உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • nwt ஆமோஸ் 1:1-9:15
  • ஆமோஸ்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆமோஸ்
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
ஆமோஸ்

ஆமோஸ்

1 தெக்கோவா ஊரில்+ இருந்த ஒரு மேய்ப்பர்தான் ஆமோஸ்.* அவர் வாழ்ந்த காலத்தில் யூதாவை உசியா ராஜாவும்,+ இஸ்ரவேலை யோவாசின்+ மகன் யெரொபெயாமும்+ ஆட்சி செய்துவந்தார்கள். அந்தச் சமயத்தில், இஸ்ரவேலைப் பற்றிய ஒரு தரிசனத்தை ஆமோஸ் பார்த்தார். நிலநடுக்கம்+ வருவதற்கு இரண்டு வருஷங்களுக்கு முன்னால் இது நடந்தது. 2 ஆமோஸ் இப்படிச் சொன்னார்:

“சீயோனிலிருந்து யெகோவா சிங்கம்போல் கர்ஜிப்பார்.

எருசலேமிலிருந்து சத்தமாகக் குரல் கொடுப்பார்.

அப்போது, மேய்ச்சல் நிலங்கள் வறண்டுபோகும்.

கர்மேல் மலை உச்சியில் இருக்கிற புல்பூண்டுகளெல்லாம் காய்ந்துபோகும்.”+

 3 “யெகோவா சொல்வது இதுதான்:

‘“தமஸ்கு நகரம் திரும்பத் திரும்பக் குற்றம்* செய்ததால் என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.

அவர்கள் இரும்புக் கருவிகளால் கீலேயாத்தைப் போரடித்தார்கள்.*+

 4 அதனால், அசகேல்+ ராஜாவின் வீட்டுக்குத் தீ வைக்கப்போகிறேன்.

அது பெனாதாத்தில் இருக்கிற கோட்டைகளைச் சாம்பலாக்கிவிடும்.+

 5 தமஸ்குவின் தாழ்ப்பாள்களை உடைக்கப்போகிறேன்.+

பிக்காத்-ஆவேனில் இருக்கிற ஜனங்களை அழிக்கப்போகிறேன்.

பெத்-ஏதேனின் ராஜாவைக் கொல்லப்போகிறேன்.

சீரியா தேசத்து ஜனங்கள் கீர் தேசத்துக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.’

 6 யெகோவா சொல்வது இதுதான்:

‘“காசா நகரம் திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.

சிறைபிடித்த+ எல்லா ஜனங்களையும் அது ஏதோமிடம் ஒப்படைத்தது.

 7 அதனால், காசாவின் மதிலுக்குத் தீ வைக்கப்போகிறேன்.+

அது அவளுடைய கோட்டைகளைச் சாம்பலாக்கிவிடும்.

 8 அஸ்தோத்தில் இருக்கிற ஜனங்களை அழிக்கப்போகிறேன்.+

அஸ்கலோனின் ராஜாவைக் கொல்லப்போகிறேன்.+

எக்ரோனுக்கு எதிராக என்னுடைய கையை ஓங்கப்போகிறேன்.+

மீதியிருக்கும் பெலிஸ்தியர்கள் ஒழிந்துபோவார்கள்”+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.’

 9 யெகோவா சொல்வது இதுதான்:

‘தீரு நகரம் திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.

சிறைபிடித்த எல்லா ஜனங்களையும் அது ஏதோமிடம் ஒப்படைத்தது.

சகோதரர்களோடு செய்த ஒப்பந்தத்தை மறந்துவிட்டது.+

10 அதனால், தீருவின் மதிலுக்குத் தீ வைக்கப்போகிறேன்.

அது அவளுடைய கோட்டைகளைச் சாம்பலாக்கிவிடும்.’+

11 யெகோவா இப்படிச் சொல்கிறார்:

‘ஏதோம் திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.

வாளை எடுத்துக்கொண்டு சொந்த சகோதரனையே அவன் துரத்தினான்.+

இரக்கம் காட்ட மறுத்துவிட்டான்.

இன்னமும் வெறித்தனமாகத் தாக்கிக்கொண்டே இருக்கிறான்.

பயங்கர கோபத்தைக் காட்டிக்கொண்டே இருக்கிறான்.+

12 அதனால், தேமானுக்குத்+ தீ வைக்கப்போகிறேன்.

அது போஸ்றாவின் கோட்டைகளைச் சாம்பலாக்கிவிடும்.’+

13 யெகோவா சொல்வது இதுதான்:

‘“அம்மோனியர்கள் திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.

அவர்களுடைய நாட்டின் எல்லையை விரிவாக்குவதற்காக+ கீலேயாத்தில் இருக்கிற கர்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்தார்கள்.

14 அதனால், ரப்பாவின் மதிலுக்குத் தீ வைக்கப்போகிறேன்.+

அது அவளுடைய கோட்டைகளைச் சாம்பலாக்கிவிடும்.

அந்த நாளில் போர் முழக்கம் கேட்கும்.

அந்த நாளில் சூறாவளி வீசும்.

15 அவர்களுடைய ராஜாவும் அதிகாரிகளும் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.’”

2 “யெகோவா சொல்வது இதுதான்:

‘“மோவாப் திரும்பத் திரும்பக் குற்றம்* செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.

சுண்ணாம்புக்காக அவன் ஏதோம் ராஜாவின் எலும்புகளைச் சுட்டெரித்தான்.

 2 அதனால், மோவாபுக்குத் தீ வைக்கப்போகிறேன்,

கீரியோத்தின் கோட்டைகள் சாம்பலாகும்.+

பயங்கர கூச்சலும் போர் முழக்கமும் ஊதுகொம்பின் சத்தமும் கேட்கும்.

அப்போது, மோவாப் அழிந்துபோவான்.+

 3 அவனுடைய தலைவனுக்கு* நான் முடிவுகட்டுவேன்.

தலைவனோடு சேர்த்து எல்லா அதிகாரிகளையும் கொல்வேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.’

 4 யெகோவா சொல்வது இதுதான்:

‘யூதா திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.

யூதா ஜனங்கள் யெகோவாவின் சட்டத்தை* ஒதுக்கித்தள்ளினார்கள்.

அவருடைய விதிமுறைகளை அசட்டை செய்தார்கள்.+

முன்னோர்கள் நம்பிய அதே பொய்களை நம்பி வழிவிலகிப் போனார்கள்.+

 5 அதனால், நான் யூதாவுக்குத் தீ வைக்கப்போகிறேன்.

எருசலேமின் கோட்டைகள் சாம்பலாகும்.’+

 6 யெகோவா சொல்வது இதுதான்:

‘இஸ்ரவேல் திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.

இஸ்ரவேல் ஜனங்கள் வெள்ளிக்காக நீதிமான்களை விற்கிறார்கள்.

ஒரு ஜோடி செருப்புக்காக ஏழைகளை விற்கிறார்கள்.+

 7 எளிமையான ஜனங்களைக் கீழே தள்ளி மிதிக்கிறார்கள்.+

தாழ்மையான* ஜனங்களை ஒதுக்கித்தள்ளுகிறார்கள்.+

அப்பாவும் மகனும் ஒரே பெண்ணோடு உறவுகொள்கிறார்கள்.

என்னுடைய பரிசுத்த பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துகிறார்கள்.

 8 ஜனங்களிடமிருந்து அடமானமாக வாங்கிய உடைகளைப்+ பலிபீடங்களுக்குப்+ பக்கத்தில் விரித்து உட்காருகிறார்கள்.

அபராதப் பணத்தில் திராட்சமது வாங்கி தங்கள் கோயில்களில் குடிக்கிறார்கள்.’

 9 ‘இஸ்ரவேலர்களே, நான்தான் உங்கள் கண்ணெதிரில் எமோரியனை ஒழித்துக்கட்டினேன்.+

தேவதாரு மரம்போல் உயரமாகவும், கருவாலி மரம்போல் பலமாகவும் இருந்தவனை வீழ்த்தினேன்.

மேலே இருந்த அவனுடைய பழங்களைப் பாழாக்கினேன்,

கீழே இருந்த அவனுடைய வேர்களை நாசமாக்கினேன்.+

10 அவனுடைய தேசத்தை உங்களுக்குச் சொந்தமாகக் கொடுத்தேன்.

அதற்காக உங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தேன்.+

வனாந்தரத்தில் 40 வருஷங்களாக வழிநடத்தினேன்.+

11 உங்கள் மகன்களில் சிலரைத் தீர்க்கதரிசிகளாகத் தேர்ந்தெடுத்தேன்.+

உங்கள் வாலிபர்களில் சிலரை நசரேயர்களாக நியமித்தேன்.+

என் ஜனங்களே, இதெல்லாம் உண்மைதானே?’ என்று யெகோவா கேட்கிறார்.

12 ‘ஆனால், நீங்கள் நசரேயர்களுக்குத் திராட்சமது கொடுத்துவந்தீர்கள்.+

தீர்க்கதரிசிகளிடம், “நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லக் கூடாது” என்று கட்டளை போட்டீர்கள்.+

13 அதனால், நிறைய கதிர்க்கட்டுகளைச் சுமக்கிற வண்டி அதன் சக்கரத்தின் கீழே இருக்கிற எல்லாவற்றையும் நொறுக்கிவிடுவது போல,

நான் உங்களை உங்கள் இடத்திலேயே நொறுக்கிவிடுவேன்.

14 வேகமாக ஓடுகிறவனுக்கு ஒளிந்துகொள்ள இடம் இருக்காது.+

பலசாலிக்குப் பலம் இருக்காது.

படைவீரன் ஒருவனாலும் உயிர்தப்ப முடியாது.

15 வில்வீரனால் எதிர்த்து நிற்க முடியாது.

வேகமாக ஓடுகிறவனால் தப்பிக்க முடியாது.

குதிரைவீரனால் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.

16 வீரர்களில் மகா தைரியசாலிகள்கூட

அந்த நாளில் வெற்று உடம்போடு ஓடுவார்கள்’+ என்று யெகோவா சொல்கிறார்.”

3 “இஸ்ரவேல் தேசமே, உன்னைப் பற்றி யெகோவா சொல்வதைக் கேள். எகிப்திலிருந்து உன்னைக் கூட்டிக்கொண்டு வந்தவர் சொல்லும் வார்த்தைகளைக் கேள்:

 2 ‘பூமியிலுள்ள தேசங்களிலேயே உன்னை மட்டும்தான் நான் தேர்ந்தெடுத்தேன்.+

அதனால், நீ செய்த குற்றங்களுக்காக உன்னைக் கண்டிப்பாகத் தண்டிப்பேன்.+

 3 முன்கூட்டியே பேசி வைத்துக்கொள்ளாமல் இரண்டு பேரால் சேர்ந்து நடக்க முடியுமா?

 4 இரை இல்லாதபோது காட்டிலுள்ள சிங்கம் கர்ஜிக்குமா?

இரை சிக்காதபோது இளம் சிங்கம் குகையிலிருந்து உறுமுமா?

 5 வேடன் வலை விரிக்காமலேயே பறவை சிக்குமா?*

எதுவும் விழாமலேயே வலை தானாக எகிறுமா?

 6 ஊதுகொம்பை ஊதும்போது ஜனங்கள் நடுங்காமல் இருப்பார்களா?

யெகோவா தலையிடாமலேயே நகரத்துக்கு அழிவு வருமா?

 7 உன்னதப் பேரரசராகிய யெகோவா எந்தவொரு ரகசியமான விஷயத்தையும்

அவருடைய தீர்க்கதரிசிகளிடம் சொல்லாமல் செய்ய மாட்டார்.+

 8 சிங்கம் கர்ஜிக்கிறது!+ யார்தான் பயந்து நடுங்காமல் இருப்பார்கள்?

உன்னதப் பேரரசராகிய யெகோவா பேசுகிறார்! யார்தான் தீர்க்கதரிசனம் சொல்லாமல் இருப்பார்கள்?’+

 9 யெகோவா சொல்வது இதுதான்: ‘அஸ்தோத்தின் கோட்டைகளில் இதை அறிவியுங்கள்.

எகிப்தின் கோட்டைகளில் இதைச் சொல்லுங்கள்:

“சமாரியாவின் மலைகளுக்கு எதிராக ஒன்றுகூடுங்கள்.+

அங்கே இருக்கும் குழப்பத்தைப் பாருங்கள்.

அங்கே நடக்கும் மோசடியைக் கவனியுங்கள்.+

10 பொருள்களைக் கொள்ளையடித்து கோட்டைகளில் குவித்து வைக்கிறார்கள்.

அவர்களுக்கு நல்லது செய்யத் தெரியாது.”’

11 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்:

‘உன் தேசத்தை எதிரி ஒருவன் சுற்றிவளைப்பான்.+

உன் பலத்தை அடக்குவான்.

உன்னுடைய கோட்டைகளைக் கொள்ளையடிப்பான்.’+

12 யெகோவா சொல்வது இதுதான்:

‘ஒரு ஆடு சிங்கத்தின் வாயில் சிக்கிவிட்டால், அதனுடைய ஒரு காலோ காதோதான் மேய்ப்பனுக்கு மிஞ்சும்.

அதேபோல், இஸ்ரவேல் ஜனங்களில் கொஞ்சம் பேர்தான் மிஞ்சுவார்கள்.

சமாரியாவில் சொகுசு கட்டில்களிலும் பஞ்சு மெத்தைகளிலும் உட்கார்ந்திருப்பவர்கள் தப்பிக்க மாட்டார்கள்.’+

13 பரலோகப் படைகளின் கடவுளும் உன்னதப் பேரரசருமாகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘கேளுங்கள், யாக்கோபின் வம்சத்தாருக்கு எச்சரிக்கை கொடுங்கள்.

14 இஸ்ரவேலர்களை அவர்களுடைய குற்றங்களுக்காகத் தண்டிப்பேன்.+

பெத்தேலிலுள்ள பலிபீடங்களை அழிப்பேன்.+

பலிபீடங்களில் இருக்கும் கொம்புகளை உடைத்துப் போடுவேன்.’+

15 ‘குளிர் கால வீடுகளையும் கோடைக் கால வீடுகளையும் இடித்துத் தள்ளுவேன்.

யானைத்தந்தம் பதிக்கப்பட்ட வீடுகள் தரைமட்டமாகும்.+

பெரிய* மாளிகைகள் மண்மேடுகளாகும்’+ என்று யெகோவா சொல்கிறார்.”

4 “சமாரியா மலையில் குடியிருக்கும் பெண்களே,+ கேளுங்கள்.

பாசான் பிரதேசத்தின் மாடுகள்போல் நீங்கள் இருக்கிறீர்கள்.

ஏழைகளை ஏமாற்றுகிறீர்கள், எளியவர்களைக் கொடுமைப்படுத்துகிறீர்கள்.+

‘குடிக்க மது கொண்டுவா’ என்று உங்கள் கணவரிடம்* சொல்கிறீர்கள்.

 2 உன்னதப் பேரரசராகிய யெகோவா தன்னுடைய பரிசுத்தத்தின் மேல் சத்தியம் செய்து இப்படிச் சொல்லியிருக்கிறார்:

‘“ஒரு காலம் வரப்போகிறது. அப்போது, கறிக்கடைக் கொக்கிகளால் நீங்கள் இழுத்துச் செல்லப்படுவீர்கள்.

உங்களில் மீதியாக இருப்பவர்கள் தூண்டில் கொக்கிகளால் பிடித்துச் செல்லப்படுவீர்கள்.

 3 மதிலில் உள்ள பிளவுகள் வழியாய் நேராக வெளியே போவீர்கள்.

ஹார்மனுக்கு* துரத்தப்படுவீர்கள்” என்று யெகோவா சொல்கிறார்.’

 4 ‘பெத்தேலுக்கு வாருங்கள், அக்கிரமம் செய்யுங்கள்!+

கில்காலுக்கு வாருங்கள், அக்கிரமத்துக்குமேல் அக்கிரமம் செய்யுங்கள்!+

காலையில் உங்கள் பலிகளைச் செலுத்துங்கள்.+

மூன்றாம் நாளில் பத்திலொரு பாகத்தைக் கொண்டுவாருங்கள்.+

 5 உங்கள் நன்றியைக் காட்ட புளித்த ரொட்டியைத் தகன பலியாகச் செலுத்துங்கள்!+

நீங்களாகவே விருப்பப்பட்டுக் கொடுக்கும் காணிக்கைகளை ஊருக்கே விளம்பரம் பண்ணுங்கள்!

இஸ்ரவேல் ஜனங்களே, இதைச் செய்யத்தானே விரும்புகிறீர்கள்?’ என்கிறார் உன்னதப் பேரரசராகிய யெகோவா.

 6 எல்லா ஊர்களிலும் உங்களைப் பட்டினி போட்டேன்.

எல்லா வீடுகளிலும் பஞ்சத்தைக் கொண்டுவந்தேன்.+

ஆனாலும், நீங்கள் திருந்தி என்னிடம் வரவில்லை’+ என்கிறார் யெகோவா.

 7 ‘அறுவடைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே மழையை நிறுத்தினேன்.+

ஒரு ஊரில் மழை பெய்ய வைத்தேன், இன்னொரு ஊரில் மழை பெய்யாதபடி செய்தேன்.

ஒரு வயல் மழையில் நனைந்தது.

இன்னொரு வயல் மழையில்லாமல் காய்ந்துபோனது.

 8 நீங்கள் தண்ணீரைத் தேடி+ இரண்டு, மூன்று ஊர்களிலிருந்து இன்னொரு ஊருக்குத் தள்ளாடிக்கொண்டே போனீர்கள்.

ஆனாலும், உங்கள் தாகம் தீரவில்லை.

அந்த நிலையிலும் நீங்கள் திருந்தி என்னிடம் வரவில்லை’+ என்கிறார் யெகோவா.

 9 ‘அனல் காற்றாலும் நோயாலும் உங்கள் பயிர்களை நாசமாக்கினேன்.+

நீங்களோ தோப்புகளையும் திராட்சைத் தோட்டங்களையும் அதிகரித்தீர்கள்.

ஆனால், உங்கள் அத்தி மரங்களையும் ஒலிவ மரங்களையும் வெட்டுக்கிளிகள் மொட்டையாக்கின.+

அந்த நிலையிலும் நீங்கள் திருந்தி என்னிடம் வரவில்லை’+ என்கிறார் யெகோவா.

10 ‘எகிப்தில் வர வைத்தது போன்ற கொள்ளைநோயை உங்களுக்கு வர வைத்தேன்.+

உங்கள் வாலிபர்களை வாளால் கொன்றேன்,+ உங்கள் குதிரைகளை ஒழித்தேன்.+

உங்கள் கூடாரங்களில் பிண நாற்றம் வீசும்படி செய்தேன்.+

ஆனாலும், நீங்கள் திருந்தி என்னிடம் வரவில்லை’ என்கிறார் யெகோவா.

11 ‘உங்கள் தேசத்தை வீழ்த்தினேன்.

சோதோம் கொமோராவை அழித்ததுபோல் அழித்தேன்.+

நீங்கள் நெருப்பிலிருந்து எடுக்கப்படும் கொள்ளிக்கட்டை போல இருந்தீர்கள்.

ஆனாலும், நீங்கள் திருந்தி என்னிடம் வரவில்லை’+ என்கிறார் யெகோவா.

12 இஸ்ரவேலர்களே, உங்களை மறுபடியும் தண்டிக்கப்போகிறேன்.

இதை நான் கண்டிப்பாகச் செய்யப்போகிறேன்.

அதனால், உங்கள் கடவுளைச் சந்திக்கத் தயாராகுங்கள்!

13 மலைகளை உருவாக்கியவர்+ அவர்தான், காற்றை உண்டாக்கியவர்+ அவர்தான்.

தன்னுடைய மனதில் நினைப்பதையெல்லாம் மனிதனிடம் சொல்பவர் அவர்தான்.

விடியற்கால வெளிச்சத்தை இருளாக மாற்றுபவர்+ அவர்தான்.

பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பவர்+ அவர்தான்.

பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.”

5 “இஸ்ரவேல் ஜனங்களே, உங்களுக்காக நான் புலம்பல் பாட்டுப் பாடுகிறேன், கேளுங்கள்:

 2 ‘கன்னிப் பெண்ணாகிய இஸ்ரவேல் விழுந்துவிட்டாள்.

அவளால் மறுபடியும் எழுந்திருக்க முடியாது.

அவளுடைய தேசத்திலேயே அவள் விழுந்து கிடக்கிறாள்.

அவளைத் தூக்கிவிட யாருமே இல்லை.’

3 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்:

‘இஸ்ரவேல் ஜனங்களுக்கு இதுதான் நடக்கப்போகிறது.

ஆயிரம் பேர் போருக்குப் போவார்கள், ஆனால் நூறு பேர்தான் மிஞ்சுவார்கள்;

நூறு பேர் போருக்குப் போவார்கள், ஆனால் பத்துப் பேர்தான் மிஞ்சுவார்கள்.’+

4 இஸ்ரவேல் ஜனங்களுக்கு யெகோவா சொல்வது இதுதான்:

‘என்னைத் தேடுங்கள், என்றென்றும் வாழுங்கள்.+

 5 பெத்தேலைத் தேடிப்போகாதீர்கள்.+

கில்காலிலும் பெயெர்-செபாவிலும் கால்வைக்காதீர்கள்.+

ஏனென்றால், கில்கால் ஜனங்கள் நிச்சயமாகச் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்.+

பெத்தேல் ஒன்றுமில்லாமல் போய்விடும்.*

 6 யெகோவாவாகிய என்னைத் தேடுங்கள், என்றென்றும் வாழுங்கள்.+

இல்லாவிட்டால், யோசேப்பின் வம்சத்தார்மேல் நான் நெருப்பாக மூளுவேன்.

நெருப்பை அணைக்க யாரும் இருக்க மாட்டார்கள், பெத்தேல் பொசுங்கிவிடும்.

 7 நீங்கள் அநியாயமாகத் தீர்ப்பு சொல்லி, ஜனங்களின் வாழ்க்கையை எட்டிபோல் கசப்பாக்குகிறீர்கள்.*

நீங்கள் நீதியை ஒதுக்கித்தள்ளுகிறீர்கள்.+

 8 கிமா நட்சத்திரக் கூட்டத்தையும்* கீஸில் நட்சத்திரக் கூட்டத்தையும்* உருவாக்கியவர்+ நான்தான்.

கும்மிருட்டைப் பகலாக மாற்றுபவர் நான்தான்.

பகலை இரவாக மாற்றுபவர்+ நான்தான்.

கடல்நீரை அள்ளி எடுப்பவர் நான்தான்.

பூமிமேல் அதைப் பொழிய வைப்பவர்+ நான்தான்.

யெகோவா என்பது என்னுடைய பெயர்.

 9 நான் பலசாலிமேல் திடீரென்று பாய்ந்து அவனை அழிக்கிறேன்.

கோட்டைகளை நாசமாக்குகிறேன்.

10 நகரவாசலில் உங்களைக் கண்டிக்கிற நீதிபதிகளை நீங்கள் பகைக்கிறீர்கள்.

உண்மை பேசுகிறவர்களை வெறுக்கிறீர்கள்.+

11 ஏழைகளிடமிருந்து வாடகை* வாங்குகிறீர்கள்.

தானியத்தை வரியாக வசூலிக்கிறீர்கள்.+

அதனால், செதுக்கிய கற்களால் கட்டிய வீடுகளில் இனி குடியிருக்க மாட்டீர்கள்.+

உங்கள் அருமையான திராட்சைத் தோட்டங்களிலிருந்து கிடைக்கிற மதுவை இனி குடிக்க மாட்டீர்கள்.+

12 நீங்கள் கணக்குவழக்கில்லாத குற்றங்கள் செய்திருப்பது எனக்குத் தெரியும்.

படுபயங்கரமான பாவங்கள் செய்திருப்பதும் எனக்குத் தெரியும்.

நீதிமான்களை ஒடுக்குகிறீர்கள், லஞ்சம் வாங்குகிறீர்கள்.

நகரவாசலில் உட்கார்ந்துகொண்டு ஏழைகளின் உரிமைகளைப் பறிக்கிறீர்கள்.+

13 துன்ப காலம் வரப்போகிறது.+

அப்போது, விவேகம்* உள்ளவர்கள் அமைதியாக இருப்பார்கள்.

14 நீங்கள் என்றென்றும் வாழ வேண்டுமென்றால்,+

கெட்டதைத் தேடாமல் நல்லதைத் தேடுங்கள்.+

அப்போது, நீங்கள் சொல்வது போலவே பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா உங்களோடு இருப்பார்.+

15 கெட்டதை வெறுத்துவிடுங்கள், நல்லதை நேசியுங்கள்.+

நகரவாசலில் நீதி வழங்குங்கள்.+

அப்போது யோசேப்பின் வம்சத்தாரில் மீதியாக இருப்பவர்கள் இரக்கம் பெறுவார்கள்.+

பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்.’

16 அதனால் யெகோவா, பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா, சொல்வது இதுதான்:

‘பொது சதுக்கங்களில் நீங்கள் கதறி அழுவீர்கள்.

வீதிகளில் “ஐயோ, ஐயோ!” என்று அலறுவீர்கள்.

புலம்புவதற்காக விவசாயிகளைக் கூப்பிடுவீர்கள்.

ஒப்பாரி வைப்பதற்காகக் கூலிக்கு ஆட்களை அழைப்பீர்கள்.’

17 ‘திராட்சைத் தோட்டங்களில் கதறல் சத்தம் கேட்கும்.+

ஏனென்றால், நான் வந்து உங்களைத் தண்டிப்பேன்’ என்று யெகோவா சொல்கிறார்.

18 ‘யெகோவாவின் நாளுக்காக ஏங்குபவர்களே, உங்கள் கதி அவ்வளவுதான்!+

யெகோவாவின் நாளில் உங்களுக்கு என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?+

அந்த நாள் இருட்டாக இருக்கும், வெளிச்சமாக இருக்காது.+

19 ஒருவன் சிங்கத்திடமிருந்து தப்பியோடி, கரடியின் முன்னால் மாட்டிக்கொள்வது போலவும்,

வீட்டுக்குப் போய் சுவர்மேல் கையை ஊன்றும்போது பாம்பு அவனைக் கடிப்பது போலவும்

உங்கள் நிலைமை இருக்கும்.

20 யெகோவாவின் நாள் வெளிச்சமாக இல்லாமல் இருட்டாக இருக்கும்.

பிரகாசமான நாளாக இல்லாமல் இருண்ட நாளாக இருக்கும்.

21 உங்கள் பண்டிகைகள் எனக்கு வெறுப்பாக இருக்கின்றன, அவற்றை அருவருக்கிறேன்.+

உங்களுடைய திருவிழாக்களில் எழும்புகிற வாசனை எனக்குப் பிடிக்கவில்லை.

22 நீங்கள் தகன பலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தினால்கூட அவற்றை ஒதுக்கித்தள்ளுவேன்.

அவற்றை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன்.+

சமாதான பலியாக நீங்கள் செலுத்தும் கொழுத்த மிருகங்களைப் பார்க்கக்கூட மாட்டேன்.+

23 கூச்சல் போட்டுப் பாடுவதை நிறுத்துங்கள்.

உங்களுடைய நரம்பிசைக் கருவிகளின் இசையை நான் கேட்கப்போவதில்லை.+

24 உங்கள் தேசத்தில் நியாயம் தண்ணீராகப் பெருக்கெடுக்க வேண்டும்.+

நீதி வற்றாத நதியாக ஓட வேண்டும்.

25 இஸ்ரவேல் ஜனங்களே, நீங்கள் 40 வருஷங்கள் வனாந்தரத்தில் அலைந்தீர்களே.

அப்போது பலிகளையும் காணிக்கைகளையும் எனக்குச் செலுத்தினீர்களா என்ன?+

26 இப்போது உங்கள் ராஜாவான சக்குத்தையும் கைவனையும்* வேறு இடத்துக்குச் சுமந்துகொண்டு போவீர்கள்.

நீங்கள் உண்டாக்கிய உங்களுடைய நட்சத்திர தெய்வச் சிலைகளைச் சுமந்துகொண்டு போவீர்கள்.

27 தமஸ்குவையும் தாண்டி நீங்கள் சிறைப்பட்டுப் போகும்படி செய்வேன்’+ என்று பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா என்ற பெயருள்ளவர்+ சொல்கிறார்.”

6 “சீயோனில் தன்னம்பிக்கையோடு* திரிகிறவர்களே,

சமாரியா மலையில் கவலையில்லாமல் வாழ்கிறவர்களே,+

பிரபலமான தேசத்தில் உள்ள பெரும் புள்ளிகளே,

உங்களை இஸ்ரவேல் ஜனங்கள் தேடி வருகிறார்கள். ஆனால், உங்களுக்குக் கேடுதான் வரும்!

 2 கல்னே ஊருக்குப் போய்ப் பாருங்கள்.

அங்கிருந்து காமாத் மாநகருக்குப் போங்கள்.+

பின்பு, பெலிஸ்தியர்களின் காத் நகருக்குப் போங்கள்.

உங்கள் ராஜ்யங்களைவிட* அவை சிறந்தவையோ?

உங்கள் பிரதேசங்களைவிட அவை பெரியவையோ?

 3 நீங்கள் அழிவு நாளைப் பற்றிய நினைப்பே இல்லாமல் இருக்கிறீர்கள்.+

வன்முறைக்கு இடம் கொடுக்கிறீர்கள்.+

 4 யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட கட்டில்களில் படுக்கிறீர்கள்,+ பஞ்சு மெத்தைகளில் சொகுசாகக் கிடக்கிறீர்கள்.+

செம்மறியாட்டுக் கடாக்களைச் சாப்பிடுகிறீர்கள், கொழுத்த கன்றுகளைத் தின்கிறீர்கள்.+

 5 யாழை*+ வாசித்துக்கொண்டு இஷ்டத்துக்குப் பாடல்களை எழுதுகிறீர்கள்.

தாவீதைப் போல் புது இசைக் கருவிகளை உருவாக்குகிறீர்கள்.+

 6 பெரிய கிண்ணங்களில் திராட்சமது குடிக்கிறீர்கள்.+

விலை உயர்ந்த எண்ணெயைப் பூசிக்கொள்கிறீர்கள்.

ஆனால், யோசேப்புக்கு வரப்போகும் ஆபத்தைப் பற்றிக் கவலையில்லாமல் இருக்கிறீர்கள்.+

 7 அதனால், நீங்கள்தான் முதலில் சிறைபிடிக்கப்பட்டுப் போவீர்கள்.+

பஞ்சு மெத்தையில் சொகுசாகக் கிடப்பவர்களின் கும்மாளம் அடக்கப்படும்.

 8 ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா தன்மீதே சத்தியம் செய்திருக்கிறார்’+ என்று பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா சொல்கிறார்.

‘“யாக்கோபின் கர்வம் எனக்கு அருவருப்பாக இருக்கிறது.+

அவனுடைய கோட்டைகளை நான் வெறுக்கிறேன்.+

நகரத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் எதிரிகளிடம் கொடுத்துவிடுவேன்.+

9 ஒரு வீட்டில் பத்து ஆண்கள் மிஞ்சலாம், ஆனால் அவர்களும் செத்துப்போவார்கள். 10 அவர்களுடைய உடல்களை ஒவ்வொன்றாகத் தூக்கிக்கொண்டுபோய் எரிப்பதற்காகச் சொந்தக்காரன்* ஒருவன் வருவான். அவன் அந்த உடல்களை* வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோவான். பின்பு, உள்ளறைகளில் யாராவது இருந்தால் அவரிடம், ‘வேறு யாராவது உன்னோடு இருக்கிறார்களா?’ என்று கேட்பான். ‘யாரும் இல்லை’ என்று அவர் சொல்வார். பின்பு இவன், ‘அமைதியாக இரு! யெகோவாவின் பெயரைச் சொல்வதற்கு இது நேரமில்லை’ என்று சொல்வான்.”

11 யெகோவா கட்டளை கொடுத்திருக்கிறார்.+

பெரிய வீடுகள் தூள்தூளாகும்.

சிறிய வீடுகள் சுக்குநூறாகும்.+

12 செங்குத்தான பாறையில் குதிரைகள் ஓடுமா?

அங்கே எவனாவது மாடுகளை வைத்து உழுவானா?

நீங்களோ நீதி நியாயத்தைப் புரட்டி,*

ஜனங்களின் வாழ்க்கையை எட்டிபோல் கசப்பாக்கினீர்கள்.+

13 நீங்கள் வீணான காரியங்களில் சந்தோஷப்படுகிறீர்கள்.

“எங்களுடைய பலத்தால்தானே இவ்வளவு அதிகாரம் கிடைத்திருக்கிறது?” என்கிறீர்கள்.+

14 இஸ்ரவேல் ஜனங்களே, மற்ற தேசத்தாரை உங்களுக்கு எதிராக வரவழைப்பேன்.+

லெபோ-காமாத்*+ தொடங்கி அரபா பள்ளத்தாக்கு* வரைக்கும் அவர்கள் உங்களை அடக்கி ஒடுக்குவார்கள்’ என்று பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா சொல்கிறார்.”

7 உன்னதப் பேரரசராகிய யெகோவா எனக்குக் காட்டிய காட்சி இதுதான்: ராஜாவுக்கென்று புற்கள் அறுக்கப்பட்ட பின்பு, கடைசிப் பருவத்தின்* பயிர்கள் முளைக்க ஆரம்பித்தபோது கடவுள் வெட்டுக்கிளிக் கூட்டத்தை அனுப்பினார். 2 தேசத்தின் பயிர்களை அந்த வெட்டுக்கிளிக் கூட்டம் தின்றுதீர்த்தது. நான் அதைப் பார்த்ததும், “உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்.+ யாக்கோபு பலவீனமாக இருக்கிறானே, அவன் எப்படிப் பிழைப்பான்?”+ என்றேன்.

3 அதனால், யெகோவா தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டார்.*+ பின்பு யெகோவா என்னிடம், “இது நடக்காதபடி பார்த்துக்கொள்கிறேன்” என்றார்.

4 உன்னதப் பேரரசராகிய யெகோவா எனக்குக் காட்டிய காட்சி இதுதான்: உன்னதப் பேரரசராகிய யெகோவா தண்டனை கொடுப்பதற்காக நெருப்பை வரச் செய்தார். அது ஆழமான கடலை வற்றிப்போக வைத்தது, நிலத்தின் ஒரு பகுதியைச் சுட்டெரித்தது. 5 அப்போது நான், “உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, தயவுசெய்து இது நடக்காதபடி தடுத்து நிறுத்துங்கள்.+ யாக்கோபு பலவீனமாக இருக்கிறானே, அவன் எப்படிப் பிழைப்பான்?”+ என்றேன்.

6 அதனால், யெகோவா தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டார்.*+ பின்பு யெகோவா என்னிடம், “இதுவும் நடக்காதபடி பார்த்துக்கொள்கிறேன்” என்றார்.

7 அவர் எனக்குக் காட்டிய காட்சி இதுதான்: தூக்குநூலால்* சரிபார்த்துக் கட்டப்பட்ட ஒரு மதில்மேல் யெகோவா நின்றுகொண்டிருந்தார். அவர் கையில் ஒரு தூக்குநூல் இருந்தது. 8 பின்பு யெகோவா என்னிடம், “ஆமோஸ், நீ என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு நான், “ஒரு தூக்குநூலைப் பார்க்கிறேன்” என்றேன். பின்பு யெகோவா, “என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களின் நடுவில் நான் தூக்குநூலைத் தொங்கவிடுகிறேன். அவர்களை இனி மன்னிக்க மாட்டேன்.+ 9 ஈசாக்கின் ஆராதனை மேடுகள்+ பாழாக்கப்படும், இஸ்ரவேலின் வழிபாட்டு இடங்கள் நாசமாக்கப்படும்,+ யெரொபெயாமின் குடும்பத்தாரை அழிக்க நான் வாளோடு வருவேன்”+ என்றார்.

10 பெத்தேலின் ஆலய குருவான அமத்சியா,+ இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமுக்கு+ இந்தச் செய்தியை அனுப்பினார்: “ஆமோஸ் இஸ்ரவேலின் நடுவில் இருந்துகொண்டே உங்களுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறான்.+ அவன் சொல்வதை ஜனங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.+ 11 ஏனென்றால், ராஜாவாகிய நீங்கள் வாளால் சாகப்போகிறீர்கள் என்றும், ஜனங்கள் கண்டிப்பாகச் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள் என்றும் அவன் சொல்கிறான்.”+

12 பின்பு அமத்சியா ஆமோசிடம், “தரிசனக்காரனே, யூதாவுக்கு ஓடிப் போ. அங்கே உன் பிழைப்பைப் பார்த்துக்கொள், உன் தீர்க்கதரிசனத்தை அங்கே போய்ச் சொல்.+ 13 பெத்தேலில் நீ இனி தீர்க்கதரிசனம் சொல்லக் கூடாது.+ இது ராஜாவின் கோயிலும்+ அரச மாளிகையும் இருக்கிற இடம்” என்றார்.

14 அதற்கு ஆமோஸ், “நான் தீர்க்கதரிசியும் இல்லை, தீர்க்கதரிசியின் மகனும் இல்லை. சாதாரண மேய்ப்பன்,+ காட்டத்தி மரத் தோப்பில் வேலை செய்தவன்.* 15 மந்தைகளின் பின்னால் போய்க்கொண்டிருந்த என்னை யெகோவா அழைத்தார். பின்பு யெகோவா என்னிடம், ‘நீ போய் என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்’ என்றார்.+ 16 அதனால், யெகோவா சொல்வதை இப்போது கேள்: ‘இஸ்ரவேலுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்லாதே+ என்றும், ஈசாக்கின் வம்சத்தாருக்கு எதிராக ஒன்றும் பேசாதே+ என்றும் நீ சொல்கிறாய். 17 அதனால், யெகோவா சொல்வது இதுதான்: “இந்த நகரத்தில் உன் மனைவி விபச்சாரியாவாள், உன் மகன்களும் மகள்களும் வாளால் சாவார்கள். உன் தேசம் அளவுநூலால் அளக்கப்பட்டு பங்கிடப்படும், நீ வேறொரு தேசத்தில் சாவாய். இஸ்ரவேலர்கள் நிச்சயம் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்”’”+ என்றார்.

8 உன்னதப் பேரரசராகிய யெகோவா, கோடைக் காலத்துப் பழங்கள் உள்ள கூடை ஒன்றை எனக்குக் காட்டினார். 2 பின்பு அவர், “ஆமோஸ், நீ என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு நான், “கோடைக் காலத்துப் பழங்கள் உள்ள ஒரு கூடையைப் பார்க்கிறேன்” என்றேன். அப்போது யெகோவா, “என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களுக்கு முடிவு வந்துவிட்டது. இனி நான் அவர்களை மன்னிக்க மாட்டேன்.+ 3 ‘அந்த நாளிலே, ஆலயத்தில் பாட்டு சத்தத்துக்குப் பதிலாகப் புலம்பல் சத்தம் கேட்கும்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். ‘எங்கு பார்த்தாலும் பிணங்கள் கிடக்கும்+—உஷ், அமைதி!’

 4 ஏழைகளை மிதிப்பவர்களே,

தாழ்மையானவர்களை* அழிப்பவர்களே,+

 5 நீங்கள், ‘மாதப் பிறப்பு* பண்டிகை எப்போது முடியும்?+ பயிர்களை விற்க வேண்டுமே,

ஓய்வுநாள்+ எப்போது முடியும்? தானியங்களை விற்பனை செய்ய வேண்டுமே,

அளவைக் குறைத்து, விலையை ஏற்றிவிடலாம்,

கள்ளத் தராசை வைத்து ஏமாற்றலாம்,+

 6 வெள்ளியைக் கொடுத்து எளியவனை வாங்கலாம்,

ஒரு ஜோடி செருப்பைக் கொடுத்து ஏழையை வாங்கலாம்,+

மட்டமான தானியங்களை ஜனங்கள் தலையில் கட்டலாம்’ என்றெல்லாம் திட்டமிடுகிறீர்கள்.

இப்போது இதைக் கொஞ்சம் கேளுங்கள்.

 7 யாக்கோபின் மகிமையாக* இருக்கும் யெகோவா,+ தன்மீதே சத்தியம் செய்து இப்படிச் சொல்லியிருக்கிறார்:

‘நான் அவர்களுடைய அக்கிரமங்களைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன்.+

 8 தேசம்* நடுநடுங்கும்.

அதில் குடியிருக்கும் எல்லாரும் புலம்புவார்கள்.+

அது எகிப்தின் நைல் நதிபோல் கொந்தளித்து,

அதே நைல் நதிபோல் அடங்கிவிடும்.’+

 9 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்:

‘அந்த நாளிலே, நடுப்பகலில் சூரியனை மறையச் செய்வேன்.

பட்டப்பகலில் தேசத்தை இருட்டாக்குவேன்.+

10 உங்களுடைய கொண்டாட்டத்தைத் துக்கமாக மாற்றுவேன்.+

உங்கள் பாடல்களைப் புலம்பல்களாக மாற்றுவேன்.

எல்லாருடைய இடுப்பிலும் துக்கத் துணி* கட்டுவேன், எல்லாருடைய தலைகளையும் மொட்டையாக்குவேன்.

ஒரே மகனைப் பறிகொடுத்தவர்கள் கதறுவது போல எல்லாரையும் கதற வைப்பேன்.

அந்த நாளின் முடிவு படுசோகமாக இருக்கும்.’

11 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்:

‘ஒரு காலம் வரப்போகிறது, அப்போது தேசத்தில் பஞ்சத்தைக் கொண்டுவருவேன்.

அது உணவு கிடைக்காத பஞ்சமோ தண்ணீர் கிடைக்காத பஞ்சமோ இல்லை.

அது யெகோவாவின் வார்த்தை கிடைக்காத பஞ்சம்.+

12 அப்போது, அவர்கள் ஒரு கடலிலிருந்து இன்னொரு கடலுக்குத் தள்ளாடிக்கொண்டு போவார்கள்.

வடக்கிலிருந்து கிழக்குக்குத் தடுமாறிக்கொண்டு போவார்கள்.

யெகோவாவின் வார்த்தையைத் தேடி அலைவார்கள், ஆனால் கண்டுபிடிக்க மாட்டார்கள்.

13 அந்த நாளில், அழகான கன்னிப் பெண்களும் இளம் ஆண்களும்

தாகத்தால் சுருண்டு விழுவார்கள்.

14 அவர்கள் சமாரியாவின் பொய்க் கடவுள்கள்மேல்* சத்தியம் செய்கிறார்கள்.+

“தாண் நகரமே,+ உன் கடவுள்மேல் சத்தியம்!” என்றும்,

“பெயெர்-செபாவின்+ பாதைமேல் சத்தியம்!” என்றும் சொல்கிறார்கள்.

அவர்கள் விழுவார்கள், எழுந்திருக்கவே மாட்டார்கள்.’”+

9 பலிபீடத்துக்கு மேலாக யெகோவா நிற்பதைப் பார்த்தேன்.+ அப்போது அவர், “தூண்களின் மேல்பகுதியை உடைத்துப்போடு, அவற்றின் அஸ்திவாரம் ஆட்டம் காணட்டும். தூண்களின் தலைப்பகுதியைத் தகர்த்துப்போடு. ஜனங்களில் மீதியாக இருப்பவர்களை நான் வாளால் கொல்வேன். யாராலும் தப்பித்து ஓட முடியாது, தப்பிக்க நினைப்பவர்கள் மாட்டிக்கொள்வார்கள்.+

 2 அவர்கள் பாதாளம்வரை* குழிதோண்டிப் பதுங்கிக்கொண்டாலும்,

அவர்களை மேலே இழுத்து வருவேன்.

அவர்கள் வானம்வரை ஏறிப் போனாலும்,

அவர்களைக் கீழே இழுத்து வருவேன்.

 3 அவர்கள் கர்மேல் மலைமேல் ஒளிந்துகொண்டாலும்,

அங்கே அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பேன்.+

அவர்கள் என் கண்களிலிருந்து தப்பிக்க கடலுக்கு அடியில் மறைந்துகொண்டாலும்,

அவர்களைக் கடிக்கும்படி பாம்புக்குக் கட்டளை கொடுப்பேன்.

 4 எதிரிகள் அவர்களைப் பிடித்துக்கொண்டு போனாலும்,

அவர்களைக் கொல்லும்படி வாளுக்குக் கட்டளை கொடுப்பேன்.+

அவர்களை ஆசீர்வதிப்பதற்குப் பதிலாக அழிப்பதிலேயே குறியாக இருப்பேன்.+

 5 உன்னதப் பேரரசரான பரலோகப் படைகளின் யெகோவா தேசத்தின் மேல்* கை வைப்பார்.

அப்போது அது அதிரும்,+ ஜனங்களெல்லாம் புலம்புவார்கள்.+

அது எகிப்தின் நைல் நதிபோல் கொந்தளித்து,

அதே நைல் நதிபோல் அடங்கிவிடும்.+

 6 ‘பரலோகம்வரை படிக்கட்டுகளைக் கட்டுபவரும்,

வானம் என்ற கூரையைப் பூமிமேல் விரிப்பவரும்,

கடல்நீரை அள்ளி எடுப்பவரும்,

பூமிமேல் அதைப் பொழிய வைப்பவரும்+

யெகோவா என்ற பெயர் உள்ளவர்தான்.’+

 7 யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேல் ஜனங்களே, நீங்கள் எனக்கு கூஷ் வம்சத்தாரைப் போலத்தானே இருக்கிறீர்கள்?

உங்களை நான் எகிப்து தேசத்திலிருந்து விடுதலை செய்யவில்லையா?+

பெலிஸ்தியர்களை கிரேத்தாவிலிருந்தும்,+ சீரியர்களை கீரிலிருந்தும் கூட்டிக்கொண்டு வரவில்லையா?+

 8 யெகோவா சொல்வது இதுதான்: ‘யெகோவாவாகிய நான் உன்னதப் பேரரசர். பாவம் நிறைந்த ராஜ்யத்தை என் கண்கள் பார்க்கின்றன.

அதை இந்தப் பூமியிலிருந்து அழித்துவிடுவேன்.+

ஆனால், யாக்கோபின் வம்சத்தாரை அடியோடு அழிக்க மாட்டேன்.+

 9 இதோ! நான் கட்டளை கொடுக்கிறேன்.

எல்லா தேசத்தார் மத்தியிலும் இருக்கிற இஸ்ரவேலர்களை உலுக்குவேன்.+

சல்லடையால் சலிப்பதுபோல் அவர்களைச் சலிப்பேன்.

அப்போது, எல்லா கற்களும் பிடிபடும்.*

10 பாவம் செய்கிற என் ஜனங்கள், “அழிவு எங்களுக்கு வராது, எங்கள் பக்கத்தில்கூட வராது” என்று சொல்கிறார்கள்.

ஆனால், அவர்கள் எல்லாரும் வாளால் சாவார்கள்.’

11 ‘விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை அந்த நாளிலே எடுத்து நிறுத்துவேன்.+

கூடாரத்தின் கிழிசல்களைத் தைப்பேன்.*

சேதமானவற்றைச் சரிசெய்வேன்.

பூர்வ காலத்தில் இருந்ததைப் போலவே திரும்பக் கட்டுவேன்.+

12 ஏதோமில் மிச்சம் இருப்பதெல்லாம் அப்போது அவர்களுடைய சொத்தாகும்.+

என்னுடைய பெயரால் அழைக்கப்படுகிற எல்லா தேசங்களும் அவர்களுக்குச் சொந்தமாகும்.’

இவற்றைச் செய்கிற யெகோவாவே இதைச் சொல்கிறார்.

13 யெகோவா சொல்வது இதுதான்: ‘காலம் வரப்போகிறது.

அப்போது, அமோகமான விளைச்சலை அறுவடை செய்வதற்குள் உழுவதற்கான நேரமே வந்துவிடும்.

ஏராளமான திராட்சைப் பழங்களைப் பிழிந்து முடிப்பதற்குள் விதைப்பதற்கான நேரமே வந்துவிடும்.+

மலைகளிலிருந்து தித்திப்பான திராட்சமது சொட்டும்.+

எல்லா குன்றுகளிலும் அது வழிந்தோடும்.+

14 சிறைபிடிக்கப்பட்டுப் போன என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களைத் திரும்பவும் கூட்டிக்கொண்டு வருவேன்.+

இடிந்து கிடக்கும் நகரங்களை அவர்கள் மறுபடியும் கட்டி அவற்றில் குடியிருப்பார்கள்.+

திராட்சைத் தோட்டங்களை அமைத்து, அவற்றிலிருந்து கிடைக்கும் திராட்சமதுவைக் குடிப்பார்கள்.+

பழத் தோட்டங்களை அமைத்து அவற்றின் பழங்களைச் சாப்பிடுவார்கள்.’+

15 ‘அவர்களுடைய சொந்த தேசத்திலேயே அவர்களை நடுவேன்.

இனி யாரும் அவர்களை அங்கிருந்து பிடுங்கிப்போட மாட்டார்கள்.

நான் கொடுத்த தேசத்திலேயே அவர்கள் குடியிருப்பார்கள்’+ என்று யெகோவா சொல்கிறார்.”

அர்த்தம், “சுமையாக இருப்பது” அல்லது “சுமையைச் சுமப்பது.”

நே.மொ., “மூன்று, நான்கு குற்றங்கள்.”

வே.வா., “பாடாய்ப் படுத்தினார்கள்.”

நே.மொ., “மூன்று, நான்கு குற்றங்கள்.”

நே.மொ., “நீதிபதிக்கு.”

வே.வா., “அறிவுரையை.”

வே.வா., “சாந்தமான.”

அல்லது, “இரையில்லாத வலையில் பறவை சிக்குமா?”

அல்லது, “நிறைய.”

வே.வா., “எஜமானிடம்.”

இந்த வார்த்தைக்கான அர்த்தம் சரியாகத் தெரியவில்லை.

அல்லது, “தீய சக்திகளின் இடமாக மாறிவிடும்.”

நே.மொ., “நீங்கள் நியாயத்தை எட்டியாக ஆக்குகிறீர்கள்.”

இது ரிஷப நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கும் கார்த்திகை நட்சத்திரங்களைக் குறிக்கலாம்.

இது ஓரியன் நட்சத்திரக் கூட்டத்தைக் குறிக்கலாம்.

வே.வா., “நில வரி.”

வே.வா., “ஆழமான புரிந்துகொள்ளுதல்.”

இந்த இரண்டு தெய்வங்களும் சனிக் கிரகத்தைக் குறிக்கலாம்.

வே.வா., “மெத்தனமாக.”

அநேகமாக, “யூதா மற்றும் இஸ்ரவேல் ராஜ்யங்களைவிட.”

வே.வா., “நரம்பிசைக் கருவியை.”

நே.மொ., “அப்பாவின் சகோதரன்.”

நே.மொ., “எலும்புகளை.”

நே.மொ., “விஷச்செடியாக மாற்றி.”

வே.வா., “காமாத்தின் நுழைவாசல்.”

அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கு.” சொல் பட்டியலைப் பாருங்கள்.

அதாவது, “ஜனவரி, பிப்ரவரி மாதங்களின்.”

வே.வா., “மனம் வருந்தினார்.”

வே.வா., “மனம் வருந்தினார்.”

வே.வா., “தூக்குக்குண்டினால்.”

வே.வா., “காட்டத்திப் பழங்களைக் குத்திவிட்டவன்.”

வே.வா., “சாந்தமானவர்களை.”

வே.வா., “முதலாம் பிறை.”

வே.வா., “பெருமையாக.”

வே.வா., “பூமி.”

சொல் பட்டியலைப் பாருங்கள்.

நே.மொ., “பாவத்தின் மேல்.” அதாவது, “பாவத்துக்குக் காரணமான சிலைகள்மேல்.”

வே.வா., “கல்லறைவரை.” சொல் பட்டியலைப் பாருங்கள்.

வே.வா., “பூமியின் மேல்.”

வே.வா., “ஒரு கல்கூட கீழே விழாது.”

வே.வா., “ஓட்டைகளை அடைப்பேன்.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்