்லை.) 7 ஆனால், விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களுக்கு நல்ல செய்தியை அறிவிக்கும் பொறுப்பு பேதுருவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததைப் போல், விருத்தசேதனம் செய்யப்படாதவர்களுக்கு நல்ல செய்தியை அறிவிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததை+ அவர்கள் பார்த்தார்கள். 8 (விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களுக்கு அப்போஸ்தலனாகச் செயல்படும் திறனை பேதுருவுக்குக் கொடுத்தவர் மற்ற தேசத்து மக்களுக்கு அப்போஸ்தலனாகச் செயல்படும் திறனை எனக்கும் கொடுத்திருந்தார்.)+ 9 ஆம், சபையின் தூண்கள் என்று கருதப்பட்ட யாக்கோபும்+ கேபாவும்* யோவானும் அந்த அளவற்ற கருணை எனக்குக் கொடுக்கப்பட்டதைப்+ பார்த்தார்கள். அதனால், விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களிடம் அவர்கள் போக வேண்டும் என்றும், நானும் பர்னபாவும்+ மற்ற தேசத்து மக்களிடம் போக வேண்டும் என்றும் தீர்மானித்தார்கள். ஒப்புதலுக்கு அடையாளமாக எங்கள் இரண்டு பேரோடும் கைகுலுக்கினார்கள். 10 வறுமையிலுள்ள சகோதரர்களை மறந்துவிட வேண்டாமென்று மட்டும் கேட்டுக்கொண்டார்கள்; அதைச் செய்வதற்குத்தான் நானும் ஊக்கமாக உழைத்து வந்திருக்கிறேன்.+

11 ஆனாலும், அந்தியோகியாவுக்கு+ கேபா*+ வந்தபோது அவர் நடந்துகொண்ட விதம் தவறாக இருந்ததால்* அதை நேருக்கு நேர் சுட்டிக்காட்டினேன். 12 யாக்கோபிடமிருந்து+ சில ஆட்கள் வருவதற்கு முன்பு அவர் மற்ற தேசத்து மக்களோடு சேர்ந்து சாப்பிட்டு வந்தார்.+ ஆனால் அவர்கள் வந்தபோது, விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களுக்குப் பயந்து, மற்ற தேசத்து மக்களை விட்டுவிலகி, ஒதுங்கியே இருந்துவிட்டார்.+ 13 மற்ற யூதர்களும் அவரைப் போலவே பாசாங்கு செய்தார்கள்.* சொல்லப்போனால், பர்னபாவும் அவர்களோடு சேர்ந்து பாசாங்கு செய்ய* தூண்டப்பட்டார். 14 நல்ல செய்தியின் சத்தியத்துக்கு ஏற்ப அவர்கள் நேர்மையாக நடக்காததை நான் பார்த்தபோது,+ அவர்கள் எல்லாருக்கும் முன்பாக கேபாவை* பார்த்து, “யூதராக இருக்கிற நீங்களே ஒரு யூதரைப் போல் நடக்காமல் மற்ற தேசத்து மக்களைப் போல் நடக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது, யூத வழக்கப்படி நடக்க வேண்டும் என்று மற்ற தேசத்து மக்களை நீங்கள் எப்படிக் கட்டாயப்படுத்தலாம்?”+ என்று கேட்டேன்.

15 நாம் பிறப்பால் யூதர்கள், மற்ற தேசத்தைச் சேர்ந்த பாவிகள் கிடையாது. 16 இருந்தாலும், திருச்சட்டத்தின் செயல்களால் அல்ல, கிறிஸ்து இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தால்தான்+ ஒருவன் நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்படுகிறான்+ என்று அறிந்திருக்கிறோம். அதனால், நாமும் திருச்சட்டத்தின் செயல்களால் அல்ல, கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தால் நீதிமான்கள் என்று ஏற்றுக்கொள்ளப்படுவதற்காக கிறிஸ்து இயேசுவின் மீது விசுவாசம் வைக்கிறோம். ஏனென்றால், எந்த மனிதனும் திருச்சட்டத்தின் செயல்களால் நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டான்.+ 17 கிறிஸ்துவின் மூலம் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முயற்சி செய்கிற நாம் பாவிகளாகக் கருதப்படுகிறோம் என்றால், கிறிஸ்து பாவத்துக்குத் துணைபோகிறார் என்று அர்த்தமா? இல்லவே இல்லை. 18 ஒருகாலத்தில் நான் எதையெல்லாம் இடித்துப்போட்டேனோ அதையெல்லாம் மறுபடியும் கட்டினால், நானே என்னைக் குற்றவாளியாகக் காட்டிக்கொள்கிறவனாய் இருப்பேன். 19 நான் கடவுளுக்கென்று வாழ்வதற்காக, திருச்சட்டத்தின் மூலம் திருச்சட்டத்துக்கு இறந்துவிட்டேன்.+ 20 கிறிஸ்துவோடுகூட நான் மரக் கம்பத்தில் வைத்து ஆணியடிக்கப்பட்டிருக்கிறேன்.+ இனி வாழ்வது நான் அல்ல,+ என்னோடு ஒன்றுபட்டிருக்கிற கிறிஸ்துதான் வாழ்கிறார். சொல்லப்போனால், இப்போது நான் வாழும் வாழ்க்கை கடவுளுடைய மகன் மீதுள்ள விசுவாசத்தால்தான்.+ அவர்தான் என்மேல் அன்பு வைத்து எனக்காகத் தன்னையே தியாகம் செய்தார்.+ 21 கடவுளுடைய அளவற்ற கருணையை நான் ஒதுக்கித்தள்ளுவதில்லை;+ திருச்சட்டத்தின் மூலம் ஒருவன் நீதிமானாக முடியுமென்றால், கிறிஸ்து இறந்தது வீணாக இருக்குமே.+

3 புத்தியில்லாத கலாத்தியர்களே, இயேசு கிறிஸ்து மரக் கம்பத்தில் வைத்து ஆணியடிக்கப்பட்டது உங்களுக்குத் தத்ரூபமாக விளக்கிக் காட்டப்படவில்லையா?+ அப்படியிருக்கும்போது, இந்தக் கெட்ட செல்வாக்கின்கீழ் உங்களைக் கொண்டுவந்தவன் யார்?+ 2 உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்: உங்களுக்குக் கடவுளுடைய சக்தி எதனால் கிடைத்தது? நீங்கள் திருச்சட்டத்தின் செயல்களைச் செய்ததாலா, அல்லது நல்ல செய்தியைக் கேட்டு அதன்மேல் விசுவாசம் வைத்ததாலா?+ 3 ஆன்மீக வழியில் ஆரம்பித்த கிறிஸ்தவ வாழ்க்கையை இப்போது பாவ வழியில் முடித்துக்கொள்ளப் போகிறீர்களா?+ இந்தளவுக்கு நீங்கள் புத்தியில்லாதவர்களா? 4 வீணாகத்தான் இத்தனை பாடுகள் பட்டீர்களா? கண்டிப்பாக அப்படியிருக்க முடியாது. 5 உங்களுக்குச் சக்தியைக் கொடுத்து உங்கள் மத்தியில் அற்புதங்களை* செய்கிறவர்+ எதனால் அப்படிச் செய்கிறார்? நீங்கள் திருச்சட்டத்தின் செயல்களைச் செய்ததாலா அல்லது நல்ல செய்தியைக் கேட்டு அதன்மேல் விசுவாசம் வைத்ததாலா? 6 ஆபிரகாமும் “யெகோவாமேல்* விசுவாசம் வைத்தார், அதனால் அவர் நீதிமானாகக் கருதப்பட்டார்.”+

7 விசுவாசத்தோடு வாழ்கிறவர்கள்தான் ஆபிரகாமின் பிள்ளைகள்+ என்பது நிச்சயமாகவே உங்களுக்குத் தெரியும். 8 விசுவாசத்தைக் காட்டும் மற்ற தேசத்து மக்களைக் கடவுள் நீதிமான்களாக ஏற்றுக்கொள்வார் என்பதை வேதவசனம் முன்கூட்டியே சொன்னது; அதாவது, “உன் மூலமாக எல்லா தேசத்தாரும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்” என்ற நல்ல செய்தியை ஆபிரகாமுக்குச் சொன்னது.+ 9 அதனால், விசுவாசத்தோடு வாழ்கிறவர்கள் விசுவாசமுள்ள ஆபிரகாமைப் போல+ ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.

10 திருச்சட்டத்தின் செயல்களை நம்பியிருக்கிற எல்லாரும் சாபத்துக்கு உட்பட்டவர்கள். ஏனென்றால், “திருச்சட்ட சுருளில் எழுதப்பட்ட அனைத்தையும் தொடர்ந்து கடைப்பிடிக்காத எல்லாரும் சபிக்கப்பட்டவர்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது.+ 11 அதோடு, “விசுவாசத்தால் நீதிமான் வாழ்வு பெறுவான்” என்றும் எழுதப்பட்டிருக்கிறது.+ அதனால், ஒருவனும் திருச்சட்டத்தின் மூலம் கடவுளுக்கு முன்னால் நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை+ என்பது தெளிவாகத் தெரிகிறது. 12 விசுவாசம்தான் முக்கியம் என்று திருச்சட்டம் சொல்வதில்லை. அதற்குப் பதிலாக, “அதிலுள்ள கட்டளைகளின்படி நடப்பவர்கள் அவற்றால் வாழ்வு பெறுவார்கள்” என்றுதான் சொல்கிறது.+ 13 “மரக் கம்பத்தில் தொங்கவிடப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன்” என்று எழுதப்பட்டிருப்பதால்,+ கிறிஸ்து நமக்குப் பதிலாகச் சாபமாகி, நம்மை விலைகொடுத்து வாங்குவதன் மூலம்+ திருச்சட்டத்தின் சாபத்திலிருந்து நம்மை விடுதலை செய்தார்.+ 14 ஆபிரகாமுக்குக் கிடைத்த ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவின் மூலம் மற்ற தேசத்து மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும்,+ வாக்குக் கொடுக்கப்பட்ட கடவுளுடைய சக்தியை நாம் விசுவாசத்தால் பெற்றுக்கொள்ள வேண்டும்+ என்பதற்காகவும்தான் அப்படிச் செய்தார்.

15 சகோதரர்களே, உலக வழக்கிலிருந்து ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன்: ஒரு மனிதனால் உறுதி செய்யப்பட்ட ஓர் ஒப்பந்தத்தைக்கூட யாராலும் செல்லாததாக்கவோ, அதனுடன் எதையும் சேர்க்கவோ முடியாது. 16 ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததிக்கும் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன.+ “சந்ததிகளுக்கு” என்று பலரைப் பற்றிச் சொல்லாமல், “உன் சந்ததிக்கு” என்று ஒருவரைப் பற்றித்தான் வேதவசனம் சொல்கிறது; அந்தச் சந்ததி கிறிஸ்துதான்.+ 17 அதோடு நான் சொல்கிறேன்: கடவுளால் முன்பு உறுதி செய்யப்பட்ட ஒப்பந்தத்தை 430 வருஷங்களுக்குப் பின்பு வந்த திருச்சட்டம் செல்லாததாக்கிவிடாது,+ அவருடைய வாக்குறுதியை ஒழித்தும்விடாது. 18 கடவுள் கொடுக்கிற ஆஸ்தி திருச்சட்டத்தின் அடிப்படையில் கிடைக்கிறதென்றால், இனி அது வாக்குறுதியின் அடிப்படையில் கிடைக்காது. ஆனால், கடவுள் அதை ஆபிரகாமுக்கு ஒரு வாக்குறுதியின் மூலம் கொடுத்திருக்கிறார்.+

19 அப்படியானால், திருச்சட்டம் எதற்கு? வாக்குறுதி கொடுக்கப்பட்ட சந்ததி வரும்வரை+ குற்றங்களை வெளிப்படுத்துவதற்காக அது சேர்க்கப்பட்டது.+ தேவதூதர்களைக் கொண்டு+ ஒரு மத்தியஸ்தர் மூலம்+ அது கொடுக்கப்பட்டது. 20 ஒருவர் மட்டுமே செயல்படும்போது மத்தியஸ்தர் தேவையில்லை. அதனால், வாக்குறுதி கொடுத்தபோது கடவுள் ஒருவர்தான் செயல்பட்டார். 21 அப்படியானால், திருச்சட்டம் கடவுளுடைய வாக்குறுதிகளுக்கு எதிராக இருக்கிறதா? இல்லவே இல்லை! வாழ்வு தரக்கூடிய ஒரு சட்டம் கொடுக்கப்பட்டிருந்தால் அந்தச் சட்டத்தின் மூலமாகவே ஒருவர் கடவுளுக்கு முன்னால் நீதிமானாக ஆகியிருக்கலாம். 22 ஆனால், இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைக்கிறவர்களுக்கு அந்த விசுவாசத்தின் மூலம் கடவுளுடைய வாக்குறுதி கிடைக்க வேண்டும் என்பதற்காக வேதவசனம் எல்லாரையும் பாவத்தின் சிறையில் ஒட்டுமொத்தமாக அடைத்திருக்கிறது.

23 ஆனாலும், கிறிஸ்தவ விசுவாசம் வருவதற்கு முன்னால், நாம் திருச்சட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்டு அதன் காவலில் இருந்தோம், அந்த விசுவாசம் வெளிப்படுவதற்காகக் காத்திருந்தோம்.+ 24 இப்படி, விசுவாசத்தால் நாம் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்காகத் திருச்சட்டம்+ நம்மைக் கிறிஸ்துவிடம் வழிநடத்துகிற பாதுகாவலராக* இருந்து வந்தது.+ 25 ஆனால், இப்போது கிறிஸ்தவ விசுவாசம் வந்துவிட்டதால்+ நாம் இனி அந்தப் பாதுகாவலரின்கீழ் இல்லை.+

26 சொல்லப்போனால், நீங்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவின்மேல் வைத்திருக்கிற விசுவாசத்தால்+ கடவுளுடைய மகன்களாக+ ஆகியிருக்கிறீர்கள். 27 கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்ற நீங்கள் எல்லாரும் கிறிஸ்துவை அணிந்திருக்கிறீர்கள்.*+ 28 இனி உங்களிடையே யூதன் என்றோ கிரேக்கன் என்றோ இல்லை.+ அடிமை என்றோ சுதந்திரமானவன் என்றோ இல்லை.+ ஆண் என்றோ பெண் என்றோ இல்லை.+ கிறிஸ்து இயேசுவின் சீஷர்களான நீங்கள் எல்லாரும் ஒன்றாயிருக்கிறீர்கள்.+ 29 அதோடு, நீங்கள் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள் என்றால், உண்மையிலேயே ஆபிரகாமின் சந்ததியாக,+ வாக்குறுதியின்படி+ அவருடைய வாரிசுகளாக+ இருக்கிறீர்கள்.

4 நான் சொல்வது என்னவென்றால், வாரிசாக இருப்பவன் எல்லாவற்றுக்கும் எஜமானாக இருந்தாலும், சின்னப் பிள்ளையாக இருக்கும்வரை அவனுக்கும் அடிமைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 2 அவனுடைய அப்பா குறித்திருக்கும் நாள் வரும்வரை அவன் தன்னுடைய மேற்பார்வையாளர்களுக்கும் வீட்டு நிர்வாகிகளுக்கும் கீழ்ப்பட்டுதான் இருப்பான். 3 அதேபோல், நாமும் குழந்தைகளாக இருந்தபோது இந்த உலகத்தின் அடிப்படைக் காரியங்களுக்கு அடிமையாக இருந்தோம்.+ 4 ஆனால் குறித்த காலம் வந்தபோது, கடவுள் தன்னுடைய மகனை இந்த உலகத்துக்கு அனுப்பினார். அந்த மகன் ஒரு பெண்ணிடம் பிறந்து+ திருச்சட்டத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தார்.+ 5 திருச்சட்டத்தின்கீழ் இருப்பவர்களை விலைகொடுத்து மீட்பதற்காகவும்+ அதன் மூலம் நம்மை மகன்களாகத் தத்தெடுப்பதற்காகவும்தான் கடவுள் அவரை அனுப்பினார்.+

6 இப்போது நீங்கள் மகன்களாக இருப்பதால், கடவுள் தன்னுடைய மகனுக்குக் கொடுத்த சக்தியை+ நம்முடைய இதயங்களுக்குள் அனுப்பியிருக்கிறார்.+ அந்தச் சக்தி “அபா,* தகப்பனே!” என்று கூப்பிடுகிறது.+ 7 அதனால், இனி நீங்கள் அடிமைகளாக இல்லாமல் மகன்களாக இருக்கிறீர்கள். நீங்கள் மகன்கள் என்றால், வாரிசுகளாகவும் இருக்கிறீர்கள்.+ இது கடவுளுடைய செயல்.

8 ஆனாலும், உங்களுக்குக் கடவுளைப் பற்றித் தெரியாமல் இருந்த காலத்தில் கடவுளாக இல்லாதவற்றுக்கு அடிமைகளாக இருந்தீர்கள். 9 ஆனால், இப்போது உங்களுக்குக் கடவுளைப் பற்றித் தெரியும்; சொல்லப்போனால், கடவுளுக்கு உங்களைப் பற்றித் தெரியும். அப்படியிருக்கும்போது, பலவீனமாகவும் வெறுமையாகவும்+ இருக்கிற அடிப்படைக் காரியங்களுக்கு நீங்கள் ஏன் திரும்பிப்போகிறீர்கள்? பழையபடி அவற்றுக்கு ஏன் அடிமையாவதற்கு விரும்புகிறீர்கள்?+ 10 நாட்களையும் மாதங்களையும் காலங்களையும் வருஷங்களையும் நுணுக்கமாக அனுசரிக்கிறீர்களே.+ 11 உங்களுக்காக நான் பாடுபட்டதெல்லாம் வீணாகிவிட்டதோ என்று பயப்படுகிறேன்.

12 சகோதரர்களே, ஒருகாலத்தில் நானும் உங்களைப் போலத்தான் இருந்தேன்.+ அதனால் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்: நீங்கள் இப்போது என்னைப் போல் ஆகுங்கள். நீங்கள் எனக்கு எந்த அநியாயமும் செய்யவில்லை. 13 ஆனால் உங்களுக்குத் தெரிந்தபடி, எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால்தான், முதன்முதலில் உங்களுக்கு நல்ல செய்தியை அறிவிக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 14 என் உடல்நலக் குறைவு உங்களுக்கு ஒரு சோதனையாக இருந்தபோதிலும், அதற்காக நீங்கள் என்னை அவமதிக்கவோ அருவருக்கவோ* இல்லை. அதற்குப் பதிலாக, ஒரு தேவதூதரை ஏற்றுக்கொள்வது போலவும், கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொள்வது போலவும் என்னை ஏற்றுக்கொண்டீர்கள். 15 அப்போது உங்களுக்கு இருந்த சந்தோஷம் இப்போது எங்கே? முடிந்தால், உங்கள் கண்களைக்கூட எனக்காகப் பிடுங்கிக் கொடுத்திருப்பீர்களே.+ 16 நான் உங்களிடம் உண்மையைச் சொல்வதால் உங்களுக்கு எதிரியாகிவிட்டேனா? 17 சிலர் உங்களைத் தங்கள் பக்கம் இழுப்பதற்குத் தீவிரமாக முயற்சி செய்கிறார்கள். நல்ல எண்ணத்தில் அப்படிச் செய்யாமல், அவர்கள் பின்னால் நீங்கள் ஆர்வமாக வர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் என்னிடமிருந்து உங்களைப் பிரிக்கப் பார்க்கிறார்கள். 18 யாராவது நல்ல எண்ணத்தில் உங்கள்மேல் ஆர்வம் காட்டினால் நல்லதுதான். ஆனால், நான் உங்களோடு இருக்கிற சமயத்தில் மட்டுமல்ல, எல்லா சமயத்திலும் அப்படி ஆர்வம் காட்ட வேண்டும். 19 சின்னப் பிள்ளைகளே,+ கிறிஸ்து உங்களுக்குள் உருவாகும்வரை உங்களுக்காக நான் மறுபடியும் பிரசவ வேதனைப்படுகிறேன். 20 உங்களை நினைக்கும்போது எனக்குக் குழப்பமாக இருக்கிறது. அதனால் இப்போதே உங்களிடம் வந்து இன்னும் சாந்தமாகப் பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

21 திருச்சட்டத்துக்குக் கீழ்ப்பட்டிருக்க விரும்புகிறவர்களே, இதை எனக்குச் சொல்லுங்கள்: திருச்சட்டம் சொல்வதை நீங்கள் கேட்பதில்லையா? 22 உதாரணமாக, ஆபிரகாமுக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஒருவன் அடிமைப் பெண்ணிடம் பிறந்தவன்,+ இன்னொருவன் சுதந்திரப் பெண்ணிடம் பிறந்தவன்.+ 23 அடிமைப் பெண்ணிடம் பிறந்தவன் இயல்பான முறையில் பிறந்தான்,+ சுதந்திரப் பெண்ணிடம் பிறந்தவனோ கடவுளுடைய வாக்குறுதியால் பிறந்தான்.+ 24 இவற்றுக்கு அடையாள அர்த்தம் இருக்கலாம்;* ஏனென்றால், இந்தப் பெண்கள் இரண்டு ஒப்பந்தங்களைக் குறிக்கிறார்கள். அவற்றில் ஒரு ஒப்பந்தம் சீனாய் மலையில்+ செய்யப்பட்டது, இந்த ஒப்பந்தத்துக்கு உட்பட்ட எல்லாரும் அடிமைகளாக இருக்கிறார்கள்; இந்த ஒப்பந்தம் ஆகார் என்பவள்தான். 25 அரேபியாவில் இருக்கிற சீனாய் மலையை+ ஆகார் குறிக்கிறாள்; இப்போது இருக்கிற எருசலேம் ஆகாருக்கு ஒப்பாக இருக்கிறாள். ஏனென்றால், இவள் தன் பிள்ளைகளோடுகூட அடிமையாக இருக்கிறாள். 26 ஆனால், மேலான எருசலேம் சுதந்திரமாக இருக்கிறாள், அவள்தான் நமக்குத் தாய்.

27 ஏனென்றால், “குழந்தை பெறாதவளே, சந்தோஷப்படு. பிரசவ வேதனைப்படாதவளே, சந்தோஷமாக ஆரவாரம் செய்; கணவனோடு வாழ்கிறவளைவிட கைவிடப்பட்டவளுக்கே ஏராளமான பிள்ளைகள் இருக்கிறார்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது.+ 28 சகோதரர்களே, நாம் ஈசாக்கைப் போல வாக்குறுதியால் பிறந்த பிள்ளைகளாக இருக்கிறோம்.+ 29 ஆனால், இயல்பான முறையில் பிறந்தவன் கடவுளுடைய சக்தியால் பிறந்தவனை அப்போது துன்புறுத்தியது போலவே+ இப்போதும் நடந்து வருகிறது.+ 30 இருந்தாலும், வேதவசனம் என்ன சொல்கிறது? “அடிமைப் பெண்ணையும் அவளுடைய மகனையும் துரத்திவிடுங்கள். அடிமைப் பெண்ணின் மகன் சுதந்திரப் பெண்ணின் மகனோடு சேர்ந்து ஒருபோதும் வாரிசாக இருக்க முடியாது” என்று சொல்கிறது.+ 31 அதனால் சகோதரர்களே, நாம் அடிமைப் பெண்ணின் பிள்ளைகளாக இல்லாமல் சுதந்திரப் பெண்ணின் பிள்ளைகளாக இருக்கிறோம்.

5 இப்படிச் சுதந்திரமாக இருப்பதற்காகத்தான் கிறிஸ்து நம்மை விடுதலை செய்தார். அதனால் உறுதியாக நிலைத்திருங்கள்;+ மறுபடியும் அடிமைத்தனம் என்ற நுகத்தடியின்கீழ் போய்விடாதீர்கள்.+

2 பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டால், கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இருக்காது.+ 3 மறுபடியும் சொல்கிறேன், விருத்தசேதனம் செய்துகொள்கிற ஒவ்வொருவனும் திருச்சட்டம் முழுவதையும் கடைப்பிடிக்கக் கடமைப்பட்டிருக்கிறான்.+ 4 திருச்சட்டத்தால் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முயற்சி செய்கிற நீங்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்திருக்கிறீர்கள்.+ அவருடைய அளவற்ற கருணையிலிருந்து விலகியிருக்கிறீர்கள். 5 ஆனால் நாங்கள், கடவுளுடைய சக்தியாலும் எங்களுடைய விசுவாசத்தாலும் நீதிமான்களாவோம் என்று எதிர்பார்த்து ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறோம். 6 கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டிருப்பவர்களைப் பொறுத்ததில், விருத்தசேதனம் செய்துகொள்வதும் முக்கியமல்ல, விருத்தசேதனம் செய்துகொள்ளாமல் இருப்பதும் முக்கியமல்ல.+ அன்பினால் விசுவாசத்தைக் காட்டுவதுதான் முக்கியம்.

7 சத்திய பாதையில் நீங்கள் நன்றாக ஓடிக்கொண்டிருந்தீர்களே.+ அப்படியிருக்கும்போது, நீங்கள் தொடர்ந்து சத்தியத்துக்குக் கீழ்ப்படிந்து நடப்பதைத் தடுத்தது யார்? 8 விருத்தசேதனம் செய்துகொள்ள உங்களைத் தூண்டியது யார்? உங்களை அழைத்த கடவுள் அல்ல. 9 புளிப்புள்ள சிறிதளவு மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைத்துவிடும்.+ 10 நம் எஜமானோடு ஒன்றுபட்டிருக்கிற நீங்கள்+ என்னுடைய கருத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன். உங்கள் மத்தியில் பிரச்சினை உண்டாக்குகிறவன்+ யாராக இருந்தாலும் சரி, அவனுக்குத் தண்டனைத் தீர்ப்பு கிடைக்கும். 11 சகோதரர்களே, விருத்தசேதனம் செய்யச் சொல்லி நான் இன்னமும் பிரசங்கிக்கிறேன் என்றால், ஏன் இன்னமும் துன்புறுத்தப்படுகிறேன்? நான் அப்படிப் பிரசங்கித்தால், சித்திரவதைக் கம்பத்தை*+ பற்றிய செய்தி யாரையும் கோபப்படுத்தாதே. 12 விருத்தசேதனம் என்ற பெயரில் உங்களைத் திசைதிருப்ப முயற்சி செய்கிறவர்கள் தங்களுடைய உறுப்பைத் துண்டித்துக்கொள்ளட்டும்.*

13 சகோதரர்களே, நீங்கள் சுதந்திரமாக இருக்க அழைக்கப்பட்டீர்கள் என்பது உண்மைதான். ஆனால், இந்தச் சுதந்திரத்தைப் பாவ ஆசைகளை நிறைவேற்றுவதற்குச் சாக்காகப் பயன்படுத்தாதீர்கள்.+ அதற்குப் பதிலாக, அன்பினால் ஒருவருக்கொருவர் அடிமைகளாக வேலை செய்யுங்கள்.+ 14 ஏனென்றால், “உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும்* அன்பு காட்ட வேண்டும்” என்ற ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவேறுகிறது.*+ 15 நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்துக் குதறிக்கொண்டே இருந்தால்+ ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள்,+ எச்சரிக்கை!

16 நான் சொல்வது இதுதான்: கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடந்துகொண்டிருங்கள்,+ அப்போது எந்தவொரு பாவ ஆசையையும் நிறைவேற்ற மாட்டீர்கள்.+ 17 பாவ ஆசை கடவுளுடைய சக்திக்கு விரோதமானது. கடவுளுடைய சக்தியோ பாவ ஆசைக்கு விரோதமானது. இவை ஒன்றுக்கொன்று எதிராக இருப்பதால் நீங்கள் செய்ய விரும்புகிற காரியங்களைச் செய்ய முடிவதில்லை.+ 18 அதோடு, கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடந்தால், நீங்கள் திருச்சட்டத்தின்கீழ் இல்லை என்று அர்த்தம்.

19 பாவ இயல்புக்குரிய செயல்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. அவை பாலியல் முறைகேடு,*+ அசுத்தமான நடத்தை, வெட்கங்கெட்ட நடத்தை,*+ 20 சிலை வழிபாடு, ஆவியுலகத் தொடர்பு,*+ பகை, சண்டை சச்சரவு, பொறாமை, கோப வெறி, கருத்துவேறுபாடு, பிரிவினை, மதப்பிரிவு, 21 மற்றவர்களைப் பார்த்து வயிறெரிதல், குடிவெறி,+ குடித்துக் கும்மாளம் போடுதல் போன்றவையாகும்.+ இதுபோன்ற காரியங்களைச் செய்து வருகிறவர்கள் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட* மாட்டார்கள்+ என்று உங்களை ஏற்கெனவே எச்சரித்தது போல இப்போதும் எச்சரிக்கிறேன்.

22 ஆனால், கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்கள்* அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, கருணை, நல்மனம்,+ விசுவாசம், 23 சாந்தம், சுயக்கட்டுப்பாடு ஆகியவையே.+ இப்படிப்பட்டவற்றுக்கு எதிராக எந்தவொரு சட்டமும் இல்லை. 24 கிறிஸ்து இயேசுவுக்குச் சொந்தமானவர்கள் தங்கள் உடலை அதன் மோகங்களோடும் ஆசைகளோடும் சேர்த்து மரக் கம்பத்தில் ஆணியடித்துவிட்டார்கள்.+

25 கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நாம் வாழ்ந்துகொண்டிருந்தால், அது காட்டுகிற வழியிலேயே தொடர்ந்து சீராக நடப்போமாக.+ 26 அதுமட்டுமல்ல, வறட்டு கௌரவம் பார்க்காமலும்,+ ஒருவருக்கொருவர் போட்டி போடாமலும்,+ ஒருவர்மேல் ஒருவர் வயிற்றெரிச்சல் படாமலும் இருப்போமாக.

6 சகோதரர்களே, ஒருவன் தவறான பாதையில் தெரியாமல் அடியெடுத்து வைத்தாலும்கூட, ஆன்மீகத் தகுதிகளையுடைய நீங்கள் அப்படிப்பட்டவனைச் சாந்தமாகச்+ சரிப்படுத்த முயற்சி செய்யுங்கள். அதேசமயத்தில், நீங்களும் எந்தத் தவறும் செய்துவிடாதபடி+ கவனமாக இருங்கள்.+ 2 எப்போதும் ஒருவர் சுமைகளை ஒருவர் சுமந்துகொள்ளுங்கள்.+ இப்படிச் செய்யும்போது, நீங்கள் கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள்.+ 3 ஒருவன் முக்கியமானவனாக இல்லாமலிருந்தும் தன்னை முக்கியமானவனாக நினைத்துக்கொண்டால்,+ அவன் தன்னையே ஏமாற்றிக்கொள்கிறான். 4 ஒவ்வொருவனும் தன்னுடைய செயல்களை ஆராய்ந்து பார்க்கட்டும்.+ அப்போது, அவன் மற்றவனோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்து சந்தோஷப்படாமல் தன்னைப் பார்த்தே சந்தோஷப்படுவான்.+ 5 ஒவ்வொருவனும் அவனவன் பாரத்தை* சுமப்பான்.+

6 அதோடு, கடவுளுடைய வார்த்தையைக் கற்றுக்கொள்கிறவன்* அதைக் கற்றுக்கொடுக்கிறவரோடு* சேர்ந்து நன்மையான எல்லா காரியங்களிலும் பங்குகொள்ளட்டும்.+

7 ஏமாந்துவிடாதீர்கள்! யாராலும் கடவுளை முட்டாளாக்க* முடியாது. ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்.+ 8 பாவத்துக்காக விதைக்கிறவன் தன் பாவத்தால் அழிவை அறுவடை செய்வான். கடவுளுடைய சக்திக்காக விதைக்கிறவன் கடவுளுடைய சக்தியால் முடிவில்லாத வாழ்வை அறுவடை செய்வான்.+ 9 அதனால், நன்மை செய்வதை நாம் விட்டுவிடாமல் இருக்க வேண்டும். நாம் சோர்ந்துபோகாமல்* இருந்தால் ஏற்ற காலத்தில் அறுவடை செய்வோம்.+ 10 அதனால், காலம் சாதகமாக இருக்கும்போதே எல்லாருக்கும் நன்மை செய்ய வேண்டும், முக்கியமாக நம்முடைய விசுவாசக் குடும்பத்தாருக்கு நன்மை செய்ய வேண்டும்.

11 என் கைப்பட எவ்வளவு பெரிய எழுத்துக்களில் உங்களுக்கு எழுதியிருக்கிறேன், பாருங்கள்!

12 நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறவர்கள்தான் விருத்தசேதனம் செய்யச் சொல்லி உங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். கிறிஸ்துவுக்காக* தாங்கள் துன்புறுத்தப்படாமல் இருப்பதற்கே அப்படிச் செய்கிறார்கள். 13 விருத்தசேதனம் செய்துகொள்கிறவர்கள்கூட திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை.+ ஆனால், உங்களை விருத்தசேதனம் செய்ய வைத்துவிட்டதாகப் பெருமையடித்துக்கொள்ளத்தான் உங்களை விருத்தசேதனம் செய்யச் சொல்கிறார்கள். 14 நானோ நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவுடைய சித்திரவதைக் கம்பத்தை* தவிர வேறு எதைப் பற்றியும் ஒருபோதும் பெருமை பேச மாட்டேன்.+ என்னைப் பொறுத்தவரை, அவரால் இந்த உலகம் மரக் கம்பத்தில் அறையப்பட்டிருக்கிறது. இந்த உலகத்தைப் பொறுத்தவரை, நானும் மரக் கம்பத்தில் அறையப்பட்டிருக்கிறேன். 15 விருத்தசேதனம் செய்துகொள்வதும் முக்கியமல்ல, விருத்தசேதனம் செய்துகொள்ளாததும் முக்கியமல்ல.+ புதிய படைப்பாக ஆவதுதான் முக்கியம்.+ 16 இந்த விதிமுறைப்படி சீராக நடக்கிறவர்களாகிய கடவுளுடைய இஸ்ரவேலர்கள்+ எல்லாருக்கும் சமாதானமும் இரக்கமும் கிடைக்கட்டும்.

17 இனி யாரும் எனக்குப் பிரச்சினை உண்டாக்க வேண்டாம். ஏனென்றால், நான் இயேசுவின் அடிமை என்பதற்கு அடையாளமாக என்னுடைய உடலில் சூட்டுத் தழும்புகளைச் சுமந்துகொண்டிருக்கிறேன்.+

18 சகோதரர்களே, நல்ல மனப்பான்மையை வெளிக்காட்டுகிற உங்கள்மேல் நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் அளவற்ற கருணை இருக்கட்டும். ஆமென்.*

வே.வா., “சகாப்தத்திலிருந்து.” சொல் பட்டியலைப் பாருங்கள்.

வே.வா., “சித்தம்.”

அதாவது, “அப்படியே ஆகட்டும்.”

பேதுரு என்றும் அழைக்கப்படுகிறார்.

பேதுரு என்றும் அழைக்கப்படுகிறார்.

பேதுரு என்றும் அழைக்கப்படுகிறார்.

வே.வா., “அவர் குற்றம் செய்ததால்.”

வே.வா., “வெளிவேஷம் போட்டார்கள்.”

வே.வா., “வெளிவேஷம் போட.”

பேதுரு என்றும் அழைக்கப்படுகிறார்.

வே.வா., “வல்லமையான செயல்களை.”

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

வே.வா., “ஆசானாக.”

வே.வா., “கிறிஸ்துவின் குணங்களைப் பின்பற்றுகிறீர்கள்.”

பிள்ளைகள் தங்கள் அப்பாவைச் செல்லமாகவும், அதேசமயத்தில் மரியாதையாகவும் கூப்பிடுவதற்குப் பயன்படுத்திய எபிரெய அல்லது அரமேயிக் வார்த்தை இது.

வே.வா., “என்மேல் துப்பவோ.”

நே.மொ., “இவை அடையாளப்பூர்வ நாடகத்தைக் குறிக்கலாம்.”

சொல் பட்டியலைப் பாருங்கள்.

வே.வா., “அண்ணகர்களாக ஆகட்டும்.” இப்படிச் செய்வதன் மூலம், எந்தச் சட்டத்தை அவர்கள் ஆதரிக்கிறார்களோ அந்தச் சட்டத்தைக் கடைப்பிடிப்பதற்கு அவர்கள் தகுதியில்லாதவர்களாக ஆகிவிடுவார்கள்.

வே.வா., “சக மனிதர்மேலும்.”

அல்லது, “அடங்கியிருக்கிறது.”

சொல் பட்டியலைப் பாருங்கள்.

சொல் பட்டியலைப் பாருங்கள்.

வே.வா., “பில்லிசூனியம்; போதைப்பொருளைப் பயன்படுத்துவது.”

நே.மொ., “கடவுளுடைய அரசாங்கத்தை ஆஸ்தியாகப் பெற.”

நே.மொ., “கடவுளுடைய சக்தியின் கனி.”

வே.வா., “பொறுப்பு என்ற பாரத்தை.”

வே.வா., “வாய்மொழியாகக் கற்றுக்கொள்கிறவன்.”

வே.வா., “வாய்மொழியாகக் கற்றுக்கொடுக்கிறவரோடு.”

வே.வா., “ஏளனம் செய்துவிட்டுத் தப்பிக்க.”

வே.வா., “விட்டுவிடாமல்.”

நே.மொ., “கிறிஸ்துவின் சித்திரவதைக் கம்பத்துக்காக.”

சொல் பட்டியலைப் பாருங்கள்.

அதாவது, “அப்படியே ஆகட்டும்.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்