உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • nwt லேவியராகமம் 1:1-27:34
  • லேவியராகமம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • லேவியராகமம்
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
லேவியராகமம்

லேவியராகமம்

1 சந்திப்புக் கூடாரத்தில்+ யெகோவா மோசேயைக் கூப்பிட்டு, 2 “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘உங்களில் ஒருவன் வீட்டு விலங்கு ஒன்றை யெகோவாவுக்குக் காணிக்கையாகச் செலுத்த விரும்பினால், மாடுகளிலோ ஆடுகளிலோ ஒன்றைச் செலுத்த வேண்டும்.+

3 மாடுகளில் ஒன்றைத் தகன பலியாகச் செலுத்த அவன் விரும்பினால், எந்தக் குறையும் இல்லாத காளை மாட்டைச் செலுத்த வேண்டும்.+ அதைச் சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் யெகோவாவின் முன்னிலையில் கொண்டுவந்து மனப்பூர்வமாகச்+ செலுத்த வேண்டும். 4 தகன பலியாகச் செலுத்தப்படும் காளையின் தலையில் அவன் தன்னுடைய கையை வைக்க வேண்டும். அது அவனுடைய பாவத்துக்குப் பரிகாரமாக ஏற்றுக்கொள்ளப்படும்.

5 பின்பு, அந்த இளம் காளையை யெகோவாவின் முன்னிலையில் வெட்ட வேண்டும். குருமார்களாகிய+ ஆரோனின் மகன்கள் அதன் இரத்தத்தை எடுத்து, சந்திப்புக் கூடாரத்தின் வாசலருகே உள்ள பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்க வேண்டும்.+ 6 தகன பலியாகச் செலுத்தப்படும் காளையைத் தோலுரித்து, துண்டு துண்டாக வெட்ட வேண்டும்.+ 7 குருமார்களாகிய ஆரோனின் மகன்கள் பலிபீடத்தின் மேல் தணல் போட்டு+ அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும். 8 பின்பு, அவற்றின் மேல் அந்தக் காளையின் தலையையும் கொழுப்பையும் மற்ற துண்டுகளையும் அடுக்கிவைக்க வேண்டும்.+ 9 அதன் குடல்களையும் கால்களையும் தண்ணீரில் கழுவ வேண்டும். குருவானவர் பலிபீடத்தின் மேல் எல்லாவற்றையும் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+

10 ஒருவன் ஆடுகளில் ஒன்றைத் தகன பலியாகச் செலுத்த விரும்பினால்,+ எந்தக் குறையும் இல்லாத செம்மறியாட்டுக் கடாக் குட்டியையோ வெள்ளாட்டுக் கடாவையோ செலுத்த வேண்டும்.+ 11 அதைப் பலிபீடத்தின் வடக்குப் பக்கம் யெகோவாவின் முன்னிலையில் வெட்ட வேண்டும். குருமார்களாகிய ஆரோனின் மகன்கள் அதன் இரத்தத்தை எடுத்து, பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்க வேண்டும்.+ 12 அந்த ஆட்டைத் துண்டு துண்டாக்க வேண்டும். பின்பு, பலிபீடத்தின் தணல்மீது வைக்கப்பட்டுள்ள விறகுகள்மேல் அவற்றையும் ஆட்டின் தலையையும் கொழுப்பையும் குருவானவர் அடுக்கிவைக்க வேண்டும். 13 அதன் குடல்களையும் கால்களையும் தண்ணீரில் கழுவ வேண்டும். பின்பு, எல்லாவற்றையும் பலிபீடத்தின் மேல் அந்தக் குருவானவர் எரிக்க வேண்டும். இதுதான் தகன பலி. அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.

14 ஒருவன் பறவைகளில் ஒன்றை யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்த விரும்பினால், எந்தக் குறையும் இல்லாத காட்டுப் புறாவையோ, புறாக் குஞ்சையோ செலுத்த வேண்டும்.+ 15 குருவானவர் அதைப் பலிபீடத்தில் கொண்டுவந்து அதன் கழுத்தைக் கிள்ளி, பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும். ஆனால், அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் பக்கவாட்டில் ஊற்ற வேண்டும். 16 அதன் தொண்டைப்பையையும் இறகுகளையும் நீக்கி, பலிபீடத்துக்குப் பக்கத்தில், கிழக்கே, சாம்பல் கொட்டும் இடத்தில் எறிந்துவிட வேண்டும்.+ 17 அதை இரண்டு துண்டாக்காமல் சிறகுகளுக்குப் பக்கத்தில் கிழித்துவிட வேண்டும். பின்பு, குருவானவர் பலிபீடத்தின் தணல்மீது வைக்கப்பட்டுள்ள விறகுகள்மேல் அதை எரிக்க வேண்டும். அதுதான் தகன பலி. அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்’” என்றார்.

2 பின்பு அவர், “‘ஒருவன் யெகோவாவுக்கு உணவுக் காணிக்கையை+ கொண்டுவர விரும்பினால், நைசான மாவில் எண்ணெய் ஊற்றி, அதன்மேல் சாம்பிராணி வைத்துக் கொண்டுவர வேண்டும்.+ 2 பின்பு, குருமார்களாகிய ஆரோனின் மகன்களிடம் அதைக் கொடுக்க வேண்டும். குருவானவர் அந்த நைசான மாவையும் எண்ணெயையும் மொத்த சாம்பிராணியோடு சேர்த்து ஒரு கைப்பிடி எடுத்து, மொத்த காணிக்கைக்கும் அடையாளமாக+ அதைப் பலிபீடத்தில் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். 3 மீதியிருக்கும் உணவுக் காணிக்கை ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் சேர வேண்டும்.+ யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகன பலியில் இது மகா பரிசுத்தமானது.+

4 அடுப்பில் சுட்ட ரொட்டியை உணவுக் காணிக்கையாகச் செலுத்த விரும்பினால், அதை நைசான மாவில் செய்ய வேண்டும். அது எண்ணெயில் பிசைந்து சுடப்பட்ட புளிப்பில்லாத வட்ட ரொட்டியாகவோ எண்ணெய் தடவிய புளிப்பில்லாத மெல்லிய ரொட்டியாகவோ இருக்க வேண்டும்.+

5 வட்டக் கல்லில் சுட்ட ரொட்டியை உணவுக் காணிக்கையாகச் செலுத்த விரும்பினால்,+ புளிப்பில்லாத நைசான மாவில் எண்ணெய் கலந்து அதைச் செய்ய வேண்டும். 6 பின்பு அதைத் துண்டு துண்டாகப் பிட்டு, அதன்மேல் எண்ணெய் ஊற்ற வேண்டும்.+ இது உணவுக் காணிக்கை.

7 வாணலியில் செய்த ரொட்டியை உணவுக் காணிக்கையாகச் செலுத்த விரும்பினால், அதை நைசான மாவிலும் எண்ணெயிலும் செய்ய வேண்டும். 8 இப்படிப்பட்ட உணவுக் காணிக்கையை நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்துவதற்காக குருவானவரிடம் கொடுக்க வேண்டும். அதை அவர் பலிபீடத்துக்குக் கொண்டுபோக வேண்டும். 9 அந்த உணவுக் காணிக்கையில் கொஞ்சத்தை குருவானவர் எடுத்து, மொத்த காணிக்கைக்கும் அடையாளமாக+ அதைப் பலிபீடத்தில் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+ 10 மீதியிருக்கும் உணவுக் காணிக்கை ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் சேர வேண்டும். யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகன பலியில் இது மகா பரிசுத்தமானது.+

11 நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்தும் எந்த உணவுக் காணிக்கையிலும் புளிப்பு சேர்க்கக் கூடாது.+ புளித்த மாவையோ தேனையோ* யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்தக் கூடாது.

12 அவற்றை முதல் விளைச்சலிலிருந்து எடுத்து யெகோவாவுக்குப் படைக்கலாம்.+ ஆனால், வாசனையான காணிக்கையாகப் பலிபீடத்தில் எரிக்கக் கூடாது.

13 நீங்கள் செலுத்தும் உணவுக் காணிக்கைகள் எல்லாவற்றிலும் உப்பு சேர்க்க வேண்டும். அது கடவுள் செய்த ஒப்பந்தத்தை ஞாபகப்படுத்துவதால் உணவுக் காணிக்கையில் அதைச் சேர்க்காமல் இருக்கக் கூடாது. நீங்கள் செலுத்துகிற எல்லாவற்றோடும் சேர்த்து உப்பையும் செலுத்த வேண்டும்.+

14 முதல் விளைச்சலிலிருந்து உணவுக் காணிக்கை செலுத்தும்போது, பச்சையான கதிர்களைத் தீயில் வாட்டி, குறுணையாக்கி செலுத்த வேண்டும். முதல் விளைச்சலிலிருந்து யெகோவாவுக்குச் செலுத்தும் காணிக்கை அது.+ 15 அதன்மேல் எண்ணெய் ஊற்றி சாம்பிராணியை வைக்க வேண்டும். அது உணவுக் காணிக்கை. 16 குருவானவர் அந்தக் குறுணையையும் எண்ணெயையும் மொத்த சாம்பிராணியோடு சேர்த்து ஒரு கைப்பிடி எடுத்து மொத்த காணிக்கைக்கும் அடையாளமாக அதைப் பலிபீடத்தில் எரிக்க வேண்டும்.+ அது யெகோவாவுக்குச் செலுத்தும் தகன பலி’” என்றார்.

3 பின்பு அவர், “‘ஒருவன் சமாதான* பலியைச்+ செலுத்த விரும்பினால், எந்தக் குறையும் இல்லாத காளையையோ பசுவையோ யெகோவாவின் முன்னிலையில் செலுத்த வேண்டும். 2 பலியாகச் செலுத்தப்படும் மாட்டின் தலையில் அவன் கை வைக்க வேண்டும். அது சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் வெட்டப்பட வேண்டும். குருமார்களாகிய ஆரோனின் மகன்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்க வேண்டும். 3 அந்தச் சமாதான பலியிலிருந்து யெகோவாவுக்குத் தகன பலியாக,+ குடல்களின் மேலும் அதைச் சுற்றிலும் உள்ள கொழுப்பையும்,+ 4 இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும், அதாவது இடுப்புப் பகுதியிலுள்ள கொழுப்பையும், செலுத்த வேண்டும். சிறுநீரகங்களை எடுக்கும்போது கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் எடுத்து தகன பலியாகச் செலுத்த வேண்டும்.+ 5 ஆரோனின் மகன்கள் அதைத் தகன பலிமேல் வைத்து எரிக்க வேண்டும், அதாவது பலிபீடத்தின் தணலில் அடுக்கப்பட்ட விறகுகள்மேல் எரிகிற தகன பலிமேல் வைத்து எரிக்க வேண்டும்.+ அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+

6 ஒருவன் ஆடுகளில் ஒன்றை யெகோவாவுக்குச் சமாதான பலியாகச் செலுத்த விரும்பினால், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, எந்தக் குறையும் இல்லாததைச் செலுத்த வேண்டும்.+ 7 செம்மறியாட்டுக் கடாக் குட்டியை அவன் செலுத்த விரும்பினால், அதை யெகோவாவின் முன்னிலையில் செலுத்த வேண்டும். 8 பலியாகச் செலுத்தப்படும் ஆட்டின் தலையில் அவன் கை வைக்க வேண்டும். அது சந்திப்புக் கூடாரத்தின் முன்னால் வெட்டப்பட வேண்டும். ஆரோனின் மகன்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்க வேண்டும். 9 சமாதான பலியிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பை யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்த வேண்டும்.+ முதுகெலும்பின் பக்கத்திலுள்ள கொழுப்பு நிறைந்த வால் முழுவதையும், குடல்களின் மேலும் அதைச் சுற்றிலும் உள்ள எல்லா கொழுப்பையும், 10 இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும், அதாவது இடுப்புப் பகுதியிலுள்ள கொழுப்பையும், செலுத்த வேண்டும். சிறுநீரகங்களை எடுக்கும்போது கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் எடுத்து தகன பலியாகச் செலுத்த வேண்டும்.+ 11 குருவானவர் பலிபீடத்தின் மேல் அதை உணவாக* எரிக்க வேண்டும். இது யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகன பலி.+

12 ஒருவன் வெள்ளாட்டைப் பலியாகச் செலுத்த விரும்பினால், அதை யெகோவாவின் முன்னிலையில் செலுத்த வேண்டும். 13 அதன் தலையில் அவன் கை வைக்க வேண்டும். அது சந்திப்புக் கூடாரத்தின் முன்னால் வெட்டப்பட வேண்டும். ஆரோனின் மகன்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்க வேண்டும். 14 யெகோவாவுக்குத் தகன பலியாக, குடல்களின் மேலும் அவற்றைச் சுற்றிலும் உள்ள கொழுப்பையும்,+ 15 இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும், அதாவது இடுப்புப் பகுதியிலுள்ள கொழுப்பையும், செலுத்த வேண்டும். சிறுநீரகங்களை எடுக்கும்போது கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் எடுத்து தகன பலியாகச் செலுத்த வேண்டும். 16 குருவானவர் பலிபீடத்தின் மேல் அதை உணவாக* எரிக்க வேண்டும். அது வாசனையான தகன பலி. கொழுப்பு முழுவதும் யெகோவாவுக்கே சொந்தம்.+

17 கொழுப்பையோ இரத்தத்தையோ நீங்கள் சாப்பிடவே கூடாது.+ நீங்கள் எங்கே குடியிருந்தாலும் சரி, தலைமுறை தலைமுறைக்கும் இந்தச் சட்டதிட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்’” என்றார்.

4 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “இஸ்ரவேலர்களைப் பார்த்து நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘செய்யக் கூடாதென்று யெகோவா சொன்ன ஒன்றை யாராவது தெரியாத்தனமாகச் செய்யும்போது,+ பின்பற்ற வேண்டிய சட்டங்கள் இவைதான்:

3 அபிஷேகம் செய்யப்பட்ட குருவானவர்*+ பாவம் செய்து+ ஜனங்களைக் குற்றத்துக்கு ஆளாக்கினால், எந்தக் குறையுமில்லாத இளம் காளையைப் பாவப் பரிகார பலியாக யெகோவாவுக்குச் செலுத்த வேண்டும்.+ 4 சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் யெகோவாவின் முன்னிலையில் அந்தக் காளையைக் கொண்டுவந்து+ அதன் தலையில் தன் கையை வைக்க வேண்டும். யெகோவாவின் முன்னிலையில் அதை வெட்ட வேண்டும்.+ 5 அபிஷேகம் செய்யப்பட்ட குருவானவர்+ அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து சந்திப்புக் கூடாரத்துக்குள் கொண்டுவர வேண்டும். 6 அந்த இரத்தத்தை அவர் தன் விரலில் தொட்டு+ பரிசுத்த இடத்தின் திரைச்சீலைக்கு எதிரில், யெகோவாவின் முன்னிலையில் ஏழு தடவை தெளிக்க வேண்டும்.+ 7 அதோடு, இன்னும் கொஞ்சம் இரத்தத்தை எடுத்து சந்திப்புக் கூடாரத்தில் யெகோவாவின் முன்னிலையில் உள்ள தூபபீடத்தின் கொம்புகளில் பூச வேண்டும்.+ மீதமுள்ள இரத்தம் முழுவதையும் சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்குப் பக்கத்திலுள்ள தகன பலிக்கான பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட வேண்டும்.+

8 பின்பு, பாவப் பரிகார பலியாகச் செலுத்தப்படுகிற காளையின் கொழுப்பு முழுவதையும் அவர் எடுக்க வேண்டும். குடல்களின் மேலும் அவற்றைச் சுற்றிலும் உள்ள கொழுப்பையும், 9 இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும், அதாவது இடுப்புப் பகுதியிலுள்ள கொழுப்பையும், எடுக்க வேண்டும். சிறுநீரகங்களை எடுக்கும்போது கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் எடுக்க வேண்டும்.+ 10 சமாதான பலிக்காகச் செலுத்தப்படுகிற காளையிலிருந்து அவற்றை எடுப்பது போலவே இந்தக் காளையிலிருந்தும் எடுக்க வேண்டும்.+ பின்பு, குருவானவர் தகன பலிக்கான பலிபீடத்தில் அவற்றை எரிக்க வேண்டும்.

11 ஆனால், அந்தக் காளையின் தோல், சதை, தலை, கால்கள், குடல்கள், சாணம் ஆகியவற்றையும்+ 12 மீதமுள்ள எல்லாவற்றையும் முகாமுக்கு வெளியே சாம்பல் கொட்டப்படுகிற சுத்தமான இடத்துக்கு அவர் கொண்டுபோக வேண்டும். அந்த இடத்தில் விறகுகளை வைத்து அவற்றை எரிக்க வேண்டும்.+ அதாவது, சாம்பல் கொட்டப்படுகிற இடத்தில் அவற்றை எரிக்க வேண்டும்.

13 இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் தெரியாத்தனமாகப் பாவம் செய்து,+ அதாவது செய்யக் கூடாதென்று யெகோவா சொன்ன ஏதோவொன்றைத் தெரியாமல் செய்து குற்றத்துக்கு ஆளானால்,+ 14 அந்தப் பாவம் பிற்பாடு தெரியவரும்போது சபையார் தங்களுடைய பாவப் பரிகார பலியாக ஒரு இளம் காளையைச் சந்திப்புக் கூடாரத்துக்கு முன்னால் கொண்டுவர வேண்டும். 15 இஸ்ரவேலின் பெரியோர்கள்* யெகோவாவின் முன்னிலையில் அந்தக் காளையின் தலையில் தங்களுடைய கைகளை வைக்க வேண்டும். அதன்பின், அந்தக் காளை யெகோவாவின் முன்னிலையில் வெட்டப்பட வேண்டும்.

16 பின்பு, அபிஷேகம் செய்யப்பட்ட குருவானவர் அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து சந்திப்புக் கூடாரத்துக்குள் கொண்டுவர வேண்டும். 17 அந்த இரத்தத்தை அவர் தன் விரலில் தொட்டு திரைச்சீலைக்கு+ எதிரில் யெகோவாவின் முன்னிலையில் ஏழு தடவை தெளிக்க வேண்டும். 18 அதோடு, இன்னும் கொஞ்சம் இரத்தத்தை எடுத்து, சந்திப்புக் கூடாரத்தில் யெகோவாவின் முன்னிலையில் உள்ள தூபபீடத்தின் கொம்புகளில்+ பூச வேண்டும். மீதமுள்ள இரத்தம் முழுவதையும் சந்திப்புக் கூடார வாசலுக்குப் பக்கத்திலுள்ள தகன பலிக்கான பலிபீடத்தின்+ அடியில் ஊற்றிவிட வேண்டும். 19 அதன் கொழுப்பு முழுவதையும் எடுத்து பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும்.+ 20 பாவப் பரிகார பலியாகச் செலுத்தப்படுகிற காளைக்குச் செய்வது போலவே இந்தக் காளைக்கும் செய்ய வேண்டும். குருவானவர் அப்படியே செய்து, ஜனங்களுடைய பாவத்துக்காகப் பரிகாரம் செய்ய வேண்டும்.+ அப்போது, அவர்கள் மன்னிக்கப்படுவார்கள். 21 பின்பு, அவர் அந்தக் காளையை முகாமுக்கு வெளியே கொண்டுபோய், முந்தின காளையை எரித்தது போலவே இதையும் எரிக்க வேண்டும்.+ இது இஸ்ரவேல் சபையாருக்காகக் கொடுக்கப்படும் பாவப் பரிகார பலி.+

22 செய்யக் கூடாதென்று யெகோவா சொன்ன ஏதோவொன்றைக் கோத்திரத் தலைவர்+ ஒருவர் தெரியாத்தனமாகச் செய்து குற்றத்துக்கு ஆளானால், 23 அல்லது தான் செய்த ஒரு பாவத்தைப் பற்றிப் பிற்பாடு உணர்ந்தால், எந்தக் குறையுமில்லாத ஒரு வெள்ளாட்டுக் கடாக் குட்டியைப் பலியாகக் கொண்டுவர வேண்டும். 24 அதன் தலையில் அவர் தன் கையை வைக்க வேண்டும். பின்பு, தகன பலிக்கான மிருகங்கள் வெட்டப்படும் இடத்தில் அதை யெகோவாவின் முன்னிலையில் வெட்ட வேண்டும்.+ அது பாவப் பரிகார பலி. 25 பாவத்துக்காகச் செலுத்தப்படும் பலியின் இரத்தத்தில் கொஞ்சத்தைக் குருவானவர் தன்னுடைய விரலில் தொட்டு, தகன பலிக்கான பலிபீடத்தின் கொம்புகளில் பூச வேண்டும்.+ மீதமுள்ள இரத்தத்தை அந்தப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட வேண்டும்.+ 26 சமாதான பலியின் கொழுப்பை எரிப்பது போலவே இதன் கொழுப்பு முழுவதையும் பலிபீடத்தில் எரிக்க வேண்டும்.+ இப்படி, கோத்திரத் தலைவர் செய்த பாவத்துக்காகக் குருவானவர் பரிகாரம் செய்ய வேண்டும். அப்போது, அந்தக் கோத்திரத் தலைவருடைய பாவம் மன்னிக்கப்படும்.

27 செய்யக் கூடாதென்று யெகோவா சொன்ன ஏதோவொன்றை ஜனங்களில் ஒருவன் தெரியாத்தனமாகச் செய்து குற்றத்துக்கு ஆளானால்,+ 28 அல்லது தான் செய்த ஒரு பாவத்தைப் பற்றிப் பிற்பாடு உணர்ந்தால், அந்தப் பாவத்துக்காக எந்தக் குறையுமில்லாத ஒரு பெண் வெள்ளாட்டுக் குட்டியைப் பலியாகக் கொண்டுவர வேண்டும். 29 பாவப் பரிகார பலியாகச் செலுத்தப்படுகிற அந்த வெள்ளாட்டுக் குட்டியின் தலையில் அவன் தன் கையை வைக்க வேண்டும். பின்பு, தகன பலிக்கான மிருகங்கள் வெட்டப்படுகிற இடத்தில் அதை வெட்ட வேண்டும்.+ 30 அதன் இரத்தத்தில் கொஞ்சத்தைக் குருவானவர் தன்னுடைய விரலில் தொட்டு, தகன பலிக்கான பலிபீடத்தின் கொம்புகளில் பூச வேண்டும். மீதமுள்ள இரத்தம் முழுவதையும் அந்தப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட வேண்டும்.+ 31 சமாதான பலியின்+ கொழுப்பை எடுப்பது போலவே அதன் கொழுப்பு முழுவதையும் குருவானவர் எடுத்து பலிபீடத்தில் எரிக்க வேண்டும்.+ அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். இப்படி, அவன் செய்த பாவத்துக்காகக் குருவானவர் பரிகாரம் செய்ய வேண்டும். அப்போது அவனுடைய பாவம் மன்னிக்கப்படும்.

32 பாவப் பரிகார பலியாக அவன் ஒரு செம்மறியாட்டுக் குட்டியைக் கொண்டுவந்தால், அது எந்தக் குறையுமில்லாத பெண் ஆட்டுக்குட்டியாக இருக்க வேண்டும். 33 பாவப் பரிகார பலியாகச் செலுத்தப்படும் அந்த ஆட்டுக்குட்டியின் தலையில் அவன் தன் கையை வைக்க வேண்டும். பின்பு, தகன பலிக்காக மிருகங்கள் வெட்டப்படும் இடத்தில் பாவப் பரிகார பலியாக அதை வெட்ட வேண்டும்.+ 34 அதன் இரத்தத்தில் கொஞ்சத்தைக் குருவானவர் தன்னுடைய விரலில் தொட்டு, தகன பலிக்கான பலிபீடத்தின் கொம்புகளில் பூச வேண்டும்.+ மீதமுள்ள இரத்தம் முழுவதையும் அந்தப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட வேண்டும். 35 சமாதான பலியாகச் செலுத்தப்படும் செம்மறியாட்டுக் கடாக் குட்டியின் கொழுப்பை எடுப்பது போலவே இந்தப் பெண் செம்மறியாட்டுக் குட்டியின் கொழுப்பையும் எடுக்க வேண்டும். பலிபீடத்தில் யெகோவாவுக்குச் செலுத்தப்பட்ட தகன பலிமேல் அதை வைத்து குருவானவர் எரிக்க வேண்டும்.+ இப்படி, அவன் செய்த பாவத்துக்காகக் குருவானவர் பரிகாரம் செய்ய வேண்டும். அப்போது, அவனுடைய பாவம் மன்னிக்கப்படும்’”+ என்றார்.

5 பின்பு அவர், “‘ஒருவன் பாவம் செய்வதைப் பார்க்கிறவனோ அதைப் பற்றித் தெரிந்தவனோ, அதற்குச் சாட்சியாக+ இருக்கிறான். அதனால், அதைத் தெரிவிக்க வேண்டுமென்ற அறிவிப்பை* கேட்டும் அவன் தெரிவிக்காமல் இருந்துவிட்டால் அவன் குற்றவாளி. அந்தக் குற்றத்துக்காக அவன் தண்டிக்கப்படுவான்.

2 ஒருவன் அசுத்தமான காட்டு மிருகங்களின் பிணத்தையோ அசுத்தமான வீட்டு விலங்குகளின் பிணத்தையோ கூட்டங்கூட்டமாகப் போகிற அசுத்தமான சிறு பிராணிகளின் பிணத்தையோ தொட்டால்,+ அதைத் தெரியாத்தனமாகத் தொட்டிருந்தாலும்கூட தீட்டுப்பட்டவனாகவும், குற்றமுள்ளவனாகவும் இருப்பான். 3 மனுஷனைத் தீட்டுப்படுத்துகிற எதையாவது+ அல்லது தீட்டான எந்த மனுஷனையாவது ஒருவன் தெரியாத்தனமாகத் தொட்டுவிட்டால், அது தெரியவரும்போது அவன் குற்றமுள்ளவனாக இருப்பான்.

4 ஒருவன் ஏதோவொன்றைச் செய்வதாக அவசரப்பட்டு வாக்குக் கொடுத்துவிட்டால், அது நல்ல காரியமோ கெட்ட காரியமோ, அப்படி அவசரப்பட்டு வாக்குக் கொடுத்துவிட்டதை உணரும்போது குற்றமுள்ளவனாக இருப்பான்.*+

5 இப்படி ஏதோவொரு விஷயத்தில் ஒருவன் குற்றவாளியானால், தான் செய்த பாவத்தை ஒத்துக்கொள்ள வேண்டும்.+ 6 அதோடு, குற்ற நிவாரண பலியை யெகோவாவின் முன்னிலையில் கொண்டுவர வேண்டும்.+ அதாவது, பெண் செம்மறியாட்டுக் குட்டியையோ பெண் வெள்ளாட்டுக் குட்டியையோ பாவப் பரிகார பலியாகக் கொண்டுவர வேண்டும். அப்போது, குருவானவர் அவனுக்குப் பாவப் பரிகாரம் செய்வார்.

7 ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவனுக்கு வசதியில்லை என்றால், இரண்டு காட்டுப் புறாக்களையோ இரண்டு புறாக் குஞ்சுகளையோ+ குற்ற நிவாரண பலியாக யெகோவாவுக்குக் கொண்டுவர வேண்டும். ஒன்றைப் பாவப் பரிகார பலியாகவும் மற்றொன்றைத் தகன பலியாகவும் கொண்டுவர வேண்டும்.+ 8 அவன் அவற்றைக் குருவானவரிடம் கொடுக்க வேண்டும். குருவானவர் ஒரு பறவையை முதலில் எடுத்து, கழுத்தைத் துண்டாக்காமல் அதைக் கிள்ளி, பாவப் பரிகார பலியாகச் செலுத்த வேண்டும். 9 பாவத்துக்காகச் செலுத்தப்பட்ட அந்தப் பலியிலிருந்து கொஞ்சம் இரத்தத்தை எடுத்து, பலிபீடத்தின் பக்கவாட்டில் தெளிக்க வேண்டும். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட வேண்டும்.+ அது பாவப் பரிகார பலி. 10 குருவானவர் மற்றொரு பறவையை எடுத்து வழக்கமான முறைப்படி+ தகன பலியாகச் செலுத்த வேண்டும். அவன் செய்த பாவத்துக்காகக் குருவானவர் பாவப் பரிகாரம் செய்ய வேண்டும். அப்போது, அவனுடைய பாவம் மன்னிக்கப்படும்.+

11 இரண்டு காட்டுப் புறாக்களையோ இரண்டு புறாக் குஞ்சுகளையோ கொண்டுவர அவனுக்கு வசதியில்லை என்றால், ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு*+ நைசான மாவைப் பாவப் பரிகாரத்துக்கான காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். அதன்மேல் எண்ணெய் ஊற்றவோ சாம்பிராணியை வைக்கவோ கூடாது. அது பாவப் பரிகாரத்துக்கான காணிக்கை. 12 அதை அவன் குருவானவரிடம் கொண்டுவர வேண்டும். குருவானவர் அதிலிருந்து ஒரு கைப்பிடி மாவை எடுத்து, மொத்த காணிக்கைக்கும் அடையாளமாகப் பலிபீடத்தில் எரிக்க வேண்டும். அதாவது, யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகன பலிகள்மேல் எரிக்க வேண்டும். அது பாவப் பரிகார பலி. 13 இப்படிப்பட்ட பாவங்களில் எதை அவன் செய்திருந்தாலும், அதற்காகக் குருவானவர் பாவப் பரிகாரம் செய்வார். அப்போது, அவனுடைய பாவம் மன்னிக்கப்படும்.+ மீதமுள்ள மாவு, உணவுக் காணிக்கையைப்+ போலவே குருவானவருக்குச் சொந்தமாகும்’”+ என்றார்.

14 பின்பு யெகோவா மோசேயிடம் இப்படிச் சொன்னார்: 15 “யெகோவாவின் பரிசுத்த காரியங்களுக்கு* விரோதமாக ஒருவன் தெரியாத்தனமாகப் பாவம் செய்தால்,+ எந்தக் குறையுமில்லாத செம்மறியாட்டுக் கடாவைக் குற்ற நிவாரண பலியாக யெகோவாவுக்குக் கொண்டுவர வேண்டும்.+ அந்தச் செம்மறியாட்டுக் கடாவின் மதிப்பு எவ்வளவு என்பதைப் பரிசுத்த* வெள்ளி சேக்கலின்* கணக்குப்படி குருவானவர் தீர்மானிக்க வேண்டும்.+ 16 பரிசுத்த இடத்துக்கு விரோதமாகத் தான் செய்த பாவத்துக்கு அவன் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். அதன் மதிப்பில் ஐந்திலொரு பாகத்தைச் சேர்த்து குருவானவரிடம் கொடுக்க வேண்டும்.+ குருவானவர் குற்ற நிவாரண பலியாகிய செம்மறியாட்டுக் கடாவைச் செலுத்தி அவனுக்குப் பாவப் பரிகாரம் செய்வார்.+ அப்போது, அவனுடைய பாவம் மன்னிக்கப்படும்.+

17 செய்யக் கூடாதென்று யெகோவா சொன்ன ஏதோவொன்றை ஒருவன் தெரியாத்தனமாகச் செய்தாலும்கூட, குற்றமுள்ளவனாக இருப்பான். அந்தக் குற்றத்துக்காக அவன் தண்டிக்கப்படுவான்.+ 18 நிர்ணயிக்கப்பட்ட மதிப்பின்படி, எந்தக் குறையும் இல்லாத ஒரு செம்மறியாட்டுக் கடாவை அவன் கொண்டுவர வேண்டும். குற்ற நிவாரண பலியாக அதை குருவானவரிடம் கொடுக்க வேண்டும்.+ அவன் தெரியாத்தனமாகச் செய்த பாவத்துக்காகக் குருவானவர் பாவப் பரிகாரம் செய்வார். அப்போது, அவனுடைய பாவம் மன்னிக்கப்படும். 19 அது குற்ற நிவாரண பலி. அவன் யெகோவாவுக்கு விரோதமாகக் குற்றம் செய்திருக்கிறான்.”

6 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “ஒருவன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த பொருளோ, கொடுத்து வைக்கப்பட்டிருந்த பொருளோ தன்னிடம் இல்லையென்று மறுத்திருக்கலாம்,+ அல்லது அதைத் திருப்பித் தராமல் ஏமாற்றியிருக்கலாம், அல்லது மற்றவனுக்குச் சொந்தமானதைத் திருடியிருக்கலாம், அல்லது மோசடி செய்திருக்கலாம், 3 அல்லது யாரோ தொலைத்த பொருளைத் திருட்டுத்தனமாக எடுத்து வைத்திருக்கலாம். அவன் இதுபோன்ற ஒரு பாவத்தை மறைத்து பொய் சத்தியம் செய்து,+ யெகோவாவுக்கு உண்மையில்லாமல் நடந்துகொண்டால்,+ இந்தச் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும்: 4 திருடியதை, அபகரித்ததை, மோசடி செய்ததை, தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதை, அல்லது தான் கண்டெடுத்ததை அவன் திருப்பித் தர வேண்டும். 5 அல்லது, எதைக் குறித்துப் பொய் சத்தியம் செய்தானோ அதைத் திருப்பித் தர வேண்டும் அல்லது அதற்கு முழு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.+ அதுமட்டுமல்ல, அதன் மதிப்பில் ஐந்திலொரு பாகத்தைச் சேர்த்துத் தர வேண்டும். தன்னுடைய குற்றம் நிரூபிக்கப்படும் நாளில் அதன் சொந்தக்காரருக்கு அதைக் கொடுக்க வேண்டும். 6 எந்தக் குறையுமில்லாத ஒரு செம்மறியாட்டுக் கடாவை மந்தையிலிருந்து கொண்டுவந்து தன்னுடைய குற்ற நிவாரண பலியாகக் குருவானவரிடம் கொடுக்க வேண்டும். தன் குற்றத்துக்காக யெகோவாவுக்கு அவன் செலுத்தும் இந்தப் பலி, நிர்ணயிக்கப்பட்ட மதிப்பின்படி இருக்க வேண்டும்.+ 7 குருவானவர் யெகோவாவின் முன்னிலையில் அவனுக்காகப் பாவப் பரிகாரம் செய்வார். இப்படிப்பட்ட எந்தக் குற்றத்தை அவன் செய்திருந்தாலும் அது மன்னிக்கப்படும்”+ என்றார்.

8 அதன்பின் யெகோவா மோசேயிடம், 9 “இந்த எல்லா கட்டளைகளையும் ஆரோனிடமும் அவனுடைய மகன்களிடமும் நீ சொல்ல வேண்டும்: ‘தகன பலிக்கான+ சட்டம் என்னவென்றால், ராத்திரி முழுவதும் அது பலிபீடத்தின் மேல் இருக்க வேண்டும். காலை வரைக்கும் அது அங்கேயே இருக்க வேண்டும். பலிபீடத்தில் நெருப்பு எரிந்துகொண்டே இருக்க வேண்டும். 10 குருவானவர் தன்னுடைய நாரிழை* அங்கியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.+ நாரிழை அரைக் கால்சட்டையை+ உள்ளாடையாகப் போட்டுக்கொள்ள வேண்டும். பலிபீடத்தில் எரிக்கப்பட்ட தகன பலியின் சாம்பலை+ எடுத்து பலிபீடத்துக்குப் பக்கத்தில் கொட்ட வேண்டும். 11 பின்பு, அவர் தன்னுடைய உடைகளைக் கழற்றிவிட்டு+ வேறு உடைகளைப் போட்டுக்கொண்டு, அந்தச் சாம்பலை முகாமுக்கு வெளியிலுள்ள சுத்தமான இடத்துக்குக் கொண்டுபோய்க் கொட்ட வேண்டும்.+ 12 பலிபீடத்தின் நெருப்பு எரிந்துகொண்டே இருக்க வேண்டும், அது அணைந்துவிடக் கூடாது. குருவானவர் தினமும் காலையில் அதன்மேல் விறகுகளை வைத்து,+ தகன பலியை அடுக்கிவைக்க வேண்டும். சமாதான பலியின் கொழுப்பை அதன்மேல் எரிக்க வேண்டும்.+ 13 பலிபீடத்திலுள்ள நெருப்பு எரிந்துகொண்டே இருக்க வேண்டும், அது அணைந்துவிடக் கூடாது.

14 உணவுக் காணிக்கைக்கான சட்டம் இதுதான்:+ உணவுக் காணிக்கையைப் பலிபீடத்தின் முன்பு யெகோவாவின் முன்னிலையில் ஆரோனின் மகன்கள் படைக்க வேண்டும். 15 அவர்களில் ஒருவன் அதிலிருந்து ஒரு கைப்பிடி நைசான மாவையும், கொஞ்சம் எண்ணெயையும், சாம்பிராணி முழுவதையும் எடுத்து, மொத்த காணிக்கைக்கும் அடையாளமாக அதைப் பலிபீடத்தில் எரிக்க வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+ 16 மீதியிருக்கும் மாவில் புளிப்பில்லாத ரொட்டிகளைச் சுட்டு ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்த இடத்தில் சாப்பிட வேண்டும்.+ அதாவது, சந்திப்புக் கூடாரத்தின் பிரகாரத்தில் சாப்பிட வேண்டும்.+ 17 புளித்த எதையும் அந்த மாவுடன் கலந்து சுடக் கூடாது.+ எனக்குச் செலுத்தப்படும் தகன பலிகளிலிருந்து நான் அவர்களுக்குக் கொடுக்கும் பங்கு அது.+ பாவப் பரிகார பலியையும் குற்ற நிவாரண பலியையும் போல அது மிகவும் பரிசுத்தமானது.+ 18 ஆரோனின் வம்சத்தில் வரும் ஆண்கள் எல்லாரும் அதைச் சாப்பிட வேண்டும்.+ யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகன பலிகளில் தலைமுறை தலைமுறைக்கும் அது அவர்களுடைய பங்காக இருக்கும்.+ பலிகள்மேல் படுகிற எல்லாமே பரிசுத்தமாகும்’” என்றார்.

19 அதோடு யெகோவா மோசேயிடம், 20 “ஆரோனும் அவனுக்குப்பின் அவனுடைய மகன்களும் அபிஷேகம்+ செய்யப்படும் நாளில், தவறாமல் யெகோவாவுக்குச் செலுத்த வேண்டிய காணிக்கைகள் இவைதான்: ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு*+ நைசான மாவை எடுத்து பாதியைக் காலையிலும் மீதியைச் சாயங்காலத்திலும் உணவுக் காணிக்கையாகப்+ படைக்க வேண்டும். 21 அதில் எண்ணெய் கலந்து வட்டக் கல்லில் ரொட்டியாகச் சுட வேண்டும்.+ பின்பு அதைத் துண்டுகளாக்கி, அவற்றின் மேல் நிறைய எண்ணெய் ஊற்றி உணவுக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். 22 ஆரோனுக்குப் பின்பு குருவாக அபிஷேகம் செய்யப்படுகிற அவனுடைய மகன்+ அதைச் செய்ய வேண்டும். அதை யெகோவாவுக்கென்று முழுவதுமாக எரிக்க வேண்டும். இது நிரந்தரக் கட்டளை. 23 குருவானவருக்காகச் செலுத்தப்படும் உணவுக் காணிக்கையை முழுவதுமாக எரித்துவிட வேண்டும், அதைச் சாப்பிடக் கூடாது” என்றார்.

24 பின்பு யெகோவா மோசேயிடம் இப்படிச் சொன்னார்: 25 “ஆரோனிடமும் அவனுடைய மகன்களிடமும் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘பாவப் பரிகார பலியின் சட்டம் இதுதான்:+ வழக்கமாகத் தகன பலி வெட்டப்படுகிற இடத்தில்+ பாவப் பரிகார பலியையும் யெகோவாவின் முன்னிலையில் வெட்ட வேண்டும். அது மிகவும் பரிசுத்தமானது. 26 பாவப் பரிகார பலியைச் செலுத்துகிற குருவானவர் அதைச் சாப்பிட வேண்டும்.+ பரிசுத்த இடத்தில், அதாவது சந்திப்புக் கூடாரத்தின் பிரகாரத்தில், அதைச் சாப்பிட வேண்டும்.+

27 அதன் இறைச்சிமேல் படுகிற எல்லாமே பரிசுத்தமாகும். அதன் இரத்தம் ஒருவனுடைய அங்கியில் தெறித்தால், அதைப் பரிசுத்த இடத்தில் துவைக்க வேண்டும். 28 அந்த இறைச்சியை மண்பாத்திரத்தில் வேக வைத்திருந்தால், அந்தப் பாத்திரத்தை உடைத்துவிட வேண்டும். செம்புப் பாத்திரத்தில் வேக வைத்திருந்தால், அதை நன்றாகத் தேய்த்துத் தண்ணீரில் கழுவ வேண்டும்.

29 குருமார்களாகச் சேவை செய்யும் ஆண்கள் அந்த இறைச்சியைச் சாப்பிட வேண்டும்.+ அது மிகவும் பரிசுத்தமானது.+ 30 ஆனால், பாவப் பரிகார பலியின் இரத்தத்தில் கொஞ்சத்தைப் பாவப் பரிகாரத்துக்காகப் பரிசுத்த இடமாகிய சந்திப்புக் கூடாரத்துக்கு உள்ளே கொண்டுவந்திருந்தால், அதன் இறைச்சியைச் சாப்பிடக் கூடாது.+ அதை நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.’”

7 பின்பு அவர், “‘குற்ற நிவாரண பலிகளுக்கான சட்டம் இதுதான்:+ இந்தப் பலி மிகவும் பரிசுத்தமானது. 2 தகன பலிக்குரியதை வெட்டும் இடத்தில் குற்ற நிவாரண பலிக்குரியதையும் வெட்ட வேண்டும். அதன் இரத்தத்தைப்+ பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்க வேண்டும்.+ 3 அதன் கொழுப்பு முழுவதையும் குருவானவர் கடவுளுக்குச் செலுத்த வேண்டும்.+ கொழுப்பு நிறைந்த வாலையும், குடல்களின் மேலுள்ள கொழுப்பையும், 4 இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும், அதாவது இடுப்புப் பகுதியிலுள்ள கொழுப்பையும், செலுத்த வேண்டும். சிறுநீரகங்களை எடுக்கும்போது கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் அவர் எடுக்க வேண்டும்.+ 5 யெகோவாவுக்குத் தகன பலியாக அதைப் பலிபீடத்தின் மேல் குருவானவர் எரிக்க வேண்டும்.+ அது குற்ற நிவாரண பலி. 6 குருமார்களாகச் சேவை செய்யும் ஆண்கள் எல்லாரும் அதன் இறைச்சியைப் பரிசுத்த இடத்தில் சாப்பிட வேண்டும்.+ அது மிகவும் பரிசுத்தமானது.+ 7 பாவப் பரிகார பலிகளுக்கான சட்டம் குற்ற நிவாரண பலிகளுக்கும் பொருந்தும். குற்ற நிவாரண பலியைச் செலுத்தி பாவப் பரிகாரம் செய்கிற குருவுக்குத்தான் அந்த இறைச்சி சொந்தமாகும்.+

8 ஒருவன் கொண்டுவருகிற தகன பலியின் தோல்+ அந்தப் பலியைச் செலுத்துகிற குருவுக்குத்தான் சொந்தமாகும்.

9 அடுப்பிலோ வாணலியிலோ வட்டக் கல்லிலோ செய்து கொண்டுவரப்படும் எல்லா உணவுக் காணிக்கையும்+ அதைச் செலுத்துகிற குருவுக்குத்தான் சொந்தமாகும்.+ 10 ஆனால், எண்ணெய் கலந்தோ+ எண்ணெய் கலக்காமலோ+ செய்து கொண்டுவரப்படும் உணவுக் காணிக்கை எல்லாவற்றையும் ஆரோனின் மகன்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் எல்லாரும் அதைச் சமமாகப் பங்குபோட்டுக்கொள்ள வேண்டும்.

11 யெகோவாவுக்குச் செலுத்தப்படும் சமாதான பலிகளுக்கான+ சட்டம் இதுதான்: 12 அதை நன்றி தெரிவிக்கும் பலியாகச்+ செலுத்தினால், எண்ணெய் கலந்து சுடப்பட்ட புளிப்பில்லாத வட்ட ரொட்டிகள், எண்ணெய் தடவிய புளிப்பில்லாத மெல்லிய ரொட்டிகள், வறுத்த நைசான மாவில் எண்ணெய் ஊற்றி பிசைந்து சுடப்பட்ட வட்ட ரொட்டிகள் ஆகியவற்றையும் அதனோடு சேர்த்து செலுத்த வேண்டும். 13 நன்றி தெரிவிக்கச் செலுத்தப்படும் சமாதான பலிகளுடன் சேர்த்து, புளித்த மாவினால் செய்யப்பட்ட வட்ட ரொட்டிகளையும் செலுத்த வேண்டும். 14 ஒவ்வொரு விதமான ரொட்டியிலிருந்தும் ஒன்றை எடுத்து யெகோவாவுக்குப் பரிசுத்த பங்காகப் படைக்க வேண்டும். இவையெல்லாம் சமாதான பலிகளின் இரத்தத்தைத் தெளிக்கிற குருவுக்குச் சொந்தமாகும்.+ 15 நன்றி தெரிவிக்கச் செலுத்தப்படும் சமாதான பலியின் இறைச்சியை அதே நாளில் சாப்பிட வேண்டும். அடுத்த நாள் காலைவரை அதில் எதையும் மீதி வைக்கக் கூடாது.+

16 ஒருவன் கொண்டுவரும் பலி, நேர்ந்துகொண்டதை நிறைவேற்றும் பலியாகவோ+ அவனாகவே விருப்பப்பட்டு செலுத்தும் பலியாகவோ+ இருந்தால் அதே நாளில் சாப்பிட வேண்டும். மீதியிருந்தால் அடுத்த நாளிலும் சாப்பிடலாம். 17 ஆனால், மூன்றாம் நாள்வரை மீந்திருக்கும் இறைச்சியை எரித்துவிட வேண்டும்.+ 18 சமாதான பலியைக் கொண்டுவந்தவன் அதன் இறைச்சியை மூன்றாம் நாளில் சாப்பிட்டால், அவனைக் கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டார். அந்தப் பலியால் அவனுக்கு எந்தப் பிரயோஜனமும் கிடைக்காது. அது கடவுளுக்கு அருவருப்பாக இருக்கும். அதில் கொஞ்சம் சாப்பிட்டால்கூட அந்தக் குற்றத்துக்காக அவன் தண்டிக்கப்படுவான்.+ 19 தீட்டான எதன் மீதாவது அந்த இறைச்சி பட்டால் அதைச் சாப்பிடக் கூடாது. அதை நெருப்பில் சுட்டெரித்துவிட வேண்டும். தீட்டுப்படாத எல்லாரும் சுத்தமான இறைச்சியைச் சாப்பிடலாம்.

20 யெகோவாவுக்குச் செலுத்தப்படும் சமாதான பலியின் இறைச்சியைத் தீட்டான ஒருவன் சாப்பிட்டால், அவன் கொல்லப்பட வேண்டும்.+ 21 ஒருவன் தீட்டான மனிதனையோ+ அசுத்தமான மிருகத்தையோ+ தீட்டாகவும் அருவருப்பாகவும் இருக்கிற ஒன்றையோ+ தொட்டுவிட்டு, யெகோவாவுக்குச் செலுத்தப்பட்ட சமாதான பலியின் இறைச்சியைச் சாப்பிட்டால், அவன் கொல்லப்பட வேண்டும்’” என்றார்.

22 பின்பு யெகோவா மோசேயிடம், 23 “நீ இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘காளை, செம்மறியாட்டுக் கடாக் குட்டி, வெள்ளாடு ஆகியவற்றின் கொழுப்பை நீங்கள் சாப்பிடக் கூடாது.+ 24 தானாகச் செத்துப்போன மிருகத்தின் கொழுப்பையும் வேறொரு மிருகத்தினால் கொல்லப்பட்ட மிருகத்தின் கொழுப்பையும் மற்ற காரியங்களுக்காகப் பயன்படுத்தலாம். ஆனால், அதை ஒருபோதும் சாப்பிடக் கூடாது.+ 25 யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்தும் மிருகத்தின் கொழுப்பை ஒருவன் சாப்பிட்டால் அவன் கொல்லப்பட வேண்டும்.

26 நீங்கள் குடியிருக்கும் எந்த இடத்திலும் பறவைகளின் இரத்தத்தையோ மிருகங்களின் இரத்தத்தையோ சாப்பிடக் கூடாது.+ 27 இரத்தத்தைச் சாப்பிடுகிறவன் கொல்லப்பட வேண்டும்’”+ என்றார்.

28 அதன்பின் யெகோவா மோசேயிடம், 29 “நீ இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘யெகோவாவுக்குச் சமாதான பலி செலுத்துகிறவன் அதில் ஒரு பங்கை யெகோவாவுக்கென்று கொண்டுவர வேண்டும்.+ 30 யெகோவாவுக்குச் செலுத்தும் தகன பலியாக மார்க்கண்டத்தையும்* கொழுப்பையும்+ தன் கையிலேயே கொண்டுவர வேண்டும். அதை அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்ட வேண்டும்.+ 31 குருவானவர் அதன் கொழுப்பைப் பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும்.+ ஆனால், மார்க்கண்டம் ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் சொந்தமாகும்.+

32 நீங்கள் சமாதான பலியாகச் செலுத்துகிற மிருகங்களின் வலது காலை எடுத்து குருவானவருக்குப் பரிசுத்த பங்காகக் கொடுக்க வேண்டும்.+ 33 சமாதான பலிகளின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிற ஆரோனின் மகனுக்கு அந்த வலது காலைப் பங்காகக் கொடுக்க வேண்டும்.+ 34 இஸ்ரவேல் ஜனங்கள் செலுத்துகிற சமாதான பலிகளிலிருந்து, அசைவாட்டும் காணிக்கையாகிய மார்க்கண்டத்தையும் பரிசுத்த பங்காகிய காலையும் குருமார்களாகிய ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் கொடுத்திருக்கிறேன். இஸ்ரவேல் ஜனங்களுக்கு இதை ஒரு நிரந்தரக் கட்டளையாகத் தந்திருக்கிறேன்.+

35 யெகோவாவுக்குச் செலுத்தப்பட்ட தகன பலிகளிலிருந்து எடுக்கப்படும் இந்தப் பங்கை குருமார்களாகிய ஆரோனுக்காகவும் அவனுடைய மகன்களுக்காகவும் ஒதுக்கி வைக்க வேண்டுமென்று கட்டளை கொடுக்கப்பட்டது. அவர்கள் யெகோவாவுக்குக் குருத்துவச் சேவை செய்ய நியமிக்கப்பட்ட நாளில் அந்தக் கட்டளை கொடுக்கப்பட்டது.+ 36 இந்தப் பங்கை அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று அவர்களை அபிஷேகம் செய்த+ நாளில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு யெகோவா கட்டளை கொடுத்தார். இது தலைமுறை தலைமுறைக்கும் அவர்களுக்குச் சட்டமாக இருக்கும்’” என்றார்.

37 தகன பலி,+ உணவுக் காணிக்கை,+ பாவப் பரிகார பலி,+ குற்ற நிவாரண பலி,+ குருமார்கள் நியமிக்கப்படும்போது செலுத்தப்படும் பலி,+ சமாதான பலி+ ஆகியவற்றுக்கான சட்டங்கள் இவைதான். 38 சீனாய் மலையில் யெகோவா கொடுத்த இந்தச் சட்டங்களின்படியே,+ யெகோவாவுக்குப் பலிகள் செலுத்த வேண்டுமென்று இஸ்ரவேல் ஜனங்களுக்கு சீனாய் வனாந்தரத்தில் மோசே கட்டளை கொடுத்தார்.+

8 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “ஆரோனையும் அவனுடைய மகன்களையும்+ வரச் சொல். உடைகள்,+ அபிஷேகத் தைலம்,+ பாவப் பரிகார பலிக்கான காளை, இரண்டு செம்மறியாட்டுக் கடாக்கள், புளிப்பில்லாத ரொட்டிகள்+ உள்ள கூடை ஆகியவற்றை எடுத்துக்கொள். 3 ஜனங்கள் எல்லாரும் சந்திப்புக் கூடாரத்தின் பிரகார நுழைவாசலுக்கு முன்னால் கூடிவரும்படி செய்” என்றார்.

4 யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார். சந்திப்புக் கூடாரத்தின் பிரகார நுழைவாசலில் ஜனங்கள் ஒன்றுகூடினார்கள். 5 அப்போது மோசே ஜனங்களிடம், “இப்படிச் செய்யச் சொல்லி யெகோவா நமக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார்” என்றார். 6 அதனால், ஆரோனையும் அவருடைய மகன்களையும் கூப்பிட்டு, அவர்களைக் குளிக்க வைத்தார்.*+ 7 அதன்பின் ஆரோனுக்கு உள்ளங்கியைப்+ போட்டு, இடுப்புக்கச்சையைக்+ கட்டினார். அதன்மேல் கையில்லாத அங்கியையும்,+ ஏபோத்தையும்+ போட்டுவிட்டார். ஏபோத்தின் இடுப்புப்பட்டையை+ இறுக்கமாகக் கட்டிவிட்டார். 8 அடுத்து, அவருக்கு மார்ப்பதக்கத்தைப்+ போட்டுவிட்டு, அதற்குள் ஊரீமையும் தும்மீமையும்+ வைத்தார். 9 பின்பு, அவருக்குத் தலைப்பாகையை+ வைத்து, அதன் முன்பக்கத்தில் பளபளப்பான தங்கத் தகட்டை, அதாவது அர்ப்பணிப்பின் பரிசுத்த அடையாளத்தை,*+ கட்டினார். யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.

10 பின்பு, மோசே அபிஷேகத் தைலத்தை எடுத்து, வழிபாட்டுக் கூடாரத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும்+ அபிஷேகம் செய்து புனிதப்படுத்தினார். 11 அதன்பின், அந்தத் தைலத்தில் கொஞ்சத்தைப் பலிபீடத்தின் மேல் ஏழு தடவை தெளித்து, பலிபீடத்தையும் அதற்கான பாத்திரங்களையும் செம்புத் தொட்டியையும் அதன் தாங்கியையும் அபிஷேகம் செய்து புனிதப்படுத்தினார். 12 கடைசியாக, ஆரோனின் தலையில் கொஞ்சம் அபிஷேகத் தைலத்தை ஊற்றி அபிஷேகம் செய்து அவரைப் புனிதப்படுத்தினார்.+

13 பின்பு, ஆரோனின் மகன்களைப் பக்கத்தில் கூப்பிட்டு, அவர்களுக்கு அங்கியைப் போட்டுவிட்டு, இடுப்புக்கச்சையையும் முண்டாசையும் கட்டிவிட்டார்.+ யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.

14 அடுத்ததாக, பாவப் பரிகார பலியைச் செலுத்த மோசே காளையைக் கொண்டுவந்தார். அந்தக் காளையின் தலையில் ஆரோனும் அவர் மகன்களும் கை வைத்தார்கள்.+ 15 மோசே அந்தக் காளையை வெட்டி, அதன் இரத்தத்தைத்+ தன் விரலில் தொட்டு, பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் உள்ள கொம்புகளில் பூசி, அந்தப் பலிபீடத்தைச் சுத்திகரித்தார். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றினார். இப்படி, பலிகள் செலுத்துவதற்காகப் பலிபீடத்தைப் புனிதப்படுத்தினார். 16 பின்பு, குடல்கள் மேலுள்ள எல்லா கொழுப்பையும், கல்லீரல் மேலுள்ள சவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும் அவற்றின் கொழுப்பையும் எடுத்து பலிபீடத்தின் மேல் எரித்தார்.+ 17 பிற்பாடு, அந்தக் காளையின் தோல், சதை, சாணம் ஆகியவற்றையும் மற்ற பாகங்களையும் முகாமுக்கு வெளியில் எரிக்கச் சொன்னார்.+ யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.

18 பின்பு, தகன பலி செலுத்த செம்மறியாட்டுக் கடாவை மோசே கொண்டுவந்தார். ஆரோனும் அவர் மகன்களும் அதன் தலையில் கை வைத்தார்கள்.+ 19 மோசே அதை வெட்டி, அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தார். 20 அந்தச் செம்மறியாட்டுக் கடாவைத் துண்டு துண்டாக வெட்டி, அதன் தலையையும் துண்டுகளையும் கொழுப்பையும் எரித்தார். 21 அதன் குடல்களையும் கால்களையும் தண்ணீரில் கழுவிய பின்பு, அந்தச் செம்மறியாட்டுக் கடா முழுவதையும் பலிபீடத்தில் தகன பலியாகச் செலுத்தினார். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருந்தது. யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.

22 பின்பு, இரண்டாவது செம்மறியாட்டுக் கடாவை, அதாவது குருமார்களை நியமிக்கும்போது+ செலுத்தப்படும் செம்மறியாட்டுக் கடாவை, மோசே கொண்டுவந்தார். ஆரோனும் அவர் மகன்களும் அதன் தலையில் கை வைத்தார்கள்.+ 23 மோசே அந்தச் செம்மறியாட்டுக் கடாவை வெட்டி, அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனுடைய வலது காது மடலிலும் வலது கை கட்டைவிரலிலும் வலது கால் பெருவிரலிலும் பூசினார். 24 அதன்பின், ஆரோனின் மகன்களைக் கூப்பிட்டு, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து அவர்களுடைய வலது காது மடலிலும் வலது கை கட்டைவிரலிலும் வலது கால் பெருவிரலிலும் பூசினார். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தார்.+

25 பின்பு அதன் கொழுப்பையும், அதன் கொழுப்பு நிறைந்த வாலையும், குடல்களைச் சுற்றியுள்ள கொழுப்பையும், கல்லீரலின் மேலுள்ள சவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும், அதன் வலது காலையும் எடுத்தார்.+ 26 அதோடு, யெகோவாவின் முன்னிலையில் புளிப்பில்லாத ரொட்டிகள் வைக்கப்பட்டிருந்த கூடையிலிருந்து ஒரு வட்ட ரொட்டியையும்,+ எண்ணெயில் பிசைந்து சுடப்பட்ட ஒரு வட்ட ரொட்டியையும்,+ ஒரு மெல்லிய ரொட்டியையும் எடுத்தார். இவற்றை, வெட்டி எடுக்கப்பட்ட அந்தக் கொழுப்புத் துண்டுகளின் மேலும் வலது காலின் மேலும் வைத்தார். 27 அவை எல்லாவற்றையும் ஆரோனின் கையிலும் அவருடைய மகன்களின் கையிலும் வைத்து, அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்டினார். 28 பின்பு, அவற்றை அவர்களுடைய கையிலிருந்து எடுத்து, பலிபீடத்திலுள்ள தகன பலியின் மேல் வைத்து எரித்தார். அது குருமார்களை நியமிக்கும்போது செலுத்தப்படும் தகன பலி, அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருந்தது.

29 குருமார்களை நியமிக்கும்போது செலுத்தப்படும் அந்தச் செம்மறியாட்டுக் கடாவின் மார்க்கண்டத்தை* மோசே எடுத்து அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்டினார்.+ யெகோவா கட்டளை கொடுத்தபடியே அதை மோசே தன் பங்காக எடுத்துக்கொண்டார்.+

30 அபிஷேகத் தைலத்திலும்+ பலிபீடத்தின் மேலுள்ள இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, அவற்றை ஆரோன்மேலும் அவருடைய உடைகள்மேலும் அவருடைய மகன்கள்மேலும் அவர்களுடைய உடைகள்மேலும் மோசே தெளித்தார். இப்படி, ஆரோனையும் அவருடைய உடைகளையும், அவருடைய மகன்களையும்+ அவர்களுடைய உடைகளையும்+ புனிதப்படுத்தினார்.

31 மோசே ஆரோனையும் அவருடைய மகன்களையும் பார்த்து, “சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்கு முன்னால் செம்மறியாட்டுக் கடாவின் இறைச்சியை நீங்கள் வேக வைக்க+ வேண்டும். பின்பு, அதையும் கூடையிலுள்ள* ரொட்டியையும் அங்கே சாப்பிட வேண்டும். ஏனென்றால், ‘ஆரோனும் அவனுடைய மகன்களும் அதைச் சாப்பிட வேண்டும்’+ என்று கடவுள் எனக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார். 32 மீதியிருக்கும் இறைச்சியையும் ரொட்டியையும் நீங்கள் சுட்டெரிக்க வேண்டும்.+ 33 ஏழு நாட்கள் முடியும்வரை, அதாவது நீங்கள் குருமார்களாக நியமிக்கப்படும் நாட்கள் முடியும்வரை, சந்திப்புக் கூடாரத்தின் வாசலைவிட்டு நீங்கள் வெளியே போகக் கூடாது. ஏனென்றால், குருத்துவச் சேவைக்காக உங்களை நியமிப்பதற்கு ஏழு நாட்கள் எடுக்கும்.+ 34 உங்களுக்குப் பாவப் பரிகாரம் செய்வதற்காக,+ இன்று போலவே மீதமுள்ள ஆறு நாட்களுக்கும் செய்ய வேண்டுமென்று யெகோவா கட்டளை கொடுத்திருக்கிறார். 35 நீங்கள் சாகாதபடிக்கு ஏழு நாட்கள் ராத்திரியும் பகலும் சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் தங்கியிருந்து,+ யெகோவா கொடுத்த பொறுப்பை நிறைவேற்றுங்கள்.+ நீங்கள் இப்படிச் செய்ய வேண்டுமென்று கடவுள் எனக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார்” என்றார்.

36 மோசேயின் மூலம் யெகோவா கட்டளையிட்ட எல்லாவற்றையும் ஆரோனும் அவர் மகன்களும் செய்தார்கள்.

9 எட்டாம் நாளில்,+ ஆரோனையும் அவருடைய மகன்களையும் இஸ்ரவேலின் பெரியோர்களையும்* மோசே கூப்பிட்டார். 2 அவர் ஆரோனிடம், “குறையில்லாத ஒரு கன்றுக்குட்டியைப் பாவப் பரிகார பலியாகவும்,+ குறையில்லாத ஒரு செம்மறியாட்டுக் கடாவைத் தகன பலியாகவும் கொண்டுவந்து உங்களுக்காக யெகோவாவின் முன்னிலையில் செலுத்துங்கள். 3 அதேசமயத்தில், இஸ்ரவேல் ஜனங்களிடம் இப்படிச் சொல்லுங்கள்: ‘ஒரு வெள்ளாட்டுக் கடாவைப் பாவப் பரிகார பலியாகவும், குறையில்லாத ஒருவயது கன்றுக்குட்டியையும் செம்மறியாட்டுக் கடாக் குட்டியையும் தகன பலியாகவும் கொண்டுவாருங்கள். 4 யெகோவாவின் முன்னிலையில் செலுத்துவதற்கு, ஒரு காளையையும் செம்மறியாட்டுக் கடாவையும் சமாதான பலியாகக்+ கொண்டுவாருங்கள். எண்ணெய் கலந்த உணவுக் காணிக்கையையும்+ கொண்டுவாருங்கள். ஏனென்றால், இன்று யெகோவா உங்கள்முன் தோன்றுவார்’”+ என்றார்.

5 அதனால், மோசே கட்டளை கொடுத்த எல்லாவற்றையும் சந்திப்புக் கூடாரத்துக்கு முன்னால் அவர்கள் கொண்டுவந்தார்கள். பின்பு, ஜனங்கள் எல்லாரும் வந்து யெகோவாவின் முன்னிலையில் நின்றார்கள். 6 அப்போது மோசே, “இப்படிச் செய்யச் சொல்லி யெகோவா உங்களுக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார். இப்படிச் செய்தால்தான் யெகோவா தன்னுடைய மகிமையை உங்களுக்குக் காட்டுவார்”+ என்றார். 7 பின்பு மோசே ஆரோனிடம், “நீங்கள் பலிபீடத்துக்குப் போய், பாவப் பரிகாரப் பலியையும்+ தகன பலியையும் செலுத்தி, உங்களுக்காகவும்+ உங்களுடைய குடும்பத்துக்காகவும் பாவப் பரிகாரம் செய்யுங்கள். யெகோவா கட்டளை கொடுத்தபடி, ஜனங்கள் கொண்டுவருகிற பலியைச் செலுத்தி அவர்களுக்காகவும் பாவப் பரிகாரம் செய்யுங்கள்”+ என்றார்.

8 உடனே, ஆரோன் பலிபீடத்துக்குப் போய்த் தன்னுடைய பாவத்துக்குப் பலியாகக் கன்றுக்குட்டியை வெட்டினார்.+ 9 அதன் இரத்தத்தை+ அவருடைய மகன்கள் அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் விரலில் தொட்டு பலிபீடத்தின் கொம்புகள்மேல் பூசினார். மீதியிருந்த இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றினார்.+ 10 அதோடு, மோசேக்கு யெகோவா கொடுத்த கட்டளைப்படியே, ஆரோன் பாவப் பரிகார பலியின் கொழுப்பையும் சிறுநீரகங்களையும் கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் எடுத்து பலிபீடத்தின் மேல் எரித்தார்.+ 11 அதன் சதையையும் தோலையும் முகாமுக்கு வெளியே எரித்தார்.+

12 பின்பு, தகன பலிக்கான கடாவை ஆரோன் வெட்டினார். அவருடைய மகன்கள் அதன் இரத்தத்தை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தார்.+ 13 அவர்கள் தகன பலிக்கான அந்தக் கடாவின் துண்டுகளை அதன் தலையோடு சேர்த்து அவரிடம் கொடுத்தார்கள். அவர் அதைப் பலிபீடத்தின் மேல் எரித்தார். 14 அதோடு, அதன் குடல்களையும் கால்களையும் கழுவி, அவற்றைத் தகன பலியின் மேல் வைத்து எரித்தார்.

15 பின்பு, பாவப் பரிகார பலியாக ஜனங்கள் கொண்டுவந்த வெள்ளாட்டை அவர் வெட்டினார். முந்தின பலியைப் போலவே இதையும் பாவப் பரிகார பலியாகச் செலுத்தினார். 16 அதன்பின், வழக்கமான முறைப்படி தகன பலியைச் செலுத்தினார்.+

17 அடுத்ததாக, உணவுக் காணிக்கையை+ ஒரு கைப்பிடி எடுத்து, காலையில்+ பலிபீடத்தில் செலுத்தப்பட்ட தகன பலியின் மேல் எரித்தார்.

18 பின்பு, ஜனங்கள் தங்களுக்காகக் கொண்டுவந்த சமாதான பலியாகிய காளையையும் செம்மறியாட்டுக் கடாவையும் வெட்டினார். அவற்றின் இரத்தத்தை அவருடைய மகன்கள் அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தார்.+ 19 ஆரோனின் மகன்கள் காளையின் கொழுப்புத் துண்டுகளையும்,+ செம்மறியாட்டுக் கடாவின் கொழுப்பு நிறைந்த வாலையும், உள்ளுறுப்புகளின் மேலுள்ள கொழுப்பையும், சிறுநீரகங்களையும், கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் எடுத்து,+ 20 அந்த எல்லா கொழுப்பையும் மார்க்கண்டங்களின்* மேல் வைத்தார்கள். அதன்பின், அந்தக் கொழுப்புத் துண்டுகளைப் பலிபீடத்தின் மேல் அவர் எரித்தார்.+ 21 மோசே கட்டளை கொடுத்தபடியே, ஆரோன் அவற்றின் மார்க்கண்டங்களையும் வலது காலையும் அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்டினார்.+

22 பின்பு, ஆரோன் ஜனங்களைப் பார்த்தபடி தன் கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார்.+ அதன்பின், பாவப் பரிகார பலியையும் தகன பலியையும் சமாதான பலிகளையும் செலுத்திய இடத்தைவிட்டு இறங்கி வந்தார். 23 கடைசியாக, மோசேயும் ஆரோனும் சந்திப்புக் கூடாரத்துக்குள் போனார்கள். பின்பு, வெளியே வந்து ஜனங்களை ஆசீர்வதித்தார்கள்.+

யெகோவா தன்னுடைய மகிமையை எல்லா ஜனங்களுக்கும் காட்டினார்.+ 24 யெகோவாவிடமிருந்து நெருப்பு வந்து,+ பலிபீடத்தின் மேலிருந்த தகன பலியையும் கொழுப்புத் துண்டுகளையும் விழுங்கியது. ஜனங்கள் எல்லாரும் அதைப் பார்த்தபோது, சந்தோஷமாகக் கோஷம்போட்டார்கள். பின்பு, சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள்.+

10 பிறகு, ஆரோனின் மகன்களான நாதாபும் அபியூவும்+ அவரவர் தூபக்கரண்டியில் தணலையும் தூபப்பொருளையும்+ எடுத்துக்கொண்டு, யெகோவா ஏற்றுக்கொள்ளாத விதத்தில், அத்துமீறி* அவருடைய சன்னிதியில் தூபம் காட்டினார்கள்.+ 2 அப்போது, யெகோவாவின் சன்னிதியிலிருந்து நெருப்பு வந்து அவர்களைச் சுட்டுப் பொசுக்கியது.+ அவர்கள் யெகோவாவின் சன்னிதியில் செத்துப்போனார்கள்.+ 3 பின்பு மோசே ஆரோனிடம், “யெகோவா சொல்வது என்னவென்றால், ‘என் சன்னிதியில் இருப்பவர்கள் என்னைப் பரிசுத்தப்படுத்த வேண்டும்.+ அப்போதுதான், எல்லா ஜனங்களுக்கு முன்பாகவும் நான் மகிமைப்படுவேன்’” என்றார். அதைக் கேட்டபோது, ஆரோன் அமைதியாக இருந்தார்.

4 பின்பு மோசே, ஆரோனின் சித்தப்பாவாகிய ஊசியேலின்+ மகன்களான மீஷாவேலையும் எல்சாப்பானையும் கூப்பிட்டு, “உங்கள் சகோதரர்களின் உடல்களைப் பரிசுத்த இடத்தின் பிரகாரத்திலிருந்து எடுத்து முகாமுக்கு வெளியே கொண்டுபோங்கள்” என்றார். 5 மோசே சொன்னபடியே அவர்கள் போய், குருமார்களின் அங்கிகளோடு கிடந்த அந்த உடல்களை முகாமுக்கு வெளியே கொண்டுபோனார்கள்.

6 மோசே ஆரோனையும் அவருடைய மற்ற மகன்களான எலெயாசாரையும் இத்தாமாரையும் பார்த்து, “நீங்கள் உங்களுடைய தலைமுடியை அலங்கோலமாக விடக்கூடாது, அங்கிகளைக் கிழித்துக்கொள்ளவும் கூடாது.+ அப்படிச் செய்தால், நீங்கள் சாக வேண்டியிருக்கும். அதுமட்டுமல்ல, எல்லா ஜனங்களும் கடவுளுடைய கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும். நெருப்பினால் யெகோவா கொன்றுபோட்ட ஆட்களுக்காக உங்கள் சகோதரர்களான இஸ்ரவேலர்கள் எல்லாரும் அழுவார்கள். 7 யெகோவா உங்களை அபிஷேகத் தைலத்தால் அபிஷேகம் செய்திருக்கிறார்.+ அதனால், சந்திப்புக் கூடாரத்தின் வாசலைவிட்டு நீங்கள் வெளியே போகக் கூடாது. அப்படிப் போனால் நீங்கள் செத்துப்போவீர்கள்” என்றார். மோசே சொன்னபடியே அவர்கள் செய்தார்கள்.

8 பின்பு யெகோவா ஆரோனிடம், 9 “நீயும் உன்னோடு இருக்கிற உன் மகன்களும் திராட்சமதுவோ வேறெந்த மதுவோ குடித்துவிட்டு சந்திப்புக் கூடாரத்துக்குள் வரக் கூடாது.+ அப்படி வந்தால் செத்துப்போவீர்கள். தலைமுறை தலைமுறைக்கும் இதை உங்களுக்கு நிரந்தரச் சட்டமாகத் தருகிறேன். 10 ஏனென்றால், பரிசுத்தமான காரியங்களுக்கும் பரிசுத்தமில்லாத காரியங்களுக்கும், சுத்தமான காரியங்களுக்கும் அசுத்தமான காரியங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் காட்ட வேண்டும்.+ 11 அதோடு, யெகோவாவாகிய நான் மோசே மூலம் கொடுத்த எல்லா விதிமுறைகளையும் நீங்கள் இஸ்ரவேலர்களுக்குக் கற்றுத்தர வேண்டும்”+ என்றார்.

12 பின்பு, மோசே ஆரோனையும் அவருடைய மகன்களான எலெயாசாரையும் இத்தாமாரையும் பார்த்து, “யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்திய உணவுக் காணிக்கையில் மீதியிருப்பதை எடுத்து, புளிப்பில்லாத ரொட்டி செய்து, பலிபீடத்துக்குப் பக்கத்தில் சாப்பிடுங்கள்.+ ஏனென்றால், அது மிகவும் பரிசுத்தமானது.+ 13 அதைப் பரிசுத்த இடத்தில் சாப்பிட வேண்டும்.+ அதுதான் யெகோவாவுக்குச் செலுத்தப்படுகிற தகன பலிகளில் உனக்கும் உன் மகன்களுக்கும் கொடுக்கப்படும் பங்கு. அதைக் கொடுக்கும்படி கடவுள் எனக்குக் கட்டளை தந்திருக்கிறார். 14 நீயும் உன் மகன்களும் உன்னோடு இருக்கிற உன் மகள்களும்,+ அசைவாட்டும் காணிக்கையாகிய மார்க்கண்டத்தையும்* பரிசுத்த பங்காகிய காலையும் சுத்தமான இடத்தில் சாப்பிட வேண்டும்.+ இஸ்ரவேல் ஜனங்கள் செலுத்தும் சமாதான பலிகளிலிருந்து இவை உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் பங்காகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 15 தகன பலியாகச் செலுத்தப்படும் கொழுப்புத் துண்டுகளோடு, பரிசுத்த பங்காகிய காலையும் அசைவாட்டும் காணிக்கையாகிய மார்க்கண்டத்தையும் அவர்கள் கொண்டுவர வேண்டும். அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அவற்றை அசைவாட்ட வேண்டும். யெகோவா கட்டளை கொடுத்தபடியே, அந்தக் காலும் மார்க்கண்டமும் உனக்கும் உன் மகன்களுக்கும் எப்போதுமே பங்காகக் கிடைக்கும்”+ என்றார்.

16 பாவப் பரிகார பலியாகிய வெள்ளாட்டை+ மோசே தேடியபோது, அது எரிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார். அதனால், ஆரோனின் மகன்களான எலெயாசார்மேலும் இத்தாமார்மேலும் அவருக்குப் பயங்கர கோபம் வந்தது. 17 அவர்களிடம், “பரிசுத்த இடத்தில் நீங்கள் ஏன் பாவப் பரிகார பலியைச் சாப்பிடவில்லை?+ அது மிகவும் பரிசுத்தமானதுதானே? ஜனங்களின் குற்றத்துக்கு நீங்கள் பொறுப்பேற்று, யெகோவாவின் முன்னிலையில் அவர்களுக்குப் பாவப் பரிகாரம் செய்யத்தானே அவர் அதை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார்? 18 அதன் இரத்தம் பரிசுத்த இடத்துக்குள் கொண்டுவரப்படவில்லையே!+ அதனால், கடவுள் எனக்குக் கட்டளை கொடுத்தபடி அதன் இறைச்சியைப் பரிசுத்த இடத்தில் நீங்கள் கண்டிப்பாகச் சாப்பிட்டிருக்க வேண்டும்” என்றார். 19 அதற்கு ஆரோன் மோசேயிடம், “இன்று அவர்கள் தங்களுடைய பாவப் பரிகார பலியையும் தகன பலியையும் யெகோவாவின் சன்னிதியில் செலுத்தினார்கள்.+ இருந்தாலும், எனக்கு இப்படி நடந்துவிட்டது. இன்று நான் பாவப் பரிகார பலியைச் சாப்பிட்டிருந்தால் யெகோவாவுக்குச் சந்தோஷமாக இருந்திருக்குமா?” என்று கேட்டார். 20 மோசேக்கு அந்தப் பதில் திருப்தியாக இருந்தது.

11 பின்பு யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், 2 “நீங்கள் இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘பூமியிலுள்ள உயிரினங்கள்* சம்பந்தமான சட்டங்கள் இவைதான்:+ 3 குளம்புகள் முழுமையாகப் பிளவுபட்டிருக்கிறதும், அசைபோடுகிறதுமான எந்த மிருகத்தையும் நீங்கள் சாப்பிடலாம்.

4 ஆனால், அசைபோடுகிற மிருகங்களில் அல்லது பிளவுபட்ட குளம்புடைய மிருகங்களில் நீங்கள் சாப்பிடக் கூடாதவை இவைதான்: அசைபோடுகிற, ஆனால் குளம்புகள் பிளவுபடாத ஒட்டகம். அது உங்களுக்கு அசுத்தமானது.+ 5 அசைபோடுகிற, ஆனால் குளம்புகள் பிளவுபடாத கற்பாறை முயல்.*+ அது உங்களுக்கு அசுத்தமானது. 6 அசைபோடுகிற, ஆனால் குளம்புகள் பிளவுபடாத காட்டு முயல். அது உங்களுக்கு அசுத்தமானது. 7 குளம்புகள் முழுமையாகப் பிளவுபட்டிருக்கிற, ஆனால் அசைபோடாத பன்றி.+ அது உங்களுக்கு அசுத்தமானது. 8 நீங்கள் அவற்றின் இறைச்சியைச் சாப்பிடவோ அவற்றின் பிணத்தைத் தொடவோ கூடாது. அவை உங்களுக்கு அசுத்தமானது.+

9 தண்ணீரில் வாழும் உயிரினங்கள் சம்பந்தமான சட்டங்கள் இவைதான்: கடல்களிலோ ஆறுகளிலோ வாழ்கிற உயிரினங்களில் துடுப்புகளும் செதில்களும் உள்ள எல்லாவற்றையும் நீங்கள் சாப்பிடலாம்.+ 10 ஆனால், கடல்களிலும் ஆறுகளிலும் கூட்டங்கூட்டமாக நீந்துகிற சிறு பிராணிகளானாலும் சரி, மற்ற உயிரினங்களானாலும் சரி, துடுப்புகளோ செதில்களோ இல்லாத எல்லாவற்றையும் நீங்கள் அருவருக்க வேண்டும். 11 அவை உங்களுக்கு அருவருப்பாக இருக்க வேண்டும். அவற்றை நீங்கள் சாப்பிடக் கூடாது.+ செத்துப்போன அவற்றின் உடலை நீங்கள் அருவருக்க வேண்டும். 12 தண்ணீரில் வாழும் உயிரினங்களில் துடுப்புகளும் செதில்களும் இல்லாதவற்றை நீங்கள் அருவருக்க வேண்டும்.

13 சில பறவைகள் அருவருப்பானவை என்பதால் அவற்றை நீங்கள் சாப்பிடக் கூடாது. நீங்கள் அருவருக்க வேண்டிய பறவைகள் இவைதான்: கழுகு,+ கடல் பருந்து, கறுப்பு ராஜாளி,+ 14 சிவப்புப் பருந்து, எல்லா வகையான கறுப்புப் பருந்து, 15 எல்லா வகையான அண்டங்காக்கை, 16 நெருப்புக்கோழி, ஆந்தை, கடல் புறா, எல்லா வகையான வல்லூறு, 17 சிறு ஆந்தை, நீர்க்காகம், நெட்டைக்காது ஆந்தை, 18 அன்னம், கூழைக்கடா, ராஜாளி, 19 நாரை, எல்லா வகையான கொக்கு, கொண்டலாத்தி, வவ்வால். 20 கூட்டங்கூட்டமாகப் பறந்து போகவும் ஊர்ந்து போகவும் முடிந்த பூச்சிகள் எல்லாவற்றையும் நீங்கள் அருவருக்க வேண்டும்.

21 கூட்டங்கூட்டமாகப் பறந்து போகவும் ஊர்ந்து போகவும் முடிந்த பூச்சிகளில், தாவிப்போவதற்கு நீளமான கால்கள் உள்ளவற்றை மட்டுமே நீங்கள் சாப்பிடலாம். 22 அவற்றில் நீங்கள் இதையெல்லாம் சாப்பிடலாம்: பல வகையான வெட்டுக்கிளிகள்,+ சிள்வண்டுகள், தத்துக்கிளிகள். 23 கூட்டங்கூட்டமாகப் பறந்து போகவும் ஊர்ந்து போகவும் முடிந்த மற்ற எல்லாவற்றையும் நீங்கள் அருவருக்க வேண்டும். 24 அவற்றால் நீங்கள் தீட்டுப்படுவீர்கள். அவை செத்த பின்பு அவற்றைத் தொடுகிற எவனும் சாயங்காலம்வரை தீட்டுப்பட்டிருப்பான்.+ 25 செத்துக் கிடக்கிற அவற்றை எடுத்துக்கொண்டு போகிற எவனும் தன் உடைகளைத் துவைக்க வேண்டும்.+ அவன் சாயங்காலம்வரை தீட்டுப்பட்டிருப்பான்.

26 குளம்புகள் முழுமையாகப் பிளவுபடாமலும், அசைபோடாமலும் இருக்கிற எல்லா மிருகங்களும் உங்களுக்கு அசுத்தமானவை. அவற்றைத் தொடுகிற எவனும் தீட்டுப்பட்டிருப்பான்.+ 27 நான்கு கால்களால் நடக்கிற மிருகங்களில் குளம்புகள் இல்லாதவை எல்லாமே உங்களுக்கு அசுத்தமானவை. அவற்றின் பிணத்தைத் தொடுகிற எவனும் சாயங்காலம்வரை தீட்டுப்பட்டிருப்பான். 28 அவற்றின் பிணத்தை எடுத்துக்கொண்டு போகிற எவனும் தன் உடைகளைத் துவைக்க வேண்டும்.+ அவன் சாயங்காலம்வரை தீட்டுப்பட்டிருப்பான்.+ அவை உங்களுக்கு அசுத்தமானவை.

29 ஊரும் பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவை இவைதான்: பெருச்சாளி, சுண்டெலி,+ எல்லா வகையான பல்லி, 30 வீட்டுப் பல்லி, உடும்பு, நிலத்திலும் நீரிலும் வாழும் பல்லி, அரணை, பச்சோந்தி. 31 இந்த ஊரும் பிராணிகள் எல்லாமே உங்களுக்கு அசுத்தமானவை.+ அவை செத்த பின்பு அவற்றைத் தொடுகிற எவனும் சாயங்காலம்வரை தீட்டுப்பட்டிருப்பான்.+

32 எதன் மேலாவது அந்தப் பிராணிகள் செத்து விழுந்தால் அது தீட்டாகிவிடும். மரப் பாத்திரமானாலும், உடையானாலும், தோலினால் அல்லது மிருக ரோமத்தால் செய்யப்பட்ட துணியானாலும், அது தீட்டாகிவிடும். நீங்கள் பயன்படுத்துகிற எந்தப் பொருளின் மேல் அவை விழுந்தாலும் அந்தப் பொருளைத் தண்ணீருக்குள் போட்டுவைக்க வேண்டும். சாயங்காலம்வரை அது தீட்டாக இருக்கும். அதன்பின் சுத்தமாகும். 33 அவை மண்பாத்திரத்தில் விழுந்தால், அதற்குள் என்ன இருந்தாலும் அது தீட்டுதான். அந்தப் பாத்திரத்தை நீங்கள் உடைத்துவிட வேண்டும்.+ 34 அந்தப் பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் எந்த உணவிலாவது பட்டால் அது தீட்டாகிவிடும். அந்தப் பாத்திரத்தில் எந்தப் பானம் இருந்தாலும் அது தீட்டாகிவிடும். 35 அந்தப் பிராணிகள் எதன் மீதாவது செத்து விழுந்தால் அது தீட்டாகிவிடும். பெரிய அடுப்பானாலும் சரி, சின்ன அடுப்பானாலும் சரி, அதைச் சுக்குநூறாக உடைத்துப்போட வேண்டும்; அது தீட்டு. அது எப்போதுமே உங்களுக்குத் தீட்டுதான். 36 நீர் ஊற்றுகளும் நிலத்தடி தண்ணீர்த் தொட்டிகளும் மட்டுமே தீட்டுப்படாது. அந்தப் பிராணிகள் செத்த பின்பு அவற்றைத் தொடுகிற எவனும் தீட்டுப்பட்டிருப்பான். 37 விதைப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் எந்தத் தானியத்தில் அவை செத்து விழுந்தாலும் அந்தத் தானியம் தீட்டாகாது. 38 ஆனால், அந்தத் தானியத்தைத் தண்ணீரில் ஊற வைத்திருந்தால், அந்தப் பிராணிகளின் எந்தப் பாகம் அதன்மேல் விழுந்தாலும், அந்தத் தானியம் உங்களுக்குத் தீட்டு.

39 இறைச்சிக்காகப் பயன்படும் ஒரு மிருகம் செத்துப்போனால், அதைத் தொடுகிறவன் சாயங்காலம்வரை தீட்டுப்பட்டிருப்பான்.+ 40 செத்த மிருகத்தைச் சாப்பிடுகிறவன் தன் உடைகளைத் துவைக்க வேண்டும். சாயங்காலம்வரை அவன் தீட்டுப்பட்டிருப்பான்.+ அந்த மிருகம் செத்த பின்பு அதை எடுத்துக்கொண்டு போகிறவனும் தன் உடைகளைத் துவைக்க வேண்டும். சாயங்காலம்வரை அவன் தீட்டுப்பட்டிருப்பான். 41 பூமியிலுள்ள ஊரும் பிராணிகள் எல்லாமே அருவருப்பானது.+ அவற்றை நீங்கள் சாப்பிடக் கூடாது. 42 வயிற்றில் ஊர்ந்து போகும் எந்தப் பிராணியையும், நான்கு கால்களில் ஊர்ந்து போகும் எந்தப் பிராணியையும், பல கால்களால் ஊர்ந்து போகும் எந்தப் பிராணியையும் நீங்கள் சாப்பிடக் கூடாது. ஏனென்றால், அவை அருவருப்பானவை.+ 43 ஊர்ந்து போகும் எந்தப் பிராணியாலும் உங்களை அருவருப்பாக ஆக்கிக்கொள்ளாதீர்கள். அவற்றால் நீங்கள் கறைபடவோ தீட்டுப்படவோ வேண்டாம்.+ 44 நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.+ நான் பரிசுத்தமானவர்.+ அதனால் நீங்களும் உங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+ எந்த ஊரும் பிராணியாலும் உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளக் கூடாது. 45 நான் யெகோவா. நானே உங்களுடைய கடவுள் என்று நிரூபிப்பதற்காக உங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தேன்.+ நான் பரிசுத்தமானவர்,+ அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+

46 மிருகங்கள், பறக்கும் உயிரினங்கள், தண்ணீரில் வாழும் உயிரினங்கள், பூமியில் ஊர்ந்து போகும் உயிரினங்கள் ஆகியவற்றைக் குறித்த சட்டங்கள் இவைதான். 47 சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், நீங்கள் சாப்பிடக்கூடிய உயிரினங்களுக்கும் சாப்பிடக்கூடாத உயிரினங்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்டுவதற்காகவே இந்தச் சட்டங்களைக் கொடுத்திருக்கிறேன்’”+ என்றார்.

12 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘ஒரு பெண் கர்ப்பமாகி ஆண் குழந்தையைப் பெற்றால், ஏழு நாட்களுக்குத் தீட்டுப்பட்டவளாக இருப்பாள். மாதவிலக்கு+ நாட்களைப் போலவே இந்த நாட்களிலும் தீட்டுப்பட்டிருப்பாள். 3 எட்டாம் நாளில் அந்த ஆண் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டும்.+ 4 இரத்தப்போக்கினால் ஏற்பட்ட தீட்டு நீங்குவதற்கு, அடுத்த 33 நாட்களுக்கு அவள் வீட்டிலேயே இருக்க வேண்டும். அந்தச் சுத்திகரிப்பு நாட்கள் முடியும்வரை பரிசுத்தமான எதையும் அவள் தொடக் கூடாது, பரிசுத்த இடத்துக்குள் வரவும் கூடாது.

5 அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றால், 14 நாட்களுக்குத் தீட்டுப்பட்டவளாக இருப்பாள். மாதவிலக்கு நாட்களைப் போலவே இந்த நாட்களிலும் தீட்டுப்பட்டிருப்பாள். இரத்தப்போக்கினால் ஏற்பட்ட தீட்டு நீங்குவதற்கு, அடுத்த 66 நாட்களுக்கு அவள் வீட்டிலேயே இருக்க வேண்டும். 6 ஆண் குழந்தையையோ பெண் குழந்தையையோ பெற்றவள் தன்னுடைய சுத்திகரிப்பு நாட்கள் முடிந்ததும், ஒருவயது செம்மறியாட்டுக் கடாக் குட்டியைத் தகன பலியாகவும்,+ ஒரு புறாக் குஞ்சை அல்லது காட்டுப் புறாவைப் பாவப் பரிகார பலியாகவும் கொண்டுவர வேண்டும். அவற்றைச் சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் குருவானவரிடம் கொடுக்க வேண்டும். 7 அவர் அவற்றை யெகோவாவின் முன்னிலையில் செலுத்தி, அவளுக்காகப் பாவப் பரிகாரம் செய்வார். அப்போது, இரத்தப்போக்கினால் ஏற்பட்ட தீட்டு நீங்கி அவள் சுத்தமாவாள். ஆண் குழந்தையையோ பெண் குழந்தையையோ பெற்றவளுக்காகக் கொடுக்கப்படும் சட்டம் இதுதான். 8 ஆனால், ஆட்டுக்குட்டியைக் கொடுக்க வசதி இல்லாவிட்டால், இரண்டு காட்டுப் புறாக்களையோ இரண்டு புறாக் குஞ்சுகளையோ+ அவள் கொண்டுவர வேண்டும். ஒன்றைத் தகன பலியாகவும் மற்றொன்றைப் பாவப் பரிகார பலியாகவும் கொடுக்க வேண்டும். அவளுக்காக குருவானவர் பாவப் பரிகாரம் செய்வார். அப்போது, அவள் சுத்தமாவாள்’” என்றார்.

13 பின்பு யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், 2 “ஒருவனுடைய தோலில் தடிப்பு, புண்,* அல்லது திட்டு ஏற்பட்டு, அதில் தொழுநோயின்+ அறிகுறி தெரிந்தால், குருவாகச் சேவை செய்யும் ஆரோனிடமோ அவனுடைய மகன்களில் ஒருவனிடமோ அவனைக் கொண்டுவர வேண்டும்.+ 3 அவனுடைய தோலில் வந்துள்ள தொற்றை குருவானவர் பரிசோதிக்க வேண்டும். அந்த இடத்திலுள்ள முடி வெள்ளையாய் மாறி, அந்த இடம் பள்ளமாகத் தெரிந்தால், அது தொழுநோய். குருவானவர் அதைப் பரிசோதித்து, அவன் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். 4 ஆனால் அவனுடைய தோலில் வந்துள்ள திட்டு வெள்ளையாக இருந்தும், அந்த இடம் பள்ளமாக இல்லாமலும் அங்குள்ள முடி வெள்ளையாக மாறாமலும் இருந்தால், அவனை குருவானவர் ஏழு நாட்களுக்குத் தனியாக வைக்க வேண்டும்.+ 5 பின்பு, ஏழாம் நாளில் அவனைப் பரிசோதிக்க வேண்டும். அந்தத் தொற்று பரவாமல் அப்படியே இருந்தால், குருவானவர் இன்னும் ஏழு நாட்களுக்கு அவனைத் தனியாக வைக்க வேண்டும்.

6 குருவானவர் மறுபடியும் அவனை ஏழாம் நாளில் பரிசோதிக்க வேண்டும். அந்தத் தொற்று பரவாமல் வெளிறிப்போய் இருந்தால், அவன் தீட்டில்லாதவன் என்று குருவானவர் அறிவிக்க வேண்டும்.+ அது சாதாரண புண். அவன் தன்னுடைய உடைகளைத் துவைக்க வேண்டும், அப்போது அவன் சுத்தமாவான். 7 ஆனால், தீட்டு இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த குருவானவரிடம் போய் வந்த பிறகு அந்தப் புண் தோலில் அதிகமாகப் பரவினால், அவன் மறுபடியும் அவரிடம் போக வேண்டும். 8 குருவானவர் அதைப் பரிசோதிக்க வேண்டும். அந்தப் புண் தோலில் பரவியிருந்தால், அவன் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். அது தொழுநோய்.+

9 ஒருவனுக்குத் தொழுநோய் இருப்பதற்கான அறிகுறி தெரிந்தால், அவனை குருவானவரிடம் கூட்டிக்கொண்டு வர வேண்டும். 10 அவனை குருவானவர் பரிசோதிக்க வேண்டும்.+ அவனுடைய தோலில் வெள்ளை நிறத்தில் தடிப்பு வந்து அங்குள்ள முடி வெள்ளையாக மாறியிருந்தால், அதோடு அந்தத் தடிப்பில் இரத்தக் கசிவுள்ள+ புண் வந்திருந்தால், 11 அது அவனுடைய தோலில் வந்துள்ள தீராத தொழுநோய். அவனைத் தீட்டுள்ளவன் என்று குருவானவர் அறிவிக்க வேண்டும். பரிசோதிப்பதற்காக அவனைத் தனிமையாக வைக்கத் தேவையில்லை,+ ஏனென்றால் அவன் தீட்டுள்ளவன். 12 ஆனால், அந்தத் தொழுநோய் அவனுடைய தலையிலிருந்து கால்வரை உடம்பு முழுக்க பரவியிருப்பதை குருவானவர் பார்த்தால், 13 அவனைப் பரிசோதித்துப் பார்த்து, தீட்டில்லாதவன் என்று அவர் அறிவிக்க வேண்டும். அவன் உடல் முழுவதும் வெண்மையாக மாறிவிட்டதால் அவன் தீட்டில்லாதவன். 14 ஆனால், எப்போது அவனுடைய உடலில் இரத்தக் கசிவுள்ள புண் வருகிறதோ அப்போது அவன் தீட்டுள்ளவனாக ஆகிவிடுவான். 15 அந்தப் புண்ணைக் குருவானவர் பார்த்த பின்பு அவன் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும்.+ அந்தப் புண் தீட்டானது, அது தொழுநோய்.+ 16 ஆனால், இரத்தக் கசிவுள்ள அந்தப் புண் இருந்த இடம் மறுபடியும் வெண்மையாக மாறிவிட்டால், குருவானவரிடம் அவன் வர வேண்டும். 17 குருவானவர் அவனைப் பரிசோதித்து,+ அந்த இடம் வெண்மையாக மாறிவிட்டதைப் பார்த்தால், அவன் தீட்டில்லாதவன் என்று அறிவிக்க வேண்டும். அவன் தீட்டில்லாதவன்.

18 ஆனால், ஒருவனுடைய உடலில் கொப்புளம் வந்து குணமான பின்பு, 19 அந்த இடத்தில் வெள்ளை நிறத்தில் தடிப்போ சிவப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில் திட்டோ ஏற்பட்டால் அவன் அதை குருவானவரிடம் காட்ட வேண்டும். 20 குருவானவர் அதைப் பரிசோதிக்க வேண்டும்.+ அந்த இடம் பள்ளமாகி, அங்குள்ள முடி வெள்ளையாக மாறியிருந்தால் அவன் தீட்டுள்ளவன் என்று அவர் அறிவிக்க வேண்டும். அது கொப்புளம் இருக்கும் இடத்தில் வந்துள்ள தொழுநோய். 21 ஆனால், குருவானவர் அதைப் பரிசோதிக்கும்போது அங்குள்ள முடி வெள்ளையாக மாறாமலும் அந்த இடம் பள்ளமாகாமலும் இருந்தால், அதோடு அது வெளிறிப்போய் இருந்தால், அவர் அவனை ஏழு நாட்களுக்குத் தனியாக வைக்க வேண்டும்.+ 22 அது தோலில் பரவியிருப்பது தெளிவாகத் தெரிந்தால், அவன் தீட்டுள்ளவன் என்று குருவானவர் அறிவிக்க வேண்டும். அது ஒரு நோய். 23 ஆனால், அந்தத் திட்டு வேறெங்கும் பரவாமல் அப்படியே இருந்தால், அது கொப்புளத்தினால் வந்த சாதாரண வீக்கம். அவன் தீட்டில்லாதவன் என்று குருவானவர் அறிவிக்க வேண்டும்.+

24 ஒருவனுடைய உடலில் தீக்காயம் ஏற்பட்டு அந்த இடத்தில் வெள்ளை நிறத்திலோ சிவப்பும் வெள்ளையும் கலந்த நிறத்திலோ திட்டு ஏற்பட்டால், 25 குருவானவர் அதைப் பரிசோதிக்க வேண்டும். அந்த இடத்தில் உள்ள முடி வெள்ளையாக மாறி அந்த இடம் பள்ளமாகத் தெரிந்தால், அது தீக்காயத்தில் வந்துள்ள தொழுநோய். அவன் தீட்டுள்ளவன் என்று குருவானவர் அறிவிக்க வேண்டும். அது தொழுநோய். 26 ஆனால், குருவானவர் அதைப் பரிசோதித்து, அங்குள்ள முடி வெள்ளையாக மாறாமலும் அந்த இடம் பள்ளமாகாமலும் வெளிறிப்போயும் இருப்பதைப் பார்த்தால், அவனை ஏழு நாட்களுக்குத் தனியாக வைக்க வேண்டும்.+ 27 அவனை குருவானவர் ஏழாம் நாளில் பரிசோதிக்க வேண்டும். அந்தத் திட்டு தோலில் பரவியிருப்பது தெளிவாகத் தெரிந்தால், அவன் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். அது தொழுநோய். 28 அந்தத் திட்டு வேறெங்கும் பரவாமல் அந்த இடத்திலேயே வெளிறிப்போய் இருந்தால், அது தீக்காயத்தில் வந்த சாதாரண வீக்கம். அவன் தீட்டில்லாதவன் என்று குருவானவர் அறிவிக்க வேண்டும். ஏனென்றால், அது தீக்காயமுள்ள இடத்தில் வந்த வீக்கம்.

29 ஒரு ஆணின் அல்லது பெண்ணின் தலையிலோ முகவாய்க்கட்டையிலோ தொற்று ஏற்பட்டால், 30 குருவானவர் அதைப் பரிசோதிக்க வேண்டும்.+ அந்த இடம் பள்ளமாகத் தெரிந்தாலும், அங்குள்ள முடி தங்க நிறத்தில் சன்னமாக இருந்தாலும், அந்த நபர் தீட்டுள்ளவர் என்று குருவானவர் அறிவிக்க வேண்டும். அது உச்சந்தலையிலோ தாடியிலோ வந்துள்ள தொற்று. அது தலையில் அல்லது முகவாய்க்கட்டையில் வந்துள்ள தொழுநோய். 31 ஆனால், அந்த இடம் பள்ளமாக இல்லாததையும் அங்கே கறுப்பு முடி இல்லாததையும் குருவானவர் பார்த்தால், அந்த நபரை ஏழு நாட்களுக்குத் தனியாக வைக்க வேண்டும்.+ 32 ஏழாம் நாளில் அந்தத் தொற்றைக் குருவானவர் பரிசோதிக்க வேண்டும். அது வேறெங்கும் பரவாமல் இருந்தாலோ, அங்கே உள்ள முடி தங்க நிறத்துக்கு மாறாமல் இருந்தாலோ, அந்த இடம் பள்ளமாகாமல் இருந்தாலோ, 33 தொற்று ஏற்பட்டுள்ள அந்த இடத்தைத் தவிர மற்ற பகுதிகள் சவரம் செய்யப்பட வேண்டும். பின்பு, அந்த நபரைக் குருவானவர் ஏழு நாட்களுக்குத் தனியாக வைக்க வேண்டும்.

34 தொற்று ஏற்பட்டுள்ள அந்த இடத்தைக் குருவானவர் ஏழாம் நாளில் மறுபடியும் பரிசோதிக்க வேண்டும். உச்சந்தலையிலும் தாடியிலும் வந்துள்ள அந்தத் தொற்று வேறெங்கும் பரவாமலும் அந்த இடம் பள்ளமாகாமலும் இருந்தால், அவன் தீட்டில்லாதவன் என்று குருவானவர் அறிவிக்க வேண்டும். அவன் தன்னுடைய உடைகளைத் துவைக்க வேண்டும், அப்போது அவன் சுத்தமாவான். 35 ஆனால், குருவானவரிடம் காட்டிய பின்பு அந்தத் தொற்று பரவியிருப்பது தெளிவாகத் தெரிந்தால், 36 அவனைக் குருவானவர் பரிசோதிக்க வேண்டும். அந்தத் தொற்று பரவியிருந்தால், தங்க நிற முடி இருக்கிறதா என்று குருவானவர் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அவன் தீட்டுள்ளவன்தான். 37 ஆனால், குருவானவர் அந்தத் தொற்றைப் பரிசோதிக்கும்போது அது பரவாமல் இருப்பதையும், அந்த இடத்தில் கறுப்பு முடி வளர்ந்திருப்பதையும் பார்த்தால், அது குணமாகிவிட்டது என்று அர்த்தம். அவன் தீட்டில்லாதவன். குருவானவர் அவனைத் தீட்டில்லாதவன் என்று அறிவிக்க வேண்டும்.+

38 ஒரு ஆணின் அல்லது பெண்ணின் தோலில் திட்டுகள் ஏற்பட்டு அவை வெண்மையாக இருந்தால், 39 குருவானவர் அந்த நபரைப் பரிசோதிக்க வேண்டும்.+ அந்தத் திட்டுகள் வெளிறிப்போய் இருந்தால், அது தோலில் வந்துள்ள தீங்கில்லாத தேமல். அந்த நபர் தீட்டில்லாதவர்.

40 ஒருவனுடைய தலையில் வழுக்கை விழுந்தால் அவன் தீட்டில்லாதவன். 41 அவனுடைய முன்னந்தலையில் வழுக்கை விழுந்தால் அவன் தீட்டில்லாதவன். 42 ஆனால், உச்சந்தலையிலோ முன்னந்தலையிலோ வழுக்கை விழுந்த இடத்தில் சிவப்பும் வெள்ளையும் கலந்த புண் வந்தால், அது உச்சந்தலையில் அல்லது முன்னந்தலையில் வந்துள்ள தொழுநோய். 43 குருவானவர் அவனைப் பரிசோதிக்க வேண்டும். தோலில் தோன்றும் தொழுநோயைப் போல, வழுக்கை விழுந்த உச்சந்தலையிலோ முன்னந்தலையிலோ சிவப்பும் வெள்ளையும் கலந்த தடிப்புகள் இருந்தால், 44 அவன் தொழுநோயாளி. அவன் தீட்டுள்ளவன். அவனுடைய தலையில் தொழுநோய் வந்திருப்பதால், அவன் தீட்டுள்ளவன் என்று குருவானவர் அறிவிக்க வேண்டும். 45 தொழுநோயாளி தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு தன் தலையை அலங்கோலமாக விட்டுவிட வேண்டும். துணியால் வாயை* மறைத்துக்கொண்டு, ‘தீட்டு, தீட்டு!’ என்று கத்த வேண்டும். 46 அந்த நோய் இருக்கும் காலமெல்லாம் அவன் தீட்டுள்ளவனாக இருப்பான். அதனால், அவன் ஒதுக்குப்புறத்தில் வாழ வேண்டும். முகாமுக்கு வெளியே குடியிருக்க வேண்டும்.+

47 கம்பளி உடை, நாரிழை* உடை, 48 நாரிழை பாவு நூல்* அல்லது ஊடை நூல்,* கம்பளி பாவு நூல் அல்லது ஊடை நூல், தோல் அல்லது ஏதாவது தோல் பொருள் ஆகியவற்றில் தொழுநோய்* பிடிக்கலாம். 49 தொழுநோய் பிடித்த அந்த உடையிலோ தோலிலோ பாவு நூலிலோ ஊடை நூலிலோ ஏதாவது தோல் பொருளிலோ மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் அல்லது சிவப்பு நிறத்தில் கறை ஏற்பட்டால், அது அந்தத் தொழுநோயின் கறை. அதை குருவானவரிடம் காட்ட வேண்டும். 50 தொழுநோய் பிடித்த அந்தப் பொருளைக் குருவானவர் பரிசோதித்து, ஏழு நாட்களுக்குத் தனியாக வைக்க வேண்டும்.+ 51 ஏழாம் நாளில் அதை அவர் பரிசோதிக்கும்போது, அந்தத் தொழுநோய் உடையிலோ பாவு நூலிலோ ஊடை நூலிலோ தோலிலோ (அந்தத் தோலை எதற்குப் பயன்படுத்தினாலும் சரி) பரவியிருப்பதைப் பார்த்தால், அது ஒரு கொடிய தொழுநோய்; அது தீட்டு.+ 52 அந்த உடையையோ நாரிழை பாவு நூலையோ ஊடை நூலையோ அல்லது கம்பளி பாவு நூலையோ ஊடை நூலையோ தோல் பொருளையோ எரித்துவிட வேண்டும். அது கொடிய தொழுநோயாக இருப்பதால் அதை எரித்துவிட வேண்டும்.

53 ஆனால், அந்த உடையையோ பாவு நூலையோ ஊடை நூலையோ ஏதாவது தோல் பொருளையோ குருவானவர் பரிசோதிக்கும்போது அதில் தொழுநோய் பரவாமல் இருப்பதைப் பார்த்தால், 54 அந்தப் பொருளைத் தண்ணீரில் கழுவும்படி சொல்ல வேண்டும். பின்பு, அடுத்த ஏழு நாட்களுக்கு அதைத் தனியாக வைக்க வேண்டும். 55 தொழுநோய் பிடித்த அந்தப் பொருள் நன்றாகக் கழுவப்பட்ட பின்பு, குருவானவர் அதை மறுபடியும் பரிசோதிக்க வேண்டும். தொழுநோய் பரவவில்லை என்றாலும் அந்தக் கறை அப்படியே இருந்தால், அது தீட்டு. அது உள்பக்கத்திலோ வெளிப்பக்கத்திலோ அரிக்கப்பட்டு இருப்பதால் அதை எரித்துவிட வேண்டும்.

56 தொழுநோய் பிடித்த அந்தப் பகுதி நன்றாகக் கழுவப்பட்ட பின்பு குருவானவர் அதைப் பரிசோதித்து அது வெளிறியிருப்பதைப் பார்த்தால், உடையிலிருந்தோ, தோல் பொருளிலிருந்தோ, பாவு நூலிலிருந்தோ, ஊடை நூலிலிருந்தோ அதை அவர் அறுத்துவிட வேண்டும். 57 ஆனால், அது உடையிலோ பாவு நூலிலோ ஊடை நூலிலோ தோல் பொருளிலோ வேறொரு இடத்தில் மறுபடியும் வந்திருக்கிறது என்றால் அது பரவுகிறது என்று அர்த்தம். கறைபட்ட அந்தப் பொருளை எரித்துவிட வேண்டும்.+ 58 உடையையோ பாவு நூலையோ ஊடை நூலையோ தோல் பொருளையோ கழுவிய பின்பு அந்தக் கறை மறைந்துவிட்டால், அதை இன்னொரு தடவை கழுவ வேண்டும். அப்போது அதன் தீட்டு நீங்கிவிடும்.

59 கம்பளி உடையிலோ, நாரிழை உடையிலோ, பாவு நூலிலோ, ஊடை நூலிலோ, ஏதாவது தோல் பொருளிலோ தொழுநோய் பிடித்தால், அது தீட்டுள்ளதா இல்லையா என்று அறிவிப்பதற்கான சட்டங்கள் இவைதான்” என்றார்.

14 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “தொழுநோயாளி சுத்திகரிக்கப்படும் நாளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சட்டங்கள் இவைதான்: அவனைக் குருவானவரிடம் கொண்டுவர வேண்டும்.+ 3 குருவானவர் முகாமுக்கு வெளியே போய் அவனைப் பரிசோதிக்க வேண்டும். அவன் குணமாகியிருந்தால், 4 அவனைச் சுத்திகரிப்பதற்காகச் சுத்தமான இரண்டு பறவைகளையும் தேவதாரு மரக்கட்டையையும் கருஞ்சிவப்பு துணியையும் மருவுக்கொத்தையும் கொண்டுவரும்படி குருவானவர் அவனிடம் சொல்ல வேண்டும்.+ 5 பின்பு, அந்தப் பறவைகளில் ஒன்றை ஊற்றுநீருள்ள ஒரு மண்பாத்திரத்தில் வைத்துக் கொல்லும்படி அவர் கட்டளை கொடுக்க வேண்டும். 6 ஆனால், உயிரோடிருக்கிற பறவையையும் தேவதாரு மரக்கட்டையையும் கருஞ்சிவப்பு துணியையும் மருவுக்கொத்தையும் ஒன்றாக எடுத்து ஊற்றுநீரில் கொல்லப்பட்ட அந்தப் பறவையின் இரத்தத்தில் அவர் முக்கியெடுக்க வேண்டும். 7 பின்பு, தொழுநோயிலிருந்து சுத்திகரிக்கப்படுகிற ஆளின் மேல் அதை ஏழு தடவை அவர் தெளிக்க வேண்டும். அவன் தீட்டில்லாதவன் என்று அறிவிக்க வேண்டும். உயிரோடிருக்கிற பறவையை வெட்டவெளியில் விட்டுவிட வேண்டும்.+

8 சுத்திகரிக்கப்படுபவன் தன் உடைகளைத் துவைத்து, தன்னுடைய எல்லா முடியையும் சவரம் செய்துகொண்டு, குளிக்க வேண்டும். அப்போது, அவன் தீட்டில்லாதவனாக இருப்பான். அதன்பின், அவன் முகாமுக்குள் வரலாம். ஆனால், தன் கூடாரத்துக்கு வெளியே ஏழு நாட்கள் தங்கியிருக்க வேண்டும். 9 ஏழாம் நாளில் அவன் தன்னுடைய தலைமுடியையும் தாடியையும் புருவங்களையும் சவரம் செய்துகொள்ள வேண்டும். எல்லா முடியையும் சவரம் செய்த பின்பு, தன்னுடைய உடையைத் துவைத்து, குளிக்க வேண்டும். அப்போது அவன் தீட்டில்லாதவனாக இருப்பான்.

10 எட்டாம் நாளில், குறையில்லாத இரண்டு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் குறையில்லாத ஒருவயது பெண் செம்மறியாட்டுக் குட்டியையும்+ அவன் எடுத்துவர வேண்டும். அதோடு, உணவுக் காணிக்கையாக, எண்ணெய் கலந்த நைசான மாவை+ ஒரு எப்பா அளவிலே பத்தில் மூன்று பங்கும்,* எண்ணெயைச் சுமார் 300 மில்லியும்* எடுத்துவர வேண்டும்.+ 11 சுத்திகரிக்கப்போகிற குருவானவர் அந்த மனுஷனை சந்திப்புக் கூடாரத்தின் பிரகார நுழைவாசலில் நிறுத்தி, யெகோவாவின் முன்னிலையில் அவனுடைய காணிக்கைகளைச் செலுத்த வேண்டும். 12 சுமார் 300 மில்லி எண்ணெயோடு, ஒரு செம்மறியாட்டுக் கடாக் குட்டியைக் குற்ற நிவாரண பலியாகக்+ குருவானவர் செலுத்த வேண்டும். அவற்றை அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்ட வேண்டும்.+ 13 பின்பு, பாவப் பரிகார பலியும் தகன பலியும் வழக்கமாக வெட்டப்படுகிற இடத்தில், அதாவது பரிசுத்த இடத்தில், செம்மறியாட்டுக் கடாக் குட்டியை வெட்ட வேண்டும்.+ ஏனென்றால், பாவப் பரிகார பலியைப் போலக் குற்ற நிவாரண பலியும் குருவானவருக்குச் சொந்தமானது.+ அது மிகவும் பரிசுத்தமானது.+

14 குற்ற நிவாரண பலியின் இரத்தத்தில் கொஞ்சத்தைக் குருவானவர் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிற நபரின் வலது காது மடலிலும் வலது கை கட்டைவிரலிலும் வலது கால் பெருவிரலிலும் பூச வேண்டும். 15 அதோடு, குருவானவர் சுமார் 300 மில்லி எண்ணெயில்+ கொஞ்சத்தைத் தன்னுடைய இடது உள்ளங்கையில் ஊற்ற வேண்டும். 16 பின்பு, தன்னுடைய இடது உள்ளங்கையில் உள்ள எண்ணெயை வலது கைவிரலில் தொட்டு, யெகோவாவின் முன்னிலையில் ஏழு தடவை தெளிக்க வேண்டும். 17 குருவானவர் தன்னுடைய உள்ளங்கையில் மீதியிருக்கும் எண்ணெயில் கொஞ்சத்தை எடுத்து, சுத்திகரிக்கப்படுபவரின் வலது காது மடலிலும் வலது கை கட்டைவிரலிலும் வலது கால் பெருவிரலிலும் பூச வேண்டும். அதாவது, ஏற்கெனவே பூசப்பட்ட குற்ற நிவாரண பலியின் இரத்தத்தின் மேல் பூச வேண்டும். 18 குருவானவர் தன்னுடைய உள்ளங்கையில் இன்னும் மீதியிருக்கும் எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுபவரின் தலையில் தடவி, யெகோவாவின் முன்னிலையில் அவனுக்காகப் பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.+

19 தீட்டிலிருந்து சுத்திகரிக்கப்படுகிற நபருக்காக, குருவானவர் பாவப் பரிகார பலியைச்+ செலுத்தி பாவப் பரிகாரம் செய்ய வேண்டும். அதன் பின்பு, தகன பலிக்குரியதை வெட்ட வேண்டும். 20 பின்பு, தகன பலியையும் உணவுக் காணிக்கையையும்+ பலிபீடத்தில் செலுத்தி, அவனுக்காகப் பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.+ அப்போது, அவன் தீட்டில்லாதவனாக இருப்பான்.+

21 இவற்றைச் செலுத்த வசதியில்லாத ஒரு ஏழையாக அவன் இருந்தால், பாவப் பரிகாரம் செய்வதற்காக ஒரு செம்மறியாட்டுக் கடாக் குட்டியைக் குற்ற நிவாரண பலியாகவும் அசைவாட்டும் காணிக்கையாகவும் அவன் கொண்டுவர வேண்டும். உணவுக் காணிக்கையாக, எண்ணெய் கலந்த நைசான மாவை ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கும்,* எண்ணெயைச் சுமார் 300 மில்லியும் கொண்டுவர வேண்டும். 22 அதோடு, இரண்டு காட்டுப் புறாக்களையோ இரண்டு புறாக் குஞ்சுகளையோ கொண்டுவர வேண்டும். ஒன்றைப் பாவப் பரிகார பலியாகவும் மற்றொன்றைத் தகன பலியாகவும்+ கொடுக்க வேண்டும். 23 எட்டாம் நாளில்+ தன்னுடைய சுத்திகரிப்புக்காக இவற்றைக் கொண்டுவந்து சந்திப்புக் கூடாரத்தின் பிரகார நுழைவாசலில் யெகோவாவின் முன்னிலையில் குருவானவரிடம் கொடுக்க வேண்டும்.+

24 குற்ற நிவாரண பலிக்கான செம்மறியாட்டுக் கடாக் குட்டியையும்+ சுமார் 300 மில்லி எண்ணெயையும் குருவானவர் எடுத்து, அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்ட வேண்டும்.+ 25 குற்ற நிவாரண பலிக்கான செம்மறியாட்டுக் கடாக் குட்டியை குருவானவர் வெட்ட வேண்டும். பின்பு, குற்ற நிவாரண பலியின் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து, சுத்திகரிக்கப்படுகிற நபரின் வலது காது மடலிலும் வலது கை கட்டைவிரலிலும் வலது கால் பெருவிரலிலும் பூச வேண்டும்.+ 26 அதோடு, தன்னுடைய இடது உள்ளங்கையில் கொஞ்சம் எண்ணெயை ஊற்றி,+ 27 தன்னுடைய வலது கைவிரலில் தொட்டு யெகோவாவின் முன்னிலையில் ஏழு தடவை தெளிக்க வேண்டும். 28 பின்பு, குருவானவர் தன்னுடைய உள்ளங்கையில் மீதியிருக்கும் எண்ணெயில் கொஞ்சத்தை எடுத்து, சுத்திகரிக்கப்படுபவரின் வலது காது மடலிலும் வலது கை கட்டைவிரலிலும் வலது கால் பெருவிரலிலும் பூச வேண்டும். அதாவது, ஏற்கெனவே பூசப்பட்ட குற்ற நிவாரண பலியின் இரத்தத்தின் மேல் பூச வேண்டும். 29 குருவானவர் தன்னுடைய உள்ளங்கையில் இன்னும் மீதியிருக்கும் எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுபவரின் தலையில் தடவி, யெகோவாவின் முன்னிலையில் அவனுக்காகப் பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.

30 அவன் தன்னுடைய வசதியைப் பொறுத்து காட்டுப் புறாக்களையோ, புறாக் குஞ்சுகளையோ கொடுக்க வேண்டும்.+ 31 அவற்றில் ஒன்றைப் பாவப் பரிகார பலியாகவும் மற்றொன்றைத் தகன பலியாகவும் கொடுக்க வேண்டும்.+ அவற்றை உணவுக் காணிக்கையோடு சேர்த்துக் கொடுக்க வேண்டும். பின்பு, சுத்திகரிக்கப்படும் நபருக்காக யெகோவாவின் முன்னிலையில் குருவானவர் பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.+

32 வசதியில்லாத ஒருவனுக்குத் தொழுநோய் பிடித்திருந்தால் அவன் தன்னைச் சுத்திகரிப்பதற்காகக் கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்கள் இவைதான்” என்றார்.

33 பின்பு யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், 34 “நான் உங்களுக்குச் சொத்தாகத் தருகிற கானான் தேசத்துக்கு+ நீங்கள் போய்ச் சேர்ந்த பின்பு, நான் அங்குள்ள ஒரு வீட்டைத் தொழுநோய்* பிடிக்க விட்டுவிட்டால்,+ 35 அந்த வீட்டின் சொந்தக்காரன் குருவானவரிடம் வந்து, ‘என் வீட்டில் ஏதோவொரு தொற்று வந்திருக்கிறது’ என்று சொல்ல வேண்டும். 36 குருவானவர் அந்தத் தொற்றைப் பரிசோதிக்கப் போவதற்கு முன்பே, அந்த வீட்டிலுள்ள எல்லா பொருள்களையும் வெளியே எடுத்துவிடும்படி கட்டளை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அங்குள்ள எல்லா பொருள்களையும் தீட்டானதாக அறிவிக்க வேண்டியிருக்கும். அவை வெளியே எடுக்கப்பட்ட பின்பு அவர் போய் அந்த வீட்டைப் பரிசோதிக்க வேண்டும். 37 அந்த வீட்டின் சுவர்களை அவர் பார்வையிடும்போது தொற்று வந்திருக்கிற இடத்தில் மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலோ சிவப்பு நிறத்திலோ குழிகள் விழுந்திருந்தாலும், அது மற்ற பகுதிகளைவிட பள்ளமாகத் தெரிந்தாலும், 38 குருவானவர் அந்த வீட்டைவிட்டு வெளியே போய் அதை ஏழு நாட்களுக்கு அடைத்து வைக்க வேண்டும்.+

39 பின்பு, குருவானவர் ஏழாம் நாளில் மறுபடியும் வந்து அந்த வீட்டைப் பரிசோதிக்க வேண்டும். வீட்டின் சுவர்களில் அந்தத் தொற்று பரவியிருப்பதை அவர் பார்த்தால், 40 தொற்று பரவிய இடத்திலுள்ள கற்களைப் பெயர்த்து, அவற்றை நகரத்துக்கு வெளியே அசுத்தமான பொருள்களைக் கொட்டும் இடத்தில் எறிந்துவிடும்படி கட்டளை கொடுக்க வேண்டும். 41 பின்பு, அந்த வீட்டுக்குள் இருக்கிற சுவர்களின் காரையை முழுவதுமாகக் கொத்தியெடுக்கச் சொல்ல வேண்டும். கொத்தியெடுக்கப்பட்ட காரையை நகரத்துக்கு வெளியே அசுத்தமான பொருள்கள் கொட்டும் இடத்தில் எறிந்துவிடும்படி கட்டளை கொடுக்க வேண்டும். 42 பின்பு, பெயர்த்தெடுக்கப்பட்ட கற்களுக்குப் பதிலாக வேறு கற்களை வைத்துக் கட்டி, காரை பூசும்படி சொல்ல வேண்டும்.

43 அந்தக் கற்களைப் பெயர்த்துவிட்டு சுவரைக் கொத்திப் பூசிய பின்பும் தொற்று வந்திருந்தால், 44 குருவானவர் அந்த வீட்டுக்குள்ளே போய் அதைப் பரிசோதிக்க வேண்டும். அந்தத் தொற்று வீட்டில் பரவியிருந்தால், அது பயங்கரமான தொற்று.+ அந்த வீடு தீட்டானது. 45 அந்த வீட்டை முழுவதுமாக இடித்துப் போட்டு அதன் கற்களையும் பலகைகளையும் காரையையும் நகரத்துக்கு வெளியே அசுத்தமான பொருள்கள் கொட்டும் இடத்தில் எறியச் சொல்ல வேண்டும்.+ 46 அந்த வீடு அடைத்து வைக்கப்பட்டுள்ள நாட்களில்+ அதற்குள்ளே போகிறவன் சாயங்காலம்வரை தீட்டுப்பட்டிருப்பான்.+ 47 அந்த வீட்டில் படுத்திருந்தவனும் சாப்பிட்டவனும் தன் உடைகளைத் துவைக்க வேண்டும்.

48 ஆனால், அந்த வீட்டைக் கொத்திப் பூசிய பிறகு குருவானவர் வந்து பார்க்கும்போது தொற்று பரவியிருக்கவில்லை என்றால், அந்த வீடு தீட்டில்லாதது என்று அறிவிக்க வேண்டும். ஏனென்றால், அந்தத் தொற்று மறைந்துவிட்டது. 49 அந்த வீட்டைத் தீட்டிலிருந்து சுத்திகரிப்பதற்காக, இரண்டு பறவைகளையும் தேவதாரு மரக்கட்டையையும் கருஞ்சிவப்பு துணியையும் மருவுக்கொத்தையும் அவர் கொண்டுபோக வேண்டும்.+ 50 பின்பு, அந்தப் பறவைகளில் ஒன்றை ஊற்றுநீருள்ள ஒரு மண்பாத்திரத்தில் வைத்துக் கொல்ல வேண்டும். 51 தேவதாரு மரக்கட்டையையும் மருவுக்கொத்தையும் கருஞ்சிவப்பு துணியையும் உயிரோடிருக்கிற பறவையையும் எடுத்து, ஊற்றுநீரில் கொல்லப்பட்ட அந்தப் பறவையின் இரத்தத்தில் முக்கியெடுக்க வேண்டும். பின்பு, அந்த இரத்தத்தை அந்த வீட்டின் முன்னால் ஏழு தடவை அவர் தெளிக்க வேண்டும்.+ 52 கொல்லப்பட்ட பறவையின் இரத்தம், ஊற்றுநீர், உயிரோடிருக்கிற பறவை, தேவதாரு மரக்கட்டை, மருவுக்கொத்து, கருஞ்சிவப்பு துணி ஆகியவற்றால் அந்த வீட்டைத் தீட்டிலிருந்து அவர் தூய்மைப்படுத்த வேண்டும். 53 பின்பு, உயிரோடிருக்கிற பறவையை நகரத்துக்கு வெளியே வெட்டவெளியில் விட்டுவிட்டு அந்த வீட்டைச் சுத்திகரிக்க வேண்டும். அப்போது, அது தீட்டில்லாததாக இருக்கும்.

54 எல்லா விதமான தொழுநோயும், தலையிலோ தாடியிலோ வருகிற தொற்றும்,+ 55 உடை அல்லது வீட்டில் பிடிக்கிற தொழுநோயும்,+ 56 தோலில் வருகிற தடிப்புகளும், புண்களும்,* திட்டுகளும்+ 57 எப்போது தீட்டுள்ளவை, எப்போது தீட்டில்லாதவை என்பதைத் தீர்மானிப்பதற்கான+ சட்டங்கள் இவைதான். தொழுநோயைப் பற்றிய சட்டங்கள் இவைதான்”+ என்றார்.

15 பின்பு யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், 2 “நீங்கள் இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘ஒருவனுக்குப் பிறப்புறுப்பில் ஒழுக்கு நோய் வந்தால் அவன் தீட்டுள்ளவன்.+ 3 அந்த ஒழுக்கு பிறப்புறுப்பிலிருந்து விடாமல் வந்துகொண்டிருந்தாலும் அங்கே அடைபட்டிருந்தாலும் அவன் தீட்டுள்ளவன்.

4 ஒழுக்கு நோயுள்ளவன் எதன்மேல் படுத்தாலும் உட்கார்ந்தாலும் அது தீட்டாகிவிடும். 5 அவனுடைய படுக்கையைத் தொடுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவன் சாயங்காலம்வரை தீட்டுள்ளவனாக இருப்பான்.+ 6 ஒழுக்கு நோயுள்ளவன் உட்கார்ந்திருந்த பொருளின் மேல் உட்காருகிறவன் தன்னுடைய உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவன் சாயங்காலம்வரை தீட்டுள்ளவனாக இருப்பான். 7 ஒழுக்கு நோயுள்ளவனைத் தொடுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவன் சாயங்காலம்வரை தீட்டுள்ளவனாக இருப்பான். 8 ஒழுக்கு நோயுள்ளவனின் எச்சில், தீட்டில்லாத ஒருவன்மேல் தெறித்தால் அவன் தன் உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவன் சாயங்காலம்வரை தீட்டுள்ளவனாக இருப்பான். 9 ஒழுக்கு நோயுள்ளவன் எந்தச் சேணத்தின்* மேல் உட்கார்ந்து சவாரி செய்தாலும் அது தீட்டாகிவிடும். 10 அவன் உட்கார்ந்திருந்த எந்தவொரு பொருளையும் தொடுகிறவன் சாயங்காலம்வரை தீட்டுள்ளவனாக இருப்பான். அதைத் தூக்கிக்கொண்டு போகிறவன் தன் உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவன் சாயங்காலம்வரை தீட்டுள்ளவனாக இருப்பான். 11 ஒழுக்கு நோயுள்ளவன்+ தன்னுடைய கைகளைக் கழுவாமல் ஒருவனைத் தொட்டுவிட்டால், அவன் தன்னுடைய உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவன் சாயங்காலம்வரை தீட்டுள்ளவனாக இருப்பான். 12 ஒழுக்கு நோயுள்ளவன் ஒரு மண்பாத்திரத்தைத் தொட்டுவிட்டால் அதை உடைத்துப்போட வேண்டும். அவன் ஒரு மரப் பாத்திரத்தைத் தொட்டுவிட்டால் அதைக் கழுவ வேண்டும்.+

13 ஒழுக்கு நின்றுவிட்டால், அது நின்று ஏழு நாட்களுக்குப் பிறகு அவன் தன் உடைகளைத் துவைத்து, ஊற்றுநீரில் குளிக்க வேண்டும். அப்போது, அவன் தீட்டில்லாதவனாக இருப்பான்.+ 14 எட்டாம் நாளில் இரண்டு காட்டுப் புறாக்களையோ இரண்டு புறாக் குஞ்சுகளையோ அவன் கொண்டுவர வேண்டும்.+ அவற்றை யெகோவாவின் முன்னிலையில் சந்திப்புக் கூடாரத்தின் பிரகார நுழைவாசலில் குருவானவரிடம் கொடுக்க வேண்டும். 15 குருவானவர் அவற்றில் ஒன்றைப் பாவப் பரிகார பலியாகவும் மற்றொன்றைத் தகன பலியாகவும் செலுத்த வேண்டும். இப்படி, யெகோவாவின் முன்னிலையில் அவனுக்குப் பாவப் பரிகாரம் செய்து அவனைத் தீட்டிலிருந்து சுத்திகரிக்க வேண்டும்.

16 ஒருவனுக்கு விந்து வெளியேறினால் அவன் குளிக்க வேண்டும். அவன் சாயங்காலம்வரை தீட்டுள்ளவனாக இருப்பான்.+ 17 உடையிலோ தோல் பொருளிலோ விந்து பட்டால் அதை அவன் கழுவ வேண்டும். அது சாயங்காலம்வரை தீட்டுள்ளதாக இருக்கும்.

18 ஒருவன் ஒரு பெண்ணுடன் உடலுறவுகொள்ளும்போது அவனுக்கு விந்து வெளியேறினால், அவர்கள் இரண்டு பேரும் குளிக்க வேண்டும். அவர்கள் சாயங்காலம்வரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள்.+

19 ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு ஏற்பட்டால், அவள் ஏழு நாட்கள் தீட்டுள்ளவளாக இருப்பாள்.+ அவளைத் தொடுகிற எல்லாரும் சாயங்காலம்வரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள்.+ 20 மாதவிலக்கின்போது அவள் எதன்மேல் படுத்தாலும் உட்கார்ந்தாலும் அது தீட்டுள்ளதாக இருக்கும்.+ 21 அவளுடைய படுக்கையைத் தொடுகிற எல்லாரும் தங்கள் உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவர்கள் சாயங்காலம்வரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள். 22 அவள் உட்கார்ந்திருந்த எந்தவொரு பொருளையும் தொடுகிறவர்கள் தங்கள் உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவர்கள் சாயங்காலம்வரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள். 23 படுக்கையின் மேலோ வேறு ஏதாவது பொருளின் மேலோ அவள் உட்கார்ந்தால் அதைத் தொடுகிற எல்லாரும் சாயங்காலம்வரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள்.+ 24 ஒருவன் அவளோடு உறவுகொள்ளும்போது அவளுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு அந்த இரத்தம் அவன்மேல் பட்டால்,+ அவன் ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவனாக இருப்பான். அவன் படுக்கிற படுக்கை தீட்டுள்ளதாக இருக்கும்.

25 மாதவிலக்கு+ இல்லாத சமயத்தில் ஒரு பெண்ணுக்குப் பல நாட்கள் இரத்தப்போக்கு ஏற்பட்டால்,+ அல்லது மாதவிலக்கு நாட்கள் முடிந்தும் இரத்தப்போக்கு நீடித்தால், மாதவிலக்கு நாட்களைப் போலவே அந்த எல்லா நாட்களும் அவள் தீட்டுள்ளவளாக இருப்பாள். 26 அந்த நாட்களில் அவள் எதன்மேல் படுத்தாலும் உட்கார்ந்தாலும் மாதவிலக்கு நாட்களில் இருப்பதைப் போலவே அது தீட்டுள்ளதாக இருக்கும்.+ 27 அதைத் தொடுகிறவர்கள் தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்களுடைய உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவர்கள் சாயங்காலம்வரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள்.+

28 அவளுடைய இரத்தப்போக்கு நின்றுவிட்டால், அது நின்று ஏழு நாட்களுக்குப் பின்பு அவளுடைய தீட்டு நீங்கும்.+ 29 எட்டாம் நாளில் இரண்டு காட்டுப் புறாக்களையோ இரண்டு புறாக் குஞ்சுகளையோ அவள் கொண்டுவர வேண்டும்.+ அவற்றைச் சந்திப்புக் கூடாரத்தின் பிரகார நுழைவாசலில் குருவானவரிடம் கொடுக்க வேண்டும்.+ 30 குருவானவர் அவற்றில் ஒன்றைப் பாவப் பரிகார பலியாகவும் மற்றொன்றைத் தகன பலியாகவும் செலுத்தி, யெகோவாவின் முன்னிலையில் அவளுக்குப் பாவப் பரிகாரம் செய்து அவளைத் தீட்டிலிருந்து சுத்திகரிக்க வேண்டும்.+

31 இப்படி, தீட்டிலிருந்து விலகியிருக்க இஸ்ரவேலர்களுக்கு நீங்கள் உதவ வேண்டும். இல்லாவிட்டால், அவர்களுக்கு நடுவிலுள்ள என் கூடாரத்தை அவர்கள் தீட்டுப்படுத்திவிடுவார்கள், அதனால் செத்துப்போவார்கள்.+

32 ஒரு ஆணுக்குப் பிறப்புறுப்பில் ஒழுக்கு ஏற்பட்டாலோ, விந்து வெளியேறியதால் தீட்டு ஏற்பட்டாலோ,+ 33 ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கினால்+ தீட்டு ஏற்பட்டாலோ, ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ பிறப்புறுப்பில் ஒழுக்கு ஏற்பட்டாலோ,+ தீட்டுள்ள ஒரு பெண்ணோடு ஒரு ஆண் உறவுகொண்டாலோ கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்கள் இவைதான்’” என்றார்.

16 யெகோவாவின் சன்னிதியில் அத்துமீறி வந்ததற்காக ஆரோனின் இரண்டு மகன்கள் கொல்லப்பட்ட+ பின்பு யெகோவா மோசேயிடம் பேசினார். 2 யெகோவா மோசேயிடம், “திரைச்சீலைக்கு உள்பக்கத்திலுள்ள+ மகா பரிசுத்த அறைக்குள் நினைத்த நேரமெல்லாம் வரக் கூடாதென்று உன் அண்ணன் ஆரோனிடம் சொல்.+ இல்லாவிட்டால் அவனுடைய உயிர் போய்விடும்.+ அந்த அறையில் சாட்சிப் பெட்டியும் அதன்மேல் ஒரு மூடியும் இருக்கிறது, அந்த மூடிக்கு மேலாக ஒரு மேகத்தில்+ நான் தோன்றுவேன்.+

3 ஆரோன் மகா பரிசுத்த அறைக்குள் வருவதற்கு முன்பு, பாவப் பரிகார பலியாக ஒரு இளம் காளையையும்+ தகன பலியாக ஒரு செம்மறியாட்டுக் கடாவையும்+ செலுத்த வேண்டும். 4 புனித நாரிழை* அங்கியை+ அவன் போட்டுக்கொள்ள வேண்டும். நாரிழையால் செய்த அரைக் கால்சட்டையை+ உள்ளாடையாக உடுத்திக்கொள்ள வேண்டும். நாரிழையாலான இடுப்புக்கச்சையையும்+ தலைப்பாகையையும்+ போட்டுக்கொள்ள வேண்டும், அவை பரிசுத்த உடைகள்.+ அவன் குளித்துவிட்டு+ அவற்றைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

5 பாவப் பரிகார பலிக்காக இரண்டு வெள்ளாட்டுக் கடாக் குட்டிகளையும் தகன பலிக்காக ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் அவன் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.+

6 பின்பு, ஆரோன் தன்னுடைய பாவப் பரிகார பலியாகிய காளையைக் கொண்டுவந்து, தனக்காகவும்+ தன்னுடைய குடும்பத்துக்காகவும் பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.

7 அடுத்ததாக, அந்த இரண்டு வெள்ளாடுகளையும் சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் யெகோவாவின் முன்னிலையில் நிறுத்த வேண்டும். 8 அந்த இரண்டு வெள்ளாடுகளுக்காக ஆரோன் குலுக்கல் போட வேண்டும். ஒரு வெள்ளாட்டை யெகோவாவுக்குப் பலி செலுத்தவும் இன்னொன்றை போக்கு ஆடாக விடவும் குலுக்கல் போட வேண்டும். 9 யெகோவாவுக்கென்று குலுக்கல்+ விழுந்த வெள்ளாட்டைப் பாவப் பரிகார பலியாக ஆரோன் செலுத்த வேண்டும். 10 போக்கு ஆடாக விடுவதற்கென்று குலுக்கல் விழுந்த வெள்ளாட்டை யெகோவாவின் முன்னிலையில் உயிரோடு நிறுத்த வேண்டும். அதன்மேல் பாவப் பரிகார சடங்கைச் செய்து போக்கு ஆடாக அதை வனாந்தரத்துக்குள் அனுப்பிவிட வேண்டும்.+

11 ஆரோன் தன்னுடைய பாவப் பரிகார பலியாகிய காளையைக் கொண்டுவந்து, தனக்காகவும் தன்னுடைய குடும்பத்துக்காகவும் பாவப் பரிகாரம் செய்ய வேண்டும். பிறகு, தன்னுடைய பாவப் பரிகார பலியாகிய அந்தக் காளையை வெட்ட வேண்டும்.+

12 பின்பு, ஆரோன் யெகோவாவின் சன்னிதியில் இருக்கிற பலிபீடத்தின் தணல்களை+ ஒரு தூபக்கரண்டியில்+ நிரப்பிக்கொண்டு, தூபப்பொருளை+ இரண்டு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு, திரைச்சீலைக்கு உள்பக்கம் வர வேண்டும்.+ 13 அவன் சாகாதபடிக்கு, யெகோவாவின் சன்னிதியில்+ அந்தத் தூபப்பொருளைத் தணல்மேல் போட வேண்டும். அப்போது, சாட்சிப் பெட்டியின்+ மேலிருக்கிற மூடியைத்+ தூபப் புகை சூழ்ந்துகொள்ளும்.

14 காளையின் இரத்தத்தில்+ கொஞ்சத்தை அவர் தன்னுடைய விரலில் தொட்டு, மூடிக்கு முன்னால் கிழக்குப் பக்கத்தில் தெளிக்க வேண்டும். இப்படி, அந்த மூடிக்கு முன்னால் ஏழு தடவை தெளிக்க வேண்டும்.+

15 பின்பு, ஜனங்களுடைய பாவப் பரிகார பலியாகிய வெள்ளாட்டை அவர் வெட்ட வேண்டும்.+ அதன் இரத்தத்தைத் திரைச்சீலைக்கு உள்பக்கம் கொண்டுவந்து,+ காளையின் இரத்தத்தைத்+ தெளித்தது போலவே இதையும் அந்த மூடிக்கு முன்னால் தெளிக்க வேண்டும்.

16 இஸ்ரவேல் ஜனங்கள் செய்கிற அசுத்தமான செயல்களாலும் குற்றங்களாலும் பாவங்களாலும்+ மகா பரிசுத்த அறை தீட்டுப்படாமல் இருப்பதற்கு ஆரோன் அதைச் சுத்திகரிக்க வேண்டும். அசுத்தமான செயல்கள் செய்கிற இஸ்ரவேல் ஜனங்களின் நடுவிலுள்ள சந்திப்புக் கூடாரத்தையும் அவன் சுத்திகரிக்க வேண்டும்.

17 பாவப் பரிகாரம் செய்ய மகா பரிசுத்த அறைக்குள் அவன் போய் வரும்வரை வேறு யாரும் சந்திப்புக் கூடாரத்துக்குள் போகக் கூடாது. ஆரோன் தனக்காகவும் தன்னுடைய குடும்பத்துக்காகவும் இஸ்ரவேல் சபையார் எல்லாருக்காகவும்+ பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.+

18 பின்பு, யெகோவாவின் சன்னிதியில் இருக்கிற பலிபீடத்துக்கு+ வந்து அதைச் சுத்திகரிக்க வேண்டும். காளையின் இரத்தத்தில் கொஞ்சத்தையும் வெள்ளாட்டின் இரத்தத்தில் கொஞ்சத்தையும் எடுத்து, பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் இருக்கிற கொம்புகள்மேல் பூச வேண்டும். 19 அந்த இரத்தத்தில் கொஞ்சத்தைத் தன்னுடைய விரலில் தொட்டு பலிபீடத்தின் மேல் ஏழு தடவை தெளித்து, இஸ்ரவேலர்கள் செய்கிற அசுத்தமான செயல்களிலிருந்து அதைச் சுத்திகரித்து புனிதப்படுத்த வேண்டும்.

20 மகா பரிசுத்த அறையையும் சந்திப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும்+ சுத்திகரித்த+ பின்பு, உயிருள்ள வெள்ளாட்டை ஆரோன் தனக்குப் பக்கத்தில் கொண்டுவர வேண்டும்.+ 21 அந்த வெள்ளாட்டின் மேல் தன் இரண்டு கைகளையும் வைத்து இஸ்ரவேலர்கள் செய்த எல்லா குற்றங்களையும் தவறுகளையும் பாவங்களையும் ஒத்துக்கொள்ள வேண்டும். அதையெல்லாம் அந்த வெள்ளாட்டின் தலையில் சுமத்த வேண்டும்.+ பின்பு, அதை வனாந்தரத்தில் விடுவதற்கு நியமிக்கப்பட்டவரிடம் அதைக் கொடுத்து அனுப்பிவிட வேண்டும். 22 அந்த வெள்ளாடு அவர்களுடைய எல்லா குற்றங்களையும் சுமந்துகொண்டு+ வனாந்தரத்துக்குள் போகும்.+ நியமிக்கப்பட்டவர் அந்த வெள்ளாட்டை வனாந்தரத்துக்குள் போக விட்டுவிட வேண்டும்.+

23 பின்பு, ஆரோன் சந்திப்புக் கூடாரத்துக்குள் போக வேண்டும். பரிசுத்த இடத்துக்குள் போனபோது உடுத்தியிருந்த நாரிழை உடைகளைக் கழற்றி அங்கே வைத்துவிட வேண்டும். 24 அதன்பின், பரிசுத்தமான இடத்தில் குளித்து+ தன்னுடைய உடைகளைப்+ போட்டுக்கொள்ள வேண்டும். பின்பு, தனக்காகவும் ஜனங்களுக்காகவும் தகன பலிகளைச்+ செலுத்தி பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.+ 25 பாவப் பரிகார பலியின் கொழுப்பைப் பலிபீடத்தில் எரிக்க வேண்டும்.

26 வெள்ளாட்டை போக்கு ஆடாகக் கொண்டுபோய் விட்டவர்+ தன்னுடைய உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அதன் பின்புதான் அவர் முகாமுக்குள் வர வேண்டும்.

27 பாவப் பரிகார பலியாக வெட்டப்பட்ட காளையையும் வெள்ளாட்டுக் கடாவையும் முகாமுக்கு வெளியே கொண்டுபோக வேண்டும். அவற்றின் இரத்தம்தான் பாவப் பரிகாரம் செய்வதற்காக மகா பரிசுத்த அறைக்குள் கொண்டுவரப்பட்ட இரத்தம். அவற்றின் தோலையும் சதையையும் சாணத்தையும் நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.+ 28 அவற்றைச் சுட்டெரிக்கிறவன் தன்னுடைய உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அதன்பின் அவன் முகாமுக்குள் வரலாம்.

29 நான் உங்களுக்குக் கொடுக்கும் நிரந்தரச் சட்டம் இதுதான்: ஏழாம் மாதம் பத்தாம் நாளில், உங்கள் பாவங்களுக்காக உங்களையே வருத்திக்கொள்ள வேண்டும்.* நீங்களும் உங்கள் மத்தியில் குடியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களும் அன்றைக்கு எந்த வேலையும் செய்யக் கூடாது.+ 30 அந்த நாளில் உங்களைச் சுத்திகரிப்பதற்காக+ உங்களுக்குப் பாவப் பரிகாரம் செய்யப்படும். அப்போது, உங்களுடைய எல்லா பாவங்களிலிருந்தும் யெகோவாவின் முன்னிலையில் சுத்தமாவீர்கள்.+ 31 அது உங்களுக்கு முழு ஓய்வுநாள். உங்கள் பாவங்களுக்காக அன்றைக்கு உங்களையே வருத்திக்கொள்ள வேண்டும்.*+ இது ஒரு நிரந்தரச் சட்டம்.

32 தன்னுடைய அப்பாவுக்குப் பின்பு+ குருவாகச் சேவை செய்ய நியமிக்கப்படுகிறவன்+ பாவப் பரிகாரம் செய்துவிட்டு பரிசுத்த உடைகளாகிய+ நாரிழை உடைகளைப்+ போட்டுக்கொள்ள வேண்டும். 33 மகா பரிசுத்த அறையையும்+ சந்திப்புக் கூடாரத்தையும்+ பலிபீடத்தையும்+ அவன் சுத்திகரிக்க வேண்டும். குருமார்களுக்காகவும் சபையார் எல்லாருக்காகவும் அவன் பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.+ 34 இஸ்ரவேலர்கள் செய்கிற எல்லா பாவங்களுக்காகவும் வருஷத்துக்கு ஒருமுறை+ பாவப் பரிகாரம் செய்வதற்கான நிரந்தரச் சட்டம்+ இது” என்றார்.

யெகோவா மோசேக்குக் கட்டளை கொடுத்தபடியே ஆரோன் செய்தார்.

17 பின்பு யெகோவா மோசேயைப் பார்த்து, 2 “நீ ஆரோனிடமும் அவனுடைய மகன்களிடமும் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரிடமும் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘யெகோவாவின் கட்டளை இதுதான்:

3 “இஸ்ரவேல் ஜனங்களில் ஒருவன் காளையையோ செம்மறியாட்டுக் கடாக் குட்டியையோ வெள்ளாட்டையோ சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்குக் கொண்டுவராமல், 4 அதாவது யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரத்துக்கு யெகோவாவுக்காகக் கொண்டுவராமல், முகாமுக்கு உள்ளே அல்லது வெளியே வெட்டினால் அவன்மேல் கொலைப்பழி* விழும். இரத்தம் சிந்திய அவன் கொல்லப்பட வேண்டும். 5 அதனால், இஸ்ரவேலர்கள் இனிமேலும் மிருகங்களை வெட்டவெளியில் பலி கொடுக்கக் கூடாது. அவற்றை யெகோவாவுக்காகச் சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்குக் கொண்டுவந்து குருவானவரிடம் கொடுக்க வேண்டும். அவற்றைச் சமாதான பலிகளாக யெகோவாவுக்குச் செலுத்த வேண்டும்.+ 6 அந்தப் பலிகளின் இரத்தத்தைச் சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்குப் பக்கத்திலுள்ள யெகோவாவின் பலிபீடத்தின் மேல் குருவானவர் தெளிக்க வேண்டும். அவற்றின் கொழுப்பைத் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+ 7 இஸ்ரவேலர்கள் இனியும் ஆட்டு உருவப் பேய்களுக்கு* பலிகள் செலுத்தி+ எனக்குத் துரோகம் செய்யக் கூடாது.+ இது தலைமுறை தலைமுறைக்கும் ஒரு நிரந்தரச் சட்டம்.”’

8 நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘உங்களில் யாராவது அல்லது உங்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களில் யாராவது தான் செலுத்துகிற தகன பலியையோ வேறொரு பலியையோ 9 யெகோவாவுக்காகச் சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்குக் கொண்டுவராவிட்டால், அவன் கொல்லப்பட வேண்டும்.+

10 உங்களில் யாராவது அல்லது உங்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களில் யாராவது இரத்தத்தைச் சாப்பிட்டால்+ நான் அவனை ஒதுக்கித்தள்ளி, அவனை அழித்துவிடுவேன். 11 ஏனென்றால், உயிரினங்களின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது.+ பாவப் பரிகாரம் செய்வதற்காக மட்டும் நீங்கள் பலிபீடத்தில் இரத்தத்தைச் செலுத்தலாம் என்ற கட்டளையை நான் கொடுத்திருக்கிறேன்.+ ஏனென்றால், இரத்தம்தான் பாவப் பரிகாரம் செய்கிறது,+ அதில்தான் உயிர் இருக்கிறது. 12 அதனால்தான், “நீங்கள் யாரும் இரத்தத்தைச் சாப்பிடக் கூடாது, உங்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களும்+ இரத்தத்தைச் சாப்பிடக் கூடாது”+ என்று இஸ்ரவேலர்களுக்குக் கட்டளை கொடுத்திருக்கிறேன்.

13 உங்களில் ஒருவனோ உங்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களில் ஒருவனோ சாப்பிடுவதற்கு நான் அனுமதித்திருக்கும் ஒரு காட்டு மிருகத்தை அல்லது பறவையை வேட்டையாடிப் பிடித்தால், அதன் இரத்தத்தைக் கீழே ஊற்றி+ மண்ணைப் போட்டு மூடிவிட வேண்டும். 14 எல்லா உயிரினத்துக்கும் இரத்தம்தான் உயிராக இருக்கிறது. ஏனென்றால், இரத்தத்தில்தான் அதன் உயிர் இருக்கிறது. அதனால், “எந்த உயிரினத்தின் இரத்தத்தையும் நீங்கள் சாப்பிடக் கூடாது, ஏனென்றால் எல்லா உயிரினத்துக்கும் இரத்தம்தான் உயிராக இருக்கிறது. அதைச் சாப்பிடுகிற எவனும் கொல்லப்பட வேண்டும்”+ என்று இஸ்ரவேலர்களிடம் சொன்னேன். 15 இஸ்ரவேலர்களில் ஒருவனாக இருந்தாலும் சரி, அவர்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்தைச் சேர்ந்த ஒருவனாக இருந்தாலும் சரி, தானாகச் செத்துப்போன மிருகத்தையோ காட்டு மிருகத்தால் கொல்லப்பட்ட மிருகத்தையோ சாப்பிட்டால்+ அவன் தன்னுடைய உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவன் சாயங்காலம்வரை தீட்டுள்ளவனாக இருப்பான்,+ அதன்பின் சுத்தமாவான். 16 ஆனால், அவன் தன்னுடைய உடைகளைத் துவைக்காமலோ குளிக்காமலோ இருந்தால், அந்தக் குற்றத்துக்காகத் தண்டிக்கப்படுவான்’”+ என்றார்.

18 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘உங்கள் கடவுளாகிய யெகோவா நானே.+ 3 நீங்கள் குடியிருந்த எகிப்து தேசத்தின் ஜனங்களைப் போல நீங்கள் நடந்துகொள்ளக் கூடாது. நான் உங்களைக் கூட்டிக்கொண்டு போகிற கானான் தேசத்தில் இருக்கிறவர்களைப் போலவும் நடந்துகொள்ளக் கூடாது.+ அவர்களுடைய சட்டதிட்டங்களை* பின்பற்றக் கூடாது. 4 நீங்கள் என் நீதித்தீர்ப்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும். என்னுடைய சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. 5 என்னுடைய சட்டதிட்டங்களுக்கும் நீதித்தீர்ப்புகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். அவற்றின்படி நடப்பவர்கள் அவற்றால் வாழ்வு பெறுவார்கள்.+ நான் யெகோவா.

6 உங்களில் யாரும் இரத்த சொந்தங்களோடு உடலுறவுகொள்ளக் கூடாது.+ நான் யெகோவா. 7 உங்கள் அப்பாவோடு உடலுறவுகொள்ளக் கூடாது. உங்கள் அம்மாவோடும் உடலுறவுகொள்ளக் கூடாது. அவள் உங்களைப் பெற்ற அம்மாவாக இருப்பதால் அவளோடு உடலுறவுகொள்ளக் கூடாது.

8 உங்கள் அப்பாவின் மனைவியோடு உடலுறவுகொள்ளக் கூடாது.+ அது உங்கள் அப்பாவை அவமானப்படுத்துவதாக இருக்கும்.

9 உங்கள் சகோதரியோடு உடலுறவுகொள்ளக் கூடாது, அவள் உங்களுடைய அப்பாவுக்குப் பிறந்தவளாக இருந்தாலும் சரி, அம்மாவுக்குப் பிறந்தவளாக இருந்தாலும் சரி, அதே குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சரி, வேறு குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சரி.+

10 உங்கள் மகனின் மகளுடனோ உங்கள் மகளின் மகளுடனோ உடலுறவுகொள்ளக் கூடாது. அவர்கள் உங்களுக்கு இரத்த சொந்தமாக இருப்பதால் அது உங்களுக்கு அவமானமாய் இருக்கும்.

11 உங்கள் அப்பாவுக்கும் அவருடைய மனைவிக்கும் பிறந்த மகளோடு நீங்கள் உடலுறவுகொள்ளக் கூடாது. அவள் உங்கள் சகோதரி.

12 உங்கள் அப்பாவின் சகோதரியோடு உடலுறவுகொள்ளக் கூடாது. அவள் உங்களுடைய அப்பாவுக்கு இரத்த சொந்தம்.+

13 உங்களுடைய அம்மாவின் சகோதரியோடு உடலுறவுகொள்ளக் கூடாது. அவள் உங்கள் அம்மாவுக்கு இரத்த சொந்தம்.

14 உங்கள் அப்பாவுடைய சகோதரனின் மனைவியோடு உடலுறவுகொள்ளக் கூடாது. அது உங்கள் அப்பாவுடைய சகோதரனை அவமானப்படுத்துவதாக இருக்கும். அவள் உங்கள் பெரியம்மா.*+

15 உங்கள் மருமகளுடன் உடலுறவுகொள்ளக் கூடாது.+ அவள் உங்களுடைய மகனின் மனைவியாக இருப்பதால் அவளுடன் உடலுறவுகொள்ளக் கூடாது.

16 உங்கள் சகோதரனுடைய மனைவியுடன் உடலுறவுகொள்ளக் கூடாது.+ அது உங்கள் சகோதரனை அவமானப்படுத்துவதாக இருக்கும்.

17 உங்கள் மனைவியின் மகளுடன் உடலுறவுகொள்ளக் கூடாது.+ அவளுடைய மகனின் மகளுடனோ அவளுடைய மகளின் மகளுடனோ உடலுறவுகொள்ளக் கூடாது. இவர்கள் அவளுக்கு இரத்த சொந்தமாக இருப்பதால் அது வெட்கங்கெட்ட செயலாக இருக்கும்.

18 உங்கள் மனைவி உயிரோடு இருக்கும்போதே, அவளுடைய சகோதரியை இரண்டாம் தாரமாக ஆக்கிக்கொள்ளக் கூடாது.+ அவளுடன் உடலுறவுகொள்ளக் கூடாது.

19 மாதவிலக்கு நாட்களில் உங்கள் மனைவியுடன் உடலுறவுகொள்ளக் கூடாது.+

20 அடுத்தவன் மனைவியோடு உடலுறவுகொண்டு, உங்களை அசுத்தப்படுத்தக் கூடாது.+

21 உங்களுடைய பிள்ளைகளில் யாரையும் மோளேகு தெய்வத்துக்கு அர்ப்பணித்து,*+ உங்கள் கடவுளாகிய என் பெயரைக் களங்கப்படுத்தக் கூடாது.+ நான் யெகோவா.

22 ஒருவன் பெண்ணோடு உடலுறவுகொள்வது போல ஆணோடு உடலுறவுகொள்ளக் கூடாது.+ அது அருவருப்பானது.

23 ஒரு ஆண் எந்தவொரு மிருகத்துடனும் உறவுகொண்டு தன்னை அசுத்தப்படுத்தக் கூடாது. அதேபோல் ஒரு பெண் எந்த மிருகத்தோடும் உறவுகொள்ளக் கூடாது.+ அது இயற்கைக்கு முரணானது.

24 இவற்றில் எதையாவது செய்து உங்களை அசுத்தப்படுத்தாதீர்கள். ஏனென்றால், உங்களிடமிருந்து நான் துரத்திவிடுகிற ஜனங்கள் இப்படியெல்லாம் செய்து தங்களை அசுத்தமாக்கிக்கொண்டார்கள்.+ 25 அதனால், அவர்களுடைய தேசம் அசுத்தமாக இருக்கிறது. அந்தத் தேசத்தின் குற்றத்துக்காக நான் அதைத் தண்டிப்பேன், அந்தத் தேசத்தின் ஜனங்கள் துரத்தியடிக்கப்படுவார்கள்.+ 26 நீங்கள் என் சட்டதிட்டங்களுக்கும் நீதித்தீர்ப்புகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும்.+ நீங்களும் சரி, உங்கள் மத்தியில் குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களும் சரி, இப்படிப்பட்ட எந்த அருவருப்பான செயலையும் செய்யக் கூடாது.+ 27 அந்தத் தேசத்தில் வாழ்ந்துவருகிற ஜனங்கள் இந்த அருவருப்பான செயல்கள் எல்லாவற்றையும் செய்துவந்தார்கள்.+ அதனால், இப்போது அந்தத் தேசம் அசுத்தமாக இருக்கிறது. 28 நீங்களும் அதை அசுத்தமாக்காமல் இருங்கள். இல்லாவிட்டால், அந்தத் தேசத்தில் வாழ்ந்துவருகிற ஜனங்கள் எப்படி அங்கிருந்து துரத்தப்படுவார்களோ அப்படியே நீங்களும் துரத்தப்படுவீர்கள். 29 உங்களில் யாராவது இப்படிப்பட்ட அருவருப்பான செயல்களைச் செய்தால், அவன் கொல்லப்பட வேண்டும். 30 அந்தத் தேசத்தில் வாழ்ந்துவருகிற ஜனங்களுடைய அருவருப்பான பழக்கவழக்கங்கள் எதையும் பின்பற்றாமல் என் கட்டளைகளைக் கடைப்பிடியுங்கள்.+ அப்போதுதான், அவற்றால் உங்களை அசுத்தப்படுத்த மாட்டீர்கள். நான் உங்கள் கடவுளாகிய யெகோவா’” என்றார்.

19 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரிடமும் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. நான் பரிசுத்தமானவர், அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+

3 நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய அம்மா அப்பாவுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்.+ ஓய்வுநாட்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. 4 ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களை நீங்கள் வணங்கக் கூடாது,+ சிலைகளை வார்த்து அவற்றைக் கும்பிடக் கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.

5 நீங்கள் யெகோவாவுக்குச் சமாதான பலி செலுத்தினால்,+ அவர் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அதைச் செலுத்த வேண்டும்.+ 6 பலி செலுத்தும் நாளில் அதைச் சாப்பிட வேண்டும், அடுத்த நாளிலும் அதைச் சாப்பிடலாம். ஆனால், மூன்றாம் நாள்வரை மீதியாக இருப்பதை எரித்துவிட வேண்டும்.+ 7 மூன்றாம் நாளிலும் சாப்பிட்டால், அது அருவருப்பானது. நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். 8 அதைச் சாப்பிடுகிறவன் அந்தக் குற்றத்துக்காகத் தண்டிக்கப்படுவான். ஏனென்றால், யெகோவா பரிசுத்தமாக நினைப்பதை அவன் அவமதிக்கிறான். அதனால் அவன் கொல்லப்பட வேண்டும்.

9 உங்கள் வயலில் அறுவடை செய்யும்போது வரப்பு ஓரத்தில் உள்ள கதிர்களை முழுமையாக அறுவடை செய்யக் கூடாது, சிந்திய கதிர்களை எடுக்கவும் கூடாது.+ 10 அதோடு, உங்கள் திராட்சைத் தோட்டத்தில் பறிக்காமல் விடப்பட்ட பழங்களையோ கீழே விழுந்து கிடக்கிற பழங்களையோ எடுக்கக் கூடாது. அவற்றை ஏழைகளுக்காகவும் உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்து ஜனங்களுக்காகவும் விட்டுவிட வேண்டும்.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.

11 நீங்கள் திருடக் கூடாது,+ ஏமாற்றக் கூடாது,+ யாருக்கும் அநியாயம் செய்யக் கூடாது. 12 நீங்கள் என்னுடைய பெயரில் பொய் சத்தியம் செய்து என் பெயரைக் களங்கப்படுத்தக் கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. 13 நீங்கள் மோசடி செய்யக் கூடாது,+ கொள்ளையடிக்க* கூடாது.+ கூலியாளுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தை அடுத்த நாள் காலைவரை நீங்களே வைத்திருக்கக் கூடாது.+

14 காது கேட்காதவனைச் சபித்துப் பேசக் கூடாது. கண் தெரியாதவனுக்கு முன்னால் எதையாவது போட்டு அவனைத் தடுக்கி விழ வைக்கக் கூடாது.+ உங்கள் கடவுளுக்கு நீங்கள் பயந்து நடக்க வேண்டும்.+ நான் யெகோவா.

15 நீங்கள் அநியாயமாகத் தீர்ப்பு சொல்லக் கூடாது. ஏழைக்குப் பாரபட்சம் காட்டவோ பணக்காரனுக்குச் சலுகை காட்டவோ கூடாது.+ எல்லாருக்கும் நியாயமாகத் தீர்ப்பு சொல்ல வேண்டும்.

16 அடுத்தவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசிக்கொண்டு திரியக் கூடாது.+ அவர்களுடைய உயிருக்கு உலை வைக்கக் கூடாது.*+ நான் யெகோவா.

17 உள்ளத்தில்கூட உங்கள் சகோதரனை வெறுக்காதீர்கள்.+ ஒருவன் பாவம் செய்தால் அவனைக் கண்டியுங்கள்.+ இல்லாவிட்டால், நீங்களும் அவனுடைய பாவத்துக்கு உடந்தையாகிவிடுவீர்கள்.

18 உங்கள் ஜனங்களை நீங்கள் பழிவாங்கக் கூடாது.+ அவர்கள்மேல் பகை* வைத்திருக்கக் கூடாது. உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும்* அன்பு காட்ட வேண்டும்.+ நான் யெகோவா.

19 நான் கொடுக்கும் இந்தச் சட்டதிட்டங்களை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்: இரண்டு விதமான வீட்டு விலங்குகளை இனக்கலப்பு செய்யக் கூடாது. இரண்டு வகையான தானியங்களைக் கலந்து உங்கள் வயலில் விதைக்கக் கூடாது.+ இரண்டு விதமான நூல்களைக் கலந்து நெய்யப்பட்ட உடையை உடுத்தக் கூடாது.+

20 ஒரு அடிமைப் பெண் இன்னொருவனுக்கு நிச்சயிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், அவள் மீட்கப்படாமலோ விடுதலை செய்யப்படாமலோ இருக்கலாம். அவளோடு ஒருவன் உடலுறவுகொண்டால் அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். ஆனால், அவர்களைக் கொல்லக் கூடாது. ஏனென்றால், அவள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. 21 அவன் யெகோவாவுக்குக் குற்ற நிவாரண பலி செலுத்த ஒரு செம்மறியாட்டுக் கடாவைச்+ சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்குக் கொண்டுவர வேண்டும். 22 அவன் செய்த பாவத்துக்காகக் குருவானவர் அந்தச் செம்மறியாட்டுக் கடாவை யெகோவாவின் சன்னிதியில் கொண்டுவந்து அவனுக்குப் பாவப் பரிகாரம் செய்வார். அப்போது, அவனுடைய பாவம் மன்னிக்கப்படும்.

23 நான் கொடுக்கிற தேசத்துக்கு வந்தபின் அங்கே ஏதாவது பழ மரத்தை நீங்கள் நட்டால், அதன் பழங்களை மூன்று வருஷங்களுக்குச் சாப்பிடக் கூடாது. தடை செய்யப்பட்ட அசுத்தமான பழங்களாக அவற்றைக் கருத வேண்டும். 24 ஆனால், நான்காம் வருஷத்தில் அதன் பழங்கள் பரிசுத்தமாக இருக்கும், நீங்கள் அவற்றை யெகோவாவுக்குச் சந்தோஷமாகப் படைக்க வேண்டும்.+ 25 ஐந்தாம் வருஷத்தில் அதன் பழங்களை நீங்கள் சாப்பிடலாம். அந்த மரம் உங்களுக்கு ஏராளமான பழங்களைக் கொடுக்கும். நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.

26 இரத்தம் கலந்த எதையும் நீங்கள் சாப்பிடக் கூடாது.+

நீங்கள் சகுனம் பார்க்கவோ மாயமந்திரம் செய்யவோ கூடாது.+

27 உங்களுடைய கிருதாவைச் சிரைத்துக்கொள்ள* கூடாது. உங்கள் தாடியை வெட்டி அலங்கோலமாக்கக் கூடாது.*+

28 இறந்தவர்களுக்காக உங்கள் உடலைக் கீறிக் கிழித்துக்கொள்ளக் கூடாது,+ உங்கள் உடலில் பச்சை குத்திக்கொள்ளக் கூடாது. நான் யெகோவா.

29 உங்களுடைய மகளை விபச்சாரியாக்கி அவளை அவமானப்படுத்தக் கூடாது.+ அப்படிச் செய்தால், உங்கள் தேசம் விபச்சாரிகளால் சீரழிந்துவிடும். அங்கே ஒழுக்கக்கேடு பெருகிவிடும்.+

30 நான் கட்டளை கொடுத்த ஓய்வுநாட்களை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்,+ என் வழிபாட்டுக் கூடாரத்துக்கு நீங்கள் பயபக்தி காட்ட வேண்டும். நான் யெகோவா.

31 ஆவிகளோடு பேசுகிறவர்களிடம் நீங்கள் போகக் கூடாது.+ குறிசொல்கிறவர்களிடம் குறி கேட்டு, உங்களை அசுத்தமாக்கிவிடக் கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.

32 நரைமுடி உள்ளவருக்கு முன்னால் நீங்கள் எழுந்து நிற்க வேண்டும்,+ வயதில் மூத்தவருக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டும்.+ உங்கள் கடவுளுக்கு நீங்கள் பயந்து நடக்க வேண்டும்.+ நான் யெகோவா.

33 உங்கள் தேசத்தில் குடியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களை நீங்கள் மோசமாக நடத்தக் கூடாது.+ 34 உங்களோடு குடியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களை உங்கள் தேசத்து ஜனங்களைப் போலவே நடத்த வேண்டும்.+ உங்களை நேசிப்பது போல அவர்களையும் நேசிக்க வேண்டும். நீங்களும் வேறு தேசத்தில், அதாவது எகிப்தில், குடியிருந்தீர்களே.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.

35 எதையாவது அளக்கும்போதோ எடை போடும்போதோ நீங்கள் ஏமாற்றக் கூடாது.+ 36 சரியான தராசையும் சரியான எடைக்கல்லையும் சரியான படியையும்* சரியான ஆழாக்கையும்* நீங்கள் பயன்படுத்த வேண்டும்.+ எகிப்து தேசத்திலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவா நானே. 37 என்னுடைய எல்லா சட்டதிட்டங்களையும் நீதித்தீர்ப்புகளையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும், அவற்றைப் பின்பற்ற வேண்டும்.+ நான் யெகோவா’” என்றார்.

20 பின்பு யெகோவா மோசேயைப் பார்த்து, 2 “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘இஸ்ரவேலைச் சேர்ந்த ஒருவனோ இஸ்ரவேலில் குடியிருக்கிற மற்ற தேசத்தைச் சேர்ந்த ஒருவனோ மோளேகு தெய்வத்துக்குத் தன் பிள்ளையை அர்ப்பணித்தால்,* அவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+ அவனை நீங்கள் கல்லெறிந்து கொல்ல வேண்டும். 3 தன்னுடைய பிள்ளையை மோளேகுக்குக் கொடுக்கிறவன் என் பரிசுத்த இடத்தின் புனிதத்தைக் கெடுக்கிறான், என் பரிசுத்த பெயரைக் களங்கப்படுத்துகிறான். அதனால் நான் அவனை ஒதுக்கித்தள்ளி, அவனை அழித்துவிடுவேன்.+ 4 அந்த மனுஷன் தன்னுடைய பிள்ளையை மோளேகுக்குக் கொடுப்பதைப் பார்த்தும் நீங்கள் அதைக் கண்டுகொள்ளாமலும், அவனைக் கொல்லாமலும் விட்டுவிட்டால்,+ 5 நான் நிச்சயம் அவனையும் அவனுடைய குடும்பத்தையும் ஒதுக்கித்தள்ளுவேன்.+ அவனை மட்டுமல்லாமல், அவனோடு சேர்ந்து மோளேகை வணங்கி எனக்குத் துரோகம் செய்த எல்லாரையும் அழித்துவிடுவேன்.

6 ஆவிகளோடு பேசுகிறவர்களிடமும்+ குறிசொல்கிறவர்களிடமும்+ போவதன் மூலம் எனக்குத் துரோகம் செய்கிறவனை நான் ஒதுக்கித்தள்ளி, அவனை அழித்துவிடுவேன்.+

7 நீங்கள் உங்களைப் புனிதப்படுத்திக்கொண்டு, பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+ ஏனென்றால், நான் உங்களுடைய கடவுளாகிய யெகோவா. 8 நீங்கள் என் சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.+ உங்களைப் புனிதப்படுத்துகிற யெகோவா நானே.+

9 அப்பாவையோ அம்மாவையோ ஒருவன் சபித்தால் அவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+ அப்பாவையோ அம்மாவையோ சபித்ததால், அவனுடைய சாவுக்கு அவன்தான் பொறுப்பு.

10 ஒருவன் இன்னொருவனுடைய மனைவியோடு உறவுகொண்டு தன் மனைவிக்குத் துரோகம் செய்தால், தவறு செய்த இரண்டு பேரும் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+ 11 தன்னுடைய அப்பாவின் மனைவியோடு உடலுறவுகொள்கிறவன் தன் அப்பாவை அவமானப்படுத்துகிறான்.+ அவனும் அவளும் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும். அவர்களுடைய சாவுக்கு அவர்கள்தான் பொறுப்பு. 12 ஒருவன் தன்னுடைய மருமகளோடு உடலுறவுகொண்டால், அவர்கள் இரண்டு பேரும் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும். அவர்கள் செய்தது இயற்கைக்கு முரணானது. அவர்களுடைய சாவுக்கு அவர்கள்தான் பொறுப்பு.+

13 ஒருவன் பெண்ணோடு உடலுறவுகொள்வதுபோல் ஆணோடு உடலுறவுகொண்டால், அது அருவருப்பானது.+ அவர்கள் இரண்டு பேரும் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும். அவர்களுடைய சாவுக்கு அவர்கள்தான் பொறுப்பு.

14 ஒருவன் ஒருத்தியைக் கல்யாணம் செய்துகொண்டு அவளுடைய தாயோடும் உடலுறவுகொண்டால், அது வெட்கங்கெட்ட செயல்.+ அவனும் அவர்களும் கொல்லப்பட்டு, எரிக்கப்பட வேண்டும்.+ அப்போதுதான், இப்படிப்பட்ட வெட்கங்கெட்ட செயல் உங்கள் மத்தியில் நடக்காது.

15 ஒருவன் ஒரு மிருகத்தோடு உறவுகொண்டால் அவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும், அந்த மிருகமும் கொல்லப்பட வேண்டும்.+ 16 ஒரு பெண் ஒரு மிருகத்தோடு உறவுகொண்டால்,+ அவளையும் அந்த மிருகத்தையும் நீங்கள் கொல்ல வேண்டும். மிருகத்தோடு உறவுகொள்கிறவர்கள் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும். அவர்கள் சாவுக்கு அவர்கள்தான் பொறுப்பு.

17 ஒருவன் தன்னுடைய சகோதரியோடு, அதாவது தன்னுடைய அப்பாவுக்கோ அம்மாவுக்கோ பிறந்தவளோடு, உடலுறவுகொண்டால் அது வெட்கக்கேடு.+ அவர்கள் இரண்டு பேரும் ஜனங்களின் கண் முன்னால் கொல்லப்பட வேண்டும். அவன் தன்னுடைய சகோதரியை அவமானப்படுத்திய குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட வேண்டும்.

18 மாதவிலக்கு ஏற்பட்ட ஒரு பெண்ணோடு ஒருவன் உடலுறவுகொண்டால், அவர்கள் இரண்டு பேரும் இரத்தத்தின் புனிதத்தை அவமதிக்கிறார்கள் என்று அர்த்தம்.+ அவர்கள் இரண்டு பேரும் கொல்லப்பட வேண்டும்.

19 உங்களுடைய அம்மாவின் சகோதரியோடு அல்லது அப்பாவின் சகோதரியோடு உடலுறவுகொள்ளக் கூடாது. ஏனென்றால், அது இரத்த சொந்தத்தை அவமானப்படுத்துவதாக இருக்கும்.+ அந்தக் குற்றத்துக்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். 20 தன் அப்பாவுடைய சகோதரனின் மனைவியோடு உடலுறவுகொள்கிறவன் தன் அப்பாவுடைய சகோதரனை அவமானப்படுத்துகிறான்.+ அவனும் அவளும் அந்தப் பாவத்துக்காகத் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்குப் பிள்ளைகள் பிறக்கக் கூடாது, அவர்கள் கொல்லப்பட வேண்டும். 21 ஒருவன் தன்னுடைய சகோதரனின் மனைவியோடு உடலுறவுகொண்டால், அது கேவலமான செயல்.+ அவன் தன்னுடைய சகோதரனை அவமானப்படுத்துகிறான். அவர்களுக்குப் பிள்ளைகள் பிறக்கக் கூடாது, அவர்கள் கொல்லப்பட வேண்டும்.

22 என்னுடைய எல்லா சட்டதிட்டங்களுக்கும் நீதித்தீர்ப்புகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.+ அப்போதுதான், நீங்கள் குடியிருப்பதற்காக நான் கூட்டிக்கொண்டு போகும் தேசத்திலிருந்து துரத்தப்பட மாட்டீர்கள்.+ 23 நான் உங்களைவிட்டு விரட்டியடிக்கிற ஜனங்களின் சட்டதிட்டங்களை* நீங்கள் பின்பற்றக் கூடாது.+ இப்படிப்பட்ட எல்லா செயல்களையும் அவர்கள் செய்திருக்கிறார்கள், அவர்களை நான் அருவருக்கிறேன்.+ 24 அதனால்தான் நான் உங்களிடம், “அவர்களுடைய தேசத்தை நீங்கள் சொந்தமாக்கிக்கொள்வீர்கள். பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நான் உங்களுக்குக் கொடுப்பேன்.+ மற்ற எல்லா ஜனங்களிலிருந்தும் உங்களைப் பிரித்து வைத்திருக்கிற உங்கள் கடவுளாகிய யெகோவா நானே”+ என்று சொன்னேன். 25 சுத்தமான மிருகத்துக்கும் அசுத்தமான மிருகத்துக்கும், சுத்தமான பறவைக்கும் அசுத்தமான பறவைக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும்.+ அசுத்தமென்று நான் விலக்கிய மிருகத்தாலோ பறவையாலோ ஊரும் பிராணியாலோ நீங்கள் உங்களை அருவருப்பானவர்களாக ஆக்கிக்கொள்ளக் கூடாது.+ 26 யெகோவாவாகிய நான் பரிசுத்தமாக இருப்பதால், நீங்களும் என்முன் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+ நீங்கள் என் சொந்த ஜனங்களாய் இருப்பதற்காக மற்ற எல்லா ஜனங்களிலிருந்தும் உங்களைப் பிரித்து வைத்திருக்கிறேன்.+

27 ஆவிகளோடு பேசுகிற அல்லது குறிசொல்கிற ஒருவனோ ஒருத்தியோ நிச்சயம் கொல்லப்பட வேண்டும்.+ ஜனங்கள் அவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும். அவர்களுடைய சாவுக்கு அவர்கள்தான் பொறுப்பு’” என்றார்.

21 பின்பு யெகோவா மோசேயிடம், “குருமார்களாகச் சேவை செய்கிற ஆரோனின் மகன்களிடம் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘தங்களுடைய ஜனத்தில் இறந்துபோன ஒருவனுக்காக யாருமே தங்களைத் தீட்டுப்படுத்தக் கூடாது.+ 2 ஆனால் இரத்த சொந்தங்கள் இறந்துபோனால், அதாவது அம்மா, அப்பா, மகன், மகள், சகோதரன், 3 அல்லது கல்யாணமாகிப் போகாத* சகோதரி இறந்துபோனால் தங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளலாம். 4 தங்களுடைய ஜனத்தில் ஒருவனைக் கல்யாணம் செய்த பெண்ணுக்காக யாரும் துக்கம் அனுசரித்து தங்களையே களங்கப்படுத்தக் கூடாது. 5 குருமார்கள் மொட்டை போட்டுக்கொள்ளவோ,+ குறுந்தாடி வைத்துக்கொள்ளவோ, உடலைக் கீறிக் கிழித்துக்கொள்ளவோ கூடாது.+ 6 அவர்கள் கடவுளுடைய பெயரைக் களங்கப்படுத்தாமல்+ அவருக்கு முன்னால் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+ அவர்கள் யெகோவாவுக்கு உணவைப் படைப்பதால், அதாவது அவருக்குத் தகன பலிகளைச் செலுத்துவதால், பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+ 7 குருமார்கள் கடவுளுடைய பார்வையில் பரிசுத்தமானவர்களாக இருப்பதால் அவர்கள் ஒரு விபச்சாரியையோ+ கற்பைப் பறிகொடுத்த பெண்ணையோ விவாகரத்தான பெண்ணையோ+ கல்யாணம் செய்யக் கூடாது. 8 அவர்கள் உங்களுடைய கடவுளுக்கு உணவைப் படைப்பதால் நீங்கள் அவர்களைப் புனிதமானவர்களாக நினைக்க வேண்டும்.+ உங்களைப் புனிதப்படுத்துகிற யெகோவாவாகிய நான் பரிசுத்தமானவர்.+ அதனால், நீங்கள் அவர்களைப் பரிசுத்தமானவர்களாக நினைக்க வேண்டும்.

9 குருவானவரின் மகள் விபச்சாரம் செய்தால், தனக்கு மட்டுமல்ல தன் அப்பாவுக்கும் அவமானத்தைக் கொண்டுவருகிறாள். அவள் கொல்லப்பட்டு, எரிக்கப்பட வேண்டும்.+

10 குருமார்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைக் குருவானவர் அபிஷேகம் செய்யப்பட்டிருப்பதாலும்,+ பரிசுத்த உடைகளைப்+ போட்டிருப்பதாலும், இறந்தவருக்காகத் துக்கப்பட்டு தன்னுடைய தலைமுடியை அலங்கோலமாக விடவோ உடைகளைக் கிழித்துக்கொள்ளவோ கூடாது.+ 11 இறந்தவரின் உடலுக்குப் பக்கத்தில் அவர் போகக் கூடாது.+ தன்னுடைய அப்பாவோ அம்மாவோ இறந்திருந்தாலும் தன்னைத் தீட்டுப்படுத்தக் கூடாது. 12 வழிபாட்டுக் கூடாரத்தைவிட்டு அவர் வெளியே போய், தன் கடவுளுடைய கூடாரத்தைக் களங்கப்படுத்தக் கூடாது.+ ஏனென்றால், அர்ப்பணிப்பின் அடையாளமாகிய கடவுளுடைய அபிஷேகத் தைலம்+ அவர் தலையில் ஊற்றப்பட்டிருக்கிறது. நான் யெகோவா.

13 அவர் ஒரு கன்னிப்பெண்ணைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும்.+ 14 அவருடைய ஜனத்திலிருந்துதான் அவர் பெண்ணெடுக்க வேண்டும். விதவையையோ விவாகரத்தான பெண்ணையோ கற்பைப் பறிகொடுத்த பெண்ணையோ விபச்சாரியையோ கல்யாணம் செய்யக் கூடாது. 15 அப்படிக் கல்யாணம் செய்து தன்னுடைய ஜனத்தின் மத்தியில் தன் சந்ததியைக் களங்கப்படுத்தக் கூடாது.+ ஏனென்றால், நான் அவரைப் புனிதப்படுத்துகிறேன். நான் யெகோவா’” என்றார்.

16 பின்பு யெகோவா மோசேயைப் பார்த்து, 17 “நீ ஆரோனிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘உன் சந்ததியில் யாருக்காவது உடல் குறைபாடு இருந்தால், அவன் கடவுளுக்கு உணவைப் படைக்கக் கூடாது. 18 பார்வை இல்லாதவன், கால் ஊனமானவன், விகாரமான முகம் உள்ளவன், ஒரு கையோ காலோ நீளமாக உள்ளவன், 19 கால் எலும்போ கை எலும்போ முறிந்தவன், 20 கூன் விழுந்தவன், படு குள்ளமானவன்,* கண் கோளாறு உள்ளவன், படைநோய் உள்ளவன், படர்தாமரை நோய் உள்ளவன், அல்லது விரை சேதமடைந்தவன் கடவுளுக்கு உணவைப் படைக்கக் கூடாது.+ 21 குருவாகிய ஆரோனின் சந்ததியில் யாருக்காவது குறைபாடு இருந்தால், அவன் யெகோவாவுக்குத் தகன பலிகளைச் செலுத்தக் கூடாது. அவனுக்குக் குறைபாடு இருப்பதால், கடவுளுக்கு உணவைப் படைக்கக் கூடாது. 22 கடவுளுக்குப் படைக்கப்பட்ட உணவில் பரிசுத்தமானதையும் மகா பரிசுத்தமானதையும் அவன் சாப்பிடலாம்.+ 23 ஆனாலும், அவனுக்குக் குறைபாடு இருப்பதால் அவன் திரைச்சீலைக்குப்+ பக்கத்தில் போகக் கூடாது, பலிபீடத்துக்கும்+ போகக் கூடாது. அவன் என்னுடைய வழிபாட்டுக் கூடாரத்தைக்+ களங்கப்படுத்தக் கூடாது. ஏனென்றால், நான் அவர்களைப் புனிதப்படுத்துகிறேன். நான் யெகோவா’”+ என்றார்.

24 ஆரோனுக்கும் அவருடைய மகன்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் மோசே இதையெல்லாம் தெரிவித்தார்.

22 பின்பு யெகோவா மோசேயிடம் இப்படிச் சொன்னார்: 2 “இஸ்ரவேலர்கள் செலுத்துகிற பரிசுத்த பொருள்களை ஆரோனும் அவனுடைய மகன்களும் கவனமாகக் கையாள வேண்டுமென்று நீ அவர்களிடம் சொல்.+ எனக்கு அர்ப்பணிக்கப்படுகிற பொருள்களைத் தீட்டுப்படுத்தி என் பரிசுத்த பெயரை அவர்கள் களங்கப்படுத்தக் கூடாது.+ நான் யெகோவா. 3 நீ அவர்களிடம், ‘உங்களுடைய வம்சத்தைச் சேர்ந்த யாராவது தீட்டுப்பட்டிருந்தால், யெகோவாவுக்காக இஸ்ரவேலர்கள் அர்ப்பணிக்கிற பரிசுத்த பொருள்களுக்குப் பக்கத்தில் போகக் கூடாது. அப்படிப் போனால் அவன் கொல்லப்படுவான். தலைமுறை தலைமுறைக்கும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டளை இது.+ நான் யெகோவா. 4 ஆரோனின் வம்சத்தைச் சேர்ந்த ஒருவனுக்குத் தொழுநோய்+ இருந்தால் அல்லது பிறப்புறுப்பில் ஒழுக்கு நோய்+ இருந்தால் அந்தத் தீட்டு நீங்கும்வரை+ பரிசுத்த பொருள்களைச் சாப்பிடக் கூடாது. அதேபோல், பிணத்தைத் தொட்ட ஒருவனைத் தொட்டுத் தீட்டுப்பட்டவனும்,+ விந்து வெளிப்பட்ட ஒருவனும்,+ 5 அசுத்தமான சிறு பிராணியைத் தொட்டவனும்,+ ஏதோவொரு காரணத்தால் தீட்டாகிவிட்ட ஒருவனைத் தொட்டவனும்+ பரிசுத்த பொருள்களைச் சாப்பிடக் கூடாது. 6 இப்படிப்பட்ட ஒருவனையோ ஒன்றையோ தொட்டவன் சாயங்காலம்வரை தீட்டுப்பட்டிருப்பான். பரிசுத்த பொருள்களில் எதையும் அவன் சாப்பிடக் கூடாது. அவன் குளிக்க வேண்டும்.+ 7 சூரியன் மறைந்த பின்பு அவனுடைய தீட்டு நீங்கிவிடும். அதன்பின், அவன் பரிசுத்த பொருள்களைச் சாப்பிடலாம். ஏனென்றால், அது அவனுக்குச் சேர வேண்டிய உணவு.+ 8 தானாகச் செத்துப்போன மிருகத்தையோ காட்டு மிருகங்களால் கொல்லப்பட்ட மிருகத்தையோ சாப்பிட்டு அவன் தீட்டுப்படக் கூடாது.+ நான் யெகோவா.

9 அவர்கள் பரிசுத்த பொருள்களைக் களங்கப்படுத்தி பாவம் செய்தால் செத்துப்போவார்கள். அப்படி நடக்காதபடி அவர்கள் என் கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நான் அவர்களைப் புனிதப்படுத்துகிறேன். நான் யெகோவா.

10 தகுதி இல்லாத ஒருவன்* பரிசுத்தமான எதையும் சாப்பிடக் கூடாது.+ குருவானவரின் வேறு தேசத்து விருந்தாளியோ கூலியாளோ பரிசுத்த பொருள்களில் எதையும் சாப்பிடக் கூடாது. 11 ஆனால், குருவானவர் ஒருவனை விலைகொடுத்து வாங்கியிருந்தால், அவன் அவற்றைச் சாப்பிடலாம். அதேபோல், அவருடைய வீட்டில் பிறந்த அடிமைகளும் அவருடைய உணவைச் சாப்பிடலாம்.+ 12 குருவானவரின் மகள் குருவாக இல்லாத ஒருவனைக் கல்யாணம் செய்தால், காணிக்கையாக வந்த பரிசுத்த பொருள்களைச் சாப்பிடக் கூடாது. 13 ஆனால், குருவானவரின் மகள் குழந்தையில்லாமல் விதவையாகவோ விவாகரத்து செய்யப்பட்டவளாகவோ தன்னுடைய பிறந்த வீட்டுக்குத் திரும்பி வந்திருந்தால், தன் அப்பாவுக்குக் கிடைக்கும் உணவை அவளும் சாப்பிடலாம்.+ தகுதி இல்லாதவர்கள்* அதைச் சாப்பிடக் கூடாது.

14 பரிசுத்த பொருளை ஒருவன் தெரியாத்தனமாகச் சாப்பிட்டுவிட்டால், அதன் மதிப்பில் ஐந்திலொரு பாகத்தைச் சேர்த்து அதைக் குருவானவருக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.+ 15 இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிற பரிசுத்த பொருள்களைக் குருமார்கள் களங்கப்படுத்தக் கூடாது.+ 16 அந்தப் பரிசுத்த பொருள்களைச் சாப்பிடும் குற்றத்துக்காக அவர்கள்மேல் தண்டனை வரும்படி செய்யவும் கூடாது. ஏனென்றால், நான் அவர்களைப் புனிதப்படுத்துகிறேன். நான் யெகோவா’ என்றார்.”

17 பின்பு யெகோவா மோசேயைப் பார்த்து, 18 “ஆரோனிடமும் அவனுடைய மகன்களிடமும் எல்லா இஸ்ரவேலர்களிடமும் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘இஸ்ரவேலைச் சேர்ந்த ஒருவனோ இஸ்ரவேலில் குடியிருக்கிற வேறு தேசத்தைச் சேர்ந்த ஒருவனோ தான் நேர்ந்துகொண்டதை நிறைவேற்ற அல்லது தானாகவே விருப்பப்பட்டு காணிக்கை செலுத்த+ யெகோவாவுக்குத் தகன பலியைக்+ கொண்டுவந்தால், 19 குறையில்லாத காளையையோ+ செம்மறியாட்டுக் கடாக் குட்டியையோ வெள்ளாட்டுக் கடாவையோ கொண்டுவர வேண்டும். அப்போதுதான், கடவுள் அதை ஏற்றுக்கொள்வார். 20 குறையுள்ள எதையும் நீங்கள் செலுத்தக் கூடாது.+ ஏனென்றால், கடவுள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்.

21 யெகோவாவுக்கு நேர்ந்துகொண்டதை நிறைவேற்றவோ தானாகவே விருப்பப்பட்டு காணிக்கை செலுத்தவோ ஒருவன் சமாதான பலியைக்+ கொண்டுவந்தால், அது குறையில்லாத மாடாக அல்லது ஆடாக இருக்க வேண்டும். அப்போதுதான், கடவுள் அதை ஏற்றுக்கொள்வார். அதில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது. 22 அவன் கொண்டுவரும் ஆடு அல்லது மாடு, குருடாகவோ எலும்பு முறிந்ததாகவோ வெட்டுக்காயம் உள்ளதாகவோ பாலுண்ணி வந்ததாகவோ சொறிசிரங்கு உள்ளதாகவோ படர்தாமரை நோய் பிடித்ததாகவோ இருக்கக் கூடாது. இப்படிப்பட்ட எதையும் யெகோவாவுக்குக் கொண்டுவரக் கூடாது, அவற்றை யெகோவாவின் பலிபீடத்தில் செலுத்தவும் கூடாது. 23 ஒரு காளை மாட்டுக்கு அல்லது செம்மறியாட்டுக்கு ஒரு கால் நெட்டையாகவோ குட்டையாகவோ இருந்தால், நேர்ந்துகொண்டதை நிறைவேற்றும் பலியாக அதை யாரும் கொண்டுவரக் கூடாது, கடவுள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார். ஆனால், அவர்களாகவே விருப்பப்பட்டு செலுத்தும் பலியாக அதைக் கொண்டுவரலாம். 24 விரை சேதமடைந்த, விரை நசுக்கப்பட்ட, அல்லது காயடிக்கப்பட்ட மிருகத்தை யெகோவாவுக்குக் கொண்டுவரக் கூடாது. அப்படிப்பட்ட மிருகங்களை உங்களுடைய தேசத்தில் பலி செலுத்தக் கூடாது. 25 வேறு தேசத்து ஜனங்கள் அவற்றைக் கடவுளுக்கு உணவாகப் படைக்கக் கூடாது. ஏனென்றால், அவையெல்லாம் ஊனமும் குறையும் உள்ளவை. அவற்றைக் கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டார்’” என்றார்.

26 பின்பு யெகோவா மோசேயிடம், 27 “ஒரு மாடு கன்று போட்டால் அல்லது ஒரு ஆடு குட்டி போட்டால், அந்தக் கன்றும் குட்டியும் ஏழு நாட்கள் தாயோடு இருக்க வேண்டும்.+ எட்டாம் நாளிலிருந்து அதை யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்தலாம், அவர் அதை ஏற்றுக்கொள்வார். 28 ஒரு மாட்டையும் அதன் கன்றையும் ஒரே நாளில் வெட்டக் கூடாது, ஒரு ஆட்டையும் அதன் குட்டியையும் ஒரே நாளில் வெட்டக் கூடாது.+

29 நீங்கள் யெகோவாவுக்கு நன்றிப் பலி செலுத்தினால்,+ அதை அவர் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் செலுத்த வேண்டும். 30 அதே நாளில் அதைச் சாப்பிட வேண்டும். காலைவரை எதையும் மீதி வைக்கக் கூடாது.+ நான் யெகோவா.

31 நீங்கள் என்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.+ நான் யெகோவா. 32 நீங்கள் என் பரிசுத்த பெயரைக் களங்கப்படுத்தக் கூடாது.+ இஸ்ரவேலர்கள் மத்தியில் நான் பரிசுத்தப்பட வேண்டும்.+ நான் அவர்களைப் புனிதப்படுத்துகிறேன். நான் யெகோவா.+ 33 நான்தான் உங்களுடைய கடவுள் என்று நிரூபிப்பதற்காக உங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தேன்.+ நான் யெகோவா” என்றார்.

23 பின்பு யெகோவா மோசேயைப் பார்த்து, 2 “நீ இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொல்: ‘யெகோவாவின் பண்டிகை நாட்கள்,+ பரிசுத்த மாநாடுகளுக்காக எல்லாரும் ஒன்றுகூடி வர வேண்டிய நாட்கள். நீங்கள் அறிவிப்பு+ செய்ய வேண்டிய அந்தப் பண்டிகை நாட்கள் இவைதான்:

3 ஆறு நாட்கள் நீங்கள் வேலை செய்யலாம். ஆனால், ஏழாம் நாள் உங்களுக்கு முழு ஓய்வுநாள்.+ பரிசுத்த மாநாட்டுக்காக அன்றைக்கு நீங்கள் ஒன்றுகூடி வர வேண்டும். எந்த வேலையும் செய்யக் கூடாது. நீங்கள் எங்கே குடியிருந்தாலும் யெகோவாவுக்காக ஓய்வுநாளை அனுசரிக்க வேண்டும்.+

4 யெகோவாவின் பண்டிகைகளை எந்தெந்த நாட்களில் கொண்டாட வேண்டுமென்று நீங்கள் அறிவிப்பு செய்ய வேண்டும். பரிசுத்த மாநாடுகளுக்காக நீங்கள் ஒன்றுகூடி வர வேண்டிய அந்த நாட்கள் இவைதான்: 5 முதலாம் மாதம் 14-ஆம் நாள்+ சாயங்காலத்தில் யெகோவாவுக்காக பஸ்கா பண்டிகை+ கொண்டாட வேண்டும்.

6 அந்த மாதம் 15-ஆம் நாளில், புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையை யெகோவாவுக்காகக் கொண்டாட வேண்டும்.+ ஏழு நாட்களுக்குப் புளிப்பில்லாத ரொட்டி சாப்பிட வேண்டும்.+ 7 முதலாம் நாளில் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும்.+ அன்றைக்குக் கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது. 8 ஏழு நாட்கள் யெகோவாவுக்குத் தகன பலி செலுத்த வேண்டும். ஏழாம் நாளில் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும். அன்றைக்குக் கடினமான வேலை எதுவும் நீங்கள் செய்யக் கூடாது’” என்றார்.

9 பின்பு யெகோவா மோசேயைப் பார்த்து, 10 “நீ இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொல்: ‘நான் கொடுக்கும் தேசத்துக்குப் போய் நீங்கள் அறுவடை செய்யும்போது, முதல் விளைச்சலில் கிடைக்கும் ஒரு கதிர்க்கட்டை+ குருவானவரிடம் கொண்டுவர வேண்டும்.+ 11 யெகோவா உங்களை ஏற்றுக்கொள்வதற்காக அவருடைய முன்னிலையில் அந்தக் கதிர்க்கட்டை குருவானவர் அசைவாட்ட வேண்டும். 12 அந்தக் கதிர்க்கட்டு அசைவாட்டப்படும் நாளில், குறையில்லாத ஒருவயது செம்மறியாட்டுக் கடாக் குட்டியை யெகோவாவுக்குத் தகன பலியாக நீங்கள் கொண்டுவர வேண்டும். 13 அதோடு, உணவுக் காணிக்கையாக ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* நைசான மாவில் எண்ணெய் கலந்து கொண்டுவர வேண்டும். அதைத் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். தகன பலியோடு சேர்த்து ஒரு லிட்டர்* திராட்சமதுவைக் காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். 14 புது தானியத்தை நீங்கள் கடவுளுக்குக் காணிக்கையாகக் கொண்டுவரும் நாள்வரை, அதை ரொட்டி செய்தோ வறுத்தோ பச்சையாகவோ சாப்பிடக் கூடாது. நீங்கள் எங்கு குடியிருந்தாலும் இதுவே தலைமுறை தலைமுறைக்கும் உங்களுக்குக் கொடுக்கப்படும் சட்டம்.

15 அசைவாட்டும் காணிக்கையாகக் கதிர்க்கட்டை நீங்கள் கொண்டுவரும் ஓய்வுநாளிலிருந்து ஏழு வாரங்களை* கணக்கிட வேண்டும்.+ 16 அதாவது, ஏழாம் ஓய்வுநாளுக்கு அடுத்த நாளாகிய 50-ஆம் நாள்வரை+ கணக்கிட வேண்டும். அந்த நாளில் புது தானியத்தில் செய்யப்பட்ட உணவுக் காணிக்கையை யெகோவாவுக்குக் கொண்டுவர வேண்டும்.+ 17 அசைவாட்டும் காணிக்கையாக உங்கள் வீடுகளிலிருந்து இரண்டு ரொட்டிகளைக் கொண்டுவர வேண்டும். ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* நைசான மாவைப் புளிக்க வைத்து, அந்த ரொட்டிகளைச் சுட வேண்டும்.+ முதல் விளைச்சலின் காணிக்கையாக அவற்றை யெகோவாவுக்குக் கொண்டுவர வேண்டும்.+ 18 அந்த ரொட்டிகளோடு, எந்தக் குறையும் இல்லாத ஒருவயதுள்ள ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும், ஒரு இளம் காளையையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும் கொண்டுவந்து யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்த வேண்டும்.+ அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். அவற்றோடு கொடுக்கும் உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் கொண்டுவர வேண்டும். 19 பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும்+ சமாதான பலியாக ஒருவயதுள்ள இரண்டு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் கொண்டுவர வேண்டும்.+ 20 முதல் விளைச்சலில் செய்யப்பட்ட ரொட்டிகளோடு, இரண்டு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் யெகோவாவுக்கு அசைவாட்டும் காணிக்கையாகக் குருவானவர் அசைவாட்ட வேண்டும். அவை யெகோவாவுக்குப் பரிசுத்தமானவையாக இருக்கும், அவை குருவானவருடைய பங்காக இருக்கும்.+ 21 பரிசுத்த மாநாட்டுக்காக அந்த நாளில் ஒன்றுகூடி வர வேண்டுமென்று அறிவிப்பு செய்யுங்கள்.+ அன்றைக்குக் கடினமான வேலை எதுவும் நீங்கள் செய்யக் கூடாது. நீங்கள் எங்கு குடியிருந்தாலும் இதுவே தலைமுறை தலைமுறைக்கும் உங்களுக்குக் கொடுக்கப்படும் சட்டம்.

22 உங்கள் வயலில் அறுவடை செய்யும்போது வரப்பு ஓரத்தில் உள்ள கதிர்களை முழுமையாக அறுவடை செய்யக் கூடாது, சிந்திய கதிர்களை எடுக்கவும் கூடாது.+ அவற்றை ஏழைகளுக்காகவும் உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்து ஜனங்களுக்காகவும் விட்டுவிட வேண்டும்.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா’” என்றார்.

23 பின்பு யெகோவா மோசேயைப் பார்த்து, 24 “இஸ்ரவேலர்களிடம் நீ இப்படிச் சொல்: ‘ஏழாம் மாதம் முதலாம் நாளில் நீங்கள் முழுமையாக ஓய்ந்திருக்க வேண்டும். எக்காளம் ஊதி அந்த நாளை அறிவிப்பு செய்ய வேண்டும்.+ அந்த நாளில் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும். 25 அன்றைக்கு நீங்கள் கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது. யெகோவாவுக்குத் தகன பலி செலுத்த வேண்டும்’” என்றார்.

26 பின்பு யெகோவா மோசேயிடம், 27 “இந்த ஏழாம் மாதம் பத்தாம் நாள் உங்களுக்குப் பாவப் பரிகார நாள்.+ அன்று பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும். உங்களையே வருத்திக்கொண்டு,*+ யெகோவாவுக்குத் தகன பலி செலுத்த வேண்டும். 28 அன்று நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. ஏனென்றால், அது பாவப் பரிகார நாள். அன்று, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் உங்களுக்குப் பாவப் பரிகாரம் செய்யப்படும்.+ 29 அன்று தன்னையே வருத்திக்கொள்ளாத* எவனும் கொல்லப்பட வேண்டும்.+ 30 அந்த நாளில் ஒருவன் எந்த வேலை செய்தாலும் அவனை நான் அழித்துவிடுவேன். 31 அன்று நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. நீங்கள் எங்கு குடியிருந்தாலும் இதுவே தலைமுறை தலைமுறைக்கும் உங்களுக்குக் கொடுக்கப்படும் சட்டம். 32 அந்த நாள் நீங்கள் முழுமையாக ஓய்ந்திருக்க வேண்டிய ஓய்வுநாள். அந்த மாதம் ஒன்பதாம் நாள் சாயங்காலத்தில் உங்களையே வருத்திக்கொள்ள வேண்டும்.+ அந்த நாள் சாயங்காலத்திலிருந்து அடுத்த நாள் சாயங்காலம்வரை உங்களுக்கு ஓய்வுநாள்” என்றார்.

33 பின்பு யெகோவா மோசேயைப் பார்த்து, 34 “நீ இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொல்: ‘இந்த ஏழாம் மாதம் 15-ஆம் நாளிலிருந்து நீங்கள் யெகோவாவுக்காக ஏழு நாட்கள் கூடாரப் பண்டிகை கொண்டாட வேண்டும்.+ 35 அந்த முதலாம் நாளில் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும். அன்று கடினமான வேலை எதுவும் நீங்கள் செய்யக் கூடாது. 36 ஏழு நாட்களும் யெகோவாவுக்குத் தகன பலி செலுத்த வேண்டும். எட்டாம் நாளில் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும்.+ அது ஒரு விசேஷ மாநாடு. அன்று நீங்கள் யெகோவாவுக்குத் தகன பலி செலுத்த வேண்டும். கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது.

37 நீங்கள் யெகோவாவுக்காக இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும்போது,+ பரிசுத்த மாநாடுகளுக்காக ஒன்றுகூடி வர வேண்டுமென்று அறிவிப்பு செய்ய வேண்டும்.+ அந்தப் பண்டிகைகளின்போது யெகோவாவுக்கு அந்தந்த நாளில் செலுத்த வேண்டிய தகன பலியையும்,+ உணவுக் காணிக்கையையும்,+ திராட்சமது காணிக்கையையும்+ கொண்டுவர வேண்டும். 38 யெகோவாவுக்கான ஓய்வுநாட்களில்+ நீங்கள் கொண்டுவரும் காணிக்கைகள்,+ நன்கொடைகள், நேர்ந்துகொண்ட பலிகள்,+ நீங்களாகவே விருப்பப்பட்டு செலுத்தும் காணிக்கைகள்+ ஆகியவை தவிர அவற்றையும் அந்தப் பண்டிகைகளின்போது யெகோவாவுக்காகக் கொண்டுவர வேண்டும். 39 ஏழாம் மாதம் 15-ஆம் நாளிலிருந்து, அதாவது உங்களுடைய நிலத்தில் விளைந்ததைச் சேகரிக்கும் நாளிலிருந்து, ஏழு நாட்களுக்கு யெகோவாவுக்காகப் பண்டிகை கொண்டாட வேண்டும்.+ முதலாம் நாளிலும் எட்டாம் நாளிலும் நீங்கள் முழுமையாக ஓய்ந்திருக்க வேண்டும்.+ 40 முதல் நாளில், பெரிய மரங்களின் பழங்களையும், பேரீச்ச மரங்களின் ஓலைகளையும்,+ அடர்த்தியான மரங்களின் கிளைகளையும், பள்ளத்தாக்கிலுள்ள* காட்டரசு மரக் கிளைகளையும் கொண்டுவந்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் ஏழு நாட்களுக்குச் சந்தோஷமாக இருக்க வேண்டும்.+ 41 யெகோவாவுக்காக இந்தப் பண்டிகையை வருஷத்தில் ஏழு நாட்கள் கொண்டாட வேண்டும்.+ ஏழாம் மாதம் இந்தப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும். இதுதான் தலைமுறை தலைமுறைக்கும் உங்களுக்குக் கொடுக்கப்படும் சட்டம். 42 ஏழு நாட்களுக்கு நீங்கள் கூடாரங்களில் தங்க வேண்டும்.+ இஸ்ரவேல் குடிமக்கள் எல்லாரும் கூடாரங்களில் தங்க வேண்டும். 43 அப்போதுதான், இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தபோது நான் அவர்களைக் கூடாரங்களில் தங்க வைத்தேன்+ என்பதை வருங்காலச் சந்ததிகள் தெரிந்துகொள்வார்கள்.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா’” என்றார்.

44 யெகோவா சொன்ன இந்தப் பண்டிகைகளைப் பற்றி மோசே இஸ்ரவேலர்களுக்குச் சொன்னார்.

24 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “விளக்குகள் தொடர்ந்து எரிவதற்காக, இடித்துப் பிழிந்த சுத்தமான ஒலிவ எண்ணெயை உன்னிடம் கொண்டுவரும்படி இஸ்ரவேலர்களுக்கு நீ கட்டளை கொடு.+ 3 சந்திப்புக் கூடாரத்தில் சாட்சிப் பெட்டிக்குப் பக்கத்திலுள்ள திரைச்சீலைக்கு வெளியே இருக்கிற விளக்குகளை ஆரோன் ஏற்றிவைக்க வேண்டும். அவை எப்போதும் சாயங்காலத்திலிருந்து காலைவரை யெகோவாவின் முன்னிலையில் எரிந்துகொண்டிருக்க வேண்டும். தலைமுறை தலைமுறைக்கும் இது உங்களுக்குக் கொடுக்கப்படும் சட்டம். 4 சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்ட விளக்குத்தண்டின்+ மேலுள்ள அகல் விளக்குகளை யெகோவாவின் முன்னிலையில் ஆரோன் எப்போதும் வரிசைப்படி ஏற்றி வைக்க வேண்டும்.

5 நீ நைசான மாவை எடுத்து அதில் 12 வட்ட ரொட்டிகள் சுட வேண்டும். ஒவ்வொரு ரொட்டியையும், ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* மாவில் செய்ய வேண்டும். 6 சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டு யெகோவாவின் முன்னிலையில் வைக்கப்பட்டிருக்கிற மேஜையின்+ மேல் அவற்றை இரண்டு அடுக்காக அடுக்கிவைக்க வேண்டும். ஒவ்வொரு அடுக்கிலும் ஆறு ரொட்டிகளை வைக்க வேண்டும்.+ 7 ஒவ்வொரு அடுக்கின்மேலும் சுத்தமான சாம்பிராணியை வைக்க வேண்டும். ரொட்டிகளை யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்துவதற்கு அடையாளமாக+ அது இருக்கும். 8 ஒவ்வொரு ஓய்வுநாளிலும் யெகோவாவின் முன்னிலையில் அவை அடுக்கி வைக்கப்பட வேண்டும்.+ இது இஸ்ரவேலர்களோடு நான் செய்திருக்கிற நிரந்தர ஒப்பந்தம். 9 அந்த ரொட்டிகள் ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் சேர வேண்டிய பங்கு.+ யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகன பலிகளில் அவை மகா பரிசுத்தமானவையாக இருப்பதால் அவற்றைப் பரிசுத்த இடத்தில் அவர்கள் சாப்பிட வேண்டும்.+ இது நிரந்தரக் கட்டளை” என்றார்.

10 இஸ்ரவேலைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ஒரு எகிப்தியனுக்கும் பிறந்த ஒருவன் இஸ்ரவேலர்களோடு வாழ்ந்துவந்தான்.+ ஒருநாள் அவனும் இன்னொரு இஸ்ரவேலனும் முகாமில் சண்டை போட்டார்கள். 11 அப்போது அவன், கடவுளுடைய பெயரைப் பழித்தும் சபித்தும் பேசினான்.+ உடனே அவனை மோசேயிடம் கொண்டுவந்தார்கள்.+ அவனுடைய அம்மாவின் பெயர் செலோமித். அவள் தாண் கோத்திரத்தைச் சேர்ந்த திப்ரியின் மகள். 12 அவனை என்ன செய்ய வேண்டுமென்று யெகோவா சொல்லும்வரை அவனைக் காவலில் வைத்தார்கள்.+

13 யெகோவா மோசேயிடம், 14 “சபித்துப் பேசியவனை முகாமுக்கு வெளியில் கொண்டுபோ. அவன் சபித்துப் பேசியதைக் கேட்டவர்கள் எல்லாரும் அவன் தலையில் கை வைக்க வேண்டும். பின்பு, ஜனங்கள் எல்லாரும் அவன்மேல் கல்லெறிய வேண்டும்.+ 15 அதன்பின், நீ இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொல்: ‘யாராவது கடவுளைச் சபித்துப் பேசினால், அந்தப் பாவத்துக்கு அவன் தண்டிக்கப்பட வேண்டும். 16 யெகோவாவின் பெயரைப் பழித்துப் பேசுகிறவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+ ஜனங்கள் எல்லாரும் அவன்மேல் கண்டிப்பாகக் கல்லெறிய வேண்டும். கடவுளுடைய பெயரைப் பழிப்பவன் இஸ்ரவேலனாக இருந்தாலும் சரி, இஸ்ரவேலர்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி, அவன் கொல்லப்பட வேண்டும்.

17 ஒருவன் யாரையாவது கொலை செய்தால், அவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+ 18 ஒருவருடைய வீட்டு விலங்கை ஒருவன் கொன்றால், அதேபோன்ற இன்னொரு விலங்கை ஈடாகக் கொடுக்க வேண்டும். 19 ஒருவன் யாரையாவது காயப்படுத்தினால், அவனுக்கும் அதுபோலவே செய்யப்பட வேண்டும்.+ 20 எலும்புக்கு எலும்பு, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் கொடுக்கப்பட வேண்டும். அவன் காயப்படுத்தியது போலவே அவனும் காயப்படுத்தப்பட வேண்டும்.+ 21 மிருகத்தைக் கொன்றவன் அதற்கு ஈடு கொடுக்க வேண்டும்.+ ஆனால் மனுஷனைக் கொன்றவன் கொல்லப்பட வேண்டும்.+

22 உங்களுக்கும் சரி, உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்து ஆட்களுக்கும் சரி, ஒரே நியாயம்தான்* இருக்க வேண்டும்.+ ஏனென்றால், நான் உங்கள் கடவுளாகிய யெகோவா’” என்றார்.

23 மோசே இவற்றை இஸ்ரவேலர்களுக்குச் சொன்னார். சபித்துப் பேசியவனை முகாமுக்கு வெளியில் கொண்டுபோய் அவர்கள் கல்லெறிந்தார்கள்.+ யெகோவா மோசேக்குக் கட்டளை கொடுத்தபடியே இஸ்ரவேலர்கள் செய்தார்கள்.

25 சீனாய் மலையில் யெகோவா தொடர்ந்து மோசேயிடம், 2 “நீ இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நான் கொடுக்கும் தேசத்துக்கு நீங்கள் போன பின்பு,+ யெகோவாவின் கட்டளைப்படி ஓய்வு வருஷத்தில் உங்கள் நிலத்துக்கு ஓய்வு தர வேண்டும்.+ 3 ஆறு வருஷங்களுக்கு நிலத்தில் விதை விதைக்க வேண்டும், திராட்சைக் கொடிகளின் கிளைகளை வெட்ட வேண்டும், விளைச்சலைச் சேகரிக்க வேண்டும்.+ 4 ஆனால், ஏழாம் வருஷத்தில் யெகோவாவின் கட்டளைப்படி நிலத்துக்கு முழு ஓய்வு தர வேண்டும். அப்போது, உங்கள் வயலில் விதை விதைக்கவோ திராட்சைக் கொடிகளின் கிளைகளை வெட்டவோ கூடாது. 5 அறுவடையின்போது சிந்திய தானியத்திலிருந்து தானாக விளைவதை நீங்கள் அறுவடை செய்யக் கூடாது. கிளை வெட்டப்படாத திராட்சைக் கொடிகளிலுள்ள பழங்களைச் சேகரிக்கக் கூடாது. அந்த வருஷத்தில் நிலத்துக்கு முழு ஓய்வு தர வேண்டும். 6 ஆனால், ஓய்வு வருஷத்தில் தானாக விளைவதை நீங்களும் உங்களுடைய ஆண் அடிமைகளும் பெண் அடிமைகளும் கூலியாட்களும் உங்கள் தேசத்தில் குடியேறியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களும் 7 உங்கள் தேசத்திலுள்ள வீட்டு விலங்குகளும் காட்டு மிருகங்களும் சாப்பிடலாம். நிலத்தில் விளைகிற எல்லாவற்றையும் சாப்பிடலாம்.

8 அடுத்தடுத்த ஏழு ஓய்வு வருஷங்களை நீங்கள் கணக்குப் போட வேண்டும். அதாவது, ஏழு வருஷங்களை ஏழு தடவை பெருக்க வேண்டும். அப்போது, 49 வருஷங்கள் வரும். 9 அந்த ஏழாம் மாதம் பத்தாம் நாளில், ஊதுகொம்பைச் சத்தமாக ஊத வேண்டும். பாவப் பரிகார நாளாகிய அந்த நாளில்,+ ஊதுகொம்பின் சத்தம் தேசமெங்கும் கேட்க வேண்டும். 10 50-ஆம் வருஷத்தை நீங்கள் புனிதமாக்கி, தேசத்திலுள்ள எல்லாருக்கும் விடுதலையை* அறிவிக்க வேண்டும்.+ அந்த வருஷம் உங்களுக்கு விடுதலை* வருஷமாக இருக்கும். அவரவர் தங்களுடைய பரம்பரை நிலத்துக்கும் தங்களுடைய குடும்பத்துக்கும் திரும்பிப்போக வேண்டும்.+ 11 50-ஆம் வருஷம் உங்களுக்கு விடுதலை வருஷமாக இருக்கும். அப்போது உங்கள் வயலில் விதைக்கவோ, அறுவடையின்போது சிந்திய தானியத்திலிருந்து தானாக விளைவதை அறுக்கவோ, கிளை வெட்டப்படாத திராட்சைக் கொடிகளிலுள்ள பழங்களைச் சேகரிக்கவோ கூடாது.+ 12 ஏனென்றால் அது விடுதலை வருஷம். அது உங்களுக்குப் பரிசுத்தமான வருஷம். அப்போது, நிலத்தில் தானாக விளைவதை நீங்கள் சாப்பிடலாம்.+

13 அந்த விடுதலை வருஷத்தில் எல்லாரும் தங்களுடைய பரம்பரை நிலத்துக்குத் திரும்பிப்போக வேண்டும்.+ 14 நீங்கள் ஒருவருக்கு எதையாவது விற்றாலோ ஒருவரிடமிருந்து எதையாவது வாங்கினாலோ, அநியாயம் செய்யக் கூடாது.+ 15 ஒருவரிடமிருந்து நிலத்தை வாங்கும்போது, விடுதலை வருஷத்துக்கு அடுத்துவரும் வருஷங்களைக் கணக்குப் போட்டு, அவற்றின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி விலைகொடுத்து வாங்க வேண்டும். விற்பவன், அந்த வருஷங்களில் தன்னுடைய நிலம் எவ்வளவு விளைச்சல் தரும் என்பதைக் கணக்குப் போட்டு, அதற்குத் தகுந்தபடி விற்க வேண்டும்.+ 16 அடுத்த விடுதலை வருஷம் வருவதற்கு இன்னும் நிறைய வருஷங்கள் இருந்தால், அதன் விலையை அதற்குத் தகுந்தபடி அவன் உயர்த்தலாம். கொஞ்ச வருஷங்களே இருந்தால், விலையை அதற்குத் தகுந்தபடி குறைக்கலாம். ஏனென்றால், அந்த நிலத்தில் எவ்வளவு விளையும் என்பதைக் கணக்கு போட்டுத்தான் அவன் அதை விற்கிறான். 17 நீங்கள் யாருமே மற்றவர்களுக்கு அநியாயம் செய்யக் கூடாது.+ உங்கள் கடவுளுக்குப் பயந்து நடக்க வேண்டும்.+ ஏனென்றால், நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.+ 18 நீங்கள் என் சட்டதிட்டங்களுக்கும் நீதித்தீர்ப்புகளுக்கும் கீழ்ப்படிந்தால், தேசத்தில் பாதுகாப்பாகக் குடியிருப்பீர்கள்.+ 19 நிலம் நல்ல விளைச்சல் தரும்.+ நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டுப் பாதுகாப்பாகக் குடியிருப்பீர்கள்.+

20 ஆனால், “ஏழாம் வருஷத்தில் விதைக்காமலும் அறுவடை செய்யாமலும் இருந்தால் நாங்கள் எதைச் சாப்பிடுவோம்?” என்று நீங்கள் கேட்கலாம்.+ 21 ஆறாம் வருஷத்தில் நான் உங்களை ஆசீர்வதிப்பேன். அப்போது, மூன்று வருஷங்களுக்குத் தேவையான விளைச்சல் உங்களுக்குக் கிடைக்கும்.+ 22 பின்பு, எட்டாம் வருஷத்தில் விதை விதைப்பீர்கள். ஏற்கெனவே கிடைத்த விளைச்சலை ஒன்பதாம் வருஷம்வரை சாப்பிடுவீர்கள், அதாவது அந்த வருஷத்தில் விளைச்சல் கிடைக்கும்வரை அதைச் சாப்பிடுவீர்கள்.

23 நிலத்தை யாருக்கும் நிரந்தரமாக விற்கக் கூடாது,+ ஏனென்றால் தேசம் என்னுடையது.+ என்னைப் பொறுத்தவரை, நீங்கள் என் தேசத்தில் குடியேறிய வேறு தேசத்து ஜனங்கள்.+ 24 நீங்கள் குடியிருக்கும் தேசமெங்கும், நிலத்தை மீட்டுக்கொள்ளும் உரிமையை அதன் சொந்தக்காரருக்குக் கொடுக்க வேண்டும்.

25 உங்களுடைய சகோதரன் ஏழையாகி தன்னுடைய நிலத்தில் கொஞ்சத்தை விற்றுவிட்டால், அவனுடைய நெருங்கிய சொந்தக்காரன் வந்து அதை மீட்க வேண்டும்.+ 26 அப்படி மீட்க யாரும் இல்லாவிட்டால், அதை மீட்கும் அளவுக்கு அவனுக்கே வசதி வந்துவிட்டால், 27 நிலத்தை விற்ற வருஷத்திலிருந்து அதில் விளைந்ததன் மதிப்பை அவன் கணக்குப் பார்த்து, அந்தத் தொகையைக் கழித்துவிட்டு மீதி தொகையை மட்டும் விலையாகக் கொடுக்க வேண்டும். பின்பு, அவன் தன்னுடைய நிலத்துக்குத் திரும்பிப்போகலாம்.+

28 வாங்கியவனிடமிருந்து அதை மீட்க ஒருவேளை அவனுக்கு வசதி இல்லையென்றால், விடுதலை வருஷம்வரை அந்த நிலம் அதை வாங்கியவனின் கையில் இருக்கும்.+ விடுதலை வருஷத்தில் அது விற்றவனுக்குக் கைமாறிவிடும். அவன் தன்னுடைய நிலத்துக்குத் திரும்பிப்போவான்.+

29 மதில் சூழ்ந்த நகரத்திலுள்ள வீட்டை ஒருவன் விற்றால், அதை ஒரு வருஷத்துக்குள் மீட்டுக்கொள்ள வேண்டும். அதை மீட்டுக்கொள்ளும் உரிமை+ ஒரு வருஷத்துக்கு மட்டும்தான் இருக்கும். 30 மதில் சூழ்ந்த நகரத்திலுள்ள அந்த வீட்டை ஒரு வருஷத்துக்குள் மீட்டுக்கொள்ளாவிட்டால், தலைமுறை தலைமுறைக்கும் அது வாங்கியவனுடைய நிரந்தர சொத்தாக ஆகிவிடும். விடுதலை வருஷத்திலும்கூட அவன் அதைத் திருப்பித் தரக் கூடாது. 31 ஆனால், மதில் இல்லாத பகுதிகளிலுள்ள வீடுகளைக் கிராமப்புற வயல்நிலத்தைப் போலக் கருத வேண்டும். அவற்றை எப்போது வேண்டுமானாலும் மீட்டுக்கொள்கிற உரிமை அவனுக்கு இருக்கிறது. வாங்கியவன் விடுதலை வருஷத்தில் அவற்றைத் திருப்பித் தர வேண்டும்.

32 லேவியர்களின் நகரங்களிலுள்ள வீடுகளைப் பொறுத்தவரை,+ அவற்றை எப்போது வேண்டுமானாலும் மீட்டுக்கொள்கிற உரிமை லேவியர்களுக்கு இருக்கிறது. 33 ஒரு லேவியன் தன்னுடைய நகரத்திலுள்ள ஒரு வீட்டை விற்றபின் அதை மீட்டுக்கொள்ளாவிட்டால், அந்த வீடு விடுதலை வருஷத்தில் அவனுக்குத் திருப்பித் தரப்படும்.+ ஏனென்றால், இஸ்ரவேலர்களின் தேசத்தில் லேவியர்களின் நகரங்களிலுள்ள வீடுகள் அவர்களுடைய சொத்து.+ 34 அவர்களுடைய நகரங்களைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களை+ விற்கக் கூடாது. ஏனென்றால், அவை அவர்களுடைய நிரந்தர சொத்து.

35 உங்களுக்குப் பக்கத்தில் குடியிருக்கிற உங்கள் சகோதரன் ஏழையாகி வயிற்றுப்பிழைப்புக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டால், உங்கள் தேசத்தில் குடியேறியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களைக் கவனித்துக்கொள்வது போல+ நீங்கள் அவனைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.+ அப்போது, உங்களோடு அவனும் பிழைப்பான். 36 அவனிடமிருந்து வட்டி வாங்கக் கூடாது, அவனை வைத்து லாபம் சம்பாதிக்கக் கூடாது.+ உங்கள் கடவுளுக்குப் பயந்து நடக்க வேண்டும்.+ அப்போது, உங்களோடு உங்கள் சகோதரனும் பிழைப்பான். 37 அவனுக்கு உங்கள் பணத்தை வட்டிக்குக் கொடுக்கக் கூடாது,+ உங்கள் உணவுப் பொருளை லாபத்துக்கு விற்கக் கூடாது. 38 உங்கள் கடவுளாகிய யெகோவா நான்தான். உங்களுக்கு கானான் தேசத்தைத் தருவதற்கும், நானே உங்கள் கடவுள்+ என்று நிரூபிப்பதற்கும் உங்களை எகிப்து தேசத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தவர் நான்தான்.+

39 உங்கள் பக்கத்தில் குடியிருக்கிற சகோதரன் ஏழையாகி உங்களிடம் தன்னை விற்றுவிட்டால்,+ அடிமைபோல் அவனிடம் வேலை வாங்கக் கூடாது.+ 40 கூலியாட்களையும் உங்கள் தேசத்தில் குடியேறியிருக்கிற ஆட்களையும் நடத்துவதுபோல் நீங்கள் அவனை நடத்த வேண்டும்.+ விடுதலை வருஷம்வரை அவன் உங்களுக்கு வேலை செய்ய வேண்டும். 41 அதன்பின், பிள்ளைகளோடு அவன் தன் குடும்பத்தாரிடம் திரும்பிப்போக வேண்டும். அவன் தன்னுடைய முன்னோர்களின் நிலத்துக்கே திரும்பிப்போக வேண்டும்.+ 42 ஏனென்றால், எகிப்து தேசத்திலிருந்து நான் கூட்டிக்கொண்டு வந்த இஸ்ரவேலர்கள் என்னுடைய அடிமைகள்.+ அவர்கள் மற்றவர்களுக்குத் தங்களை அடிமையாக விற்கக் கூடாது.* 43 நீங்கள் உங்களுடைய சகோதரனைக் கொடூரமாக நடத்தக் கூடாது,+ உங்கள் கடவுளுக்குப் பயந்து நடக்க வேண்டும்.+ 44 ஒரு ஆணையோ பெண்ணையோ அடிமையாக வாங்க வேண்டுமென்றால் சுற்றியுள்ள தேசங்களிலிருந்து வாங்கலாம். 45 அதோடு, உங்கள் தேசத்தில் குடியேறியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களையும்+ உங்கள் தேசத்தில் அவர்களுக்குப் பிறந்தவர்களையும் அடிமைகளாக வாங்கலாம். அவர்கள் உங்களுடைய சொத்து. 46 உங்களுக்குப்பின் உங்களுடைய பிள்ளைகளுக்கு அவர்களை நிரந்தர சொத்தாகக் கொடுக்கலாம். அவர்களை வேலையாட்களாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், உங்கள் சகோதரர்களாகிய இஸ்ரவேலர்களைக் கொடூரமாக நடத்தக் கூடாது.+

47 உங்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களில் ஒருவன் பணக்காரனாக இருக்கும்போது, அவனுக்குப் பக்கத்தில் குடியிருக்கிற உங்கள் சகோதரன் ஏழையாகி அவனிடமோ அவன் குடும்பத்தாரில் ஒருவனிடமோ தன்னை விற்றுவிட்டால், 48 தன்னை எப்போது வேண்டுமானாலும் மீட்டுக்கொள்ள அவனுக்கு உரிமை இருக்கிறது. அவனுடைய அண்ணனோ, தம்பியோ, 49 அவனுடைய அப்பாவின் சகோதரனோ, அந்தச் சகோதரனின் மகனோ, அவனுடைய நெருங்கிய சொந்தக்காரர்களில்* வேறொருவனோ அவனை மீட்கலாம்.+

ஒருவேளை அவன் பணக்காரனாக ஆகிவிட்டால், அவனே தன்னை மீட்டுக்கொள்ள வேண்டும்.+ 50 அவன் தன்னை விற்றதுமுதல் விடுதலை வருஷம்வரை உள்ள வருஷங்களைக் கணக்குப் போட வேண்டும்.+ தன்னை விற்ற தொகையைக் கணக்குப் போட்டு, மீதமுள்ள வருஷங்களுக்கான விலையைக் கொடுத்து தன்னை மீட்டுக்கொள்ள வேண்டும்.+ அவன் வேலை செய்த நாட்களுக்கான கூலியை, ஒரு கூலியாளுக்குக் கொடுக்கப்படும் கூலியைப் போலக் கணக்கிட வேண்டும்.+ 51 விடுதலை வருஷத்துக்கு இன்னும் நிறைய வருஷங்கள் இருந்தால், மீதமுள்ள வருஷங்களுக்குத் தகுந்த விலையைக் கொடுத்து தன்னை மீட்டுக்கொள்ள வேண்டும். 52 ஆனால், விடுதலை வருஷத்துக்கு இன்னும் சில வருஷங்களே இருந்தால், மீதமுள்ள வருஷங்களுக்குத் தகுந்த விலையைக் கணக்குப் போட்டுக் கொடுத்து தன்னை மீட்டுக்கொள்ள வேண்டும். 53 அடிமையாக இருக்கும் வருஷங்களில் அவனுடைய எஜமானுக்கு அவன் ஒரு கூலியாள் போல இருக்க வேண்டும். அவனுடைய எஜமான் அவனைக் கொடூரமாக நடத்தாதபடி நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.+ 54 இப்படி அவனால் தன்னை மீட்டுக்கொள்ள முடியாவிட்டால், விடுதலை வருஷத்தில் அவனும் அவன் பிள்ளைகளும் விடுதலையாவார்கள்.+

55 ஏனென்றால், இஸ்ரவேலர்கள் எனக்குச் சொந்தமான அடிமைகள், எகிப்து தேசத்திலிருந்து நான் கூட்டிக்கொண்டுவந்த என் அடிமைகள்.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா’” என்றார்.

26 பின்பு அவர், “‘ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களை நீங்கள் உண்டாக்கக் கூடாது.+ செதுக்கப்பட்ட சிலைகளையோ+ பூஜைத் தூண்களையோ வைத்து வணங்கக் கூடாது. உங்கள் தேசத்தில் கற்சிலைகளை+ வைத்து அவற்றின் முன்னால் தலைவணங்கக் கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. 2 நான் சொன்ன ஓய்வுநாட்களை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும், என் வழிபாட்டுக் கூடாரத்துக்கு நீங்கள் பயபக்தி காட்ட வேண்டும். நான் யெகோவா.

3 நீங்கள் என்னுடைய சட்டதிட்டங்களைக் கடைப்பிடித்து என்னுடைய கட்டளைகளின்படி நடந்துவந்தால்,+ 4 அந்தந்த பருவங்களில் மழை பெய்யும்படி செய்வேன்.+ நிலம் விளைச்சல் தரும்,+ மரம் கனி கொடுக்கும். 5 திராட்சையின் அறுவடைக் காலம்வரை போரடிப்புக் காலம் நீடிக்கும். விதைப்புக் காலம்வரை திராட்சையின் அறுவடைக் காலம் நீடிக்கும். நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு உங்களுடைய தேசத்தில் பாதுகாப்பாகக் குடியிருப்பீர்கள்.+ 6 தேசத்தில் நான் சமாதானத்தைத் தருவேன்.+ நீங்கள் யாரைக் கண்டும் பயப்படாமல் நிம்மதியாகப் படுத்துத் தூங்குவீர்கள்.+ தேசத்திலிருந்து கொடிய மிருகங்களைத் துரத்தியடிப்பேன். யாரும் வாளை எடுத்துக்கொண்டு உங்களோடு போர் செய்ய வர மாட்டார்கள். 7 எதிரிகளை நீங்கள் துரத்திக்கொண்டு போவீர்கள், அவர்கள் உங்களுடைய வாளுக்குப் பலியாவார்கள். 8 உங்களில் 5 பேர் 100 பேரைத் துரத்திக்கொண்டு போவீர்கள், 100 பேர் 10,000 பேரைத் துரத்திக்கொண்டு போவீர்கள். எதிரிகள் உங்களுடைய வாளுக்குப் பலியாவார்கள்.+

9 நான் உங்கள்மேல் கருணை காட்டுவேன். உங்களுடைய வம்சத்தைத் தழைக்கச் செய்வேன்.+ உங்களுடன் செய்த ஒப்பந்தத்தைக் காப்பேன்.+ 10 உங்களுக்கு அமோக விளைச்சல் கிடைக்கும். அடுத்த வருஷம்வரை சாப்பிட்டாலும் அது தீராது. புதிய தானியத்தை வைப்பதற்காகப் பழையதைத் தூக்கிப்போடும் அளவுக்கு ஏராளமான விளைச்சல் கிடைக்கும். 11 உங்கள் நடுவில் என் வழிபாட்டுக் கூடாரத்தை அமைப்பேன்.+ உங்களை நான் ஒதுக்கித்தள்ள மாட்டேன். 12 நான் உங்கள் நடுவே நடந்து, உங்கள் கடவுளாக இருப்பேன்.+ நீங்கள் என் ஜனங்களாக இருப்பீர்கள்.+ 13 நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை நான் விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்தேன். உங்கள் நுகத்தடியை உடைத்துப்போட்டு உங்களைத் தலைநிமிர்ந்து நடக்க வைத்தேன்.

14 நீங்கள் என் பேச்சைக் கேட்காமலும், இந்த எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாமலும்,+ 15 என் சட்டதிட்டங்களை ஒதுக்கி,+ என் நீதித்தீர்ப்புகளை வெறுத்து, என் ஒப்பந்தத்தை மீறி,+ என் கட்டளைகளைக் கடைப்பிடிக்காமல் போனால், 16 நானும் என் பங்குக்கு இப்படியெல்லாம் உங்களைத் தண்டிப்பேன்: உங்களுக்குப் பீதி உண்டாக்குவேன். காசநோயாலும் கடும் காய்ச்சலாலும் உங்களை அவதிப்பட வைப்பேன். அவை உங்கள் பார்வையை மங்க வைக்கும், உங்கள் சக்தியை உறிஞ்சிவிடும். நீங்கள் விதை விதைத்தாலும் பிரயோஜனம் இல்லாமல் போகும், எதிரிகள் அவற்றைத் தின்றுவிடுவார்கள்.+ 17 நான் உங்களை ஒதுக்கித்தள்ளுவேன். எதிரிகள் உங்களை வீழ்த்துவார்கள்.+ உங்களை வெறுப்பவர்கள் உங்கள்மேல் ஏறி மிதிப்பார்கள்.+ யாரும் விரட்டாமலேயே நீங்கள் தலைதெறிக்க ஓடுவீர்கள்.+

18 அதன் பின்பும் நீங்கள் என் பேச்சைக் கேட்காவிட்டால், உங்கள் பாவங்களுக்காக ஏழு மடங்கு உங்களைத் தண்டிப்பேன். 19 உங்கள் அகங்காரத்தையும் ஆணவத்தையும் அடக்குவேன். உங்கள் வானத்தை இரும்பைப் போல மாற்றுவேன்,*+ உங்கள் பூமியைச் செம்பைப் போல ஆக்குவேன்.* 20 உங்கள் நிலத்தில் விளைச்சல் இருக்காது, மரங்களில் பழம் காய்க்காது. நீங்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும் உங்கள் சக்தியெல்லாம் வீணாய்ப்போகும்.+

21 நீங்கள் என் பேச்சைக் கேட்காமல் எனக்கு விரோதமாக நடந்துகொண்டே இருந்தால், உங்கள் பாவங்களுக்கு ஏற்றபடி இன்னும் ஏழு மடங்கு உங்களைத் தண்டிப்பேன். 22 கொடிய மிருகங்களை உங்கள் நடுவில் அனுப்புவேன்.+ அவை உங்கள் பிள்ளைகளைக் கொன்றுபோடும்,+ ஆடுமாடுகளைக் கடித்துக் குதறிவிடும். கொஞ்சம் பேர்தான் மிஞ்சுவீர்கள், உங்கள் சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கும்.+

23 இத்தனை நடந்தும் நீங்கள் திருந்தாமல்+ பிடிவாதத்தோடு எனக்கு விரோதமாக நடந்தால், 24 நானும் உங்களுக்கு விரோதமாக நடவடிக்கை எடுப்பேன். உங்கள் பாவங்களுக்காக ஏழு மடங்கு உங்களைத் தண்டிப்பேன். 25 என் ஒப்பந்தத்தை மீறியதற்காக உங்களை வாளால் பழிதீர்ப்பேன்.+ நீங்கள் நகரங்களுக்குள் ஓடி ஒளிந்தாலும் உங்கள் நடுவில் நோயைப் பரப்புவேன்.+ எதிரியின் கையில் உங்களைச் சிக்க வைப்பேன்.+ 26 உங்கள் உணவுப் பொருள்களை அழித்துப்போடுவேன்.*+ அப்போது, 10 பெண்கள் ஒரே அடுப்பில் ரொட்டி சுடுவார்கள். அதையும் அளந்து அளந்துதான் கொடுப்பார்கள்.+ நீங்கள் சாப்பிட்டாலும் உங்கள் பசி தீராது.+

27 அதன் பின்பும் நீங்கள் என் பேச்சைக் கேட்காமல் பிடிவாதத்தோடு எனக்கு விரோதமாக நடந்தால், 28 நானும் உங்களுக்கு விரோதமாக இன்னும் கடுமையான நடவடிக்கை எடுப்பேன்.+ உங்கள் பாவங்களுக்காக ஏழு மடங்கு உங்களைத் தண்டிப்பேன். 29 அதனால், உங்களுடைய மகன்களின் சதையையும் மகள்களின் சதையையும் நீங்கள் தின்பீர்கள்.+ 30 நான் உங்களுடைய ஆராதனை மேடுகளை அழிப்பேன்,+ தூபபீடங்களை உடைப்பேன். வெறும் ஜடமாயிருக்கிற அருவருப்பான* சிலைகள்மேல் உங்கள் பிணங்களைக் குவிப்பேன்.+ அருவருப்புடன் உங்களைவிட்டுத் திரும்பிக்கொள்வேன்.+ 31 உங்கள் நகரங்களை நாசம் செய்வேன்,+ உங்கள் புனித ஸ்தலங்களைப் பாழாக்குவேன். உங்களுடைய பலிகளை ஏற்றுக்கொள்ள* மாட்டேன். 32 தேசத்தைப் பாழாக்குவேன்,+ அதில் குடியிருக்கப்போகிற எதிரிகள் அதிர்ச்சியுடன் அதைப் பார்ப்பார்கள்.+ 33 பல தேசங்களுக்கு உங்களைச் சிதறிப்போகப் பண்ணுவேன்.+ நான் உருவி வீசும் வாள் உங்களைத் துரத்தும்.+ உங்கள் தேசம் பாழாக்கப்படும்,+ உங்கள் நகரங்கள் சின்னாபின்னமாகும்.

34 நீங்கள் எதிரிகளின் தேசத்தில் இருக்கும்போது உங்கள் நிலம் பாழாய்க் கிடக்கும். அது அனுபவிக்காமல்போன ஓய்வு வருஷங்களை அப்போது அனுபவிக்கும். அந்தக் காலமெல்லாம் நிலம் ஓய்ந்திருக்கும். அதற்குக் கிடைத்திருக்க வேண்டிய ஓய்வு வருஷங்கள் கிடைக்க வேண்டும்.+ 35 அந்த நிலம் பாழாய்க் கிடக்கும் காலமெல்லாம் ஓய்ந்திருக்கும். ஏனென்றால், அந்தத் தேசத்தில் நீங்கள் குடியிருந்தபோது ஓய்வுநாள் சட்டத்தின்படி நீங்கள் நிலத்துக்கு ஓய்வு தரவில்லை.

36 எதிரிகளின் தேசத்தில் மீதியாக இருப்பவர்களின்+ இதயத்தை நான் பதற வைப்பேன். காற்றில் பறக்கும் இலையின் சத்தம் கேட்டால்கூட அவர்கள் தலைதெறிக்க ஓடுவார்கள். யாரும் துரத்தாமலேயே வாளுக்குத் தப்பியோடுவது போல ஓடி விழுவார்கள்.+ 37 யாரும் துரத்தாவிட்டால்கூட வாளுக்குத் தப்பியோடுவதுபோல் ஓடி, ஒருவர்மேல் ஒருவர் மோதி விழுவார்கள். உங்களால் எதிரிகளை எதிர்த்து நிற்க முடியாது.+ 38 மற்ற தேசத்தார் மத்தியில் நீங்கள் அழிந்துபோவீர்கள்,+ எதிரிகளின் தேசம் உங்களை விழுங்கிவிடும். 39 உங்களில் மீதியாக இருப்பவர்கள் தாங்கள் செய்த குற்றத்தையும் தங்களுடைய முன்னோர்கள் செய்த குற்றத்தையும்+ நினைத்து எதிரிகளின் தேசத்தில் வாடி வதங்குவார்கள்.+ 40 அப்போது, அவர்கள் செய்த குற்றத்தையும் அவர்களுடைய முன்னோர்கள் செய்த குற்றத்தையும் துரோகத்தையும் அவர்கள் ஒத்துக்கொள்வார்கள். எனக்கு விரோதமாக நடந்து எனக்குத் துரோகம் செய்ததை ஒத்துக்கொள்வார்கள்.+ 41 அவர்கள் எனக்குத் துரோகம் செய்ததால் நானும் அவர்களுக்கு விரோதமாக நடவடிக்கை எடுத்தேன்.+ எதிரிகளின் தேசத்துக்கு அவர்களைக் கொண்டுபோனேன்.+

அவர்கள் ஒருவேளை தங்களுடைய இதயத்திலுள்ள பிடிவாத குணத்தை விட்டுவிட்டுத்+ தங்களுடைய குற்றத்துக்குத் தகுந்த தண்டனையை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்துதான் அப்படிக் கொண்டுபோனேன். 42 யாக்கோபோடு நான் செய்த ஒப்பந்தத்தையும்+ ஈசாக்கோடு நான் செய்த ஒப்பந்தத்தையும்+ ஆபிரகாமோடு நான் செய்த ஒப்பந்தத்தையும்+ நினைத்துப் பார்ப்பேன். தேசத்தையும் நான் நினைத்துப் பார்ப்பேன். 43 அவர்களால் தேசம் வெறுமையாக விடப்படும்போது, அது அனுபவிக்க வேண்டிய ஓய்வு வருஷங்களை அனுபவிக்கும்,+ அவர்கள் இல்லாமல் பாழாய்க் கிடக்கும்; அவர்கள் என்னுடைய நீதித்தீர்ப்புகளை ஒதுக்கித்தள்ளியதாலும் என் சட்டதிட்டங்களை வெறுத்ததாலும் தங்களுடைய குற்றத்துக்குத் தகுந்த தண்டனையைப் பெறுவார்கள்.+ 44 அதன் பின்பும், எதிரிகளின் தேசத்தில் நான் அவர்களை ஒரேயடியாக ஒதுக்கித்தள்ளவோ, அடியோடு அழிக்கவோ மாட்டேன்.+ அப்படிச் செய்தால் அவர்களோடு செய்த ஒப்பந்தத்தை நான் மீறுவதாக இருக்கும்.+ நான் அவர்களுடைய கடவுளாகிய யெகோவா. 45 அவர்களுடைய முன்னோர்களோடு செய்த ஒப்பந்தத்தை+ அவர்களுக்காக நான் நினைத்துப் பார்ப்பேன். நான் அவர்களுடைய கடவுள் என்பதை நிரூபிப்பதற்காக, மற்ற தேசத்தாரின் கண் முன்னாலேயே எகிப்து தேசத்திலிருந்து அவர்களுடைய முன்னோர்களைக் கூட்டிக்கொண்டு வந்தேன்.+ நான் யெகோவா’” என்றார்.

46 சீனாய் மலையில் மோசேயின் மூலம் இஸ்ரவேலர்களுக்கு யெகோவா தந்த விதிமுறைகளும் நீதித்தீர்ப்புகளும் சட்டங்களும் இவைதான்.+

27 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘ஒரு நபருக்கென்று நிர்ணயிக்கப்படும் தொகையை யெகோவாவுக்குச் செலுத்துவதாக யாராவது விசேஷமாய் நேர்ந்துகொண்டால்,+ அவரவருக்கு நிர்ணயிக்கப்படும் தொகை இதுதான்: 3 பரிசுத்த* சேக்கலின்* கணக்குப்படி, 20 வயதுமுதல் 60 வயதுவரையுள்ள ஒரு ஆணுக்கு 50 வெள்ளி சேக்கல். 4 பெண்ணுக்கு 30 சேக்கல். 5 ஐந்து வயதுமுதல் 20 வயதுவரையுள்ள ஆணுக்கு 20 சேக்கல், பெண்ணுக்கு 10 சேக்கல். 6 ஒரு மாதம்முதல் ஐந்து வயதுவரையுள்ள ஆண்பிள்ளைக்கு ஐந்து வெள்ளி சேக்கல், பெண்பிள்ளைக்கு மூன்று வெள்ளி சேக்கல்.

7 60 அல்லது அதற்கு அதிகமான வயதுடைய ஒரு ஆணுக்கு 15 சேக்கல், பெண்ணுக்கு 10 சேக்கல். 8 ஆனால், நிர்ணயிக்கப்பட்ட இந்தத் தொகையைச் செலுத்த முடியாதளவுக்கு அவன் பரம ஏழையாக இருந்தால்,+ குருவானவரின் முன்னால் வந்து நிற்க வேண்டும். நேர்ந்துகொண்டவனின் பண வசதிக்குத் தகுந்தபடி+ குருவானவர் அந்தத் தொகையை நிர்ணயிக்க வேண்டும்.

9 ஆனால், பலி செலுத்துவதற்கு ஏற்ற ஒரு மிருகத்தை யெகோவாவுக்குக் கொடுப்பதாக நேர்ந்துகொண்டால், அவன் யெகோவாவுக்கு எதைக் கொடுத்தாலும் அது பரிசுத்தமாக இருக்கும். 10 அதற்குப் பதிலாக வேறொன்றை அவன் செலுத்தக் கூடாது. குறை உள்ளதற்குப் பதிலாக குறை இல்லாததையும், குறை இல்லாததற்குப் பதிலாக குறை உள்ளதையும் செலுத்தக் கூடாது. அப்படி ஒரு மிருகத்துக்குப் பதிலாக வேறொரு மிருகத்தை மாற்றிக் கொடுத்தால், இரண்டுமே கடவுளுக்குச் சொந்தமாகிவிடும். 11 அது யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுப்பதற்குத் தகுதியில்லாத அசுத்தமான மிருகமாக+ இருந்தால், அந்த மிருகத்தை குருவானவருக்கு முன்னால் நிறுத்த வேண்டும். 12 அந்த மிருகத்துக்கு எந்தளவு குறை இருக்கிறதென்று குருவானவர் பார்த்து, அதற்கு ஏற்றபடி அதன் மதிப்பை நிர்ணயிப்பார். அவர் நிர்ணயிப்பதே அதன் மதிப்பாகும். 13 ஒருவேளை அவன் அதை மீட்டுக்கொள்ள விரும்பினால், நிர்ணயிக்கப்பட்ட மதிப்போடு ஐந்திலொரு பங்கைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.+

14 ஒருவன் தன் வீட்டை யெகோவாவுக்குப் பரிசுத்தமானதாக அர்ப்பணிக்க நேர்ந்துகொண்டால், அது தரமானதா இல்லையா என்பதைக் குருவானவர் பார்த்து அதன் மதிப்பை நிர்ணயிப்பார். அவர் அதற்கு நிர்ணயிக்கும் மதிப்புதான் அதன் விலையாக இருக்கும்.+ 15 ஒருவேளை, அந்த வீட்டை அர்ப்பணிப்பதாக நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள விரும்பினால், நிர்ணயிக்கப்பட்ட மதிப்போடு ஐந்திலொரு பங்கைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும். அப்போது, அது அவனுக்குச் சொந்தமாகும்.

16 ஒருவன் தன்னுடைய வயலில் ஒரு பகுதியை யெகோவாவுக்கு அர்ப்பணிப்பதாக நேர்ந்துகொண்டால், அதில் எவ்வளவு விதை விதைக்கலாம் என்பதைப் பொறுத்து அதன் மதிப்பு நிர்ணயிக்கப்படும். அதாவது, ஒரு ஹோமர் அளவு* பார்லி விதைக்கப்படுகிற வயலின் மதிப்பு 50 வெள்ளி சேக்கல். 17 அவன் தன்னுடைய வயலை அர்ப்பணிப்பதாக விடுதலை* வருஷத்தில்+ நேர்ந்துகொண்டால் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பு மாறாது. 18 தன்னுடைய வயலை அர்ப்பணிப்பதாக விடுதலை வருஷத்துக்குப் பிறகு நேர்ந்துகொண்டால், அடுத்த விடுதலை வருஷம்வரை உள்ள வருஷங்களைக் குருவானவர் கணக்குப் போட்டு, அதற்கு ஏற்றபடி அதன் விலையைக் குறைக்க வேண்டும்.+ 19 ஒருவேளை, அந்த வயலை நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள விரும்பினால், நிர்ணயிக்கப்பட்ட மதிப்போடு ஐந்திலொரு பங்கைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும். அப்போது, அது அவனுக்குச் சொந்தமாகும். 20 அந்த வயலை அர்ப்பணிப்பதாக நேர்ந்துகொண்டவன் அதை மீட்காமல் வேறொருவனுக்கு விற்றால், அதன் பிறகு அதை மீட்கவே முடியாது. 21 விடுதலை வருஷத்தில் அது யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும். அது பரிசுத்தமானதாகவும் குருமார்களின் சொத்தாகவும் இருக்கும்.+

22 ஒருவன் யெகோவாவுக்கு அர்ப்பணிப்பதாக நேர்ந்துகொண்ட வயல் பரம்பரை வயலாக இல்லாமல் விலைக்கு வாங்கப்பட்டதாக இருந்தால்,+ 23 விடுதலை வருஷம்வரை உள்ள வருஷங்களுக்கான தொகையை குருவானவர் கணக்குப் போட வேண்டும். அதே நாளில், அந்தத் தொகையை அவன் குருவானவருக்குக் கொடுக்க வேண்டும்.+ அது யெகோவாவுக்குப் பரிசுத்தமானது. 24 அந்த வயலை அவன் யாரிடமிருந்து வாங்கினானோ அவனுக்கே விடுதலை வருஷத்தில் அது சொந்தமாகும்.+

25 ஒவ்வொன்றின் மதிப்பும் பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி மதிப்பிடப்பட வேண்டும். ஒரு சேக்கலின் மதிப்பு 20 கேரா.*

26 மிருகங்களின் முதல் குட்டிகளை அர்ப்பணிப்பதாக யாரும் நேர்ந்துகொள்ளக் கூடாது. ஏனென்றால், முதலில் பிறக்கிற எல்லாமே யெகோவாவுக்குத்தான் சொந்தம்.+ அது மாடாக இருந்தாலும் சரி, ஆடாக இருந்தாலும் சரி, அது ஏற்கெனவே யெகோவாவுக்குச் சொந்தமானது.+ 27 ஒருவேளை, அது அசுத்தமான மிருகங்களில் ஒன்றாக இருந்தால், அது மீட்கப்படலாம். நிர்ணயிக்கப்பட்ட மதிப்போடு ஐந்திலொரு பங்கைச் சேர்த்துக் கொடுத்து அதை அவன் மீட்க வேண்டும்.+ அப்படி மீட்காவிட்டால், நிர்ணயிக்கப்பட்ட மதிப்பின்படி குருவானவர் அதை விற்க வேண்டும்.

28 ஒருவன் தனக்குச் சொந்தமானதை எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் யெகோவாவுக்கு அர்ப்பணம் செய்துவிட்டால் அதை விற்கவோ மீட்கவோ கூடாது, அது மனுஷனோ மிருகமோ வயலோ எதுவாக இருந்தாலும் சரி. அர்ப்பணிக்கப்பட்ட எல்லாமே யெகோவாவுக்கு மிகவும் பரிசுத்தமானது.+ 29 அழிவுக்கென்று ஒதுக்கி வைக்கப்பட்ட எவனும் மீட்கப்படக் கூடாது.+ அவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+

30 விளைச்சலில் பத்திலொரு பாகம்* யெகோவாவுக்குத்தான் சொந்தம்,+ அது வயலில் விளைகிற பயிர்களாக இருந்தாலும் சரி, மரங்களில் காய்க்கிற பழங்களாக இருந்தாலும் சரி. அது யெகோவாவுக்குப் பரிசுத்தமானது. 31 அவற்றில் எதையாவது மீட்டுக்கொள்ள ஒருவன் விரும்பினால் அதன் மதிப்போடு ஐந்திலொரு பங்கைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும். 32 மாடுகளிலும் ஆடுகளிலும் பத்தில் ஒன்றை யெகோவாவுக்குக் கொடுக்க வேண்டும். மேய்ப்பன் தன்னுடைய மந்தையை எண்ணும்போது* ஒவ்வொரு பத்தாவது மிருகத்தையும் கடவுளுக்காக ஒதுக்கிவைக்க வேண்டும். பத்தாவது மிருகம் ஒவ்வொன்றும் பரிசுத்தமானது. 33 அது குறை உள்ளதா குறை இல்லாததா என்று அவன் பார்க்கக் கூடாது, அதை மாற்றவும் கூடாது. அப்படி மாற்றினால் இரண்டுமே கடவுளுக்குச் சொந்தமாகிவிடும்.+ அவற்றை மீட்க முடியாது’” என்றார்.

34 இஸ்ரவேலர்களுக்கு மோசே மூலம் சீனாய் மலையில் யெகோவா கொடுத்த கட்டளைகள் இவைதான்.+

அநேகமாக, தேன்கூட்டிலிருந்து எடுக்கப்படும் தேனை அல்ல, ஆனால் பழச்சாற்றைக் குறிக்கலாம்.

வே.வா., “நல்லுறவு.”

அதாவது, “சமாதான பலியில் கடவுளுடைய பங்காக.”

அதாவது, “சமாதான பலியில் கடவுளுடைய பங்காக.”

அதாவது, “தலைமைக் குரு.”

வே.வா., “மூப்பர்கள்.”

பாவம் செய்தவருக்கோ அதைப் பற்றிச் சாட்சி சொல்லாதவருக்கோ சாபம் வரும் என்பது இந்த அறிவிப்பில் அநேகமாக உட்பட்டிருக்கலாம்.

அவன் தன்னுடைய வாக்கை நிறைவேற்றாததைப் பற்றி இங்கே சொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

அதாவது, “சுமார் ஒரு கிலோ.”

யெகோவாவுக்குச் செலுத்தப்பட்ட அல்லது அர்ப்பணிக்கப்பட்ட எல்லாவற்றையும் இவை குறிக்கின்றன.

வே.வா., “பரிசுத்த இடத்து.”

ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

அதாவது, “லினன்.”

அதாவது, “சுமார் ஒரு கிலோ.”

அதாவது, “நெஞ்சுப் பகுதியையும்.”

ஒருவேளை, “குளிக்கச் சொன்னார்.”

வே.வா., “அதாவது பரிசுத்த மகுடத்தை.”

அதாவது, “நெஞ்சுப் பகுதியை.”

நே.மொ., “குருத்துவ நியமிப்புக்குரிய கூடையிலுள்ள.”

வே.வா., “மூப்பர்களையும்.”

அதாவது, “நெஞ்சுப் பகுதிகளின்.”

வே.வா., “தகாத விதத்தில்.”

அதாவது, “நெஞ்சுப் பகுதியையும்.”

வே.வா., “நிலத்தில் வாழும் மிருகங்கள்.”

இது கற்பாறைகளுக்கு நடுவே வாழ்கிற ஒருவகையான பெரிய முயல்.

வே.வா., “பொருக்கு.” இது, இரத்தமும் நீரும் கசிந்து, காய்ந்துபோகும்போது உண்டாகும் கெட்டியான தோல்.

நே.மொ., “மீசையை.”

அதாவது, “லினன்.”

பாவு நூல் என்பது தறியில் நீளவாட்டில் செல்லும் இழை.

ஊடை நூல் என்பது தறியில் குறுக்குவாட்டில் செல்லும் இழை.

இந்தத் தொழுநோய் ஒருவகை பூஞ்சணமாகவோ பூஞ்சக்காளானாகவோ இருந்திருக்கலாம், உறுதியாகத் தெரியாது. சொல் பட்டியலைப் பாருங்கள்.

அதாவது, “சுமார் 3 கிலோவும்.”

நே.மொ., “ஒரு லாகு அளவும்.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

அதாவது, “சுமார் ஒரு கிலோவும்.”

இந்தத் தொழுநோய் ஒருவகை பூஞ்சணமாகவோ பூஞ்சக்காளானாகவோ இருந்திருக்கலாம், உறுதியாகத் தெரியாது. சொல் பட்டியலைப் பாருங்கள்.

வே.வா., “பொருக்குகளும்.” இவை, இரத்தமும் நீரும் கசிந்து காய்ந்துபோகும்போது உண்டாகும் கெட்டியான தோல்கள்.

சேணம் என்பது மிருகங்களின் முதுகில் உட்கார்ந்து சவாரி செய்வதற்குப் போடப்படும் தோலினால் ஆன இருக்கை.

அதாவது, “லினன்.”

விரதம் இருப்பதன் மூலமோ வேறு விதத்தின் மூலமோ தங்களைத் தாங்களே கஷ்டப்படுத்திக்கொள்வதைக் குறிக்கலாம்.

விரதம் இருப்பதன் மூலமோ வேறு விதத்தின் மூலமோ தங்களைத் தாங்களே கஷ்டப்படுத்திக்கொள்வதைக் குறிக்கலாம்.

வே.வா., “இரத்தப்பழி.”

நே.மொ., “இனியும் வெள்ளாடுகளுக்கு.”

வே.வா., “பழக்கவழக்கங்களை.”

அல்லது, “சித்தி.”

பிள்ளையை நரபலி கொடுப்பதையும் இது அர்த்தப்படுத்தலாம்.

இந்த வார்த்தை, ஒருவருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் இருப்பதையும் குறிக்கலாம்.

அல்லது, “அடுத்தவர்களுடைய உயிர் ஆபத்தில் இருக்கும்போது நீங்கள் பக்கத்தில் நின்று வேடிக்கை பார்க்கக் கூடாது.”

வே.வா., “வன்மம்.”

வே.வா., “சக மனிதர்மேலும்.”

வே.வா., “வெட்டிக்கொள்ள.”

இது புறமத பழக்கங்களைக் குறிக்கலாம்.

நே.மொ., “எப்பாவையும்.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

நே.மொ., “ஹின் அளவையும்.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

பிள்ளையை நரபலி கொடுப்பதையும் இது அர்த்தப்படுத்தலாம்.

வே.வா., “பழக்கவழக்கங்களை.”

நே.மொ., “தன்னோடு இருக்கிற கன்னிப் பெண்ணாகிய.”

அல்லது, “நோஞ்சானாக இருப்பவன்.”

அதாவது, “ஆரோனின் வம்சத்தைச் சேராதவன்.”

அதாவது, “ஆரோனின் வம்சத்தைச் சேராதவர்கள்.”

அதாவது, “சுமார் 2 கிலோ.”

நே.மொ., “ஒரு ஹின் அளவில் நான்கில் ஒரு பங்கு.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

நே.மொ., “ஓய்வுநாட்களை.”

அதாவது, “சுமார் 2 கிலோ.”

விரதம் இருப்பதன் மூலமோ வேறு விதத்தின் மூலமோ தங்களைத் தாங்களே கஷ்டப்படுத்திக்கொள்வதைக் குறிக்கலாம்.

அல்லது, “அன்று விரதமிருக்காத.”

அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கிலுள்ள.”

அதாவது, “சுமார் 2 கிலோ.”

வே.வா., “நீதித்தீர்ப்புதான்.”

அதாவது, “அடிமைத்தனத்திலிருந்து விடுதலையை.”

வே.வா., “யூபிலி.”

நே.மொ., “ஒரு அடிமையை விற்பதுபோல் அவர்கள் தங்களை விற்கக் கூடாது.”

வே.வா., “இரத்த சொந்தத்தில்.”

அதாவது, “வானம் மழை பொழியாதபடி செய்வேன்.”

அதாவது, “பூமி வறண்டுபோகும்படி செய்வேன்.”

நே.மொ., “ரொட்டிக் கோல்களை முறித்துப்போடுவேன்.” இவை ஒருவேளை ரொட்டிகளை மாட்டி வைக்கப் பயன்படுத்தப்பட்ட கோல்களாக இருந்திருக்கலாம்.

இதற்கான எபிரெய வார்த்தை “சாணம்” என்ற வார்த்தையோடு தொடர்புடையதாக இருக்கலாம். வெறுப்பைக் காட்டுவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது.

வே.வா., “பலிகளின் இனிய வாசனையை முகர.”

வே.வா., “பரிசுத்த இடத்து.”

ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

ஒரு ஹோமர் என்பது 220 லி. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

வே.வா., “யூபிலி.”

வே.வா., “பரிசுத்த இடத்து.”

ஒரு கேராவின் எடை அரை கிராமுக்கும் சற்று அதிகமாகும். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

வே.வா., “தசமபாகம்.”

மேய்ப்பர்கள் தொழுவத்துக்கு உள்ளே அல்லது வெளியே விலங்குகளை அனுப்பும்போது தங்கள் கோலுக்குக் கீழாக ஒவ்வொன்றாய் அனுப்பி அவற்றை எண்ணினார்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்