உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • nwt உபாகமம் 1:1-34:12
  • உபாகமம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உபாகமம்
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
உபாகமம்

உபாகமம்

1 யோர்தான் பகுதிக்குப் பக்கத்திலுள்ள வனாந்தரத்தில், சூபுக்கு எதிரிலும் பாரான், தோப்பேல், லாபான், ஆஸ்ரோத், திசாகாப் ஆகியவற்றுக்கு இடையிலும் உள்ள பாலைநிலத்தில் இஸ்ரவேலர்கள் இருந்தபோது, மோசே அவர்கள் எல்லாரிடமும் சொன்ன விஷயங்கள்தான் இவை. 2 ஓரேபிலிருந்து சேயீர் மலைப்பகுதியின் வழியாக காதேஸ்-பர்னேயாவுக்குப்+ போக 11 நாட்கள் ஆகும். 3 40-ஆம் வருஷம்,+ 11-ஆம் மாதம், முதலாம் நாளில், இஸ்ரவேலர்களுக்காக யெகோவா கொடுத்த எல்லா கட்டளைகளையும் மோசே அவர்களுக்குச் சொன்னார். 4 அதாவது, எஸ்போனில் வாழ்ந்துவந்த எமோரியர்களின் ராஜாவான சீகோனைத் தோற்கடித்த பின்பும்,+ அஸ்தரோத்தில் வாழ்ந்துவந்த பாசானின் ராஜாவான ஓகை+ எத்ரேயில்+ தோற்கடித்த பின்பும்* அவற்றைச் சொன்னார். 5 மோவாப் தேசத்திலுள்ள யோர்தான் பிரதேசத்தில் இந்தத் திருச்சட்டத்தை மோசே விளக்கிச் சொன்னார்.+ அப்போது அவர்,

6 “ஓரேபில் நம் கடவுளாகிய யெகோவா நம்மிடம், ‘இந்த மலைப்பகுதியில் நீங்கள் ரொம்பக் காலம் தங்கிவிட்டீர்கள்.+ 7 இப்போது நீங்கள் திரும்பி, எமோரியர்களின்+ மலைப்பகுதிக்கும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள அரபாவுக்கும்+ மத்திய மலைப்பகுதிக்கும் சேப்பெல்லாவுக்கும் நெகேபுக்கும் கடலோரப் பகுதிக்கும்+ போங்கள். கானானியர்களின் தேசத்துக்கும் போங்கள். லீபனோன்*+ வரைக்கும், பெரிய ஆறாகிய யூப்ரடிஸ்*+ வரைக்கும் போங்கள். 8 இதோ, அந்தத் தேசத்தை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். உங்களுடைய முன்னோர்களான ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும்+ யாக்கோபுக்கும்+ அவர்களுடைய சந்ததிக்கும்+ தருவதாக யெகோவா வாக்குக் கொடுத்த அந்தத் தேசத்துக்குப் போய் அதைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்’ என்றார்.

9 அந்தச் சமயத்தில் நான் உங்களிடம், ‘இனி என்னால் தனியாளாக உங்களைக் கவனித்துக்கொள்ள முடியாது.+ 10 ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை ஏராளமாகப் பெருக வைத்திருக்கிறார். நீங்கள் இப்போது வானத்து நட்சத்திரங்களைப் போல எண்ண முடியாதளவுக்கு இருக்கிறீர்கள்.+ 11 உங்கள் முன்னோர்களின் கடவுளான யெகோவா உங்களை இதைவிட 1,000 மடங்கு பெருக வைக்கட்டும்,+ அவர் கொடுத்த வாக்கின்படியே உங்களை ஆசீர்வதிக்கட்டும்.+ 12 ஆனால், நான் ஒருவனே எப்படி உங்கள் எல்லாரையும் கவனித்துக்கொள்ள முடியும்? நான் ஒருவனே எப்படி உங்களுடைய பிரச்சினைகளையும் வாக்குவாதங்களையும் தீர்த்துவைக்க முடியும்?+ 13 அதனால், ஞானமும் விவேகமும் அனுபவமும் உள்ள ஆண்களை உங்களுடைய கோத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுங்கள். நான் அவர்களை உங்களுக்குத் தலைவர்களாக நியமிப்பேன்’+ என்று சொன்னேன். 14 அதற்கு நீங்கள் என்னிடம், ‘உங்களுடைய ஆலோசனை நல்ல ஆலோசனை’ என்று சொன்னீர்கள். 15 அதனால், ஞானமும் அனுபவமும் உள்ள உங்களுடைய கோத்திரத் தலைவர்களை 1,000 பேருக்குத் தலைவர்களாகவும், 100 பேருக்குத் தலைவர்களாகவும், 50 பேருக்குத் தலைவர்களாகவும், 10 பேருக்குத் தலைவர்களாகவும், அதிகாரிகளாகவும் நியமித்தேன்.+

16 அந்தச் சமயத்தில் நான் உங்களுடைய நியாயாதிபதிகளிடம், ‘நீங்கள் வழக்கு விசாரிக்கும்போது, அது இஸ்ரவேலனுக்கும் இஸ்ரவேலனுக்கும் இடையே இருந்தாலும் சரி, இஸ்ரவேலனுக்கும் மற்ற தேசத்தைச் சேர்ந்தவனுக்கும் இடையே இருந்தாலும் சரி,+ நீதியின்படி தீர்ப்பு கொடுங்கள்.+ 17 நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது பாரபட்சம் காட்டக் கூடாது.+ செல்வாக்குள்ள மனுஷனின் நியாயத்தைக் கேட்பது போலவே சாதாரண மனுஷனின் நியாயத்தையும் கேட்க வேண்டும்.+ மனுஷர்களுக்குப் பயப்படாதீர்கள்,+ ஏனென்றால் நீங்கள் கடவுளின் சார்பாகத் தீர்ப்பு சொல்கிறீர்கள்.+ ஒரு வழக்கைத் தீர்ப்பது உங்களுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தால், அதை என்னிடம் கொண்டுவாருங்கள். நான் அதை விசாரிப்பேன்’+ என்று சொன்னேன். 18 நீங்கள் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் அப்போது நான் உங்களுக்குச் சொன்னேன்.

19 பின்பு, நம் கடவுளாகிய யெகோவாவின் கட்டளைப்படி, ஓரேபிலிருந்து புறப்பட்டு பயங்கரமான பெரிய வனாந்தரம் வழியாகப் போனோம்.+ எமோரியர்களின் மலைப்பகுதிக்குப் போகும் வழியில் அந்த வனாந்தரத்தை நீங்கள் பார்த்தீர்களே.+ கடைசியில் காதேஸ்-பர்னேயாவுக்கு வந்துசேர்ந்தோம்.+ 20 அப்போது நான் உங்களிடம், ‘நம் கடவுளாகிய யெகோவா கொடுக்கப்போகிற எமோரியர்களின் மலைப்பகுதிக்கு நீங்கள் வந்துசேர்ந்திருக்கிறீர்கள். 21 இதோ, உங்கள் கடவுளாகிய யெகோவா இந்தத் தேசத்தை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறார். உங்கள் முன்னோர்களின் கடவுளாகிய யெகோவா உங்களுக்குச் சொன்னபடி, நீங்கள் போய் அதைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்.+ பயப்படாதீர்கள், திகிலடையாதீர்கள்’ என்று சொன்னேன்.

22 ஆனால், நீங்கள் எல்லாரும் என்னிடம் வந்து, ‘அந்தத் தேசத்தைப் பார்த்துவிட்டு வருவதற்கு நாம் ஆட்களை அனுப்பலாம். நாம் எந்த வழியாகப் போக வேண்டும், எப்படிப்பட்ட நகரங்களைத் தாண்டிப் போக வேண்டும் என்பதையெல்லாம் அவர்கள் பார்த்துவிட்டு வந்து நமக்குச் சொல்லட்டும்’+ என்று சொன்னீர்கள். 23 அந்த ஆலோசனை எனக்கு நல்லதாகப் பட்டது. அதனால், ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவர் என்று 12 ஆண்களைத் தேர்ந்தெடுத்தேன்.+ 24 அவர்கள் புறப்பட்டு மலைப்பகுதிக்குப் போய்,+ எஸ்கோல் பள்ளத்தாக்கை* அடைந்து, அந்தத் தேசத்தை உளவு பார்த்தார்கள். 25 அங்கு விளைந்த பழங்களில் சிலவற்றைச் சுமந்துகொண்டு வந்தார்கள். அதோடு, ‘நம் கடவுளாகிய யெகோவா நமக்குக் கொடுக்கப்போகிற தேசம் நல்ல தேசம்’+ என்று சொன்னார்கள். 26 ஆனால், நீங்கள் அங்கு போக விரும்பவில்லை, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கட்டளையை மீறி நடந்தீர்கள்.+ 27 உங்களுடைய கூடாரங்களில் முணுமுணுத்துக்கொண்டே இருந்தீர்கள். ‘யெகோவா நம்மை வெறுக்கிறார், நம்மை எமோரியர்களின் கையில் சிக்க வைத்து அழிப்பதற்காகத்தான் எகிப்திலிருந்து கொண்டுவந்திருக்கிறார். 28 நாம் போகப்போகிற இடம் எப்படி இருக்குமோ? அதைப் பார்த்துவிட்டு வந்த நம் சகோதரர்கள், “அங்கிருக்கிற ஆட்கள் நம்மைவிட பலசாலிகள், உயரமானவர்கள். அவர்களுடைய நகரங்கள் ரொம்பவே பெரியதாக இருக்கின்றன. அவற்றின் மதில்கள் வானத்தைத் தொடுமளவுக்கு உயரமாக இருக்கின்றன.+ அங்கே நாங்கள் ஏனாக்கியர்களைப்+ பார்த்தோம்” என்றெல்லாம் சொல்லி பீதியைக் கிளப்புகிறார்களே’+ என்று புலம்பினீர்கள்.

29 அப்போது நான் உங்களிடம், ‘அவர்களை நினைத்துத் திகிலடையாதீர்கள், பயப்படாதீர்கள்.+ 30 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் முன்னால் போய், உங்கள் கண்ணெதிரே+ எகிப்தியர்களோடு போர் செய்தது போல இப்போதும் உங்களுக்காகப் போர் செய்வார்.+ 31 வனாந்தரத்தில் நீங்கள் நடந்துவந்தபோது, ஒரு அப்பா தன் பிள்ளையைத் தூக்கிச் சுமப்பது போல உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை வழியெல்லாம் தூக்கிச் சுமந்து இந்த இடத்துக்குக் கொண்டுவந்ததை நீங்கள் பார்த்தீர்களே’ என்று சொன்னேன். 32 இப்படியெல்லாம் நடந்தும், உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் நீங்கள் விசுவாசம் வைக்கவில்லை.+ 33 நீங்கள் முகாம்போட வேண்டிய இடத்தைப் பார்த்துச் சொல்வதற்காக* அவர் உங்களுக்கு முன்னால் போனாரே. ராத்திரியில் நெருப்பின் மூலமாகவும் பகலில் மேகத்தின் மூலமாகவும் உங்களுக்கு வழிகாட்டினாரே.+

34 இப்படி நீங்கள் முணுமுணுத்துக்கொண்டே இருந்ததை யெகோவா கேட்டார். அதனால், அவர் பயங்கர கோபத்தோடு, 35 ‘உங்கள் முன்னோர்களுக்குத் தருவதாக நான் வாக்குக் கொடுத்த நல்ல தேசத்தை இந்தக் கெட்ட தலைமுறையைச் சேர்ந்த ஒருவர்கூட பார்க்கப் போவதில்லை.+ 36 எப்புன்னேயின் மகன் காலேப் மட்டும்தான் அதைப் பார்ப்பான். யெகோவாவாகிய எனக்கு அவன் முழு இதயத்தோடு கீழ்ப்படிந்ததால் அவனுடைய காலடி பட்ட இடத்தை அவனுக்கும் அவன் வம்சத்தாருக்கும் கொடுப்பேன்.+ 37 (உங்களால் யெகோவா என்மேலும் கோபப்பட்டு, “நீயும்கூட அங்கே போக மாட்டாய்.+ 38 உன் ஊழியனும் நூனின் மகனுமாகிய யோசுவாதான்+ அந்தத் தேசத்துக்குப் போவான்.+ அவனுக்குத் தைரியம் கொடு,*+ ஏனென்றால் இஸ்ரவேலர்கள் அந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள அவன்தான் உதவுவான்” என்றார்.) 39 உங்கள் பிள்ளைகளை அந்தத் தேசத்தார் பிடித்து வைத்துக்கொள்வார்கள் என்று சொன்னீர்களே,+ இன்றைக்கு நல்லது கெட்டது தெரியாமல் இருக்கிற அந்தப் பிள்ளைகள்தான் அங்கே போவார்கள். அவர்களுக்கு நான் அந்தத் தேசத்தைத் தருவேன், அவர்கள் அதைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.+ 40 ஆனால், நீங்கள் இங்கிருந்து திரும்பி, செங்கடலுக்குப் போகும் வழியாக வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப் போக வேண்டும்’+ என்று ஆணையிட்டுச் சொல்லிவிட்டார்.+

41 அதற்கு நீங்கள் என்னிடம், ‘நாங்கள் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிட்டோம். எங்கள் கடவுளாகிய யெகோவா கட்டளை கொடுத்தபடியே இப்போது போய்ப் போர் செய்கிறோம்’ என்று சொன்னீர்கள். பின்பு, நீங்கள் ஒவ்வொருவரும் போர் ஆயுதங்களை எடுத்துக்கொண்டீர்கள். மலைமேல் ஏறிப்போய் அவர்களைச் சுலபமாக வீழ்த்திவிடலாம் என்று நினைத்தீர்கள்.+ 42 ஆனால் யெகோவா என்னிடம், ‘நீ இஸ்ரவேலர்களைப் பார்த்து, “நீங்கள் போய்ப் போர் செய்யக் கூடாது. நான் உங்களோடு இருக்க மாட்டேன்.+ என் பேச்சை மீறி நீங்கள் போனால், எதிரிகள் உங்களை வீழ்த்திவிடுவார்கள்” என்று சொல்’ என்றார். 43 அதை நான் உங்களிடம் சொன்னேன், ஆனால் நீங்கள் அதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. யெகோவாவின் கட்டளையை மீறி நடந்தீர்கள். அகங்காரத்தோடு* மலைமேல் ஏறிப் போனீர்கள். 44 அப்போது, அந்த மலையில் வாழ்ந்துவந்த எமோரியர்கள் உங்களுக்கு எதிராக வந்து, தேனீக்கள் துரத்துவதைப் போல உங்களை சேயீருக்குத் துரத்தியடித்தார்கள். ஓர்மா வரைக்கும் உங்களைச் சிதறிப்போக வைத்தார்கள். 45 அதனால், நீங்கள் திரும்பி வந்து யெகோவாவின் முன்னால் புலம்பி அழுதீர்கள். அதை யெகோவா கேட்கவும் இல்லை, கண்டுகொள்ளவும் இல்லை. 46 அதனால்தான், காதேசில் நீங்கள் பல நாட்கள் தங்கியிருக்க வேண்டியிருந்தது” என்றார்.

2 பிறகு மோசே, “அதன்பின் யெகோவா என்னிடம் சொன்னபடியே நாம் அங்கிருந்து திரும்பி, செங்கடலுக்குப் போகும் வழியாக வனாந்தரத்துக்குப் புறப்பட்டோம்.+ சேயீர் மலைப்பகுதியைச் சுற்றிப் பல நாட்கள் பயணம் செய்தோம். 2 கடைசியில் யெகோவா என்னிடம், 3 ‘இந்த மலைப்பகுதியைச் சுற்றிப் பயணம் செய்தது போதும். இப்போது வடதிசைக்குப் போங்கள். 4 ஜனங்களுக்கு நீ இந்தக் கட்டளைகளைக் கொடு: “சேயீரில் வாழ்கிற+ உங்கள் சகோதரர்களாகிய ஏசாவின் வம்சத்தாருடைய+ எல்லையைக் கடக்கப்போகிறீர்கள். அவர்கள் உங்களைப் பார்த்துப் பயப்படுவார்கள்.+ நீங்கள் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். 5 அவர்களோடு எந்த வம்புக்கும் போகக் கூடாது.* அவர்களுடைய தேசத்தில் ஒரு அடி நிலத்தைக்கூட நான் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன். ஏனென்றால், சேயீர் மலைப்பகுதியை ஏசாவுக்குக் கொடுத்திருக்கிறேன்.+ 6 அவர்களிடமிருந்து உணவையும் தண்ணீரையும் நீங்கள் பணம் கொடுத்து வாங்க வேண்டும்.+ 7 உங்கள் கடவுளாகிய யெகோவா நீங்கள் செய்த எல்லாவற்றையும் ஆசீர்வதித்திருக்கிறார். இவ்வளவு பெரிய வனாந்தரத்தில் நீங்கள் எடுத்துவைத்த ஒவ்வொரு அடியையும் அவர் பார்த்திருக்கிறார். இந்த 40 வருஷங்களாக உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களோடு இருந்திருக்கிறார், உங்களுக்கு ஒரு குறையும் இருந்ததில்லை”’+ என்று சொன்னார். 8 அதனால் அரபா, ஏலாத், எசியோன்-கேபேர்+ வழியாகப் போகாமல், சேயீரில் வாழ்கிற நம் சகோதரர்களாகிய ஏசாவின் வம்சத்தாருடைய+ எல்லையைக் கடந்துபோனோம்.

பின்பு அங்கிருந்து திரும்பி, மோவாப் வனாந்தரத்துக்குப்+ போகும் வழியாகப் பயணம் செய்தோம். 9 அப்போது யெகோவா என்னிடம், ‘மோவாப் தேசத்தாரோடு எந்த வம்புக்கும் போகாதீர்கள், அவர்களோடு போர் செய்யாதீர்கள். அவர்களுடைய தேசத்தில் எந்த இடத்தையும் நான் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன். ஏனென்றால், லோத்து வம்சத்தாருக்கு+ ஆர் நகரத்தைக் கொடுத்திருக்கிறேன். 10 (முன்பு அங்கு ஏமியர்கள்+ வாழ்ந்துவந்தார்கள். அவர்கள் ஏனாக்கியர்களைப் போல ஏராளமாக இருந்தார்கள். அவர்களைப் போலவே பலசாலிகளாகவும், உயரமானவர்களாகவும் இருந்தார்கள். 11 ரெப்பாயீமியர்களும்+ பார்ப்பதற்கு ஏனாக்கியர்களைப்+ போல் இருந்தார்கள். மோவாபியர்கள் அவர்களை ஏமியர்கள் என்று அழைத்தார்கள். 12 சேயீரில் முன்பு ஓரியர்கள்+ வாழ்ந்தார்கள். ஆனால், ஏசாவின் வம்சத்தார் அவர்களை ஒழித்துக்கட்டிவிட்டு அங்கே குடியேறினார்கள்.+ இஸ்ரவேலர்களும் அவர்களுக்குக் கிடைக்கப்போகும் தேசத்தில் அப்படித்தான் செய்வார்கள். அந்தத் தேசத்தை யெகோவா நிச்சயம் அவர்களுக்குக் கொடுப்பார்.) 13 அதனால், நீங்கள் சேரெத் பள்ளத்தாக்கை* கடந்து போங்கள்’ என்றார். அதன்படியே, நாம் சேரெத் பள்ளத்தாக்கைக்+ கடந்து போனோம். 14 காதேஸ்-பர்னேயாவிலிருந்து நடக்கத் தொடங்கி, சேரெத் பள்ளத்தாக்கைக் கடப்பதற்குள் 38 வருஷங்கள் ஓடிவிட்டன. அதற்குள், போர்வீரர்களாகிய அந்தத் தலைமுறையைச் சேர்ந்த எல்லாரும் யெகோவா ஆணையிட்டுச் சொன்னபடியே இறந்துபோனார்கள்.+ 15 அவர்கள் நம் நடுவிலிருந்து அடியோடு ஒழிந்துபோகும்வரை யெகோவா அவர்களுக்கு விரோதமாக இருந்தார்.+

16 அந்தப் போர்வீரர்கள் எல்லாரும் இறந்தவுடன்,+ 17 யெகோவா மறுபடியும் என்னிடம், 18 ‘இன்றைக்கு நீங்கள் மோவாப் பிரதேசத்தை, அதாவது ஆர் நகரத்தை, கடந்துபோக வேண்டும். 19 அம்மோனியர்களின் எல்லையை நெருங்கும்போது, அவர்களுக்குத் தொல்லை கொடுக்காமலும் அவர்களைச் சண்டைக்கு இழுக்காமலும் இருங்கள். அவர்களுடைய தேசத்தில் எந்த இடத்தையும் நான் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன். ஏனென்றால், அதை லோத்து வம்சத்தாருக்குக் கொடுத்திருக்கிறேன்.+ 20 அந்தத் தேசமும் ரெப்பாயீமியர்களின் தேசமாகக் கருதப்பட்டது.+ (முன்பு ரெப்பாயீமியர்கள் அங்கு வாழ்ந்தார்கள். அப்போது அம்மோனியர்கள் அவர்களை சம்சூமியர்கள் என்று அழைத்தார்கள். 21 அவர்கள் ஏனாக்கியர்களைப் போல் ஏராளமாக இருந்தார்கள். அவர்களைப் போலவே பலசாலிகளாகவும், உயரமானவர்களாகவும் இருந்தார்கள்.+ ஆனால், அம்மோனியர்களைப் பயன்படுத்தி யெகோவா அவர்களை அழித்தார். அம்மோனியர்கள் அவர்களை ஒழித்துக்கட்டிவிட்டு அவர்களுடைய தேசத்தில் குடியேறினார்கள். 22 இப்படித்தான் ஓரியர்களை அழிப்பதற்காக, இன்று சேயீரில் வாழும் ஏசாவின் வம்சத்தாருக்குக்+ கடவுள் உதவினார். அவர்கள் ஓரியர்களை ஒழித்துக்கட்டிவிட்டு,+ இன்றுவரை அவர்களுடைய தேசத்தில் வாழ்ந்துவருகிறார்கள். 23 காசாவரை+ கிராமங்களில் வாழ்ந்துவந்த ஆவீமியர்களை கப்தோரிலிருந்து*+ வந்த கப்தோரியர்கள் ஒழித்துக்கட்டிவிட்டு அங்கே குடியேறினார்கள்.)

24 நீங்கள் புறப்பட்டு அர்னோன் பள்ளத்தாக்கை*+ கடந்து போங்கள். இதோ, எஸ்போனின் ராஜாவும் எமோரியனுமான சீகோனை உங்கள் கையில் கொடுத்திருக்கிறேன்.+ அவனோடு போர் செய்து அவனுடைய தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள். 25 இன்றுமுதல், பூமியிலுள்ள எல்லா ஜனங்களும் உங்களை நினைத்துப் பயப்படும்படி செய்வேன். அவர்கள் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டுக் கதிகலங்குவார்கள், நடுநடுங்குவார்கள்’*+ என்று சொன்னார்.

26 பின்பு, சமாதான செய்தியைச்+ சொல்வதற்காக நான் கெதெமோத் வனாந்தரத்திலிருந்து+ எஸ்போனின் ராஜாவான சீகோனிடம் தூதுவர்களை அனுப்பி, 27 ‘உங்கள் தேசத்தின் வழியாகப் போக எங்களுக்கு அனுமதி கொடுங்கள். நாங்கள் வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பாமல் நெடுஞ்சாலையில் மட்டும் நடந்துபோவோம்.+ 28 அப்படி நடந்துபோவதற்கு அனுமதி கொடுங்கள். எங்களுக்குத் தேவையான உணவையும் தண்ணீரையும் நீங்கள் விலைக்குக் கொடுத்தால் போதும். 29 அப்போது, நாங்கள் யோர்தானைக் கடந்து எங்கள் கடவுளாகிய யெகோவா தரும் தேசத்துக்குப் போவோம். சேயீரில் வாழ்கிற ஏசாவின் வம்சத்தாரும் ஆரில் வாழ்கிற மோவாபியர்களும் எங்களுக்கு அப்படித்தான் செய்தார்கள்’ என்று சொன்னேன். 30 ஆனால், எஸ்போனின் ராஜாவான சீகோன் தன்னுடைய தேசத்தின் வழியாகப் போக நமக்கு அனுமதி கொடுக்கவில்லை. ஏனென்றால், அவனுடைய இதயம் இறுகிப்போகும்படி நம் கடவுளாகிய யெகோவா விட்டுவிட்டார்.+ அவனை நம் கையில் கொடுப்பதற்காகத்தான் அப்படிப் பிடிவாதமாக இருக்கும்படி அவனை விட்டுவிட்டார். அதன்படியே, அவன் நம் கையில் கொடுக்கப்பட்டான்.+

31 அப்போது யெகோவா என்னிடம், ‘இதோ, சீகோனையும் அவன் தேசத்தையும் உங்கள் கையில் தந்திருக்கிறேன். நீங்கள் போய் அவனுடைய தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்’+ என்று சொன்னார். 32 நம்மோடு போர் செய்வதற்காக சீகோன் தன் ஆட்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு யாகாசுக்கு வந்தபோது,+ 33 நம் கடவுளாகிய யெகோவா அவனை நம் கையில் கொடுத்தார். அவனையும் அவன் மகன்களையும் அவனுடைய எல்லா ஆட்களையும் நாம் தோற்கடித்தோம். 34 அவனுடைய எல்லா நகரங்களையும் கைப்பற்றி அழித்தோம். அங்கிருந்த ஆண்களையும் பெண்களையும் பிள்ளைகளையும் ஒருவர்விடாமல் கொன்றுபோட்டோம்.+ 35 அந்த நகரங்களில் கைப்பற்றிய பொருள்களையும் ஆடுமாடுகளையும் மட்டும் நமக்காக வைத்துக்கொண்டோம். 36 அர்னோன் பள்ளத்தாக்கின்* ஓரத்தில் உள்ள ஆரோவேரிலிருந்து+ (அந்தப் பள்ளத்தாக்கில் உள்ள நகரத்திலிருந்து) கீலேயாத்வரை எந்த ஊரையும் நாம் விட்டுவைக்கவில்லை. நம்முடைய கடவுளான யெகோவா அவை எல்லாவற்றையும் நம் கையில் கொடுத்தார்.+ 37 ஆனாலும் அம்மோனியர்களின் தேசத்தை நாம் நெருங்கவில்லை.+ அதாவது யாபோக் பள்ளத்தாக்கின்+ எந்தப் பகுதியையும், மலைப்பகுதியிலுள்ள எந்த நகரத்தையும், நம் கடவுளாகிய யெகோவா நமக்குத் தடைசெய்த மற்ற எந்த இடத்தையும் நாம் நெருங்கவில்லை” என்று சொன்னார்.

3 அதன்பின், “நாம் அங்கிருந்து திரும்பி, பாசானுக்குப் போகும் சாலை வழியாகப் போனோம். அப்போது, நம்மோடு போர் செய்வதற்காக பாசானின் ராஜாவாகிய ஓக் தன்னுடைய ஆட்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு எத்ரேய்க்கு வந்தான்.+ 2 அதனால் யெகோவா என்னிடம், ‘அவனைப் பார்த்துப் பயப்படாதே. அவனையும் அவனுடைய ஆட்கள் எல்லாரையும் அவனுடைய தேசத்தையும் நான் உன்னுடைய கையில் கொடுப்பேன். எஸ்போனில் வாழ்ந்துவந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்குச் செய்தது போலவே அவனுக்கும் நீ செய்வாய்’ என்று சொன்னார். 3 அதன்படியே, பாசானின் ராஜாவாகிய ஓகையும் அவனுடைய ஆட்கள் எல்லாரையும் நம்முடைய கடவுளாகிய யெகோவா நம் கையில் கொடுத்தார். ஒருவர்விடாமல் எல்லாரையும் நாம் வெட்டி வீழ்த்தினோம். 4 பின்பு, அவனுடைய எல்லா நகரங்களையும் கைப்பற்றினோம். அவர்களிடமிருந்து நாம் கைப்பற்றாத இடங்களே கிடையாது. பாசானிலுள்ள ஓகின் ராஜ்யத்தில், அதாவது அர்கோப் பிரதேசத்தில், மொத்தம் 60 நகரங்களைக் கைப்பற்றினோம்.+ 5 இந்த நகரங்கள் உயரமான மதில்களோடும் கதவுகளோடும் தாழ்ப்பாள்களோடும் பாதுகாப்பாக இருந்தன. அந்தப் பிரதேசத்தில் மதில்கள் இல்லாத ஊர்களும் நிறைய இருந்தன. 6 எஸ்போனின் ராஜாவான சீகோனின் நகரங்களை அழித்தது போலவே அவற்றையும் நாம் அழித்தோம்.+ எல்லா நகரங்களையும், அங்கிருந்த ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும் அழித்தோம்.+ 7 ஆனால், அங்கிருந்த எல்லா ஆடுமாடுகளையும் பொருள்களையும் எடுத்துக்கொண்டோம்.

8 அப்போது, யோர்தான் பிரதேசத்திலிருந்த இரண்டு எமோரிய ராஜாக்களின் தேசங்களைக் கைப்பற்றினோம்.+ அதாவது, அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து* எர்மோன் மலைவரை கைப்பற்றினோம்.+ 9 (எர்மோன் மலையை சீரியோன் என்று சீதோனியர்கள் அழைத்தார்கள், ஆனால் எமோரியர்கள் அதை செனீர் என்று அழைத்தார்கள்.) 10 அதோடு, பீடபூமியிலுள்ள* எல்லா நகரங்களையும், கீலேயாத் முழுவதையும், ஓகின் ராஜ்யத்தைச் சேர்ந்த சல்கா, எத்ரேய்+ என்ற நகரங்கள் வரையுள்ள பாசான் பகுதி முழுவதையும் கைப்பற்றினோம். 11 ரெப்பாயீமியர்களில் கடைசியாக இருந்தது பாசானின் ராஜாவாகிய ஓக் மட்டும்தான். அவனுக்காக இரும்பினால்* செய்யப்பட்ட சவப்பெட்டி அம்மோனியர்களின் நகரமாகிய ரப்பாவில் இன்னும் இருக்கிறது. அதன் நீளம் ஒன்பது முழம்,* அகலம் நான்கு முழம். 12 அந்தச் சமயத்தில், அர்னோன் பள்ளத்தாக்கின்* பக்கத்தில் உள்ள ஆரோவேர்+ தொடங்கி கீலேயாத் மலைப்பகுதியின் பாதி வரையுள்ள தேசத்தை நாம் சொந்தமாக்கிக்கொண்டோம். அங்கிருந்த நகரங்களை ரூபன் கோத்திரத்தாருக்கும் காத் கோத்திரத்தாருக்கும் நான் கொடுத்தேன்.+ 13 கீலேயாத்தின் இன்னொரு பாதியையும் ஓகின் ராஜ்யத்தைச் சேர்ந்த பாசான் பகுதி முழுவதையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்குக் கொடுத்தேன்.+ பாசானைச் சேர்ந்த அர்கோப் பிரதேசம் முழுவதும் ரெப்பாயீமியர்களின் தேசம் என்று அழைக்கப்பட்டது.

14 கேசூரியர்கள் மற்றும் மாகாத்தியர்களின்+ எல்லைவரை இருந்த அர்கோப் பிரதேசம்+ முழுவதையும் மனாசேயின் மகனாகிய யாவீர்+ கைப்பற்றினார். பாசானிலிருந்த அந்தக் கிராமங்களுக்குத் தன்னுடைய பெயரையே வைத்து, அவோத்-யாவீர்*+ என்று அழைத்தார். இந்தப் பெயரில்தான் இன்றுவரை அவை அழைக்கப்படுகின்றன. 15 கீலேயாத்தை நான் மாகீருக்குக் கொடுத்தேன்.+ 16 கீலேயாத்முதல் அர்னோன் பள்ளத்தாக்குவரை நான் ரூபன் கோத்திரத்தாருக்கும் காத் கோத்திரத்தாருக்கும் கொடுத்தேன்.+ அந்தப் பள்ளத்தாக்கின் நடுப்பகுதிதான் அதன் எல்லை. அதோடு, அம்மோனியர்களின் எல்லையாகிய யாபோக் பள்ளத்தாக்கு வரையும், 17 அரபா வரையும், குறிப்பாக யோர்தான் ஆற்றின் கரையோரம் வரையும், கின்னரேத் தொடங்கி உப்புக் கடலாகிய* அரபா கடல் வரையும் கொடுத்தேன். இந்தக் கடல், கிழக்கே பிஸ்கா மலைச் சரிவுகளுக்குக் கீழே இருக்கிறது.+

18 பின்பு நான் உங்களிடம், ‘நீங்கள் சொந்தமாக்கிக்கொள்வதற்காக இந்தத் தேசத்தை உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். வீரமுள்ள ஆண்கள் எல்லாரும் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு உங்கள் சகோதரர்களுக்கு முன்னால் யோர்தானைக் கடந்து போங்கள்.+ 19 நான் உங்களுக்குக் கொடுத்திருக்கிற இந்த நகரங்களில், உங்களுடைய மனைவிமக்களும் கால்நடைகளும் மட்டுமே தங்கட்டும். உங்களுக்கு ஏராளமான கால்நடைகள் இருப்பது எனக்கு நன்றாகத் தெரியும். 20 யெகோவா உங்களுக்கு ஓய்வு தந்தது போல உங்கள் சகோதரர்களுக்கும் ஓய்வு தருகிற வரையிலும், உங்கள் கடவுளாகிய யெகோவா யோர்தானுக்கு அந்தப் பக்கத்தில் கொடுக்கப்போகும் தேசத்தை அவர்கள் சொந்தமாக்கிக்கொள்கிற வரையிலும் நீங்கள் அவர்கள் முன்னால் போக வேண்டும். அதன்பின், உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் கொடுத்திருக்கிற இடத்துக்கு நீங்கள் திரும்பி வரலாம்’+ என்று சொன்னேன்.

21 பின்பு நான் யோசுவாவிடம்,+ ‘இந்த இரண்டு ராஜாக்களுக்கும் உன் கடவுளாகிய யெகோவா என்ன செய்தார் என்பதை நீயே உன் கண்களால் பார்த்தாய். யோர்தானுக்கு அந்தப் பக்கத்தில் நீ போகிற எல்லா ராஜ்யங்களுக்கும் யெகோவா இப்படித்தான் செய்வார்.+ 22 உங்கள் கடவுளாகிய யெகோவாவே உங்களுக்காகப் போர் செய்வார்.+ அதனால், அங்கு இருக்கிறவர்களைப் பார்த்து நீங்கள் பயப்படக் கூடாது’ என்று கட்டளை கொடுத்தேன்.

23 அந்தச் சமயத்தில் நான் யெகோவாவிடம், 24 ‘உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, உங்களுடைய மகத்துவத்தையும் மகா வல்லமையையும்+ உங்கள் அடியேனுக்குக் காட்ட ஆரம்பித்திருக்கிறீர்கள். உங்களைப் போல் அற்புதங்களைச் செய்கிற கடவுள் வானத்திலோ பூமியிலோ உண்டா?+ 25 யோர்தானுக்கு அந்தப் பக்கத்திலுள்ள நல்ல தேசத்தை நான் போய்ப் பார்ப்பதற்குத் தயவுசெய்து அனுமதி கொடுங்கள். அந்த அழகான மலைப்பகுதியையும் லீபனோனையும்+ பார்க்க எனக்கு வாய்ப்புக் கொடுங்கள்’ என்று கெஞ்சினேன். 26 ஆனாலும், உங்களால் யெகோவா என்மேல் பயங்கர கோபமாகவே இருந்தார்.+ யெகோவா என் ஜெபத்தைக் கேட்காமல், ‘போதும்! இனிமேல் இந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் பேசாதே. 27 நீ யோர்தானைக் கடந்துபோக மாட்டாய்.+ அதனால், இப்போதே பிஸ்காவின் உச்சிக்குப்+ போய் அந்தத் தேசத்தை மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் பார்த்துக்கொள். 28 பின்பு, நீ யோசுவாவைத் தலைவனாக நியமித்து,+ அவனுக்கு ஊக்கமும் தைரியமும் கொடு. இந்த ஜனங்களுக்கு முன்னால் அவன்தான் யோர்தானைக் கடந்து போவான்.+ நீ பார்க்கப்போகிற அந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள அவன்தான் இந்த ஜனங்களுக்கு உதவி செய்வான்’ என்று சொல்லிவிட்டார். 29 பெத்-பேயோருக்கு முன்னால் உள்ள பள்ளத்தாக்கில் நாம் தங்கியிருந்தபோது இதெல்லாம் நடந்தது”+ என்று சொன்னார்.

4 பின்பு, “இஸ்ரவேலர்களே, நீங்கள் கடைப்பிடிப்பதற்காக இப்போது நான் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கிற விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் கேட்டு நடங்கள். அப்போது வாழ்வு பெறுவீர்கள்,+ உங்கள் முன்னோர்களின் கடவுளாகிய யெகோவா கொடுக்கப்போகிற தேசத்துக்குப் போய் அதைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள். 2 என் கட்டளைகளோடு நீங்கள் எதையும் கூட்டவும் கூடாது, குறைக்கவும் கூடாது.+ உங்கள் கடவுளாகிய யெகோவா தந்திருக்கிற அந்தக் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும்.

3 பாகால் பேயோரின் விஷயத்தில் யெகோவா என்ன செய்தார் என்பதை உங்கள் கண்களாலேயே பார்த்திருக்கிறீர்கள். உங்கள் ஜனங்களில் பாகால் பேயோரைக் கும்பிட்ட ஒவ்வொருவனையும் உங்கள் கடவுளாகிய யெகோவா அழித்துப்போட்டார்.+ 4 ஆனால், உங்கள் கடவுளாகிய யெகோவாவை உறுதியாய்ப் பிடித்துக்கொண்ட நீங்கள் எல்லாரும் இன்று உயிரோடு இருக்கிறீர்கள். 5 இதோ, என் கடவுளாகிய யெகோவா கட்டளை கொடுத்தபடியே, அவருடைய விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் உங்களுக்கு விளக்கமாகச் சொல்லியிருக்கிறேன்.+ உங்களுக்குச் சொந்தமாகப்போகும் தேசத்தில் நீங்கள் அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். 6 நீங்கள் அவற்றைக் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.+ அப்போது, இந்த விதிமுறைகளைப் பற்றிக் கேள்விப்படுகிற ஜனங்களுக்கு முன்னால் ஞானமும்+ புத்தியும்*+ உள்ளவர்களாக இருப்பீர்கள். அவர்கள் உங்களைப் பார்த்து, ‘இந்த மாபெரும் தேசத்தைச் சேர்ந்த ஜனங்கள் உண்மையிலேயே ஞானமும் புத்தியுமுள்ள ஜனங்கள்’ என்று சொல்வார்கள்.+ 7 நாம் கூப்பிடுகிறபோதெல்லாம் நமக்குப் பக்கத்தில் வருகிற நம் கடவுளாகிய யெகோவாவைப் போல ஒரு கடவுள் வேறெந்தத் தேசத்துக்காவது உண்டா?+ 8 இன்று நான் உங்களுக்குக் கொடுப்பதைப் போன்ற* நீதியான விதிமுறைகளும் நீதித்தீர்ப்புகளும் வேறெந்தத் தேசத்துக்காவது இருக்கிறதா?+

9 உங்கள் கண்களால் பார்த்தவற்றை மறந்துவிடாதபடி மிகக் கவனமாகவும் ஜாக்கிரதையாகவும் இருங்கள். இவை உங்கள் வாழ்நாளெல்லாம் உங்களுடைய நெஞ்சைவிட்டு நீங்கக் கூடாது. இவற்றை உங்களுடைய பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.+ 10 ஓரேபில் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு முன்னால் நீங்கள் நின்ற நாளில் யெகோவா என்னிடம், ‘என் வார்த்தைகளைக் கேட்பதற்காக+ இந்த ஜனங்களை என்னிடம் ஒன்றுகூடிவரச் செய். அப்போது, இந்தப் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவர்கள் எனக்குப் பயந்து நடக்கக் கற்றுக்கொள்வார்கள்,+ தங்களுடைய பிள்ளைகளுக்கும் அவற்றைச் சொல்லிக்கொடுப்பார்கள்’+ என்றார்.

11 அதனால், நீங்கள் அந்த மலையின் அடிவாரத்தில் வந்து நின்றீர்கள். அந்த மலையில் வானத்தைத் தொடுமளவுக்கு நெருப்பு எரிந்தது. இருண்ட மேகங்களும் பயங்கரமான இருட்டும் சூழ்ந்துகொண்டன.+ 12 அந்த நெருப்பிலிருந்து யெகோவா பேசினார்.+ அவர் பேசிய வார்த்தைகளைக் கேட்டீர்கள், ஆனால் நீங்கள் எந்த உருவத்தையும் பார்க்கவில்லை.+ அவருடைய குரலை மட்டும்தான் கேட்டீர்கள்.+ 13 நீங்கள் கடைப்பிடிப்பதற்காக பத்துக் கட்டளைகளைக்+ கொடுத்து, உங்களோடு ஒரு ஒப்பந்தத்தை அவர் செய்தார்.+ பின்பு, அந்தக் கட்டளைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார்.+ 14 நீங்கள் கைப்பற்றப்போகிற தேசத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் உங்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டுமென்று யெகோவா என்னிடம் சொன்னார்.

15 அதனால் நீங்கள் மிகவும் கவனமாக இருங்கள், ஓரேபிலே நெருப்பின் நடுவிலிருந்து யெகோவா உங்களோடு பேசிய நாளில் நீங்கள் எந்த உருவத்தையும் பார்க்கவில்லை. 16 ஆகவே, எந்தவொரு வடிவத்திலும் சின்னங்களையோ சிலைகளையோ உண்டாக்காதீர்கள்.+ ஆண் உருவம், பெண் உருவம், 17 பூமியிலுள்ள மிருகத்தின் உருவம், வானத்தில் பறக்கிற பறவையின் உருவம்,+ 18 தரையில் ஊருகிற பிராணியின் உருவம், தண்ணீரில் நீந்துகிற மீனின் உருவம் என எந்த உருவத்தையாவது உண்டாக்கி+ அக்கிரமம் செய்துவிடாதீர்கள். 19 வானத்துப் படைகளான சூரிய, சந்திர, நட்சத்திரங்களைப் பார்க்கும்போது, அவற்றுக்குமுன் மண்டிபோட்டு வணங்க வேண்டுமென்ற ஆசை உங்களுக்கு வந்துவிடாதபடி எச்சரிக்கையாக இருங்கள்.+ பூமியிலுள்ள எல்லா ஜனங்களுக்காகவும் அவற்றை உங்கள் கடவுளாகிய யெகோவா படைத்திருக்கிறார். 20 இருந்தாலும், யெகோவா உங்களைத்தான் அவருடைய சொந்த ஜனமாகத் தேர்ந்தெடுத்து, இரும்பு உலை போன்ற எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். இன்றுவரை நீங்கள்தான் அவருடைய சொத்தாக இருக்கிறீர்கள்.+

21 நீங்கள் செய்த தவறால் யெகோவா என்மேல் கோபப்பட்டார்.+ உங்களுடைய கடவுளாகிய யெகோவா, நான் இந்த யோர்தானைக் கடக்க மாட்டேன் என்றும், அவர் சொத்தாகக் கொடுக்கப்போகிற நல்ல தேசத்துக்குள் போக மாட்டேன் என்றும் உறுதியாகச் சொல்லிவிட்டார்.+ 22 அதனால் நான் இந்தத் தேசத்திலேயே செத்துவிடுவேன், யோர்தானைக் கடந்துபோக மாட்டேன்.+ ஆனால், நீங்கள் அதைக் கடந்துபோய் அந்த நல்ல தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள். 23 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களோடு செய்த ஒப்பந்தத்தை மறக்காதபடி கவனமாக இருங்கள்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா தடை செய்திருக்கிற எந்தவொரு உருவத்தையும் உண்டாக்காதீர்கள்.+ 24 உங்கள் கடவுளாகிய யெகோவா, சுட்டெரிக்கிற நெருப்பாக இருக்கிறார்.+ தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிற கடவுளாக இருக்கிறார்.+

25 அந்தத் தேசத்தில் நீங்கள் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் பெற்று நீண்ட காலம் வாழ்ந்தபின், நீங்கள் தறிகெட்டுப்போய் ஏதாவது ஒரு உருவத்தை உண்டாக்கினாலோ,+ உங்கள் கடவுளாகிய யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்து அவரைக் கோபப்படுத்தினாலோ,+ 26 யோர்தானைக் கடந்துபோய் நீங்கள் சொந்தமாக்கப்போகிற அந்தத் தேசத்திலிருந்து சீக்கிரமாக அழிந்துபோவீர்கள், இது நிச்சயம். இன்று பரலோகத்தையும் பூமியையும் சாட்சியாக வைத்து இதைச் சொல்கிறேன். அந்தத் தேசத்தில் நீங்கள் ரொம்பக் காலம் வாழ மாட்டீர்கள், அடியோடு அழிந்துபோவீர்கள்.+ 27 யெகோவா உங்களை மற்ற தேசத்தாரின் நடுவில் சிதறிப்போக வைப்பார்.+ யெகோவா உங்களைத் துரத்தியடிக்கிற தேசங்களில், கொஞ்சம் பேர்தான் தப்பிப்பீர்கள்.+ 28 மரத்தாலும் கல்லாலும் மனுஷர்கள் செய்த தெய்வங்களுக்கு, அதாவது பார்க்கவோ கேட்கவோ ருசிக்கவோ முகரவோ முடியாத தெய்வங்களுக்கு, அங்கே நீங்கள் சேவை செய்ய வேண்டியிருக்கும்.+

29 அங்கே நீங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும்+ உங்கள் கடவுளாகிய யெகோவாவை நாடித் தேடினால், நிச்சயம் அவரைக் கண்டடைவீர்கள்.+ 30 பிற்காலத்தில் நீங்கள் இந்தக் கஷ்டங்களையெல்லாம் அனுபவித்து மனவேதனையில் துடிக்கும்போது உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் திரும்புவீர்கள், அவர் சொல்வதைக் கேட்பீர்கள்.+ 31 உங்கள் கடவுளாகிய யெகோவா இரக்கமுள்ள கடவுள்.+ அவர் உங்களைக் கைவிடவும் மாட்டார், அழிக்கவும் மாட்டார். உங்களுடைய முன்னோர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த ஒப்பந்தத்தை அவர் மறக்கவும் மாட்டார்.+

32 கடவுள் மனுஷனைப் படைத்த நாளிலிருந்து இத்தனை காலமாக இப்படிப்பட்ட அற்புதமான செயல்கள் பூமியில் எங்காவது நடந்திருக்கிறதா என்று கேட்டுப் பாருங்கள். வானத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைவரை விசாரித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட செயல்களைப் பற்றி யாராவது கேள்விப்பட்டிருப்பார்களா?+ 33 நெருப்பின் நடுவிலிருந்து கடவுள் பேசியதை உங்களைப் போல வேறு யாராவது கேட்டிருக்கிறார்களா, கேட்டு உயிரோடு இருந்திருக்கிறார்களா?+ 34 உங்கள் கடவுளாகிய யெகோவா எகிப்தில் உங்கள் கண் முன்னாலேயே தண்டனைத் தீர்ப்புகள் கொடுத்து, அதிசயங்களையும் அற்புதங்களையும்+ செய்து, போராலும்+ கைபலத்தாலும்+ மகா வல்லமையாலும் பயங்கரமான செயல்களாலும்+ உங்களை விடுதலை செய்தாரே. இதுபோல் வேறெந்தக் கடவுளாவது ஒரு ஜனத்தை இன்னொரு ஜனத்தின் நடுவிலிருந்து தனக்காகப் பிரித்தெடுத்தது உண்டா? 35 யெகோவாதான் உண்மைக் கடவுள், அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை+ என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளத்தான் இதையெல்லாம் அவர் செய்தார்.+ 36 பரலோகத்திலிருந்து அவர் பேசுவதை நீங்கள் கேட்டீர்கள், பூமியில் அவருடைய நெருப்பு பற்றியெரிவதைப் பார்த்தீர்கள், அந்த நெருப்பிலிருந்து வந்த அவருடைய குரலைக் கேட்டீர்கள்.+ உங்களைத் திருத்துவதற்குத்தான் இப்படியெல்லாம் நடக்கும்படி அவர் செய்தார்.

37 கடவுள் உங்களுடைய முன்னோர்களை நேசித்ததாலும் அவர்களுடைய வம்சத்தாரைத் தேர்ந்தெடுத்ததாலும்,+ அவர் உங்களோடு இருந்து, தன்னுடைய மகா வல்லமையால் எகிப்திலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு வந்தார். 38 உங்களைவிட பலம்படைத்த மாபெரும் தேசங்களை உங்கள் முன்னால் துரத்தியடித்தார். அவர்களுடைய தேசங்களை உங்களுக்குச் சொத்தாகக் கொடுப்பதற்கு அப்படிச் செய்தார். அவர் நினைத்தபடியே இன்று நடந்துவருகிறது.+ 39 அதனால், மேலே வானத்திலும் கீழே பூமியிலும் யெகோவாதான் உண்மைக் கடவுள் என்பதை இந்த நாளில் தெரிந்துகொள்ளுங்கள்.+ அதை இதயத்தில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை.+ 40 நான் இன்று உங்களுக்குச் சொல்கிற அவருடைய விதிமுறைகளையும் கட்டளைகளையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் செய்தால், நீங்களும் உங்களுடைய சந்ததியாரும் சந்தோஷமாக இருப்பீர்கள், உங்கள் கடவுளாகிய யெகோவா தருகிற தேசத்தில் நீடூழி வாழ்வீர்கள்”+ என்று சொன்னார்.

41 அந்தச் சமயத்தில், யோர்தானின் கிழக்கே மூன்று நகரங்களை+ மோசே தேர்ந்தெடுத்தார். 42 ஒருவன் எந்த முன்விரோதமும் இல்லாமல் இன்னொருவனைத் தெரியாத்தனமாகக் கொலை செய்திருந்தால்,+ இவற்றில் ஏதாவது ஒரு நகரத்துக்கு ஓடிப்போய் உயிர் பிழைத்துக்கொள்ள வேண்டியிருந்தது.+ 43 பீடபூமியாகிய* வனாந்தரத்திலுள்ள பேசேர் நகரத்தை+ ரூபன் கோத்திரத்தாருக்கு அவர் கொடுத்தார், கீலேயாத்திலுள்ள ராமோத் நகரத்தை+ காத் கோத்திரத்தாருக்குக் கொடுத்தார், பாசானிலுள்ள கோலான் நகரத்தை+ மனாசே கோத்திரத்தாருக்குக் கொடுத்தார்.+

44 இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசே கொடுத்த திருச்சட்டம்+ இதுதான். 45 இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபின், மோசே அவர்களுக்குக் கொடுத்த எச்சரிப்புகளும்* விதிமுறைகளும் நீதித்தீர்ப்புகளும் இவைதான்.+ 46 யோர்தான் பிரதேசத்தில் பெத்-பேயோருக்கு+ எதிரில் உள்ள பள்ளத்தாக்கில், எஸ்போனில்+ வாழ்ந்துவந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனின் தேசத்தில், இவற்றைக் கொடுத்தார். எகிப்திலிருந்து வந்தபின், மோசேயும் இஸ்ரவேலர்களும் அந்த ராஜாவை வீழ்த்தியிருந்தார்கள்.+ 47 அவனுடைய தேசத்தையும் பாசானின் ராஜாவாகிய ஓகின்+ தேசத்தையும் இஸ்ரவேலர்கள் கைப்பற்றியிருந்தார்கள். எமோரியர்களுடைய இந்த இரண்டு ராஜாக்களின் தேசங்களும் யோர்தான் பிரதேசத்துக்குக் கிழக்கே, 48 அர்னோன் பள்ளத்தாக்கின்* ஓரத்திலிருந்த ஆரோவேர்+ தொடங்கி சியோன் மலை வரையிலும், அதாவது எர்மோன் மலை வரையிலும்,+ 49 யோர்தான் பிரதேசத்துக்குக் கிழக்கே உள்ள அரபா முழுவதிலும், பிஸ்கா+ மலைச் சரிவுகளின் கீழே உள்ள அரபா கடல்* வரையிலும் பரந்திருந்தன.

5 பின்பு மோசே, இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரையும் கூப்பிட்டு, “இஸ்ரவேலர்களே, இன்றைக்கு நான் சொல்கிற விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் கேளுங்கள். அவற்றைக் கற்றுக்கொண்டு கவனமாகப் பின்பற்றுங்கள். 2 நம் கடவுளாகிய யெகோவா ஓரேபில் நம்மோடு ஒரு ஒப்பந்தம் செய்தார்.+ 3 அந்த ஒப்பந்தத்தை யெகோவா நம் முன்னோர்களோடு செய்யாமல், இன்று உயிரோடிருக்கிற நம்மோடுதான் செய்தார். 4 அந்த மலையில் நெருப்பின் நடுவிலிருந்து யெகோவா உங்களோடு நேருக்கு நேராகப் பேசினார்.+ 5 நீங்கள் நெருப்பைப் பார்த்துப் பயந்து அந்த மலைமேல் ஏறி வராமல் இருந்தீர்கள்.+ அதனால் யெகோவாவின் வார்த்தைகளை உங்களுக்குச் சொல்வதற்காக, நான் யெகோவாவுக்கும் உங்களுக்கும் நடுவில் நின்றேன்.+ அப்போது அவர் இப்படிச் சொன்னார்:

6 ‘எகிப்து தேசத்தில் அடிமைகளாக அடைபட்டிருந்த உங்களை விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவா நான்தான்.+ 7 என்னைத் தவிர* வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கவே கூடாது.+

8 மேலே வானத்திலோ கீழே பூமியிலோ பூமியின் கீழ் தண்ணீரிலோ இருக்கிற எதனுடைய வடிவத்திலும் நீங்கள் உருவங்களையும் சிலைகளையும் உங்களுக்காக உண்டாக்கக் கூடாது.+ 9 அவற்றுக்கு முன்னால் தலைவணங்கவோ அவற்றைக் கும்பிடவோ கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. நீங்கள் என்னை மட்டும்தான் வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன்.+ தகப்பன்கள் என்னை வெறுத்து எனக்கு எதிராகப் பாவம் செய்தால் அவர்களுடைய பிள்ளைகளை மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிப்பேன்.+ 10 ஆனால், என்னை நேசித்து என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு ஆயிரம் தலைமுறைவரை மாறாத அன்பைக் காட்டுவேன்.

11 உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பெயரை வீணாகப் பயன்படுத்தக் கூடாது.+ யெகோவாவின் பெயரை வீணாகப் பயன்படுத்துகிறவர்களை அவர் தண்டிக்காமல் விட மாட்டார்.+

12 உங்கள் கடவுளாகிய யெகோவா கட்டளை கொடுத்தபடியே, ஓய்வுநாளைப் புனித நாளாக அனுசரியுங்கள்.+ 13 ஆறு நாட்களுக்கு உங்களுடைய எல்லா வேலைகளையும் செய்யுங்கள்.+ 14 ஆனால், ஏழாம் நாள் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கான ஓய்வுநாள்.+ அன்றைக்கு நீங்களோ, உங்களுடைய மகனோ மகளோ, உங்களிடம் அடிமையாக இருக்கிற ஆணோ பெண்ணோ, உங்களுடைய மாடோ கழுதையோ, வேறெதாவது வீட்டு விலங்கோ, உங்கள் நகரங்களில் குடியிருக்கிற வேறு தேசத்துக்காரனோ+ எந்த வேலையும் செய்யக் கூடாது.+ நீங்கள் ஓய்வெடுப்பதுபோல் உங்கள் அடிமையும் ஓய்வெடுக்க வேண்டும்.+ 15 எகிப்தில் நீங்கள் அடிமைகளாக இருந்ததை ஞாபகத்தில் வையுங்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா தன் கைபலத்தாலும் மகா வல்லமையாலும் உங்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்.+ அதனால்தான், ஓய்வுநாளை அனுசரிக்க வேண்டுமென்று உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குக் கட்டளை கொடுத்தார்.

16 உங்கள் கடவுளாகிய யெகோவா கட்டளை கொடுத்தபடியே, உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்.+ அப்போதுதான், உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தில் நீங்கள் சீரும் சிறப்புமாக நீண்ட காலம் வாழ்வீர்கள்.+

17 நீங்கள் கொலை செய்யக் கூடாது.+

18 உங்களுடைய மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது.+

19 நீங்கள் திருடக் கூடாது.+

20 அடுத்தவனுக்கு விரோதமாகப் பொய் சாட்சி சொல்லக் கூடாது.+

21 அடுத்தவனுடைய மனைவியை அடைய ஆசைப்படக் கூடாது.+ அவனுடைய அடிமையையும்,* வீட்டையும், வயலையும், காளையையும், கழுதையையும், அவனுக்குச் சொந்தமான வேறு எதையும் அடையத் துடிக்கக் கூடாது.’+

22 சபையாராகிய உங்கள் எல்லாருக்கும் யெகோவா இந்தக் கட்டளைகளை மலையிலே கொடுத்தார். அப்போது, நெருப்பிலிருந்தும் மேகத்திலிருந்தும் இருட்டிலிருந்தும்+ சத்தமான குரலில் அவர் பேசினார். அவற்றைத் தவிர வேறு கட்டளைகளை அவர் கொடுக்கவில்லை. அவற்றை இரண்டு கற்பலகைகளில் எழுதி என்னிடம் தந்தார்.+

23 ஆனால் மலையில் நெருப்பு எரிந்துகொண்டிருந்தபோது, இருண்ட மேகத்திலிருந்து வந்த அவருடைய குரலைக் கேட்டவுடன்,+ நீங்கள் உங்களுடைய கோத்திரத் தலைவர்களையும் பெரியோர்களையும்* என்னிடம் அனுப்பி, 24 ‘நம் கடவுளாகிய யெகோவா தன் மகிமையையும் மகத்துவத்தையும் எங்களுக்குக் காட்டியிருக்கிறார், நெருப்பிலிருந்து வந்த அவருடைய குரலைக் கேட்டோம்.+ கடவுள் மனுஷனோடு பேசியும் அந்த மனுஷன் உயிரோடு இருப்பதை இன்று எங்கள் கண்களாலேயே பார்த்தோம்.+ 25 இப்போது நாங்கள் ஏன் சாக வேண்டும்? பற்றியெரிகிற அவருடைய நெருப்பு எங்களைச் சுட்டெரித்துவிடுமே. நம் கடவுளாகிய யெகோவாவின் குரலை இனியும் கேட்டுக்கொண்டிருந்தால் நாங்கள் நிச்சயம் செத்துப்போய்விடுவோம். 26 நெருப்பின் நடுவிலிருந்து பேசிய உயிருள்ள கடவுளின் குரலை நாங்கள் கேட்டது போல வேறு யாராவது கேட்டு உயிரோடு இருந்திருக்கிறார்களா? 27 அதனால், நம் கடவுளாகிய யெகோவா சொல்கிற எல்லாவற்றையும் நீங்களே போய்க் கேட்டு எங்களுக்குச் சொல்லுங்கள். நம் கடவுளாகிய யெகோவா சொல்வதையெல்லாம் நீங்களே எங்களுக்குச் சொல்லுங்கள். அதன்படி நாங்கள் நடக்கிறோம்’+ என்று சொன்னீர்கள்.

28 நீங்கள் என்னிடம் சொன்னதையெல்லாம் யெகோவா கேட்டார். அதனால் யெகோவா என்னிடம், ‘இந்த ஜனங்கள் உன்னிடம் சொன்னதையெல்லாம் நான் கேட்டேன். அவர்கள் சொல்வது சரிதான்.+ 29 எனக்குப் பயந்து, என்னுடைய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நடக்கிற+ இதயம் அவர்களுக்கு எப்போதுமே இருந்தால்+ எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்போது அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் என்றென்றும் சந்தோஷமாக வாழ்வார்கள்.+ 30 இப்போது நீ அவர்களை அவர்களுடைய கூடாரங்களுக்குப் போகச் சொல். 31 ஆனால், நீ என்னோடு இங்கேயே இரு. நீ அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய எல்லா கட்டளைகளையும் விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் நான் உனக்குச் சொல்கிறேன். நான் அவர்களுக்குக் கொடுக்கப்போகும் தேசத்தில் அவற்றையெல்லாம் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று சொன்னார். 32 அதனால், உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கட்டளைப்படி நடப்பதற்கு நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.+ அவருடைய வழியைவிட்டு வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பக் கூடாது.+ 33 உங்கள் கடவுளாகிய யெகோவா காட்டிய வழியில் நீங்கள் நடக்க வேண்டும்.+ அப்போதுதான், நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசத்தில் சீரும் சிறப்புமாக நீடூழி வாழ்வீர்கள்”+ என்றார்.

6 பின்பு அவர், “உங்களுக்குக் கற்றுத்தரச் சொல்லி உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுத்த கட்டளைகளும் விதிமுறைகளும் நீதித்தீர்ப்புகளும் இவைதான். நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசத்தில் இவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். 2 நீங்களும் உங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் வாழ்நாளெல்லாம் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து நடக்க வேண்டும்.+ நான் உங்களுக்குக் கொடுக்கிற அவருடைய எல்லா சட்டதிட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும், அப்போது நீண்ட காலம் வாழ்வீர்கள்.+ 3 இஸ்ரவேலர்களே, நீங்கள் இவற்றைக் கேட்டுக் கவனமாகப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் உங்கள் முன்னோர்களின் கடவுளாகிய யெகோவா உங்களுக்கு வாக்குறுதி தந்தபடியே, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் சீரும் சிறப்புமாக வாழ்ந்து, ஏராளமாகப் பெருகுவீர்கள்.

4 இஸ்ரவேலர்களே, இதைக் கேளுங்கள்: நம் கடவுளாகிய யெகோவா ஒருவரே யெகோவா.+ 5 உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் நீங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு பலத்தோடும் அன்பு காட்ட வேண்டும்.+ 6 இன்று நான் சொல்கிற இந்த வார்த்தைகளை உங்கள் இதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். 7 அவற்றை உங்களுடைய பிள்ளைகளின் மனதில் பதிய வைக்கவும் வேண்டும்.*+ வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்திருக்கிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவற்றைப் பற்றிப் பேச வேண்டும்.+ 8 அவற்றை உங்கள் கையில் ஒரு நினைப்பூட்டுதல் போலவும் நெற்றியில் ஒரு அடையாளம் போலவும் கட்டிக்கொள்ள வேண்டும்.+ 9 அவற்றை உங்கள் வீட்டு வாசலின் நிலைக்கால்களிலும் நகரவாசல்களிலும் எழுதிவைக்க வேண்டும்.

10 உங்கள் முன்னோர்களான ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் வாக்குக் கொடுத்த தேசத்துக்கு உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைக் கூட்டிக்கொண்டு வந்து,+ நீங்கள் கட்டாத பிரமாண்டமான நகரங்களையும்,+ 11 நீங்கள் உழைத்துச் சம்பாதிக்காத நல்ல நல்ல பொருள்கள் நிறைந்த வீடுகளையும், நீங்கள் வெட்டாத கிணறுகளையும்,* நீங்கள் நடாத திராட்சைத் தோட்டங்களையும் ஒலிவ மரங்களையும் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் நன்றாகச் சாப்பிட்டுத் திருப்தியாக இருப்பீர்கள்.+ 12 இதெல்லாம் நடக்கும்போது, எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுதலை செய்த யெகோவாவை மறந்துவிடாதபடி கவனமாக இருங்கள்.+ 13 உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு நீங்கள் பயந்து நடக்க வேண்டும்,+ அவருக்கு மட்டும்தான் சேவை செய்ய வேண்டும்.+ அவருடைய பெயரில்தான் சத்தியம் செய்ய வேண்டும்.+ 14 உங்களைச் சுற்றியுள்ள ஜனங்கள் வணங்குகிற வேறெந்த தெய்வங்களையும் நீங்கள் தேடிப்போய் வணங்கக் கூடாது.+ 15 ஏனென்றால், உங்கள் நடுவில் இருக்கிற உங்கள் கடவுளாகிய யெகோவா தன்னை மட்டும்தான் வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிற கடவுளாக இருக்கிறார்.+ மீறினால், உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கோபம் உங்கள்மேல் பற்றியெரியும்.+ இந்தப் பூமியிலிருந்து அவர் உங்களை அடியோடு அழித்துவிடுவார்.+

16 நீங்கள் மாசாவில் செய்தது போல,+ உங்கள் கடவுளாகிய யெகோவாவைச் சோதித்துப் பார்க்கக் கூடாது.+ 17 உங்கள் கடவுளாகிய யெகோவா தந்த கட்டளைகளையும் எச்சரிப்புகளையும்* விதிமுறைகளையும் கண்ணும் கருத்துமாகக் கடைப்பிடிக்க வேண்டும். 18 யெகோவாவின் பார்வையில் எது சரியானதோ, எது நல்லதோ அதையே செய்ய வேண்டும். அப்போதுதான், யெகோவா வாக்குறுதி தந்தபடியே, உங்கள் எதிரிகள் எல்லாரையும் துரத்தியடிப்பீர்கள்.+ 19 உங்கள் முன்னோர்களின் கடவுளாகிய யெகோவா வாக்குக் கொடுத்த நல்ல தேசத்துக்குப் போய் அதைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள்,+ அங்கே சீரும் சிறப்புமாக வாழ்வீர்கள்.

20 பிற்காலத்தில் உங்களுடைய பிள்ளைகள் உங்களிடம் வந்து, ‘நம் கடவுளாகிய யெகோவா ஏன் இந்த எச்சரிப்புகளையும்* விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் கொடுத்திருக்கிறார்?’ என்று கேட்டால், 21 நீங்கள் அவர்களிடம், ‘எகிப்தில் நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாக இருந்தோம், ஆனால் யெகோவா தன்னுடைய கைபலத்தால் அங்கிருந்து எங்களைக் கூட்டிக்கொண்டு வந்தார். 22 எகிப்துக்கும் பார்வோனுக்கும் அவனுடைய வீட்டாருக்கும் கொடிய தண்டனைகளைக் கொடுத்தார். யெகோவா எங்கள் கண் முன்னால் பெரிய அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்தார்.+ 23 நம் முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்த+ இந்தத் தேசத்தைத் தருவதற்காக அங்கிருந்து எங்களைக் கூட்டிக்கொண்டு வந்தார். 24 இந்த எல்லா விதிமுறைகளையும் கடைப்பிடித்து, நம் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து நடக்கும்படி யெகோவா கட்டளை கொடுத்தார். நாம் என்றென்றைக்கும் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் அவர் அப்படிக் கட்டளை கொடுத்தார்.+ அதன்படியே, நாம் இன்றைக்கு நன்றாக வாழ்ந்து வருகிறோம்.+ 25 நம் கடவுளாகிய யெகோவா கொடுத்த கட்டளைகளையெல்லாம் கவனமாகப் பின்பற்றி வந்தால், நாம் அவருடைய நீதியான வழியில் நடக்கிறவர்களாக இருப்போம்’+ என்று சொல்லுங்கள்” என்றார்.

7 பின்பு அவர், “நீங்கள் சொந்தமாக்கப்போகும் தேசத்துக்கு உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை இப்போது கூட்டிக்கொண்டு போகும்போது,+ உங்களைவிட பெரியதாகவும் பலம்படைத்ததாகவும்+ இருக்கிற ஏழு தேசங்களை உங்கள் கண் முன்னால் துரத்தியடிப்பார்.+ அதாவது ஏத்தியர்கள், கிர்காசியர்கள், எமோரியர்கள்,+ கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள்+ ஆகியவர்களைத் துரத்தியடிப்பார். 2 உங்கள் கடவுளாகிய யெகோவா அவர்களை உங்கள் கையில் கொடுப்பார். அவர்களை நீங்கள் தோற்கடித்து,+ கண்டிப்பாக அழித்துவிட வேண்டும்.+ அவர்களோடு எந்த ஒப்பந்தமும் செய்யக் கூடாது, அவர்களுக்குக் கருணையே காட்டக் கூடாது.+ 3 அவர்களோடு சம்பந்தம் பண்ணக் கூடாது. அவர்களுடைய மகன்களுக்கு உங்கள் மகள்களைக் கல்யாணம் செய்துவைக்கக் கூடாது. உங்களுடைய மகன்களுக்கு அவர்களுடைய மகள்களைக் கல்யாணம் செய்துவைக்கக் கூடாது.+ 4 ஏனென்றால், உங்கள் மகன்கள் என்னை விட்டுவிட்டு மற்ற தெய்வங்களை வணங்கும்படி அவர்கள் செய்துவிடுவார்கள்.+ அப்போது யெகோவாவின் கோபம் உங்கள்மேல் பற்றியெரியும். அவர் உங்களை ஒரு நொடியில் அழித்துவிடுவார்.+

5 அதனால், நீங்கள் அவர்களுடைய பலிபீடங்களை இடித்துப்போட வேண்டும், பூஜைத் தூண்களை உடைத்துப்போட வேண்டும்,+ பூஜைக் கம்பங்களை* வெட்டிச் சாய்க்க வேண்டும்,+ உருவச் சிலைகளை எரித்துப்போட வேண்டும்.+ 6 உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு நீங்கள் பரிசுத்தமான ஜனங்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா இந்தப் பூமியிலுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களைத்தான் தன்னுடைய ஜனமாகவும் விசேஷ சொத்தாகவும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+

7 மற்ற எல்லா ஜனங்களையும்விட நீங்கள் ஏராளமாக இருந்தீர்கள் என்பதற்காக யெகோவா உங்கள்மேல் பாசம் காட்டவோ உங்களைத் தேர்ந்தெடுக்கவோ இல்லை.+ சொல்லப்போனால், மற்ற எல்லா ஜனங்களையும்விட நீங்கள் கொஞ்சம் பேராகத்தான் இருந்தீர்கள்.+ 8 யெகோவா உங்களை நேசித்ததாலும் உங்கள் முன்னோர்களுக்குக் கொடுத்த உறுதிமொழியைக் காப்பாற்ற நினைத்ததாலும்,+ எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை விடுவித்தார்.+ யெகோவா தன்னுடைய கைபலத்தால் உங்களை எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் பிடியிலிருந்து காப்பாற்றினார். 9 உங்கள் கடவுளாகிய யெகோவாதான் உண்மைக் கடவுள். அவர் நம்பகமானவர். தன்னை நேசித்து தன்னுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களிடம் ஆயிரம் தலைமுறை வரைக்கும் மாறாத அன்பைக் காட்டி, ஒப்பந்தத்தைக் காப்பவர்.+ இதெல்லாம் உங்களுக்கே நன்றாகத் தெரியும். 10 ஆனால், அவரைப் பகைக்கிறவர்களுக்கு அவர் நேருக்கு நேர் பதிலடி கொடுத்து, அவர்களை ஒழித்துக்கட்டுவார்.+ தாமதிக்காமல் அவர்களைத் தண்டிப்பார். அவர்களை நேரடியாகப் பழிவாங்குவார். 11 அதனால், நான் இன்று உங்களுக்குக் கொடுக்கிற கட்டளைகளையும் விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் கண்ணும் கருத்துமாகக் கடைப்பிடியுங்கள்.

12 நீங்கள் இந்த நீதித்தீர்ப்புகளைக் காதுகொடுத்துக் கேட்டு அவற்றைக் கடைப்பிடித்து வந்தால், உங்கள் கடவுளாகிய யெகோவா நம் முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்தபடியே, தன்னுடைய ஒப்பந்தத்தைக் காப்பார், மாறாத அன்பைக் காட்டுவார். 13 அவர் உங்களை நேசிப்பார், ஆசீர்வதிப்பார், பெருக வைப்பார். உங்கள் முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்த தேசத்தில்+ உங்களுக்குப் பிள்ளைகளையும், கன்றுக்குட்டிகளையும், ஆட்டுக்குட்டிகளையும், தானியங்களையும், புதிய திராட்சமதுவையும், எண்ணெயையும் ஏராளமாகக் கொடுத்து ஆசீர்வதிப்பார்.+ 14 எல்லா ஜனங்களையும்விட நீங்கள்தான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட ஜனமாக இருப்பீர்கள்.+ உங்களில் எந்தவொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் குழந்தை பாக்கியம் இல்லாமல் போகாது, உங்கள் கால்நடைகள் குட்டி போடாமல் இருக்காது.+ 15 யெகோவா உங்களுடைய எல்லா நோய்களையும் தீர்ப்பார், எகிப்தியர்களுக்கு வந்த கொடிய நோய்கள் எதுவும் உங்களுக்கு வராமல் பார்த்துக்கொள்வார்.+ ஆனால், உங்களை வெறுக்கிறவர்களுக்கு அதையெல்லாம் வரச் செய்வார். 16 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் கையில் கொடுக்கிற எல்லா ஜனங்களையும் நீங்கள் அழித்துவிட வேண்டும்.+ அவர்களுக்காகப் பரிதாபப்படக் கூடாது.+ அவர்களுடைய தெய்வங்களை வணங்கக் கூடாது,+ அப்படி வணங்கினால் ஆபத்தில் சிக்கிக்கொள்வீர்கள்.+

17 நீங்கள் உங்களுடைய உள்ளத்தில், ‘இந்த ஜனங்கள் எல்லாரும் நம்மைவிட ஏராளமாக இருக்கிறார்களே. அவர்களை நாம் எப்படித் துரத்துவோம்?’ என்று நினைக்காதீர்கள்.+ 18 அவர்களைப் பார்த்து நீங்கள் பயப்படக் கூடாது.+ பார்வோனுக்கும் எகிப்திலுள்ள எல்லாருக்கும் உங்கள் கடவுளாகிய யெகோவா செய்த எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.+ 19 அங்கே உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுடைய கண் முன்னால் கொடிய தண்டனைகளைக் கொடுத்து, அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்து,+ தன்னுடைய கைபலத்தாலும் மகா வல்லமையாலும் உங்களைக் கூட்டிக்கொண்டு வந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.+ நீங்கள் பார்த்துப் பயப்படுகிற ஜனங்களுக்கெல்லாம் உங்கள் கடவுளாகிய யெகோவா அப்படித்தான் செய்வார்.+ 20 உங்கள் கடவுளாகிய யெகோவா அவர்களை விரக்தியடைய* செய்வார். அவர்களில் மீதி இருக்கிறவர்களும்+ உங்களிடமிருந்து ஒளிந்துகொள்கிறவர்களும் அழிந்துபோகும்வரை அப்படிச் செய்வார். 21 அவர்களைப் பார்த்து நடுநடுங்காதீர்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களோடு இருக்கிறார்,+ அவர் அதிசயமும் அற்புதமுமானவர்.+

22 உங்கள் கடவுளாகிய யெகோவா அந்தத் தேசத்தாரைக் கொஞ்சம் கொஞ்சமாக உங்களைவிட்டுத் துரத்துவார்.+ ஆனால், அவர்களை ஒரேயடியாக அழித்துப்போட உங்களை விட மாட்டார். அப்படி விட்டுவிட்டால், அங்கே காட்டு மிருகங்கள் பெருகி பெரிய அச்சுறுத்தலாக ஆகிவிடும். 23 உங்கள் கடவுளாகிய யெகோவா அவர்களை உங்கள் கையில் கொடுப்பார். அவர்கள் அடியோடு அழிந்துபோகும்வரை அவர்களுக்குத் தோல்விமேல் தோல்வியைக் கொடுப்பார்.+ 24 அவர்களுடைய ராஜாக்களை உங்கள் கையில் கொடுப்பார்,+ நீங்கள் அவர்களுடைய பெயர்களை இந்த மண்ணிலிருந்தே மறைந்துபோகச் செய்வீர்கள்.+ நீங்கள் அவர்களை அடியோடு அழிக்கும்வரை+ யாருமே உங்களை எதிர்த்து நிற்க முடியாது.+ 25 அவர்களுடைய தெய்வச் சிலைகளை நீங்கள் நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.+ அவற்றிலுள்ள வெள்ளிக்கும் தங்கத்துக்கும் ஆசைப்பட்டு அவற்றை எடுத்துக்கொள்ளாதீர்கள்.+ அப்படிச் செய்தால் ஆபத்தில்* சிக்கிக்கொள்வீர்கள். ஏனென்றால், அவை உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவை.+ 26 அருவருப்பான சிலைகளை உங்கள் வீட்டுக்குள் கொண்டுவராதீர்கள். அப்படிக் கொண்டுவந்தால், அவற்றைப் போலவே நீங்களும் அழிக்கப்படுவீர்கள். நீங்கள் அவற்றை ‘சீ’ என்று வெறுத்து, அருவருக்க வேண்டும். ஏனென்றால், அவை அழியப்போவது உறுதி” என்றார்.

8 பின்பு அவர், “இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற ஒவ்வொரு கட்டளையையும் நீங்கள் கண்ணும் கருத்துமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து உயிர்வாழ்வீர்கள்,+ ஏராளமாகப் பெருகுவீர்கள். உங்கள் முன்னோர்களுக்கு யெகோவா வாக்குக் கொடுத்த தேசத்துக்குப்+ போய் அதைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள். 2 இந்த 40 வருஷங்களும் உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை வனாந்தரத்தில் எவ்வளவு தூரம் நடக்க வைத்திருக்கிறார் என்பதை நினைத்துப் பாருங்கள்.+ உங்களுக்குத் தாழ்மையைக் கற்றுக்கொடுப்பதற்கும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கிற இதயம்+ உங்களுக்கு இருக்கிறதா இல்லையா என்று சோதித்துப் பார்ப்பதற்கும்+ அப்படிச் செய்தார். 3 அவர் உங்களுக்குத் தாழ்மையைக் கற்றுக்கொடுத்தார். மனுஷன் உணவால்* மட்டுமல்ல, யெகோவாவின் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையாலும் உயிர்வாழ்வான்+ என்பதை உங்களுக்குப் புரிய வைப்பதற்காக உங்களைப் பசியில் வாடவிட்டார்.+ நீங்களோ உங்கள் முன்னோர்களோ அதுவரை பார்க்காத மன்னாவை+ உணவாகத் தந்தார். 4 இந்த 40 வருஷங்களில் உங்களுடைய துணிமணிகள் பழையதாகவும் இல்லை, உங்கள் பாதங்கள் வீங்கவும் இல்லை.+ 5 ஒரு அப்பா தன் மகனைக் கண்டித்துத் திருத்துவது போல உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைக் கண்டித்துத் திருத்தினார்+ என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

6 உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து அவருடைய வழிகளில் நடப்பதன் மூலம் அவருடைய கட்டளைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். 7 ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை நல்ல தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு போகிறார்.+ அங்கே சமவெளிகளிலும் மலைப்பகுதிகளிலும் நீரோடைகள் பாய்ந்தோடுகின்றன, நீரூற்றுகள் பொங்கியெழுகின்றன. 8 அங்கே கோதுமையும், பார்லியும், திராட்சைக் கொடிகளும், அத்தி மரங்களும், மாதுளைச் செடிகளும்,+ ஒலிவ எண்ணெயும், தேனும்+ ஏராளமாக இருக்கின்றன. 9 உணவுப் பொருள்களுக்குப் பஞ்சமே இல்லாத தேசம் அது. அங்கே உங்களுக்கு எதற்குமே குறைவு இருக்காது. அங்கே உள்ள பாறைகளிலிருந்து இரும்பும் மலைகளிலிருந்து செம்பும் கிடைக்கும்.

10 நீங்கள் நன்றாகச் சாப்பிட்டுத் திருப்தியாக இருக்கும்போது, அந்த நல்ல தேசத்தைத் தந்த உங்கள் கடவுளாகிய யெகோவாவைப் போற்றிப் புகழுங்கள்.+ 11 உங்கள் கடவுளாகிய யெகோவாவை மறக்காமலும், இன்று நான் கொடுக்கிற அவருடைய கட்டளைகளையும் நீதித்தீர்ப்புகளையும் சட்டதிட்டங்களையும் அலட்சியப்படுத்தாமலும் இருங்கள். 12 நீங்கள் நன்றாகச் சாப்பிட்டுத் திருப்தியாக இருக்கும்போதும், அழகிய வீடுகளைக் கட்டி அவற்றில் குடியிருக்கும்போதும்,+ 13 உங்கள் ஆடுமாடுகள் ஏராளமாகப் பெருகும்போதும், வெள்ளியும் தங்கமும் உங்களிடம் குவியும்போதும், எல்லாமே உங்களுக்குத் தாராளமாகக் கிடைக்கும்போதும், 14 உங்கள் உள்ளத்தில் பெருமை வந்துவிடக் கூடாது.+ எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவாவை மறந்துவிடக் கூடாது.+ 15 விஷப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, தண்ணீரில்லாத பயங்கரமான பெரிய வனாந்தரத்தின் வழியாக உங்களைக் கூட்டிக்கொண்டு வந்த கடவுளை மறந்துவிடக் கூடாது.+ அவர் உங்களுக்காகக் கற்பாறையிலிருந்து தண்ணீரைப் பாய்ந்துவரச் செய்தார்.+ 16 உங்கள் முன்னோர்கள் யாரும் அதுவரை பார்க்காத மன்னாவை வனாந்தரத்தில் உங்களுக்குச் சாப்பிடக் கொடுத்தார்.+ உங்களுடைய எதிர்கால நன்மையை மனதில் வைத்து,+ உங்களுக்குத் தாழ்மையைக் கற்றுக்கொடுப்பதற்கும்,+ உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்கும் அப்படிச் செய்தார். 17 ஒருவேளை நீங்கள், ‘என் சொத்துகளையெல்லாம் நானே என் கைகளால் சம்பாதித்திருக்கிறேன், என் சக்தியாலும் பலத்தாலும் சம்பாதித்திருக்கிறேன்’ என்று உள்ளத்தில் சொல்லிக்கொண்டால்,+ 18 உங்கள் கடவுளாகிய யெகோவாதான் சொத்துகளைச் சம்பாதிக்க உங்களுக்குச் சக்தி தருகிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்.+ உங்கள் முன்னோர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றவே அவர் அப்படிச் செய்கிறார். இன்றுவரை அதை நிறைவேற்றியும் வந்திருக்கிறார்.+

19 உங்கள் கடவுளாகிய யெகோவாவை நீங்கள் என்றைக்காவது மறந்து வேறு தெய்வங்களைக் கும்பிட்டால் நிச்சயம் அழிந்துபோவீர்கள் என்று இப்போது எச்சரிக்கிறேன்.+ 20 உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சை நீங்கள் கேட்காமல்போனால், யெகோவா இன்று உங்கள் கண்ணெதிரே மற்ற தேசத்தாரை அழிப்பது போல உங்களையும் அழித்துவிடுவார்”+ என்றார்.

9 பின்பு அவர், “இஸ்ரவேலர்களே, கேளுங்கள். இன்றைக்கு நீங்கள் யோர்தானைக் கடந்துபோய்,+ உங்களைவிட பெரியதாகவும் பலம்படைத்ததாகவும் இருக்கிற தேசங்களைக் கைப்பற்றப்போகிறீர்கள்.+ அங்கிருக்கிற நகரங்கள் மாபெரும் நகரங்கள், வானத்தைத் தொடுமளவுக்கு உயரமான மதில்கள் உள்ள நகரங்கள்.+ 2 அங்கு ஏராளமான ஏனாக்கியர்கள் இருக்கிறார்கள்.+ அவர்கள் மிகவும் உயரமானவர்கள். அவர்களைப் பற்றி உங்களுக்கே தெரியும். அவர்களோடு மோத யாராலும் முடியாது என்று ஜனங்கள் பேசிக்கொள்வதைக் கேட்டிருக்கிறீர்கள். 3 அதனால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்கு முன்னால் போவார் என்பதை இப்போது தெரிந்துகொள்ளுங்கள்.+ அவர் சுட்டெரிக்கிற நெருப்பாக இருக்கிறார்.+ அவர் உங்கள் கண் முன்னால் அவர்களைத் தோற்கடித்து, அழித்துவிடுவார். யெகோவா உங்களுக்கு வாக்குறுதி தந்தபடியே, நீங்கள் அவர்களைச் சீக்கிரமாகத் துரத்தியடிப்பீர்கள், ஒரேயடியாக ஒழித்துக்கட்டுவீர்கள்.+

4 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் முன்னாலிருந்து அவர்களைத் துரத்தியடிக்கும்போது, ‘நாங்கள் நீதிமான்களாக இருப்பதால்தான் இந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள யெகோவா எங்களைக் கூட்டிக்கொண்டுவந்தார்’ என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்.+ அந்த ஜனங்கள் பொல்லாதவர்களாக இருப்பதால்தான்+ யெகோவா அவர்களைத் துரத்தியடிக்கிறார். 5 நீங்கள் ஏதோ நீதிமான்களாகவும் உள்ளத்தில் நேர்மையானவர்களாகவும் இருப்பதால் அவர்களுடைய தேசத்தைச் சொந்தமாக்கப்போவதாக நினைத்துக்கொள்ளாதீர்கள். அவர்கள் பொல்லாதவர்களாக இருப்பதால்தான் உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் முன்னாலிருந்து அவர்களைத் துரத்தியடிக்கிறார்.+ அதோடு, உங்கள் முன்னோர்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்காகவும்+ யெகோவா அவர்களைத் துரத்தியடிக்கிறார். 6 அதனால், நீங்கள் ஏதோ நீதிமான்களாக இருப்பதால் உங்கள் கடவுளாகிய யெகோவா இந்த நல்ல தேசத்தை உங்களுக்குத் தருகிறார் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் எல்லாரும் முரண்டுபிடிக்கிற ஜனங்கள்.+

7 வனாந்தரத்தில் நீங்கள் எப்படியெல்லாம் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கோபத்தைக் கிளறினீர்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.+ நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நாளிலிருந்து இந்த இடத்துக்கு வந்து சேரும்வரை, யெகோவாவின் பேச்சை மீறி நடந்திருக்கிறீர்கள்.+ 8 ஓரேபிலும் யெகோவாவின் கோபத்தைக் கிளறினீர்கள். யெகோவாவுக்கு உங்கள்மேல் பயங்கர கோபம் வந்ததால், உங்களை ஒழித்துக்கட்ட நினைத்தார்.+ 9 யெகோவா உங்களோடு செய்த ஒப்பந்தத்தின் கற்பலகைகளைப்+ பெற்றுக்கொள்வதற்காக நான் மலையில் ஏறிப்போனேன். ராத்திரி பகலாக 40 நாட்கள்+ எதையும் சாப்பிடாமலும் குடிக்காமலும் அங்கேயே இருந்தேன். 10 அப்போது, யெகோவா தன்னுடைய சக்தியால்* எழுதிய அந்த இரண்டு கற்பலகைகளை என்னிடம் தந்தார். நீங்கள் எல்லாரும் ஒன்றுகூடிவந்த நாளில், மலைமேல் எரிந்துகொண்டிருந்த நெருப்பின் நடுவிலிருந்து யெகோவா சொன்ன எல்லா வார்த்தைகளும் அவற்றில் எழுதப்பட்டிருந்தன.+ 11 40 நாட்களுக்குப் பின்பு, ஒப்பந்தம் எழுதப்பட்ட அந்த இரண்டு கற்பலகைகளை யெகோவா என்னிடம் கொடுத்தார். 12 பின்பு யெகோவா என்னிடம், ‘உடனே கீழே இறங்கிப் போ! நீ எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த ஜனங்கள் தறிகெட்டு நடக்கிறார்கள்.+ எவ்வளவு சீக்கிரமாக என் வழியைவிட்டு விலகிவிட்டார்கள்! ஒரு உலோகச் சிலையை உண்டாக்கி அதை வணங்குகிறார்கள்’+ என்றார். 13 பின்பு யெகோவா என்னிடம், ‘இந்த ஜனங்களைப் பற்றி எனக்குத் தெரியும், இவர்கள் முரண்டுபிடிப்பவர்கள்.+ 14 இந்த உலகத்தில் இவர்களுடைய பெயரே இல்லாதபடி இவர்களை ஒழித்துக்கட்டலாம் என்று நினைத்திருக்கிறேன். இவர்களைவிட பெரிய தேசமாகவும் பலம்படைத்த தேசமாகவும் உன்னை உருவாக்கலாம் என்று நினைத்திருக்கிறேன்’+ என்றார்.

15 அதற்குப் பின்பு, மலையிலிருந்து கீழே இறங்கி வந்தேன். அப்போது அந்த மலையில் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது.+ ஒப்பந்தம் எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளை என்னுடைய கைகளில் வைத்திருந்தேன்.+ 16 நான் உங்களைப் பார்த்தபோது, உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்துகொண்டிருந்தீர்கள்! ஒரு கன்றுக்குட்டி சிலையைச் செய்து வணங்கிக்கொண்டிருந்தீர்கள். அவ்வளவு சீக்கிரத்தில் யெகோவாவின் வழியைவிட்டு விலகிப்போயிருந்தீர்கள்!+ 17 அதனால், என் கைகளிலிருந்த இரண்டு கற்பலகைகளையும் வீசியெறிந்தேன். அவை உங்கள் கண் முன்னால் சுக்குநூறாக உடைந்தன.+ 18 பிறகு, நான் முன்பு போலவே ராத்திரி பகலாக 40 நாட்கள் எதையும் சாப்பிடாமலும் குடிக்காமலும் யெகோவாவுக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து கிடந்தேன்.+ ஏனென்றால், நீங்கள் யெகோவாவுக்குப் பிடிக்காத எத்தனையோ பாவங்களைச் செய்து அவருடைய கோபத்தைக் கிளறியிருந்தீர்கள். 19 யெகோவா பயங்கர கோபத்தோடு உங்களை ஒழித்துக்கட்ட நினைத்ததால்+ நான் நடுநடுங்கிப்போய் யெகோவாவிடம் கெஞ்சினேன். அந்தத் தடவையும் அவர் என் வேண்டுதலைக் கேட்டார்.+

20 ஆரோன்மேலும் யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்ததால் அவரை அழிக்க நினைத்தார்.+ அந்தச் சமயத்திலும் நான் ஆரோனுக்காக அவரிடம் மன்றாடினேன். 21 பின்பு, அந்தப் பாழாய்ப்போன கன்றுக்குட்டி சிலையைத்+ தீயில் சுட்டெரித்தேன். அதை நன்றாக இடித்துத் தூள் தூளாக்கி, மலையிலிருந்து பாய்ந்துவந்த தண்ணீரில் கொட்டிவிட்டேன்.+

22 அதோடு, தபேராவிலும்+ மாசாவிலும்+ கிப்ரோத்-அத்தாவாவிலும்+ நீங்கள் யெகோவாவின் கோபத்தைக் கிளறினீர்கள். 23 யெகோவா உங்களை காதேஸ்-பர்னேயாவிலிருந்து அனுப்பியபோது,+ ‘நீங்கள் போய் அந்தத் தேசத்தைக் கைப்பற்றுங்கள், நான் கண்டிப்பாக அதை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்று சொன்னார். ஆனால், நீங்கள் மறுபடியும் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கட்டளையை மீறி நடந்தீர்கள்.+ அவர்மேல் விசுவாசம் வைக்கவில்லை,+ அவருக்குக் கீழ்ப்படியவில்லை. 24 எனக்குத் தெரிந்த நாளிலிருந்தே நீங்கள் யெகோவாவின் பேச்சை மீறிவந்திருக்கிறீர்கள்.

25 உங்களை அழித்துவிடுவதாக யெகோவா சொல்லியிருந்ததால் ராத்திரி பகலாக 40 நாட்கள் யெகோவாவின் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து கிடந்தேன்.+ 26 நான் யெகோவாவிடம் மன்றாடி, ‘உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, தயவுசெய்து உங்களுடைய ஜனங்களை அழித்துவிடாதீர்கள். இவர்கள் உங்களுடைய சொத்து.+ நீங்கள் உங்களுடைய மகத்துவத்தால் இவர்களை விடுவித்து, உங்களுடைய கைபலத்தால் எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தீர்கள்.+ 27 உங்கள் ஊழியர்களாகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் நினைத்துப் பாருங்கள்.+ இந்த ஜனங்களுடைய பிடிவாதத்தையும் அக்கிரமத்தையும் பாவத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.+ 28 இல்லாவிட்டால், “வாக்குக் கொடுத்த தேசத்துக்கு இஸ்ரவேலர்களைக் கூட்டிக்கொண்டு போக யெகோவாவுக்குச் சக்தியில்லை. அவர்களை அவர் வெறுத்துவிட்டார். அதனால்தான் அவர்களை வனாந்தரத்துக்குக் கொண்டுவந்து கொன்றுபோட்டார்” என்று எகிப்தியர்கள் சொல்வார்களே.+ 29 இவர்கள் உங்களுடைய ஜனங்கள்தானே? உங்களுடைய சொத்துதானே?+ நீங்கள் உங்களுடைய மகா வல்லமையாலும் பலத்தாலும் இவர்களைக் கூட்டிக்கொண்டு வந்தீர்களே!’+ என்று சொன்னேன்” என்றார்.

10 பின்பு, “யெகோவா என்னிடம், ‘முன்பு இருந்ததைப் போலவே வேறு இரண்டு கற்பலகைகளை வெட்டி எடுத்துக்கொண்டு+ மலைமேல் ஏறி வா. நீ ஒரு மரப்பெட்டியையும் செய்துகொள். 2 நீ உடைத்துப்போட்ட முதல் கற்பலகைகளில் இருந்த வார்த்தைகளை இந்தக் கற்பலகைகளில் நான் எழுதுவேன். இவற்றை நீ அந்தப் பெட்டியில் வைக்க வேண்டும்’ என்று சொன்னார். 3 அதனால், நான் வேல மரத்தால் ஒரு பெட்டியைச் செய்தேன். முன்பு இருந்ததைப் போலவே வேறு இரண்டு கற்பலகைகளை வெட்டி எடுத்துக்கொண்டு, மலைமேல் ஏறிப் போனேன்.+ 4 முன்பு நீங்கள் ஒன்றுகூடி வந்த நாளிலே,+ மலையில் எரிந்துகொண்டிருந்த நெருப்பின் நடுவிலிருந்து யெகோவா சொன்ன அதே வார்த்தைகளை,+ அதாவது முன்பு எழுதிய அதே பத்துக் கட்டளைகளை,+ அந்தக் கற்பலகைகளில் யெகோவா எழுதினார்.+ அதன்பின், அவற்றை என்னிடம் தந்தார். 5 பின்பு நான் மலையிலிருந்து கீழே இறங்கி வந்து,+ நான் செய்து வைத்திருந்த பெட்டியில் அந்தக் கற்பலகைகளை வைத்தேன். யெகோவா எனக்குக் கட்டளை கொடுத்தபடியே அவை இன்றுவரை அதில் இருக்கின்றன.

6 பிற்பாடு, இஸ்ரவேலர்கள் பேரோத் பெனெ-யாக்கானிலிருந்து புறப்பட்டு மோசெராவுக்குப் போனார்கள். அங்கே ஆரோன் இறந்துபோனார், அங்குதான் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.+ அவருடைய மகன் எலெயாசார் அவருக்குப் பதிலாகக் குருத்துவச் சேவை செய்யத் தொடங்கினான்.+ 7 அங்கிருந்து அவர்கள் புறப்பட்டு குத்கோதாவுக்குப் போனார்கள். பின்பு, குத்கோதாவிலிருந்து யோத்பாத்தாவுக்குப்+ போனார்கள். அது ஆறுகள் பாய்ந்தோடுகிற தேசம்.

8 அப்போது, யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைச் சுமக்கவும்,+ யெகோவாவின் சன்னிதியில் அவருக்குச் சேவை செய்யவும், அவருடைய பெயரில் ஆசீர்வாதம் வழங்கவும்+ லேவி கோத்திரத்தாரை யெகோவா தேர்ந்தெடுத்தார்.+ இன்றுவரை அவர்கள் இதையெல்லாம் செய்துவருகிறார்கள். 9 அதனால்தான், லேவியர்களுக்கு அவர்களுடைய சகோதரர்களோடு எந்தப் பங்கும் சொத்தும் கொடுக்கப்படவில்லை. உங்கள் கடவுளாகிய யெகோவா சொன்னபடி, யெகோவாதான் அவர்களுடைய சொத்து.+ 10 முன்பு போலவே ராத்திரி பகலாக 40 நாட்கள் நான் மலையில் இருந்தேன்.+ அந்தச் சமயத்திலும் யெகோவா என் மன்றாட்டைக் கேட்டார்.+ யெகோவா உங்களை அழிக்காமல் விட்டுவிட்டார். 11 பின்பு யெகோவா என்னிடம், ‘நான் உங்களுடைய முன்னோர்களுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்த தேசத்தை+ நீங்கள் கைப்பற்றுவதற்காக, இப்போது ஜனங்களைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டுப் போ’ என்றார்.

12 இஸ்ரவேலர்களே, உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களிடம் என்ன கேட்கிறார்?+ உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து+ அவருடைய வழிகளில் நடக்கவும்,+ அவர்மேல் அன்பு காட்டவும், உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் சேவை செய்யவும் வேண்டும் என்றுதானே கேட்கிறார்?+ 13 உங்களுடைய நன்மைக்காக இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற யெகோவாவின் கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றுதானே கேட்கிறார்?+ 14 இதோ! வானமும், ஏன் வானாதி வானமும், பூமியும் அதில் உள்ளவையும் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குத்தான் சொந்தம்.+ 15 ஆனாலும், உங்களுடைய முன்னோர்களிடம் மட்டும்தான் யெகோவா நெருக்கமாக இருந்து, அன்பு காட்டினார். அவர்களுடைய சந்ததியான உங்களைத்தான் தனக்காகத் தேர்ந்தெடுத்தார்.+ இன்று எத்தனையோ ஜனங்கள் இருந்தாலும் நீங்கள்தான் அவருடைய ஜனம். 16 அதனால், இப்போது உங்களுடைய இதயத்தைச் சுத்தமாக்குங்கள்,+ முரண்டுபிடிப்பதை விட்டுவிடுங்கள்.+ 17 உங்கள் கடவுளாகிய யெகோவாதான் தேவாதி தேவன்,+ எஜமான்களுக்கெல்லாம் எஜமான், வல்லமை படைத்தவர், அதிசயமும் அற்புதமுமானவர், யாருக்கும் பாரபட்சம் காட்டாதவர்,+ லஞ்சம் வாங்காதவர், 18 அப்பா இல்லாத பிள்ளைக்கும்* விதவைக்கும் நியாயம் செய்கிறவர்,+ உங்களோடு வாழ்கிற வேறு தேசத்து ஜனங்களை நேசிக்கிறவர்,+ அவர்களுக்கு உணவும் உடையும் தருகிறவர். 19 நீங்களும் அவர்களை நேசிக்க வேண்டும். ஏனென்றால், நீங்களும்கூட வேறு தேசத்தில், அதாவது எகிப்து தேசத்தில், குடியிருந்தீர்களே.+

20 உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு நீங்கள் பயந்து நடக்க வேண்டும், அவருக்கு மட்டும்தான் சேவை செய்ய வேண்டும்,+ அவரையே உறுதியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும், அவருடைய பெயரில்தான் சத்தியம் செய்ய வேண்டும். 21 அவரைத்தான் நீங்கள் புகழ வேண்டும்.+ அவர்தான் உங்கள் கடவுள், அவர்தான் உங்கள் கண் முன்னால் உங்களுக்காக அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்தவர்.+ 22 எகிப்துக்குப் போன உங்கள் முன்னோர்கள் வெறும் 70 பேர்தான்.+ ஆனால், இன்றைக்கு உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை வானத்து நட்சத்திரங்கள் போல ஏராளமாகப் பெருக வைத்திருக்கிறார்”+ என்றார்.

11 பின்பு அவர், “அதனால், உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் நீங்கள் அன்பு காட்ட வேண்டும்.+ எப்போதும் அவருடைய பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். அவருடைய சட்டதிட்டங்களையும் நீதித்தீர்ப்புகளையும் கட்டளைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். 2 இன்று நான் உங்கள் பிள்ளைகளிடம் பேசவில்லை, உங்களிடம்தான் பேசுகிறேன். ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைத்தான் கண்டித்துத் திருத்தினார்.+ அவருடைய மகத்துவத்தையும்+ கைபலத்தையும்+ மகா வல்லமையையும் உங்கள் பிள்ளைகள் பார்க்கவில்லை, அதைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது. 3 எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கும் அவனுடைய தேசத்துக்கும் எதிராக அவர் செய்த அதிசயங்களையும் அற்புதங்களையும்+ அவர்கள் பார்க்கவில்லை. 4 உங்களைத் துரத்திக்கொண்டு வந்த எகிப்தின் படைகளையும் பார்வோனின் குதிரைகளையும் போர் ரதங்களையும் யெகோவா செங்கடலில் மூழ்கடித்து, ஒரேயடியாக அழித்துப்போட்டதை+ அவர்கள் பார்க்கவில்லை. 5 நீங்கள் இந்த இடத்துக்கு வந்து சேரும்வரை அவர் உங்களை எப்படியெல்லாம் வனாந்தரத்தில் வழிநடத்தினார் என்பதையும் அவர்கள் பார்க்கவில்லை. 6 ரூபனின் பேரன்களும் எலியாபின் மகன்களுமாகிய தாத்தானுக்கும் அபிராமுக்கும் அவர் செய்ததையும் அவர்கள் பார்க்கவில்லை. இஸ்ரவேலர்களுடைய கண் முன்னால் பூமி பிளந்து அவர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் கூடாரங்களும் அவர்களோடு இருந்த எல்லா உயிர்களும் புதைந்துபோனதை+ அவர்கள் பார்க்கவில்லை. 7 யெகோவா செய்த எல்லா அற்புதங்களையும் கண்ணால் பார்த்தவர்கள் நீங்கள்தானே!

8 நான் இன்று உங்களுக்குக் கொடுக்கிற கட்டளைகள் எல்லாவற்றையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் பலம் அடைந்து, யோர்தானைக் கடந்துபோய், அந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள். 9 அதோடு, உங்கள் முன்னோர்களுக்கும் அவர்களுடைய சந்ததிக்கும் தருவதாக யெகோவா வாக்குக் கொடுத்த அந்தத் தேசத்தில்,+ அதாவது பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில்,+ நீடூழி வாழ்வீர்கள்.+

10 நீங்கள் சொந்தமாக்கப்போகிற அந்தத் தேசம், நீங்கள் விட்டுவந்த எகிப்து தேசத்தைப் போல இருக்காது. எகிப்தில் நீங்கள் விதை விதைத்து, காய்கறித் தோட்டங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது போல உங்கள் வயல்களுக்குக் கஷ்டப்பட்டு* தண்ணீர் பாய்ச்சி வந்தீர்கள். 11 ஆனால், நீங்கள் இப்போது சொந்தமாக்கப்போகிற தேசம் வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம்.+ அது மலைகளும் சமவெளிகளும் நிறைந்த தேசம்.+ 12 உங்கள் கடவுளாகிய யெகோவா எப்போதும் கவனித்துக்கொள்கிற தேசம். அதை உங்கள் கடவுளாகிய யெகோவா வருஷம் முழுக்க கண்ணுக்குக் கண்ணாகக் காத்துவருகிறார்.

13 இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற கட்டளைகளுக்கு நீங்கள் அப்படியே கீழ்ப்படிந்து நடந்தால், உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் அன்பு காட்டி முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் அவருக்குச் சேவை செய்துவந்தால்,+ 14 உங்கள் தேசத்தில் வசந்த காலத்திலும் சரி, இலையுதிர் காலத்திலும் சரி, தவறாமல் பருவ மழை பெய்யும்படி அவர் செய்வார்.* அதனால், உங்களுக்குத் தானியமும் புதிய திராட்சமதுவும் எண்ணெயும் ஏராளமாகக் கிடைக்கும்.+ 15 உங்கள் கால்நடைகள் மேய்வதற்கு அவர் புல்வெளிகளைத் தருவார். நீங்களும் நன்றாகச் சாப்பிட்டுத் திருப்தியாக இருப்பீர்கள்.+ 16 மற்ற தெய்வங்களை வணங்க வேண்டுமென்ற தவறான ஆசை உங்கள் இதயத்தில் வந்துவிடாதபடி எச்சரிக்கையாக இருங்கள்; அந்தத் தவறான வழியில் போகாதபடி கவனமாக இருங்கள்.+ 17 அப்படிப் போனால், யெகோவாவின் கோபம் உங்கள்மேல் பற்றியெரியும். மழை பெய்யாதபடி அவர் வானத்தை அடைத்துவிடுவார்,+ நிலமும் விளைச்சல் தராது. யெகோவா கொடுக்கிற நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரத்தில் அழிந்துபோவீர்கள்.+

18 இந்த வார்த்தைகளை உங்களுடைய இதயத்திலும் மனதிலும் நீங்கள் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை உங்கள் கையில் ஒரு நினைப்பூட்டுதல் போலவும் நெற்றியில் ஒரு அடையாளம் போலவும் கட்டிக்கொள்ள வேண்டும்.+ 19 அவற்றை உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்திருக்கிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவற்றைப் பற்றிப் பேச வேண்டும்.+ 20 நீங்கள் அவற்றை உங்கள் வீட்டு வாசலின் நிலைக்கால்களிலும் நகரவாசல்களிலும் எழுதிவைக்க வேண்டும். 21 அப்போது, யெகோவா உங்கள் முன்னோர்களுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்த தேசத்தில்+ நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நீடூழி வாழ்வீர்கள்.+ இந்தப் பூமிக்கு மேலே வானம் இருக்கும்வரை உங்கள் வாழ்க்கையும் இருக்கும்.

22 நான் கொடுக்கிற இந்தக் கட்டளைகளை நீங்கள் அப்படியே கடைப்பிடித்தால், அதாவது உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் அன்பு காட்டி+ அவருடைய வழிகளில் நடந்து அவரை உறுதியாகப் பிடித்துக்கொண்டால்,+ 23 இந்த ஜனங்களையெல்லாம் யெகோவா உங்கள் முன்னாலிருந்து துரத்தியடிப்பார்.+ உங்களைவிட பெரியதாகவும் பலம்படைத்ததாகவும் இருக்கிற தேசங்களை நீங்கள் கைப்பற்றுவீர்கள்.+ 24 உங்கள் காலடி படுகிற இடமெல்லாம் உங்களுக்குச் சொந்தமாகும்.+ வனாந்தரத்திலிருந்து லீபனோன் வரையிலும், யூப்ரடிஸ்* ஆறு வரையிலும், மேற்குக் கடல்* வரையிலும் உங்கள் தேசத்தின் எல்லை இருக்கும்.+ 25 யாருமே உங்களை எதிர்த்து நிற்க மாட்டார்கள்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்கு வாக்குறுதி தந்தபடியே, நீங்கள் கடந்துபோகிற தேசங்களிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உங்களை நினைத்துப் பயமும் பீதியும் அடையும்படி செய்வார்.+

26 இன்று நான் உங்கள் முன்னால் ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன்.+ 27 இன்று நான் சொல்கிறபடி உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால் உங்களுக்கு ஆசீர்வாதம் கிடைக்கும்.+ 28 ஆனால் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படியாமல், நான் இன்று சொல்கிற வழியைவிட்டு விலகி முன்பின் தெரியாத தெய்வங்களைக் கும்பிட்டால், உங்களுக்குச் சாபம் வரும்.+

29 நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசத்துக்கு உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது, கெரிசீம் மலை அடிவாரத்தில் நிற்கிறவர்களைப் பார்த்து ஆசீர்வாதத்தையும் ஏபால் மலை அடிவாரத்தில் நிற்கிறவர்களைப் பார்த்து சாபத்தையும் நீ அறிவிக்க* வேண்டும்.+ 30 அந்த மலைகள் யோர்தானுக்கு மேற்கே, அரபாவில் வாழும் கானானியர்களின் தேசத்தில், கில்காலுக்கு எதிரிலுள்ள மோரேயின் பெரிய மரங்களுக்குப் பக்கத்தில் இருக்கின்றன.+ 31 நீங்கள் யோர்தானைக் கடந்து உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தைச் சொந்தமாக்கப்போகிறீர்கள்.+ அப்படி அதைச் சொந்தமாக்கிக்கொண்டு அங்கே குடியிருக்கும்போது, 32 இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற எல்லா விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும்”+ என்றார்.

12 பின்பு அவர், “உங்கள் முன்னோர்களின் கடவுளாகிய யெகோவா தருகிற தேசத்தில் நீங்கள் வாழும் காலமெல்லாம் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளும் நீதித்தீர்ப்புகளும் இவைதான். 2 நீங்கள் கைப்பற்றுகிற தேசத்தார் அவர்களுடைய தெய்வங்களை எங்கே வணங்கியிருந்தாலும் சரி, அந்த இடங்களை நீங்கள் அழித்துவிட வேண்டும்.+ உயர்ந்த மலைகளிலோ குன்றுகளிலோ அடர்த்தியான மரங்களின் கீழோ இருக்கிற அந்த இடங்களில் எதையுமே நீங்கள் விட்டுவைக்கக் கூடாது. 3 அவர்களுடைய பலிபீடங்களை இடித்துப்போட வேண்டும், பூஜைத் தூண்களைத் தகர்த்துப்போட வேண்டும்,+ பூஜைக் கம்பங்களை* எரித்துப்போட வேண்டும், தெய்வச் சிலைகளை உடைத்துப்போட வேண்டும்.+ அந்தத் தெய்வங்களின் பெயர்களைக்கூட அங்கிருந்து அழித்துவிட வேண்டும்.+

4 அவர்கள் தங்களுடைய தெய்வங்களை வணங்கும் விதத்தில் நீங்கள் உங்கள் கடவுளாகிய யெகோவாவை வணங்கக் கூடாது.+ 5 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகவும் தான் குடிகொள்வதற்காகவும் உங்கள் கோத்திரங்களின் நடுவில் எந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கிறாரோ அந்த இடத்துக்குப் போய் அவரை வணங்க வேண்டும்.+ 6 உங்களுடைய தகன பலிகளையும்,+ மற்ற பலிகளையும், பத்திலொரு பாகங்களையும்,+ காணிக்கைகளையும்,+ நீங்கள் நேர்ந்துகொண்ட பலிகளையும், நீங்களாகவே விருப்பப்பட்டு செலுத்தும் பலிகளையும்,+ ஆடுமாடுகளின் முதல் குட்டிகளையும் அங்கேதான் கொண்டுவர வேண்டும்.+ 7 அங்கே நீங்களும் உங்களுடைய குடும்பத்தாரும் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் சாப்பிட வேண்டும்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை ஆசீர்வதித்திருப்பதால் எல்லா வேலைகளையும் சந்தோஷமாகச் செய்ய வேண்டும்.+

8 இங்கே நாம் செய்துவருவது போல அங்கே செய்யக் கூடாது. இங்கே அவரவர் இஷ்டப்படி செய்துவருகிறீர்கள். 9 ஏனென்றால், உங்களுடைய கடவுளாகிய யெகோவா உங்களுக்குச் சொத்தாகக் கொடுக்கப்போகிற தேசத்தில்+ நீங்கள் இன்னும் குடியேறவில்லை. 10 நீங்கள் யோர்தானைக் கடந்துபோய்+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கப்போகிற தேசத்தில் குடியேறும்போது, சுற்றியுள்ள எதிரிகளின் தொல்லைகள் எதுவும் இல்லாமல் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் அவர் உங்களை வாழ வைப்பார்.+ 11 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடத்துக்கு+ நான் சொல்கிற எல்லாவற்றையும் நீங்கள் கொண்டுவர வேண்டும். அதாவது உங்களுடைய தகன பலிகளையும், மற்ற பலிகளையும், பத்திலொரு பாகங்களையும்,+ காணிக்கைகளையும், நீங்கள் நேர்ந்துகொண்ட எல்லா பலிகளையும் யெகோவாவுக்குக் கொண்டுவர வேண்டும். 12 நீங்களும் உங்களுடைய மகன்களும் மகள்களும், உங்களிடம் அடிமைகளாக இருக்கிற ஆண்களும் பெண்களும் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு முன்னால் சந்தோஷமாக இருக்க வேண்டும்.+ தங்களுக்கென்று எந்தப் பங்கும் சொத்தும் கொடுக்கப்படாமல் உங்கள் நகரங்களில் வாழ்கிற லேவியர்களும்+ அதேபோல் சந்தோஷமாக இருக்க வேண்டும். 13 உங்களுக்கு இஷ்டமான இடங்களிலெல்லாம் தகன பலிகளைச் செலுத்தாதபடி எச்சரிக்கையாக இருங்கள்.+ 14 உங்களுடைய கோத்திரங்களின் நடுவில் யெகோவா எந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கிறாரோ அங்குதான் நீங்கள் தகன பலிகளைச் செலுத்த வேண்டும். நான் சொல்கிற எல்லாவற்றையும் அங்குதான் செய்ய வேண்டும்.+

15 இறைச்சி சாப்பிட வேண்டுமென்று எப்போது ஆசைப்பட்டாலும் அதைச் சாப்பிடலாம்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் நகரங்களில் உங்களுக்கு எந்தளவு இறைச்சியைத் தந்து ஆசீர்வதித்திருக்கிறாரோ அந்தளவு அதைச் சாப்பிடலாம். தீட்டுள்ளவரும் சரி, தீட்டில்லாதவரும் சரி, மான் இறைச்சியை* சாப்பிடுவதுபோல் அதையும் சாப்பிடலாம். 16 ஆனால் நீங்கள் அதன் இரத்தத்தைச் சாப்பிடக் கூடாது,+ தண்ணீரைப் போல அதைத் தரையில் ஊற்றிவிட வேண்டும்.+ 17 தானியம், புதிய திராட்சமது, எண்ணெய், ஆடுமாடுகளின் முதல் குட்டிகள், நீங்கள் நேர்ந்துகொண்ட பலிகள், நீங்களாகவே விருப்பப்பட்டு செலுத்தும் பலிகள், காணிக்கைகள் ஆகியவற்றில் பத்திலொரு பாகத்தை உங்கள் நகரங்களுக்கு உள்ளே சாப்பிடக் கூடாது.+ 18 அவற்றை உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில், உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்தில்தான் சாப்பிட வேண்டும்.+ நீங்களும், உங்கள் மகனும், மகளும், வேலைக்காரனும், வேலைக்காரியும், உங்கள் நகரங்களில் வாழ்கிற லேவியர்களும் அவற்றைச் சாப்பிட வேண்டும். உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் நீங்கள் என்ன வேலை செய்தாலும் அதைச் சந்தோஷமாகச் செய்ய வேண்டும். 19 நீங்கள் அந்தத் தேசத்தில் வாழும் காலமெல்லாம் லேவியர்களை அசட்டை செய்யாதபடி கவனமாக இருக்க வேண்டும்.+

20 உங்கள் கடவுளாகிய யெகோவா வாக்குறுதி தந்தபடி உங்கள் எல்லையை+ விரிவுபடுத்தும் சமயத்தில்,+ நீங்கள் இறைச்சி சாப்பிட ஆசைப்பட்டால் அதைச் சாப்பிடலாம்; ஆசைப்படும்போதெல்லாம் அதைச் சாப்பிடலாம்.+ 21 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடம்+ ரொம்பத் தூரத்தில் இருந்தால், யெகோவா கொடுத்திருக்கிற ஆடுமாடுகள் சிலவற்றை வெட்டி நீங்கள் சாப்பிடலாம். நான் உங்களுக்குக் கட்டளை கொடுத்தபடியே, ஆசைப்படும்போதெல்லாம் உங்கள் நகரங்களுக்கு உள்ளே அதைச் சாப்பிடலாம். 22 தீட்டுள்ளவரும் சரி, தீட்டில்லாதவரும் சரி, மான் இறைச்சியை* சாப்பிடுவதுபோல்+ அதையும் சாப்பிடலாம். 23 ஆனால், அதன் இரத்தத்தைச் சாப்பிடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருங்கள்.+ இரத்தத்தில் உயிர் இருப்பதால்+ இறைச்சியை இரத்தத்தோடு சாப்பிடக் கூடாது. 24 இரத்தத்தை நீங்கள் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது. தண்ணீரைப் போல அதைத் தரையில் ஊற்றிவிட வேண்டும்.+ 25 நீங்கள் அதைச் சாப்பிடவே கூடாது. அப்போதுதான், நீங்களும் உங்களுடைய வம்சத்தாரும் சந்தோஷமாக வாழ்வீர்கள், யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்கிறவர்களாகவும் இருப்பீர்கள். 26 யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்துக்கு நீங்கள் வரும்போது, உங்களுடைய பரிசுத்த பொருள்களையும் நீங்கள் நேர்ந்துகொண்ட பலிகளையும் மட்டுமே கொண்டுவர வேண்டும். 27 அங்கே உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பலிபீடத்தில் இறைச்சியையும் இரத்தத்தையும்+ தகன பலியாகச் செலுத்த வேண்டும். நீங்கள் செலுத்துகிற பலிகளின் இரத்தத்தை உங்கள் கடவுளாகிய யெகோவாவுடைய பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட வேண்டும்.+ ஆனால், இறைச்சியை நீங்கள் சாப்பிடலாம்.

28 நான் உங்களுக்குக் கொடுக்கிற இந்தக் கட்டளைகள் எல்லாவற்றையும் கவனமாகக் கடைப்பிடியுங்கள். அப்போதுதான், நீங்களும் உங்களுடைய வம்சத்தாரும் எப்போதும் சந்தோஷமாக வாழ்வீர்கள். உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பார்வையில் எது நல்லதோ, எது சரியானதோ அதையே செய்கிறவர்களாக இருப்பீர்கள்.

29 உங்கள் கடவுளாகிய யெகோவா, நீங்கள் கைப்பற்றப்போகிற தேசத்திலுள்ள ஜனங்களை அழித்துவிட்டு+ உங்களை அங்கே குடியேற்றும்போது, 30 நீங்கள் படுகுழியில் விழாதபடி எச்சரிக்கையாக இருங்கள். அந்த ஜனங்கள் அவர்களுடைய தெய்வங்களை எப்படியெல்லாம் வணங்கினார்கள் என்று விசாரிக்காதீர்கள். ‘நானும் அப்படியே செய்வேன்’+ என்று சொல்லாதீர்கள். 31 உங்கள் கடவுளாகிய யெகோவாவை நீங்கள் அப்படி வணங்கக் கூடாது. ஏனென்றால், அந்த ஜனங்கள் தங்களுடைய தெய்வங்களை வணங்கும்போது யெகோவா அருவருக்கிற எல்லாவற்றையும் செய்கிறார்கள், தங்கள் மகன்களையும் மகள்களையும்கூட அந்தத் தெய்வங்களுக்காக நெருப்பில் பலி கொடுக்கிறார்கள்.+ 32 நான் கொடுக்கிற எல்லா கட்டளைகளையும் நீங்கள் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.+ அதில் ஒன்றையும் கூட்டவும் கூடாது, குறைக்கவும் கூடாது”+ என்றார்.

13 பின்பு அவர், “உங்கள் நடுவிலிருக்கும் ஒரு தீர்க்கதரிசியோ, கனவுகளைப் பார்த்து எதிர்காலத்தைச் சொல்கிறவனோ உங்களுக்கு ஒரு அடையாளத்தை அல்லது அற்புதத்தைக் காட்டுவதாகச் சொல்லலாம். 2 அந்த அடையாளமோ அற்புதமோ நடக்கலாம். உங்களுக்குத் தெரியாத ‘வேறு தெய்வங்களைத் தேடிப்போய் அவற்றை வணங்குவோம், வாருங்கள்’ என்று அவன் உங்களிடம் சொல்லலாம். 3 ஆனால், அந்தத் தீர்க்கதரிசியோ கனவு காண்கிறவனோ சொல்வதை நீங்கள் கேட்கக் கூடாது.+ ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் அன்பு காட்டுகிறீர்களா+ என்று உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைச் சோதித்துப் பார்க்கிறார்.+ 4 உங்கள் கடவுளாகிய யெகோவாவின் வழியில் நீங்கள் நடக்க வேண்டும், அவருக்குப் பயப்பட வேண்டும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், அவருடைய பேச்சைக் கேட்க வேண்டும், அவரையே வணங்க வேண்டும், அவரையே உறுதியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்.+ 5 அந்தத் தீர்க்கதரிசியை அல்லது கனவு காண்கிறவனைக் கொன்றுபோட வேண்டும்.+ ஏனென்றால், எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சை மீறி நடப்பதற்கு அவன் உங்களைத் தூண்டினான். உங்கள் கடவுளாகிய யெகோவா சொன்ன வழியைவிட்டு விலகும்படி உங்களைத் தூண்டினான். அதனால், தீமையை உங்கள் நடுவிலிருந்து ஒழித்துக்கட்ட வேண்டும்.+

6 உங்கள் மகனோ, மகளோ, கூடப் பிறந்த சகோதரனோ, ஆசை மனைவியோ, ஆருயிர் நண்பனோ ரகசியமாக உங்களிடம் வந்து, வேறு தெய்வங்களை வணங்கலாம் என்று சொல்லி ஆசைகாட்டலாம்.+ அந்தத் தெய்வங்கள் உங்களுக்கோ உங்களுடைய முன்னோர்களுக்கோ தெரியாத தெய்வங்களாக இருக்கலாம். 7 தேசத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைவரை இருக்கிற ஜனங்களுடைய, அதாவது உங்களுக்குப் பக்கத்திலோ தூரத்திலோ இருக்கிற ஜனங்களுடைய, தெய்வங்களாக அவை இருக்கலாம். 8 அந்த நபர் சொல்வதை நீங்கள் கேட்கவும் கூடாது, அதன்படி செய்யவும் கூடாது.+ அவர்மேல் இரக்கமோ கரிசனையோ காட்டக் கூடாது. அவரை ஒளித்துவைக்கவும் கூடாது. 9 கண்டிப்பாக அவரைக் கொன்றுபோட வேண்டும்.+ முதலில் நீங்கள்தான் அவர்மேல் கல்லெறிய வேண்டும், பின்பு மற்ற எல்லா ஜனங்களும் கல்லெறிய வேண்டும்.+ 10 எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவாவின் வழியைவிட்டு விலகும்படி அந்த நபர் உங்களைத் தூண்டியதால், அவரைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும்.+ 11 அப்போதுதான், இஸ்ரவேலர்கள் எல்லாரும் இதைக் கேள்விப்பட்டு பயப்படுவார்கள், இதுபோன்ற மோசமான காரியத்தை உங்கள் நடுவே இனி ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.+

12 குடியிருப்பதற்காக உங்கள் கடவுளாகிய யெகோவா தருகிற நகரங்கள் ஒன்றில் நீங்கள் ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டால், 13 அதாவது, ‘உதவாக்கரை மனுஷர்கள் சிலர் தங்கள் நகரத்து ஜனங்களிடம், “நாம் போய் வேறு தெய்வங்களை வணங்கலாம்” என்று சொல்லி அவர்களைக் கெட்ட வழிக்கு இழுக்கப் பார்க்கிறார்கள்’ என்ற விஷயத்தைக் கேள்விப்பட்டால், 14 அது உண்மையா இல்லையா என்று நன்றாக விசாரிக்க வேண்டும், அலசி ஆராய வேண்டும்.+ அருவருப்பான இந்தக் காரியத்தை உங்கள் நடுவே யாராவது செய்திருப்பது உண்மை என்பது தெரியவந்தால், 15 அந்த நகரத்து ஜனங்களைக் கண்டிப்பாக வாளால் வெட்டிக் கொல்ல வேண்டும்.+ அந்த நகரத்தையும் அதிலுள்ள எல்லாரையும் அழித்துப்போட வேண்டும். ஆடுமாடுகளைக்கூட உயிரோடு விட்டுவைக்கக் கூடாது.+ 16 நீங்கள் கைப்பற்றிய பொருள்கள் எல்லாவற்றையும் அந்த நகரத்தின் பொது சதுக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும். பின்பு அந்த நகரத்தைச் சுட்டெரித்துவிட வேண்டும். அங்கு கைப்பற்றிய பொருள்களெல்லாம் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குத் தகன பலிபோல் இருக்கும். அந்த நகரம் என்றென்றும் மண்மேடாகக் கிடக்கும். அதை ஒருபோதும் திரும்பக் கட்டக் கூடாது. 17 அழிப்பதற்காக ஒதுக்கிவைக்கப்பட்ட எதையும் நீங்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது.+ அப்போதுதான், யெகோவா அவருடைய கடும் கோபத்தை விட்டுவிட்டு உங்களுக்கு இரக்கமும் கரிசனையும் காட்டுவார். உங்களுடைய முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்தபடியே உங்களை ஏராளமாகப் பெருக வைப்பார்.+ 18 நான் இன்று உங்களுக்குக் கொடுக்கிற எல்லா கட்டளைகளையும் கடைப்பிடித்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அப்போது, உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்கிறவர்களாக இருப்பீர்கள்”+ என்றார்.

14 பின்பு அவர், “நீங்கள் உங்களுடைய கடவுளாகிய யெகோவாவின் பிள்ளைகள். இறந்தவருக்காக உங்கள் உடலைக் கீறிக்கொள்ளவோ முன்னந்தலையை* சிரைத்துக்கொள்ளவோ கூடாது.+ 2 ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு நீங்கள் பரிசுத்தமான ஜனங்கள்.+ இந்தப் பூமியிலுள்ள எல்லா ஜனங்களிலும் யெகோவா உங்களைத்தான் தன்னுடைய ஜனமாகவும் விசேஷ சொத்தாகவும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+

3 அருவருப்பான எதையும் நீங்கள் சாப்பிடக் கூடாது.+ 4 ஆனால் காளை, செம்மறியாடு, வெள்ளாடு, 5 சிவப்பு மான், நவ்வி மான், ரோ மான், காட்டு வெள்ளாடு, கலைமான், காட்டுச் செம்மறியாடு, வரையாடு ஆகியவற்றை நீங்கள் சாப்பிடலாம்.+ 6 குளம்புகள் முழுமையாகப் பிளவுபட்டிருக்கிற, அசைபோடுகிற எந்த மிருகத்தையும் நீங்கள் சாப்பிடலாம். 7 இருந்தாலும், அசைபோடுகிற மிருகங்களில் அல்லது குளம்புகள் பிளவுபட்டிருக்கிற மிருகங்களில் ஒட்டகம், காட்டு முயல், கற்பாறை முயல்* ஆகியவற்றை நீங்கள் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் இவை அசைபோடும், ஆனால் இவற்றின் குளம்புகள் பிளவுபட்டிருக்காது. இவை உங்களுக்கு அசுத்தமானவை.+ 8 பன்றியையும் நீங்கள் சாப்பிடக் கூடாது, ஏனென்றால் அதற்குக் குளம்புகள் பிளவுபட்டிருக்கும், ஆனால் அது அசைபோடாது. அது உங்களுக்கு அசுத்தமானது. நீங்கள் அவற்றின் இறைச்சியைச் சாப்பிடவோ அவற்றின் பிணத்தைத் தொடவோ கூடாது.

9 தண்ணீரில் வாழும் உயிரினங்களில், துடுப்புகளும் செதில்களும் உள்ள எதையும் நீங்கள் சாப்பிடலாம்.+ 10 ஆனால், துடுப்புகளும் செதில்களும் இல்லாத எதையும் நீங்கள் சாப்பிடக் கூடாது. அது உங்களுக்கு அசுத்தமானது.

11 பறவைகளில் சுத்தமான எல்லாவற்றையும் நீங்கள் சாப்பிடலாம். 12 ஆனால் கழுகு, கடல் பருந்து, கறுப்பு ராஜாளி,+ 13 சிவப்புப் பருந்து, கறுப்புப் பருந்து, எல்லா வகையான கூளிப் பருந்து, 14 எல்லா வகையான அண்டங்காக்கை, 15 நெருப்புக்கோழி, ஆந்தை, கடல் புறா, எல்லா வகையான வல்லூறு, 16 சிறு ஆந்தை, நெட்டைக்காது ஆந்தை, அன்னம், 17 கூழைக்கடா, ராஜாளி, நீர்க்காகம், 18 நாரை, எல்லா வகையான கொக்கு, கொண்டலாத்தி, வவ்வால் ஆகியவற்றை நீங்கள் சாப்பிடக் கூடாது. 19 ஊர்ந்து போகிற, சிறகுள்ள பூச்சிகள் எல்லாமே உங்களுக்கு அசுத்தமானது. அவற்றைச் சாப்பிடக் கூடாது. 20 பறக்கும் உயிரினங்களில் சுத்தமான எல்லாவற்றையும் நீங்கள் சாப்பிடலாம்.

21 தானாகச் செத்துப்போன எந்த மிருகத்தையும் நீங்கள் சாப்பிடக் கூடாது.+ உங்கள் நகரங்களில் வாழ்கிற வேறு தேசத்துக்காரர்கள் சாப்பிடுவதற்காக அதைக் கொடுத்துவிடலாம் அல்லது அவர்களுக்கு விற்றுவிடலாம். ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு நீங்கள் பரிசுத்தமான ஜனங்கள்.

ஆட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கக் கூடாது.+

22 வருஷா வருஷம் உங்களுடைய நிலத்தில் விளைகிற எல்லாவற்றிலும் பத்திலொரு பாகத்தை* நீங்கள் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும்.+ 23 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடத்தில் தானியம், புதிய திராட்சமது, எண்ணெய் ஆகியவற்றில் பத்திலொரு பாகத்தையும், ஆடுமாடுகளின் முதல் குட்டிகளையும் நீங்கள் சாப்பிட வேண்டும்.+ அப்படிச் செய்தால், உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு எப்போதும் பயந்து நடக்கக் கற்றுக்கொள்வீர்கள்.+

24 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடம்+ ஒருவேளை தூரத்தில் இருந்தால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்கு ஆசீர்வாதமாகக் கொடுத்த எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு போக உங்களால் முடியாமல் இருந்தால், 25 அவற்றை விற்றுப் பணமாக்கி, உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்துக்குக் கொண்டுபோகலாம். 26 அந்தப் பணத்தில் மாடுகளையும், செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும், திராட்சமதுவையும், மற்ற மதுபானங்களையும், நீங்கள் ஆசைப்படுகிற எல்லா பொருள்களையும் வாங்கலாம். உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் நீங்களும் உங்களுடைய குடும்பத்தாரும் சாப்பிட்டு, சந்தோஷமாக இருக்கலாம்.+ 27 உங்கள் நகரங்களில் வாழ்கிற லேவியர்களுக்கு உங்களோடு எந்தப் பங்கும் சொத்தும் கொடுக்கப்படாததால்+ அவர்களை அசட்டை செய்யாதீர்கள்.+

28 ஒவ்வொரு மூன்றாம் வருஷத்தின் முடிவிலும், அந்த வருஷத்தில் விளைந்தவற்றில் பத்திலொரு பாகத்தைக் கொண்டுவந்து, உங்கள் நகரங்களில் வைக்க வேண்டும்.+ 29 அப்போது, உங்களோடு எந்தப் பங்கும் சொத்தும் கொடுக்கப்படாத லேவியனும், உங்கள் நகரங்களில் வாழ்கிற மற்ற தேசத்துக்காரனும், அப்பா இல்லாத பிள்ளையும்,* விதவையும் வந்து அவற்றை எடுத்து, திருப்தியாகச் சாப்பிடுவார்கள்.+ உங்கள் கடவுளாகிய யெகோவாவும் நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார்”+ என்றார்.

15 பின்பு அவர், “ஒவ்வொரு ஏழாம் வருஷத்தின் முடிவிலும் நீங்கள் கடன்களை ரத்து செய்ய வேண்டும்.+ 2 அதைச் செய்ய வேண்டிய முறை இதுதான்: நீங்கள் இன்னொரு இஸ்ரவேலனுக்குக் கடன் கொடுத்திருந்தால் அந்தக் கடனை ரத்து செய்துவிட வேண்டும். அதைத் திருப்பிக் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தக் கூடாது. ஏனென்றால், யெகோவாவின் முன்னிலையில் கடனை ரத்து செய்ய வேண்டிய வருஷம் அது.+ 3 உங்கள் சகோதரன் உங்களிடம் என்ன கடன்பட்டிருந்தாலும் சரி, அந்தக் கடனை ரத்து செய்துவிட வேண்டும். ஆனால், வேறு தேசத்தைச் சேர்ந்தவனுக்கு நீங்கள் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கலாம்.+ 4 உங்களுக்குள் யாரும் ஏழையாக இருக்கக் கூடாது. ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா சொத்தாகக் கொடுக்கிற தேசத்தில் யெகோவா உங்களை நிச்சயம் ஆசீர்வதிப்பார்.+ 5 ஆனால், நான் இன்று உங்களுக்குக் கொடுக்கிற கட்டளைகளைக் கவனமாகக் கடைப்பிடித்து,+ உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தால் மட்டும்தான், அவர் உங்களை ஆசீர்வதிப்பார். 6 உங்கள் கடவுளாகிய யெகோவா வாக்குறுதி தந்தபடியே, உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் எத்தனையோ தேசத்தாருக்குக் கடன் கொடுப்பீர்கள், ஆனால் நீங்கள் யாரிடமிருந்தும் கடன் வாங்க மாட்டீர்கள்.+ நீங்கள் எத்தனையோ தேசங்களை அடக்கி ஆளுவீர்கள், ஆனால் எந்தத் தேசமும் உங்களை அடக்கி ஆளாது.+

7 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தில், உங்கள் சகோதரன் ஒருவன் ஏழையாகிவிட்டால் அவனிடம் கல்நெஞ்சத்தோடு நடந்துகொள்ளாதீர்கள். அந்த ஏழை சகோதரனிடம் கஞ்சத்தனம் காட்டாதீர்கள்.+ 8 அவனுக்குத் தாராளமாக அள்ளிக் கொடுங்கள்.+ கடனாக அவனுக்கு என்ன தேவைப்பட்டாலும் சரி, அதையெல்லாம் தயங்காமல் கொடுங்கள். 9 ‘ஏழாம் வருஷம் நெருங்கிவிட்டதே, கடனெல்லாம் ரத்தாகிவிடுமே!’+ என்ற கெட்ட எண்ணத்தோடு, உங்கள் ஏழை சகோதரனுக்கு ஒன்றும் கொடுக்காமல் இருந்துவிடாதீர்கள். அவன் உங்களைப் பற்றி யெகோவாவிடம் முறையிடுவான், அப்போது நீங்கள் குற்றமுள்ளவர்களாக இருப்பீர்கள்.+ 10 நீங்கள் அவனுக்குத் தாராளமாகக் கொடுக்க வேண்டும்,+ வேண்டாவெறுப்போடு கொடுக்கக் கூடாது. அப்போதுதான், உங்கள் கடவுளாகிய யெகோவா நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார்.+ 11 தேசத்தில் எப்போதும் ஏழைகள் இருக்கத்தான் செய்வார்கள்.+ அதனால்தான், ‘உங்கள் தேசத்திலுள்ள பாவப்பட்ட ஏழை சகோதரனுக்குத் தாராளமாக அள்ளிக் கொடுக்க வேண்டும்’+ என்று நான் கட்டளை கொடுக்கிறேன்.

12 ஒரு எபிரெய ஆணோ பெண்ணோ உங்களிடம் அடிமையாக விற்கப்பட்டு ஆறு வருஷங்கள் வேலை செய்திருந்தால், ஏழாம் வருஷத்தில் அவரை நீங்கள் விடுதலை செய்து அனுப்பிவிட வேண்டும்.+ 13 ஆனால், அப்படி அவரை அனுப்பும்போது, வெறுங்கையோடு அனுப்பக் கூடாது. 14 உங்கள் மந்தையிலிருந்தும் களத்துமேட்டிலிருந்தும் எண்ணெய்ச் செக்கிலிருந்தும் திராட்சரச ஆலையிலிருந்தும் அவருக்குத் தாராளமாகக் கொடுக்க வேண்டும். உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை எந்தளவு ஆசீர்வதித்திருக்கிறாரோ அந்தளவு நீங்கள் அவருக்குக் கொடுக்க வேண்டும். 15 நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்ததை ஞாபகத்தில் வையுங்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை அங்கிருந்து விடுவித்தார். அதனால்தான், இதைச் செய்யும்படி நான் இன்று உங்களுக்குக் கட்டளை கொடுக்கிறேன்.

16 ஆனால், உங்களிடம் வேலை செய்தபோது அந்த அடிமை சந்தோஷமாக இருந்ததால், உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் அவன் நேசிக்கலாம். அதனால், ‘நான் உங்களைவிட்டுப் போக மாட்டேன்!’+ என்று சொல்லலாம். 17 அப்படி அவன் சொன்னால், நீங்கள் அவனை ஒரு கதவின் பக்கத்தில் நிறுத்தி ஊசியால் அவன் காதைக் குத்த வேண்டும். அப்போது, வாழ்நாளெல்லாம் அவன் உங்களுக்கு அடிமையாக இருப்பான். உங்கள் அடிமைப் பெண்ணுக்கும் நீங்கள் அப்படியே செய்ய வேண்டும். 18 உங்கள் அடிமையை விடுதலை செய்து அனுப்புவதை நீங்கள் பெரிய நஷ்டமாக நினைக்கக் கூடாது. ஏனென்றால் ஆறு வருஷங்களாக, ஒரு கூலியாள் செய்யும் வேலையைவிட இரண்டு மடங்கு அதிகமாக அவன் உங்களுக்கு வேலை செய்திருக்கிறான். அதோடு, எல்லா வேலைகளிலும் உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை ஆசீர்வதித்திருக்கிறார்.

19 ஆடுமாடுகளின் முதல் ஆண் குட்டிகளை உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு அர்ப்பணித்துவிட வேண்டும்.+ முதலில் பிறந்த காளையை வைத்து வேலை வாங்கக் கூடாது, ஆடுகளின் முதல் குட்டிக்கு மயிர் கத்தரிக்கக் கூடாது. 20 உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்தில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் யெகோவாவின் முன்னிலையில் வருஷா வருஷம் அவற்றின் இறைச்சியைச் சாப்பிட வேண்டும்.+ 21 ஆனால் அவை முடமாகவோ, குருடாகவோ, அல்லது வேறெதாவது பெரிய குறை உள்ளதாகவோ இருந்தால், உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு அவற்றைப் பலி கொடுக்கக் கூடாது.+ 22 உங்கள் நகரங்களுக்கு உள்ளே அவற்றை வெட்டிச் சாப்பிடலாம். தீட்டுள்ளவரும் சரி, தீட்டில்லாதவரும் சரி, மான் இறைச்சியைச் சாப்பிடுவதுபோல்* அவற்றையும் சாப்பிடலாம்.+ 23 ஆனால், அவற்றின் இரத்தத்தை மட்டும் சாப்பிடக் கூடாது.+ தண்ணீரைப் போல அதைத் தரையில் ஊற்றிவிட வேண்டும்”+ என்றார்.

16 பின்பு அவர், “ஆபிப்* மாதத்தை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த மாதத்தில் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு பஸ்கா பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.+ ஏனென்றால், ஆபிப் மாதத்தில்தான் ராத்திரியோடு ராத்திரியாக யெகோவா உங்களை எகிப்திலிருந்து விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்தார்.+ 2 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடத்தில்,+ உங்கள் ஆட்டையோ மாட்டையோ+ யெகோவாவுக்கு பஸ்கா பலியாகச் செலுத்த வேண்டும்.+ 3 புளிப்பு சேர்க்கப்பட்ட எதையும் அதனுடன் சாப்பிடக் கூடாது.+ எகிப்திலிருந்து அவசர அவசரமாகப் புறப்பட்டு வந்தபோது+ சாப்பிட்டது போலவே, ஏழு நாட்களுக்குப் புளிப்பில்லாத ரொட்டிகளை நீங்கள் சாப்பிட வேண்டும். எகிப்தில் நீங்கள் பட்ட பாடுகளை அந்த ரொட்டிகள் ஞாபகப்படுத்தும். எகிப்திலிருந்து புறப்பட்ட நாளைக் காலமெல்லாம் நினைத்துப் பார்ப்பதற்காக நீங்கள் அவற்றைச் சாப்பிட வேண்டும்.+ 4 புளித்த மாவு எதுவுமே ஏழு நாட்களுக்கு உங்கள் எல்லைக்குள் இருக்கக் கூடாது.+ முதல்நாள் சாயங்காலத்தில் பலியாகச் செலுத்திய இறைச்சியை அடுத்த நாள் காலைவரை மீதி வைக்கக் கூடாது.+ 5 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற ஏதோவொரு நகரத்தில் பஸ்கா பலியைச் செலுத்தக் கூடாது. 6 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடத்தில்தான் பலி செலுத்த வேண்டும். நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட அதே நேரத்தில், அதாவது சாயங்காலத்தில் சூரியன் மறைந்தவுடன், பஸ்கா பலியை வெட்ட வேண்டும்.+ 7 உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்தில்,+ அதை நெருப்பில் வாட்டி சாப்பிட வேண்டும்.+ காலையில் உங்களுடைய கூடாரத்துக்குத் திரும்பலாம். 8 ஆறு நாட்களுக்குப் புளிப்பில்லாத ரொட்டிகளைச் சாப்பிட வேண்டும். ஏழாம் நாளில் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்காக விசேஷ மாநாடு நடக்கும். அன்றைக்கு நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது.+

9 விளைந்த கதிர்களை அறுவடை செய்ய ஆரம்பிக்கும் முதல் நாளிலிருந்து ஏழு வாரங்களை நீங்கள் கணக்கிட வேண்டும்.+ 10 அவற்றின் முடிவில், உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு வாரங்களின் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.+ அப்போது, உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை எந்தளவு ஆசீர்வதித்திருக்கிறாரோ அந்தளவு பலிகளை நீங்களாகவே விருப்பப்பட்டுக் கொண்டுவர வேண்டும்.+ 11 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடத்தில் நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். நீங்களும், உங்கள் மகன்களும், மகள்களும், உங்களிடம் அடிமையாக இருக்கிற ஆண்களும், பெண்களும், உங்கள் நகரங்களில் வாழ்கிற லேவியர்களும், மற்ற தேசத்து ஜனங்களும், அப்பா இல்லாத பிள்ளைகளும்,* விதவைகளும் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் சந்தோஷமாக இருக்க வேண்டும்.+ 12 நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்ததை ஞாபகத்தில் வைத்து,+ இந்த எல்லா விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.

13 உங்கள் களத்துமேட்டிலிருந்து தானியங்களையும் செக்கிலிருந்து எண்ணெயையும் ஆலையிலிருந்து திராட்சமதுவையும் சேகரிக்கும்போது ஏழு நாட்களுக்கு நீங்கள் கூடாரப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.+ 14 அந்தப் பண்டிகையின்போது நீங்களும், உங்கள் மகன்களும், மகள்களும், உங்களிடம் அடிமையாக இருக்கிற ஆண்களும், பெண்களும், உங்கள் நகரங்களில் வாழ்கிற லேவியர்களும், மற்ற தேசத்து ஜனங்களும், அப்பா இல்லாத பிள்ளைகளும், விதவைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.+ 15 உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்தில், ஏழு நாட்கள் யெகோவாவுக்குப் பண்டிகை கொண்டாட வேண்டும்.+ ஏனென்றால், உங்கள் நிலத்தில் விளைகிற எல்லாவற்றையும் நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் உங்கள் கடவுளாகிய யெகோவா ஆசீர்வதிப்பார்.+ நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள்.+

16 வருஷத்தில் மூன்று தடவை, அதாவது புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை,+ வாரங்களின் பண்டிகை,+ கூடாரப் பண்டிகை+ ஆகிய பண்டிகைகளின்போது, உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்துக்கு ஆண்கள் எல்லாரும் அவர் முன்னால் வர வேண்டும். யாருமே யெகோவாவுக்கு முன்னால் வெறுங்கையோடு வரக் கூடாது. 17 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை எந்தளவு ஆசீர்வதித்திருக்கிறாரோ அந்தளவு காணிக்கையை ஒவ்வொருவரும் கொண்டுவர வேண்டும்.+

18 ஒவ்வொரு கோத்திரத்துக்கும் உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற நகரங்களில் நியாயாதிபதிகளையும்+ அதிகாரிகளையும் நீங்கள் நியமிக்க வேண்டும். ஜனங்களுக்கு அவர்கள் நீதியோடு தீர்ப்பு சொல்ல வேண்டும். 19 நியாயத்தைப் புரட்டவோ+ பாரபட்சம் காட்டவோ+ லஞ்சம் வாங்கவோ கூடாது. ஏனென்றால், லஞ்சம் ஞானமுள்ளவர்களின் கண்களை மறைத்துவிடும்,+ நீதிமான்களைக்கூட உண்மைக்கு மாறாகப் பேச வைத்துவிடும். 20 நீங்கள் நியாயத்தைச் செய்ய வேண்டும், நியாயத்தைச் செய்யவே பாடுபட வேண்டும்.+ அப்போதுதான், உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு அதில் நீடூழி வாழ்வீர்கள்.

21 உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பலிபீடத்துக்குப் பக்கத்தில் எந்த மரத்தையும் பூஜைக் கம்பமாக* நாட்டக் கூடாது.+

22 உங்களுக்காகப் பூஜைத் தூணையும் நிறுத்தக் கூடாது,+ அதை உங்கள் கடவுளாகிய யெகோவா வெறுக்கிறார்” என்றார்.

17 பின்பு அவர், “ஊனமோ வேறெந்தக் குறையோ உள்ள ஒரு மாட்டை அல்லது ஆட்டை உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பலி செலுத்தக் கூடாது. ஏனென்றால், அது உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு அருவருப்பானது.+

2 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற நகரங்களில், ஒரு ஆணோ பெண்ணோ உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்து, அவருடைய ஒப்பந்தத்தை மீறி,+ 3 என் கட்டளைக்கு+ எதிராக மற்ற தெய்வங்களையோ சூரியனையோ சந்திரனையோ வானத்துப் படைகளையோ ஒருவேளை கும்பிடலாம்.+ 4 அதைப் பற்றி உங்களிடம் யாராவது சொன்னால் அல்லது உங்களுக்கே தெரியவந்தால், அதை நன்றாக விசாரிக்க வேண்டும். இந்த அருவருப்பான காரியம் இஸ்ரவேலில் நடந்தது உண்மை என்பது தெரியவந்தால்,+ 5 இந்தக் குற்றத்தைச் செய்த ஆணை அல்லது பெண்ணை நகரவாசலுக்குக் கொண்டுவர வேண்டும், பின்பு கல்லெறிந்து கொல்ல வேண்டும்.+ 6 இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தை வைத்துதான்+ மரண தண்டனை கொடுக்க வேண்டும். ஒரேவொரு சாட்சியின் வாக்குமூலத்தை வைத்து மரண தண்டனை கொடுக்கக் கூடாது.+ 7 அவனை அல்லது அவளைக் கொன்றுபோட அந்தச் சாட்சிகள்தான் முதலில் கல்லெறிய வேண்டும். அதற்குப் பின்பு மற்றவர்கள் கல்லெறிய வேண்டும். இப்படி, தீமையை உங்களிடமிருந்து ஒழித்துக்கட்ட வேண்டும்.+

8 உங்கள் நகரங்கள் ஒன்றில் உங்களால் தீர்க்க முடியாத சிக்கலான வழக்குகள் இருந்தால், அதாவது கொலைக்குற்றம்,+ உரிமைப் பிரச்சினை, வன்முறை, அல்லது வேறெதாவது சண்டை சச்சரவு சம்பந்தமான வழக்குகள் இருந்தால், உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்துக்குப் போக வேண்டும்.+ 9 அந்தச் சமயத்தில் பொறுப்பில் இருக்கிற லேவியர்களான குருமார்களிடமும் நியாயாதிபதிகளிடமும்+ போய் வழக்கைச் சொல்ல வேண்டும். அவர்கள் தீர்ப்பு கொடுப்பார்கள்.+ 10 யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்திலிருந்து அவர்கள் கொடுக்கிற தீர்ப்பின்படி நீங்கள் செய்ய வேண்டும். அவர்கள் கொடுக்கிற எல்லா கட்டளைகளையும் செய்யக் கவனமாக இருக்க வேண்டும். 11 அவர்கள் காட்டுகிற சட்டத்தின்படியும் கொடுக்கிற தீர்ப்பின்படியும் நீங்கள் செய்ய வேண்டும்.+ அவர்கள் சொல்கிற தீர்ப்புக்கு அப்படியே கீழ்ப்படிய வேண்டும்.+ 12 உங்களுடைய நியாயாதிபதி சொல்வதையோ உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குச் சேவை செய்கிற குருவானவர் சொல்வதையோ கேட்காமல் அகங்காரமாக* நடக்கிறவன் கொல்லப்பட வேண்டும்.+ இப்படி, நீங்கள் இஸ்ரவேலிலிருந்து தீமையை ஒழித்துக்கட்ட வேண்டும்.+ 13 அப்போதுதான் எல்லா ஜனங்களும் அதைக் கேள்விப்பட்டு பயப்படுவார்கள், அதன்பின் யாரும் அகங்காரமாக நடந்துகொள்ள மாட்டார்கள்.+

14 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்துக்கு நீங்கள் போய் அதில் குடியிருக்கும்போது, ‘சுற்றியுள்ள தேசத்தாரைப் போல நாமும் ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொள்வோம்’ என்று நீங்கள் சொன்னால்,+ 15 உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுக்கிற ராஜாவை மட்டும்தான் நீங்கள் நியமிக்க வேண்டும்.+ உங்கள் சகோதரர்களில் ஒருவரைத்தான் ராஜாவாக்க வேண்டும். வேறு தேசத்தைச் சேர்ந்தவனை ராஜாவாக்கக் கூடாது. 16 ராஜா தனக்காக ஏராளமான குதிரைகளை வைத்துக்கொள்ளக் கூடாது,+ அல்லது இன்னும் அதிக குதிரைகளை வாங்குவதற்காக ஜனங்களை எகிப்துக்கு அனுப்பக் கூடாது.+ ஏனென்றால், ‘இனி ஒருபோதும் நீங்கள் அந்தப் பக்கம் போகக் கூடாது’ என்று யெகோவா சொல்லியிருக்கிறார். 17 ராஜாவின் இதயம் கடவுளைவிட்டு விலகாமல் இருக்க வேண்டுமானால் அவர் நிறைய மனைவிகளை வைத்துக்கொள்ளக் கூடாது.+ வெள்ளியையும் தங்கத்தையும் ஏராளமாகக் குவித்து வைத்துக்கொள்ளக் கூடாது.+ 18 அவர் ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பிக்கும்போது, லேவியர்களான குருமார்களிடம் உள்ள திருச்சட்ட புத்தகத்தை*+ பார்த்து தனக்காக ஒரு நகலை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.

19 அதை அவர் எப்போதும் வைத்திருக்க வேண்டும். தன்னுடைய வாழ்நாளெல்லாம் அதை வாசிக்க வேண்டும்.+ அப்போதுதான், தன் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து நடக்கக் கற்றுக்கொள்வார், திருச்சட்டத்திலுள்ள எல்லா வார்த்தைகளையும் விதிமுறைகளையும் கடைப்பிடிப்பார்.+ 20 அதோடு, தன் சகோதரர்களைவிட தன்னைப் பெரியவனாகக் காட்டிக்கொண்டு தலைக்கனத்தோடு* நடக்க மாட்டார். கடவுளுடைய கட்டளைகளை அச்சுப்பிசகாமல் கடைப்பிடிப்பார். அப்போது, அவரும் அவருடைய மகன்களும் இஸ்ரவேலில் ரொம்பக் காலத்துக்கு ஆட்சி செய்வார்கள்” என்றார்.

18 பின்பு அவர், “லேவியர்களாகிய குருமார்களுக்கும் சரி, லேவி கோத்திரத்தைச் சேர்ந்த மற்ற எல்லாருக்கும் சரி, இஸ்ரவேலில் பங்கோ சொத்தோ கொடுக்கப்படாது. யெகோவாவுக்குச் செலுத்தப்படுகிற தகன பலிகளிலிருந்து, அதாவது அவருடைய பங்கிலிருந்து, அவர்கள் சாப்பிடுவார்கள்.+ 2 அதனால், அவர்களுடைய சகோதரர்களோடு அவர்களுக்கு எந்தச் சொத்தும் கிடையாது. யெகோவா அவர்களுக்குச் சொன்னபடி, அவர்தான் அவர்களுடைய சொத்து.

3 ஜனங்களிடமிருந்து குருமார்கள் உரிமையுடன் பெற்றுக்கொள்ள வேண்டியவை இவைதான்: ஒரு மாட்டையோ ஆட்டையோ பலி செலுத்துபவர், அதன் முன்னந்தொடையையும் தாடைகளையும் இரைப்பையையும் குருவானவருக்குக் கொடுக்க வேண்டும். 4 முதலில் விளைந்த தானியங்களையும் புதிய திராட்சமதுவையும் எண்ணெயையும் முதலில் கத்தரித்த ஆட்டு மயிரையும் குருவானவருக்குக் கொடுக்க வேண்டும்.+ 5 யெகோவாவின் பெயரில் என்றென்றும் சேவை செய்ய அவரையும் அவருடைய மகன்களையும்தான் உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார்;+ மற்ற கோத்திரங்களில் இருக்கிறவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை.

6 ஆனால், இஸ்ரவேல் நகரம் ஒன்றில் வாழ்கிற ஒரு லேவியன்+ அந்த நகரத்தைவிட்டு யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்துக்கு*+ போக ஆசைப்பட்டால், 7 அங்கே யெகோவாவின் முன்னிலையில் சேவை செய்கிற தன்னுடைய சகோதரர்களான லேவியர்களைப்+ போலவே அவனும் தன் கடவுளாகிய யெகோவாவின் பெயரில் சேவை செய்யலாம். 8 மற்ற லேவியர்களுக்குக் கிடைக்கிற அதே அளவு உணவை அவனும் பெற்றுக்கொள்வான்.+ அதோடு, பரம்பரைச் சொத்துகளை விற்பதன் மூலம் கிடைப்பதையும் அவன் அனுபவிப்பான்.

9 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்துக்குப் போன பின்பு, மற்ற தேசத்தாரின் அருவருப்பான பழக்கவழக்கங்களை நீங்கள் கற்றுக்கொள்ளக் கூடாது.+ 10 உங்களில் யாருமே தன் மகனை அல்லது மகளை நெருப்பில் பலி கொடுக்க* கூடாது.+ குறிசொல்லவோ,+ மாயமந்திரம் செய்யவோ,+ சகுனம் பார்க்கவோ,+ சூனியம் வைக்கவோ,+ 11 வசியம் செய்யவோ, ஆவிகளோடு பேசுகிறவரிடம்+ அல்லது குறிசொல்கிறவரிடம் போகவோ,+ இறந்தவர்களைத் தொடர்புகொள்ளவோ கூடாது.+ 12 ஏனென்றால், இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள். இந்த அருவருப்பான காரியங்களைச் செய்வதால்தான் உங்கள் கடவுளாகிய யெகோவா அந்தத் தேசத்தாரை உங்களிடமிருந்து துரத்திவிடுகிறார். 13 உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு முன்னால் நீங்கள் குற்றமற்றவர்களாக இருக்க வேண்டும்.+

14 உங்கள் முன்னாலிருந்து துரத்தியடிக்கப்படுகிற அந்தத் தேசத்தார், மாயமந்திரம் செய்கிறவர்களின் பேச்சையும் குறிசொல்கிறவர்களின் பேச்சையும் கேட்டு வந்தார்கள்.+ ஆனால், உங்கள் கடவுளாகிய யெகோவா இப்படிப்பட்ட எதையும் செய்ய உங்களை அனுமதிக்கவில்லை. 15 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் சகோதரர்களுக்குள் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியைத் தேர்ந்தெடுத்து உங்களுக்காக நியமிப்பார். அவர் சொல்வதை நீங்கள் கேட்டு நடக்க வேண்டும்.+ 16 ஓரேபில் கூடிவந்த நாளில்+ நீங்கள் கேட்டுக்கொண்டபடிதான், உங்கள் கடவுளாகிய யெகோவா அவரை நியமிக்கப்போகிறார். அந்த நாளில் நீங்கள், ‘இனி நாங்கள் எங்களுடைய கடவுளாகிய யெகோவாவின் குரலைக் கேட்காமலும், பற்றியெரிகிற அவருடைய நெருப்பைப் பார்க்காமலும் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் நாங்கள் செத்தே விடுவோம்’+ என்று சொன்னீர்கள். 17 அதற்கு யெகோவா என்னிடம், ‘அவர்கள் சொல்வது சரிதான். 18 நான் அவர்கள் நடுவிலிருந்து உன்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியை நியமிப்பேன்.+ என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்.+ என்னுடைய எல்லா கட்டளைகளையும் அவர்களுக்கு அவர் சொல்வார்.+ 19 அவர் என் பெயரில் சொல்கிற வார்த்தைகளைக் கேட்டு நடக்காதவனை நான் தண்டிப்பேன்.+

20 நான் சொல்லாத விஷயத்தை அகங்காரத்தோடு* என் பெயரில் சொல்லும் தீர்க்கதரிசியும், மற்ற தெய்வங்களின் பெயரில் பேசும் தீர்க்கதரிசியும் கொல்லப்பட வேண்டும்.+ 21 ஆனாலும், “இதை யெகோவா சொல்லவில்லை என்பது எனக்கு எப்படித் தெரியும்?” என்று ஒருவேளை நீங்கள் நினைக்கலாம். 22 அந்தத் தீர்க்கதரிசி யெகோவாவின் பெயரில் பேசியது நிறைவேறாமல் போனால் அல்லது பொய்த்துப் போனால், அதை யெகோவா சொல்லவில்லை என்று நீங்கள் புரிந்துகொள்ளலாம். அந்தத் தீர்க்கதரிசிதான் அதை அகங்காரத்தோடு சொல்லியிருக்கிறான். அவனுக்கு நீங்கள் பயப்படக் கூடாது’ என்று சொன்னார்” என்றார்.

19 பின்பு அவர், “உங்கள் கடவுளாகிய யெகோவா தருகிற தேசத்திலுள்ள ஜனங்களை உங்கள் கடவுளாகிய யெகோவா அழிக்கும்போது, அவர்களுடைய நகரங்களிலும் வீடுகளிலும் நீங்கள் குடியேறுவீர்கள்.+ 2 அப்போது, உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கும் தேசத்தில் மூன்று நகரங்களை நீங்கள் பிரித்து வைக்க வேண்டும்.+ 3 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவிலும் ஒரு நகரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தெரியாத்தனமாகக் கொலை செய்த ஒருவன் அந்த நகரங்களில் ஒன்றுக்கு ஓடிப்போவதற்காகச் சாலைகளை அமைக்க வேண்டும்.

4 அங்கே ஓடிப்போகிறவனின் விஷயத்தில் பின்பற்ற வேண்டிய சட்டம் இதுதான்: முன்விரோதம் இல்லாமல் அவன் இன்னொருவனை எதேச்சையாகத் தாக்கிக் கொன்றுவிட்டால்,+ 5 இந்த நகரங்களில் ஒன்றுக்கு ஓடிப்போய் உயிர் பிழைத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை, விறகு பொறுக்குவதற்காக அவன் இன்னொருவனோடு காட்டுக்குப் போயிருக்கலாம். அங்கே மரத்தை வெட்டுவதற்குத் தன்னுடைய கோடாலியை ஓங்கும்போது, அதன் கைப்பிடியிலிருந்து அது கழன்று, அவனோடு வந்தவன்மேல் விழுந்திருக்கலாம். அதனால், அவன் இறந்திருக்கலாம். அப்போது, தெரியாத்தனமாகக் கொலை செய்தவன் இந்த நகரங்களில் ஒன்றுக்கு ஓடிப்போய் உயிர் பிழைத்துக்கொள்ள வேண்டும்.+ 6 ஒருவேளை அந்த நகரம் ரொம்பத் தூரத்தில் இருந்தால், பழிவாங்குபவன்*+ அந்தக் கொலையாளியை விரட்டிப்பிடித்து ஆவேசத்தில் கொன்றுவிடலாம். ஆனால், அவன் எந்தவித முன்விரோதமும் இல்லாமல் தெரியாத்தனமாகக் கொலை செய்திருந்ததால், நியாயப்படி அவன் சாக வேண்டியதில்லை.+ 7 அதனால்தான், ‘மூன்று நகரங்களைப் பிரித்து வையுங்கள்’ என்று உங்களுக்குக் கட்டளை கொடுக்கிறேன்.

8 நான் இன்று கொடுக்கிற எல்லா கட்டளைகளையும் நீங்கள் உண்மையுடன் கடைப்பிடித்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவை நேசித்து, என்றைக்கும் அவருடைய வழிகளில் நடந்தால்,+ உங்கள் முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்தபடியே உங்கள் எல்லையை உங்கள் கடவுளாகிய யெகோவா விரிவுபடுத்தி,+ அவர்களுக்குக் கொடுப்பதாகச் சொன்ன தேசம் முழுவதையும் கொடுப்பார்.+ 9 அப்போது, இந்த மூன்று நகரங்களோடு வேறு மூன்று நகரங்களையும் நீங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.+ 10 அப்படிச் செய்தால்தான், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குச் சொத்தாகக் கொடுக்கிற தேசத்தில் எந்த அப்பாவியின் இரத்தமும் சிந்தப்படாது,+ எந்தக் கொலைப்பழியும்* உங்கள்மேல் வராது.+

11 ஆனால், ஒருவன் இன்னொருவன்மேல் இருக்கிற பகையினால்,+ பதுங்கியிருந்து அவனைத் தாக்கிக் கொன்றுவிட்டு, இந்த நகரங்களில் ஒன்றுக்கு ஓடிப்போனால், 12 அவனுடைய நகரத்துப் பெரியோர்கள்* அவனை அங்கிருந்து வரவழைத்து, பழிவாங்குபவனின் கையில் ஒப்படைக்க வேண்டும், அவன் கொல்லப்பட வேண்டும்.+ 13 அவனுக்காக நீங்கள் பரிதாபப்படக் கூடாது. அப்பாவி மனுஷனைக் கொன்ற பழியை* இஸ்ரவேலிலிருந்து நீக்க வேண்டும்.+ அப்போதுதான் நீங்கள் சந்தோஷமாக வாழ்வீர்கள்.

14 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தில் உங்களுக்குச் சேர வேண்டிய நிலத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளும்போது, மற்றவனுடைய எல்லைக் குறியை நீங்கள் தள்ளிவைக்கக் கூடாது.+ உங்கள் முன்னோர்கள் குறித்து வைத்த எல்லை அது.

15 ஒருவன் செய்த தப்பை அல்லது பாவத்தை உறுதிசெய்ய ஒரேவொரு சாட்சி போதாது.+ இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தை வைத்துதான் அதை உறுதிசெய்ய வேண்டும்.+ 16 ஒருவன் கெட்ட எண்ணத்தோடு இன்னொருவனுக்கு எதிராகப் பொய் சாட்சி சொல்லி அவன்மேல் குற்றம்சாட்டினால்,+ 17 அந்த இரண்டு பேரும் யெகோவாவுக்கு முன்னால், அதாவது அந்தச் சமயத்தில் குருமார்களாகவும் நியாயாதிபதிகளாகவும் இருப்பவர்களுக்கு முன்னால், வர வேண்டும்.+ 18 அவர்களை நியாயாதிபதிகள் நன்றாக விசாரிக்க வேண்டும்.+ குற்றம்சாட்டியவன் தன்னுடைய சகோதரனுக்கு எதிராகப் பொய் சாட்சி சொல்லியிருக்கிறான் என்றும், அவன்மேல் பொய்க் குற்றம் சாட்டியிருக்கிறான் என்றும் தெரியவந்தால், 19 அவன் தன்னுடைய சகோதரனுக்குச் செய்ய நினைத்த கெடுதலையே நீங்கள் அவனுக்குச் செய்ய வேண்டும்.+ இப்படி, உங்கள் நடுவிலிருந்து தீமையை ஒழித்துக்கட்ட வேண்டும்.+ 20 அப்போதுதான், இதைக் கேட்டு மற்றவர்கள் பயப்படுவார்கள், உங்கள் நடுவில் இனி ஒருபோதும் அதுபோன்ற கெட்ட காரியத்தைச் செய்ய மாட்டார்கள்.+ 21 அவன்மேல் நீங்கள் பரிதாபப்படக் கூடாது.+ உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் எடுக்க வேண்டும்”+ என்றார்.

20 பின்பு அவர், “நீங்கள் போருக்குப் போகும்போது, உங்களைவிட உங்கள் எதிரிகளிடம் ஏராளமான குதிரைகளும் ரதங்களும் வீரர்களும் இருப்பதைப் பார்த்தால் பயப்பட வேண்டாம். ஏனென்றால், எகிப்திலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களோடு இருக்கிறார்.+ 2 நீங்கள் போருக்குப் புறப்படும்போது, குருவானவர் வீரர்களின் முன்னால் வந்து,+ 3 ‘இஸ்ரவேலர்களே, கேளுங்கள். இன்று உங்களுடைய எதிரிகளோடு போர் செய்யப் போகிறீர்கள். தைரியமாக இருங்கள். அவர்களைப் பார்த்துப் பயப்படாதீர்கள், திகிலடையாதீர்கள், நடுங்காதீர்கள். 4 ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களோடு வருகிறார். அவர் எதிரிகளோடு போர் செய்து உங்களைக் காப்பாற்றுவார்’+ என்று சொல்ல வேண்டும்.

5 அதிகாரிகளும் அந்த வீரர்களிடம், ‘உங்களில் யாராவது புது வீடு கட்டி இன்னும் குடிபோகாமல்* இருந்தால், அவன் தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும். அவன் ஒருவேளை போரில் இறந்துபோனால் இன்னொருவன் அங்கு குடிபோக வேண்டியிருக்குமே. 6 யாராவது திராட்சைத் தோட்டத்தை நாட்டி இன்னும் அதை அனுபவிக்காமல் இருந்தால், வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும். அவன் ஒருவேளை போரில் இறந்துபோனால் இன்னொருவன் அதை அனுபவிக்க வேண்டியிருக்குமே. 7 யாராவது ஒரு பெண்ணை நிச்சயம் செய்துவிட்டு இன்னும் கல்யாணம் செய்யாமல் இருந்தால், வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும்.+ அவன் ஒருவேளை போரில் இறந்துபோனால் இன்னொருவன் அவளைக் கல்யாணம் செய்ய வேண்டியிருக்குமே’ என்று சொல்ல வேண்டும். 8 அதோடு, ‘யாராவது பயந்து நடுங்கிக்கொண்டு இருந்தால்,+ வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும். இல்லாவிட்டால், மற்ற வீரர்களுடைய தைரியத்தையும் அவன் கெடுத்துவிடுவான்’+ என்று சொல்ல வேண்டும். 9 அதிகாரிகள் இப்படி வீரர்களிடம் பேசி முடித்த பின்பு, அவர்களை நடத்திக்கொண்டு போவதற்குப் படைத் தலைவர்களை நியமிக்க வேண்டும்.

10 நீங்கள் ஒரு நகரத்தைத் தாக்குவதற்காக அதை நெருங்கும்போது, முதலில் உங்களோடு சமாதானம் செய்யச் சொல்லி அங்குள்ள ஜனங்களுக்கு அறிவிப்பு செய்ய வேண்டும்.+ 11 அவர்கள் தங்களுடைய நகரவாசலைத் திறந்து உங்களோடு சமாதானத்துக்கு வந்தால், அவர்கள் எல்லாரும் உங்களுக்கு அடிமைகளாகி, உங்களுக்குப் பணிவிடை செய்வார்கள்.+ 12 ஆனால், அவர்கள் உங்களோடு சமாதானத்துக்கு வராமல் சண்டை போடுவதற்கு வந்தால், நீங்கள் அந்த நகரத்தைச் சுற்றிவளைக்க வேண்டும். 13 உங்கள் கடவுளாகிய யெகோவா அதை நிச்சயம் உங்கள் கையில் கொடுப்பார். நீங்கள் அங்குள்ள ஆண்கள் எல்லாரையும் வெட்டி வீழ்த்த வேண்டும். 14 ஆனால் அங்குள்ள பெண்களையும், பிள்ளைகளையும், மிருகங்களையும், கைப்பற்றிய மற்ற எல்லா பொருள்களையும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களிடம் ஒப்படைத்த எதிரிகளிடமிருந்து கைப்பற்றிய எல்லாவற்றையும் சாப்பிடலாம்.+

15 தூரத்தில் இருக்கிற எல்லா நகரங்களுக்கும் இப்படித்தான் நீங்கள் செய்ய வேண்டும். 16 ஆனால் பக்கத்தில் இருக்கிற நகரங்களையெல்லாம் உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குச் சொத்தாகக் கொடுத்திருப்பதால் அங்குள்ள எல்லாரையும்* ஒழித்துக்கட்ட வேண்டும்.+ 17 உங்கள் கடவுளாகிய யெகோவா கட்டளை கொடுத்தபடியே ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் ஆகிய எல்லாரையும் அடியோடு அழித்துவிட வேண்டும்.+ 18 இல்லாவிட்டால், அவர்களுடைய தெய்வங்களுக்குச் செய்கிற அருவருப்பான காரியங்களை அவர்கள் உங்களுக்குக் கற்றுக்கொடுத்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்ய வைத்துவிடுவார்கள்.+

19 நீங்கள் ஒரு நகரத்தைக் கைப்பற்றுவதற்காக அதைச் சுற்றிவளைத்து, பல நாட்களாக அதற்கு எதிராகப் போர் செய்துவந்திருக்கிறீர்கள் என்றால், அங்குள்ள மரங்களைக் கோடாலியால் வெட்டிச் சாய்க்கக் கூடாது. அவற்றின் பழங்களை நீங்கள் சாப்பிடலாம், ஆனால் அந்த மரங்களை வெட்டிச் சாய்க்கக் கூடாது.+ மனுஷனை அழிப்பது போல மரத்தை அழிப்பது சரியா? 20 ஒரு மரத்திலுள்ள பழங்கள் சாப்பிட முடியாததாக இருந்தால் மட்டுமே அதை வெட்டிப்போடலாம். உங்களோடு போர் செய்யும் நகரத்தை வீழ்த்தும்வரை, அதைச் சுற்றிவளைப்பதற்காக அப்படிப்பட்ட மரங்களை வெட்டி அவற்றைக் கம்பங்களாக நாட்டலாம்” என்றார்.

21 பின்பு அவர், “உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கும் தேசத்திலே ஒருவன் திறந்தவெளியில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தால், கொலையாளி யாரென்று தெரியாமலும் இருந்தால், 2 உங்களுடைய பெரியோர்களும்* நியாயாதிபதிகளும்+ அந்த இடத்துக்குப் போக வேண்டும். உடல் கிடக்கிற இடத்துக்கும் சுற்றியுள்ள நகரங்களுக்கும் உள்ள தூரத்தை அவர்கள் அளக்க வேண்டும். 3 பின்பு, அந்த உடல் கிடக்கிற இடத்துக்கு மிகவும் பக்கத்திலுள்ள நகரத்தின் பெரியோர்கள் மந்தையிலிருந்து ஒரு இளம் பசுவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்தப் பசு அதுவரை வேலையில் பழக்கப்படாததாகவும், நுகத்தடியில் பூட்டப்படாததாகவும் இருக்க வேண்டும். 4 அதன்பின், தண்ணீர் ஓடுகிற ஒரு பள்ளத்தாக்குக்கு அந்த இளம் பசுவை அவர்கள் கொண்டுவந்து அதன் கழுத்தை வெட்ட வேண்டும். அந்தப் பள்ளத்தாக்கு உழவு செய்யப்படாததாகவும் விதை விதைக்கப்படாததாகவும் இருக்க வேண்டும்.+

5 யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கும் அவர் பெயரில் ஆசீர்வாதம் செய்வதற்கும்+ லேவியர்களான குருமார்களை யெகோவா தேர்ந்தெடுத்திருப்பதால் அவர்களும் அங்கு வர வேண்டும்.+ வன்முறை சம்பந்தப்பட்ட வழக்குகளை எப்படித் தீர்க்க வேண்டுமென்று அவர்கள் சொல்வார்கள்.+ 6 அந்த உடல் கிடக்கிற இடத்துக்கு மிகவும் பக்கத்திலுள்ள நகரத்தின் பெரியோர்கள் எல்லாரும், பள்ளத்தாக்கில் வெட்டப்பட்ட அந்த இளம் பசுவின் மேல் தங்கள் கைகளைக் கழுவ வேண்டும்.+ 7 பின்பு அவர்கள், ‘நாங்கள் இவனைக் கொலை செய்யவில்லை, இவன் கொலை செய்யப்பட்டதை நாங்கள் பார்க்கவும் இல்லை. 8 யெகோவாவே, நீங்கள் விடுவித்த+ உங்களுடைய இஸ்ரவேல் ஜனங்களைக் குற்றப்படுத்தாதீர்கள். இந்த அப்பாவி மனுஷனைக் கொன்ற பழியை உங்களுடைய ஜனங்கள்மேல் சுமத்தாதீர்கள்’+ என்று சொல்ல வேண்டும். அப்போது, அந்தக் கொலைப்பழி* அவர்கள்மேல் வராது. 9 இப்படி, நீங்கள் யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்தால் அந்த அப்பாவி மனுஷனின் கொலைப்பழியைச் சுமக்காமல் இருப்பீர்கள்.

10 உங்கள் கடவுளாகிய யெகோவா போரில் தோற்கடித்த எதிரிகளை நீங்கள் ஒருவேளை பிடித்துக்கொண்டு வந்திருக்கலாம்.+ 11 அவர்களில் ஒரு அழகான பெண்ணை உங்களில் ஒருவன் பார்த்து, அவளிடம் மயங்கி, அவளை மனைவியாக்கிக்கொள்ள விரும்பினால், 12 அவளைத் தன்னுடைய வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வரலாம். அப்போது, அவள் தன் தலையை மொட்டையடித்துக்கொண்டு, நகங்களை வெட்டிக்கொள்ள வேண்டும். 13 பிடித்துவரப்பட்டபோது போட்டிருந்த உடையை மாற்றிக்கொண்டு அவனுடைய வீட்டில் இருக்க வேண்டும். அவள் தன்னுடைய அப்பா அம்மாவுக்காக ஒரு மாதம் முழுவதும் துக்கம் அனுசரிக்க வேண்டும்.+ பின்பு, அவன் அந்தப் பெண்ணோடு உறவுகொள்ளலாம். அவர்கள் இரண்டு பேரும் கணவன் மனைவியாக வாழ்வார்கள். 14 அந்தப் பெண்ணை அவனுக்குப் பிடிக்காமல்போனால், அவள் இஷ்டப்படுகிற இடத்துக்குப் போக அவளை விட்டுவிட வேண்டும்.+ அவளை விற்கவோ கொடுமைப்படுத்தவோ கூடாது; ஏனென்றால், அவளைக் கட்டாயப்படுத்தி மனைவியாக்கிக்கொண்டான்.*

15 ஒருவேளை ஒருவனுக்கு இரண்டு மனைவிகள் இருக்கலாம். அவர்களில் ஒருத்தியை அவன் அதிகமாக நேசிக்கலாம். அந்த இரண்டு மனைவிகளுக்கும் மகன்கள் பிறக்கலாம். அவனுக்குப் பிடிக்காதவள் பெற்றெடுத்த மகன் மூத்த மகனாக இருந்தால்,+ 16 தன்னுடைய மகன்களுக்குச் சொத்தைப் பிரித்துக் கொடுக்கும் நாளில், பிடிக்காதவளுக்குப் பிறந்த மகனுக்குப் பதிலாகப் பிடித்தவளுக்குப் பிறந்த மகனை மூத்த மகனாக நடத்தக் கூடாது. 17 பிடிக்காதவளுக்குப் பிறந்த மகனுக்கு எல்லாவற்றிலும் இரண்டு பங்கைக் கொடுத்து மூத்த மகனாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அவன்தான் முதல் வாரிசு.* மூத்த மகனின் உரிமை அவனுக்குத்தான் கிடைக்க வேண்டும்.+

18 ஒருவேளை ஒரு மகன் பிடிவாதக்காரனாகவும், அடங்காதவனாகவும், அம்மா அப்பாவின் பேச்சைக் கேட்காதவனாகவும் இருக்கலாம்.+ அவனைத் திருத்துவதற்கு அவர்கள் எவ்வளவோ பாடுபட்டும் அவன் திருந்தாமல் இருந்தால்,+ 19 அவர்கள் அவனைப் பிடித்து நகரவாசலில் இருக்கிற பெரியோர்களிடம் கொண்டுபோக வேண்டும். 20 அங்கே அவர்களிடம், ‘இந்தப் பையன் ரொம்பப் பிடிவாதக்காரனாக இருக்கிறான், அடங்குவதே கிடையாது. எங்கள் பேச்சைக் கேட்பதே இல்லை. எப்போது பார்த்தாலும் குடித்துக்கொண்டும்+ தின்றுகொண்டும்+ இருக்கிறான்’ என்று சொல்ல வேண்டும். 21 அப்போது, அந்த நகரத்தின் ஆண்கள் எல்லாரும் அவனைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும். இப்படி, உங்கள் நடுவிலிருந்து தீமையை ஒழித்துக்கட்ட வேண்டும். இஸ்ரவேலர்கள் எல்லாரும் அதைக் கேட்டு பயப்படுவார்கள்.+

22 ஒருவன் ஒரு பெரிய பாவத்தைச் செய்திருந்தால் அதற்காக அவனுக்கு மரண தண்டனை கொடுக்கப்படலாம்.+ அவனுடைய உடலை மரக் கம்பத்தில் தொங்கவிடுவதாக இருந்தால்,+ 23 ராத்திரி முழுவதும் அதை மரக் கம்பத்திலேயே விட்டுவிடக் கூடாது.+ அந்த நாளிலேயே அவனைக் கண்டிப்பாக அடக்கம் செய்துவிட வேண்டும். ஏனென்றால், மரக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குச் சொத்தாகக் கொடுக்கிற தேசத்தை நீங்கள் தீட்டுப்படுத்தக் கூடாது”+ என்றார்.

22 பின்பு அவர், “ஒரு இஸ்ரவேலனுடைய ஆடோ மாடோ வழிதவறித் திரிவதை நீங்கள் பார்த்தால், கண்டும்காணாமல் போய்விடக் கூடாது.+ அதை அவனிடம் கண்டிப்பாகக் கொண்டுபோய் விடவேண்டும். 2 அவனுடைய வீடு அக்கம்பக்கத்தில் இல்லாவிட்டால் அல்லது அவன் யாரென்று தெரியாவிட்டால், அந்த மிருகத்தை உங்கள் வீட்டுக்குக் கொண்டுவர வேண்டும். அவன் தேடி வரும்வரை அதை உங்களிடம் வைத்திருக்க வேண்டும். பின்பு, அவனிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.+ 3 அவனிடமிருந்து காணாமல் போனது கழுதையாக இருந்தாலும் துணிமணியாக இருந்தாலும் வேறெதுவாக இருந்தாலும், அதை நீங்கள் கண்டுபிடித்திருந்தால் இப்படித்தான் செய்ய வேண்டும். அதைப் பார்த்தும் பார்க்காததுபோல் இருந்துவிடக் கூடாது.

4 ஒரு இஸ்ரவேலனுடைய கழுதையோ காளையோ வழியில் விழுந்து கிடப்பதை நீங்கள் பார்த்தால், கண்டும்காணாமல் போய்விடக் கூடாது. அதைத் தூக்கிவிட கண்டிப்பாக அவனுக்கு உதவி செய்ய வேண்டும்.+

5 ஆண்களின் உடையைப் பெண்கள் போட்டுக்கொள்ளவோ பெண்களின் உடையை ஆண்கள் போட்டுக்கொள்ளவோ கூடாது. அப்படிச் செய்கிறவர்கள் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்.

6 போகும் வழியில், நீங்கள் ஒரு பறவையின் கூட்டை மரத்திலோ தரையிலோ ஒருவேளை பார்க்கலாம். அதில் குஞ்சுகளோ முட்டைகளோ இருக்கலாம். அவற்றின் மேல் தாய்ப் பறவை உட்கார்ந்திருந்தால், தாயையும் குஞ்சுகளையும் சேர்த்து எடுத்துக்கொள்ளக் கூடாது.+ 7 தாய்ப் பறவையைப் போகவிட்ட பின்பு குஞ்சுகளை எடுத்துக்கொள்ளலாம். அப்படிச் செய்தால்தான், நீங்கள் ரொம்பக் காலம் சந்தோஷமாக வாழ்வீர்கள்.

8 நீங்கள் புது வீடு கட்டினால், மொட்டைமாடிக்குக்+ கைப்பிடிச்சுவர் வைக்க வேண்டும். ஏனென்றால், மாடியிலிருந்து யாராவது கீழே விழுந்தால் உங்கள் வீட்டில் இருக்கிறவர்கள்மேல் கொலைப்பழி* வரும்.

9 உங்கள் திராட்சைத் தோட்டத்தில் வேறெந்த விதையையும் விதைக்கக் கூடாது.+ அப்படி விதைத்தால், விளைந்த பயிர்களையும் திராட்சைத் தோட்டத்தின் விளைச்சலையும் சேர்த்து வழிபாட்டுக் கூடாரத்துக்குக் கொடுத்துவிட வேண்டும்.

10 காளையையும் கழுதையையும் இணைத்து நிலத்தை உழக் கூடாது.+

11 கம்பளியையும் நாரிழையையும்* சேர்த்து நெய்த உடையை நீங்கள் போட்டுக்கொள்ளக் கூடாது.+

12 உங்கள் உடையின் நான்கு ஓரங்களிலும் குஞ்சங்கள்* வைக்க வேண்டும்.+

13 ஒருவன் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு அவளுடன் உறவுகொண்ட பின்பு அவளை வெறுத்து, 14 நடத்தை கெட்டவள் என்று குற்றம்சாட்டி, ‘இந்தப் பெண்ணை நான் கல்யாணம் செய்தேன், ஆனால் இவளோடு உறவுகொண்டபோது இவள் கற்பில்லாதவள் என்று தெரிந்துகொண்டேன்’ என்று சொல்லி அவளுடைய பெயரைக் கெடுத்தால், 15 அவள் கற்புள்ளவள் என்பதற்கான ஆதாரத்தை அவளுடைய அம்மாவும் அப்பாவும் நகரவாசலில் இருக்கிற பெரியோர்களிடம்* கொண்டுபோய்க் காட்ட வேண்டும். 16 அந்தப் பெண்ணின் அப்பா அந்தப் பெரியோர்களிடம், ‘இவனுக்கு நான் என் பெண்ணைக் கொடுத்தேன். ஆனால், இவன் அவளை வெறுக்கிறான். 17 “உங்கள் மகள் கற்பில்லாதவள் என்பதைத் தெரிந்துகொண்டேன்” என்று சொல்லி அவள்மேல் அபாண்டமாகப் பழி போடுகிறான். ஆனால், அவள் கற்புள்ளவள் என்பதற்கு இதோ ஆதாரம்’ என்று சொல்ல வேண்டும். பின்பு, நகரத்துப் பெரியோர்கள் முன்னால் அவர்கள் அந்தத் துணியை விரிக்க வேண்டும். 18 அப்போது, நகரத்துப் பெரியோர்கள்+ அவனைப் பிடித்து தண்டனை விதிக்க வேண்டும்.+ 19 அவனுக்கு 100 வெள்ளி சேக்கல்* அபராதம் விதிக்க வேண்டும். அதை வாங்கி அந்தப் பெண்ணின் அப்பாவிடம் கொடுக்க வேண்டும். ஏனென்றால், இஸ்ரவேலிலுள்ள ஒரு கன்னிப்பெண்ணின் பெயரை அவன் கெடுத்திருக்கிறான்.+ அவள் தொடர்ந்து அவனுடைய மனைவியாக இருப்பாள். வாழ்நாள் முழுக்க அவளை அவன் விவாகரத்து செய்யக் கூடாது.

20 ஆனால், அவனுடைய குற்றச்சாட்டு உண்மையாக இருந்து, அவள் கற்புள்ளவள் என்பதற்கு ஆதாரம் இல்லாவிட்டால், 21 அந்தப் பெண்ணை அவளுடைய அப்பாவின் வீட்டு வாசலுக்குக் கொண்டுவர வேண்டும். அந்த நகரத்து ஆண்கள் அவளைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும். ஏனென்றால், அவள் தன்னுடைய அப்பாவின்+ வீட்டில் இருந்தபோது ஒழுக்கக்கேடாக நடந்திருக்கிறாள்.* இஸ்ரவேலில் கேவலமான காரியத்தைச் செய்திருக்கிறாள்.+ அதனால், தீமையை உங்கள் நடுவிலிருந்து ஒழித்துக்கட்ட வேண்டும்.+

22 ஒருவன் இன்னொருவனுடைய மனைவியோடு உறவுகொள்ளும்போது கையும் களவுமாகப் பிடிபட்டால், அவனும் அவளும் கொல்லப்பட வேண்டும்.+ இப்படி, தீமையை இஸ்ரவேலின் நடுவிலிருந்து ஒழித்துக்கட்ட வேண்டும்.

23 ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்ட கன்னிப்பெண் ஊருக்குள் இருக்கும்போது இன்னொருவன் அவளைப் பார்த்து அவளுடன் உறவுகொண்டால், 24 அந்த இரண்டு பேரையும் நகரவாசலுக்குக் கொண்டுவந்து கல்லெறிந்து கொல்ல வேண்டும். ஏனென்றால், அந்தப் பெண் ஊருக்குள் இருந்தும் உதவிக்காகக் கூச்சல் போடவில்லை. அந்த மனுஷனும் இன்னொருவனுடைய மனைவியாகிய அவளை மானபங்கம் செய்துவிட்டான்.+ அதனால், தீமையை உங்கள் நடுவிலிருந்து ஒழித்துக்கட்ட வேண்டும்.

25 ஆனால், நிச்சயிக்கப்பட்ட அந்தப் பெண்ணை வயல்வெளியில் அவன் பார்த்து அவளைப் பலாத்காரம் செய்தால், அவன் மட்டும்தான் கொல்லப்பட வேண்டும். 26 அந்தப் பெண்ணை நீங்கள் ஒன்றும் செய்யக் கூடாது. மரண தண்டனை பெற வேண்டிய அளவுக்கு எந்தக் குற்றமும் அவள் செய்யவில்லை. ஒருவன் இன்னொருவனைத் தாக்கி படுகொலை செய்வதைப் போலத்தான் இதையும் கருத வேண்டும்.+ 27 ஏனென்றால், அந்தப் பெண்ணை வயல்வெளியில் அவன் கெடுத்தபோது அவள் கூச்சல் போட்டும், காப்பாற்ற யாரும் வராமல் போய்விட்டார்கள்.

28 ஆனால், நிச்சயிக்கப்படாத கன்னிப்பெண்ணை ஒருவன் பார்த்து அவளைப் பலவந்தமாய்ப் பிடித்திழுத்து அவளுடன் உறவுகொண்டால், அவர்கள் பிடிபடும்போது,+ 29 அவளுடன் உறவுகொண்டவன் அவளுடைய அப்பாவுக்கு 50 வெள்ளி சேக்கல் கொடுக்க வேண்டும். அவள் அவனுடைய மனைவியாவாள்.+ ஏனென்றால், அவன் அவளை மானபங்கம் செய்துவிட்டான். வாழ்நாள் முழுக்க அவளை அவன் விவாகரத்து செய்யக் கூடாது.

30 ஒருவனும் தன் அப்பாவின் மனைவியைத் தன்னுடைய மனைவியாக்கிக்கொள்ளக் கூடாது. அது அவனுடைய அப்பாவை அவமானப்படுத்துவதாக இருக்கும்”+ என்றார்.

23 பின்பு அவர், “விரை நசுக்கப்பட்ட அல்லது ஆணுறுப்பு அறுக்கப்பட்ட எவனும் யெகோவாவின் சபையில் ஒருவனாக இருக்க முடியாது.+

2 முறைகேடாகப் பிறந்த எவனும் யெகோவாவின் சபையில் ஒருவனாக இருக்க முடியாது.+ அவனுடைய வம்சத்தார் யாருமே, அவன் பத்தாம் தலைமுறையைச் சேர்ந்தவனாக இருந்தாலும், யெகோவாவின் சபையில் ஒருவனாக இருக்க முடியாது.

3 அம்மோனியனும் மோவாபியனும் யெகோவாவின் சபையில் ஒருவனாக இருக்க முடியாது.+ அவர்களுடைய வம்சத்தார் யாருமே, அவன் பத்தாம் தலைமுறையைச் சேர்ந்தவனாக இருந்தாலும், யெகோவாவின் சபையில் ஒருவனாக இருக்கவே முடியாது. 4 ஏனென்றால், நீங்கள் எகிப்திலிருந்து வரும் வழியில் அவர்கள் உங்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து உதவி செய்யவில்லை.+ அதுமட்டுமல்ல, உங்களைச் சபிக்கச் சொல்லி, மெசொப்பொத்தாமியா பகுதியிலுள்ள பெத்தூரைச் சேர்ந்த பெயோரின் மகனாகிய பிலேயாமுக்குக் கூலி கொடுத்தார்கள்.+ 5 ஆனால், உங்கள் கடவுளாகிய யெகோவா பிலேயாமின் வேண்டுதலைக் கேட்கவில்லை.+ அதற்குப் பதிலாக, உங்கள் கடவுளாகிய யெகோவா அந்தச் சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றினார்.+ ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை நேசித்தார்.+ 6 அவர்களுடைய நிம்மதிக்காகவோ சந்தோஷத்துக்காகவோ நீங்கள் எதையும் எப்போதும் செய்யக் கூடாது.+

7 ஏதோமியனை நீங்கள் வெறுக்கக் கூடாது, ஏனென்றால் அவன் உங்களுடைய சகோதரன்.+

எகிப்தியனை நீங்கள் வெறுக்கக் கூடாது, ஏனென்றால் நீங்கள் அவனுடைய தேசத்தில் குடியிருந்தீர்கள்.+ 8 அவர்களுடைய மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த எவனும் யெகோவாவின் சபையில் ஒருவனாக இருக்கலாம்.

9 விரோதிகளுக்கு எதிராகப் போர் செய்ய நீங்கள் முகாம்போட்டிருக்கும் சமயத்தில், எந்த விதத்திலும் தீட்டுப்படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.+ 10 ராத்திரியில் விந்து வெளியேறியதால் உங்களில் ஒருவன் தீட்டுப்பட்டிருந்தால்,+ முகாமுக்கு வெளியே அவன் போக வேண்டும், முகாமுக்குள் திரும்பி வரக் கூடாது. 11 ஆனால், அவன் சாயங்காலத்தில் குளித்துவிட்டு, சூரியன் மறைந்தவுடன் முகாமுக்குள் வரலாம்.+ 12 மலஜலம் கழிப்பதற்காக முகாமுக்கு வெளியே ஒரு இடத்தை ஒதுக்கி வைத்துக்கொண்டு, அங்குதான் நீங்கள் போக வேண்டும். 13 ஆயுதங்களோடு ஒரு சிறிய தடியையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போக வேண்டும். அந்தத் தடியால் குழிதோண்டி மலஜலம் கழித்துவிட்டு மண்ணைப் போட்டு மூடிவிட வேண்டும். 14 உங்களைக் காப்பாற்றுவதற்காகவும் எதிரிகளை உங்கள் கையில் கொடுப்பதற்காகவும் உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் முகாமுக்குள் நடந்துகொண்டிருக்கிறார்.+ அதனால், உங்கள் முகாம் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+ இல்லாவிட்டால், உங்கள் நடுவில் அருவருப்பான எதையாவது பார்த்து அவர் உங்களைவிட்டு விலகிப் போய்விடுவார்.

15 ஒரு அடிமை தன் எஜமானிடமிருந்து தப்பித்து உங்களிடம் வந்தால், அவனை அந்த எஜமானிடம் ஒப்படைக்கக் கூடாது. 16 உங்களுடைய நகரம் ஒன்றில் அவனுக்குப் பிடித்த இடத்தில் அவன் உங்களுடன் வாழலாம். நீங்கள் அவனைக் கொடுமைப்படுத்தக் கூடாது.+

17 இஸ்ரவேலைச் சேர்ந்த எந்த ஆணும் பெண்ணும் கோயிலில் விபச்சாரம் செய்கிறவர்களாக இருக்கக் கூடாது.+ 18 விபச்சாரம் செய்கிற ஒரு ஆணோ பெண்ணோ தனக்குக் கிடைத்த கூலியை உங்கள் கடவுளாகிய யெகோவாவின் வீட்டுக்குக் கொண்டுவரக் கூடாது. தான் நேர்ந்துகொண்டதை நிறைவேற்ற அந்தக் கூலியைப் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், அவர்களையும் அவர்களுக்குக் கிடைத்த கூலியையும் உங்கள் கடவுளாகிய யெகோவா அருவருக்கிறார்.

19 உங்கள் சகோதரனிடம் நீங்கள் வட்டி வாங்கக் கூடாது.+ கடனாகக் கொடுத்த பணத்துக்காகவும் உணவுக்காகவும் வேறெந்தப் பொருளுக்காகவும் வட்டி வாங்கக் கூடாது. 20 மற்ற தேசத்தைச் சேர்ந்தவனிடம் நீங்கள் வட்டி வாங்கலாம்,+ ஆனால் உங்கள் சகோதரனிடம் வட்டி வாங்கக் கூடாது.+ அப்போதுதான், நீங்கள் சொந்தமாக்கிக்கொள்கிற தேசத்தில் நீங்கள் செய்வதையெல்லாம் உங்கள் கடவுளாகிய யெகோவா ஆசீர்வதிப்பார்.+

21 உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு எதையாவது கொடுப்பதாக நேர்ந்துகொண்டால்,+ அதைக் கொடுக்கத் தாமதிக்காதீர்கள்.+ ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா அதை நிச்சயம் உங்களிடம் கேட்பார். நீங்கள் அதை நிறைவேற்றாவிட்டால் பாவம் செய்தவர்களாக இருப்பீர்கள்.+ 22 நீங்கள் எதையும் நேர்ந்துகொள்ளாமல் இருந்தால், உங்களுக்குப் பாவம் இல்லை.+ 23 சொன்ன சொல்லை நீங்கள் காப்பாற்ற வேண்டும்.+ உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு நீங்களாகவே விருப்பப்பட்டு எதையாவது பலி செலுத்துவதாக நேர்ந்துகொண்டால், அதை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.+

24 நீங்கள் மற்றவனின் திராட்சைத் தோட்டத்துக்குள் போனால், ஆசைதீர திராட்சைப் பழங்களைச் சாப்பிடலாம். ஆனால், அதில் ஒன்றைக்கூட உங்கள் கூடையில் எடுத்துக்கொள்ளக் கூடாது.+

25 நீங்கள் இன்னொருவரின் வயலுக்குப் போனால், அங்குள்ள கதிர்களைக் கைகளால் பிடுங்கிச் சாப்பிடலாம். ஆனால், அரிவாளால் வெட்டி எடுத்துக்கொள்ளக் கூடாது”+ என்றார்.

24 பின்பு அவர், “ஒருவன் ஒருத்தியைக் கல்யாணம் செய்தபின் அவள் செய்கிற ஏதோவொரு கேவலமான காரியத்தைப் பார்த்து அவளை வெறுத்தால், விவாகரத்துப் பத்திரத்தை+ அவளிடம் எழுதிக்கொடுத்து வீட்டைவிட்டு அனுப்பிவிட வேண்டும்.+ 2 அவனுடைய வீட்டைவிட்டு போன பின்பு அவள் இன்னொருவனுக்கு மனைவியாகலாம்.+ 3 இரண்டாவது கணவனும் அவளை வெறுத்து* விவாகரத்துப் பத்திரத்தை அவளிடம் எழுதிக்கொடுத்து வீட்டைவிட்டு அனுப்பிவிட்டால், அல்லது அந்த இரண்டாவது கணவன் இறந்துவிட்டால், 4 அவளை விவாகரத்து செய்த முதலாவது கணவன் மறுபடியும் அவளைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது. அது யெகோவாவுக்கு அருவருப்பானது. ஏனென்றால், முதல் கணவனுக்கு அவள் அசுத்தமானவள். உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குச் சொத்தாகக் கொடுக்கிற தேசத்தை நீங்கள் பாவத்தால் நிரப்பக் கூடாது.

5 ஒருவன் புதிதாகக் கல்யாணம் செய்திருந்தால் படையில் சேவை செய்யக் கூடாது. அவனுக்கு வேறெந்த வேலையும் கொடுக்கக் கூடாது. அவன் ஒரு வருஷ காலத்துக்குத் தன்னுடைய வீட்டில் தங்கி, தன் மனைவியைச் சந்தோஷப்படுத்த வேண்டும்.+

6 மாவு அரைக்கிற கல்லின்* அடிக்கல்லையோ மேல்கல்லையோ யாரும் அடமானமாக வாங்கக் கூடாது.+ அது ஒருவருடைய பிழைப்பையே* அடமானம் வாங்குவதாக இருக்கும்.

7 ஒருவன் இன்னொரு இஸ்ரவேலனைக் கடத்திக்கொண்டு போய், கொடுமைப்படுத்தி, விற்றுவிட்டால்,+ கடத்தியவன் கொல்லப்பட வேண்டும்.+ உங்கள் நடுவிலிருந்து தீமையை ஒழித்துக்கட்ட வேண்டும்.+

8 உங்களைத் தொழுநோய்* தாக்கினால், லேவி கோத்திரத்தின் குருமார்கள் சொல்கிற எல்லாவற்றையும் மிகக் கவனமாகச் செய்யுங்கள்.+ நான் அவர்களுக்குக் கட்டளை கொடுத்ததை அச்சுப்பிசகாமல் செய்யுங்கள். 9 நீங்கள் எகிப்திலிருந்து வரும் வழியில் உங்கள் கடவுளாகிய யெகோவா மிரியாமுக்குச் செய்ததை நினைத்துப் பாருங்கள்.+

10 ஒருவனுக்கு நீங்கள் ஏதாவது கடன் கொடுத்திருந்தால்,+ அவன் தருவதாகச் சொன்ன அடமானப் பொருளை எடுத்துக்கொள்வதற்காக அவனுடைய வீட்டுக்குள்ளே போகக் கூடாது. 11 அவனுடைய வீட்டுக்கு வெளியே நிற்க வேண்டும், கடன் வாங்கியவன்தான் அந்த அடமானப் பொருளை வெளியே எடுத்து வந்து உங்களிடம் தர வேண்டும். 12 அவன் வறுமையில் வாடினால், அந்த அடமானப் பொருளைத் திருப்பிக் கொடுக்காமல் நீங்கள் படுக்கப் போகக் கூடாது.+ 13 சூரியன் மறைந்தவுடனேயே அதைக் கண்டிப்பாக அவனிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அப்போது, அவன் தன்னுடைய உடையுடன் படுக்கப் போவான்,+ உங்களை ஆசீர்வதிக்கச் சொல்லி கடவுளிடம் கேட்பான். நீங்களும் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பார்வையில் நீதிமான்களாக இருப்பீர்கள்.

14 கஷ்டத்திலும் வறுமையிலும் வாடுகிற கூலியாளுக்குக் கூலி தராமல் ஏமாற்றக் கூடாது, அவன் உங்கள் சகோதரனாக இருந்தாலும் சரி, உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்துக்காரனாக இருந்தாலும் சரி.+ 15 அந்தந்த நாளின் கூலியை அந்தந்த நாளே கொடுத்துவிட வேண்டும்,+ அதுவும் சூரியன் மறைவதற்குள் கொடுத்துவிட வேண்டும். அவன் வறுமையில் வாடுவதால், வயிற்றுப்பாட்டுக்கு அந்தக் கூலியைத்தான் நம்பியிருக்கிறான். நீங்கள் அப்படிக் கொடுக்காவிட்டால் உங்களைப் பற்றி யெகோவாவிடம் முறையிடுவான், அப்போது நீங்கள் பாவம் செய்தவர்களாக இருப்பீர்கள்.+

16 பிள்ளைகள் செய்த பாவத்துக்காக அப்பாவுக்கோ, அப்பா செய்த பாவத்துக்காகப் பிள்ளைகளுக்கோ மரண தண்டனை கொடுக்கக் கூடாது.+ ஒருவன் செய்த பாவத்துக்காக அவனுக்கு மட்டும்தான் மரண தண்டனை கொடுக்க வேண்டும்.+

17 உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்துக்காரனின் வழக்கிலோ அப்பா இல்லாத பிள்ளையின்* வழக்கிலோ நீங்கள் நீதியைப் புரட்டக் கூடாது.+ ஒரு விதவையின் சால்வையை அடமானமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.+ 18 நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்ததை ஞாபகத்தில் வையுங்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை அங்கிருந்து விடுவித்தார்.+ அதனால்தான், நான் உங்களுக்கு இந்தக் கட்டளையைக் கொடுக்கிறேன்.

19 உங்கள் வயலில் அறுவடை செய்யும்போது ஒரு கதிர்க்கட்டை அங்கேயே மறந்துவிட்டு வந்திருந்தால், அதை எடுக்க மறுபடியும் போகாதீர்கள். உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்துக்காரனுக்கும் அப்பா இல்லாத பிள்ளைக்கும் விதவைக்கும் அதை விட்டுவிடுங்கள்.+ அப்போதுதான், நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் உங்கள் கடவுளாகிய யெகோவா ஆசீர்வதிப்பார்.+

20 நீங்கள் ஒலிவ மரத்தைத் தடியால் அடித்து பழங்களை உதிர்த்தபின், உதிராததை உதிர்ப்பதற்காக மறுபடியும் போகக் கூடாது. உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்துக்காரனுக்கும் அப்பா இல்லாத பிள்ளைக்கும் விதவைக்கும் அவற்றை விட்டுவிட வேண்டும்.+

21 உங்கள் திராட்சைத் தோட்டத்தில் பழங்களைச் சேகரித்தபின், மீதியானதைப் பறிக்க மறுபடியும் போகக் கூடாது. உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்துக்காரனுக்கும் அப்பா இல்லாத பிள்ளைக்கும் விதவைக்கும் அவற்றை விட்டுவிட வேண்டும். 22 நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்ததை ஞாபகத்தில் வையுங்கள். அதனால்தான், நான் உங்களுக்கு இந்தக் கட்டளையைக் கொடுக்கிறேன்” என்றார்.

25 பின்பு அவர், “இரண்டு பேருக்கு இடையில் ஏதாவது வழக்கு இருந்தால், அவர்கள் நியாயாதிபதிகளிடம் வந்து முறையிடலாம்.+ அந்த நியாயாதிபதிகள் குற்றம் செய்யாதவனை* நிரபராதி என்றும், குற்றம் செய்தவனைக் குற்றவாளி என்றும் தீர்ப்பு கொடுப்பார்கள்.+ 2 குற்றவாளியை அடிக்க வேண்டுமென்று+ நியாயாதிபதி தீர்ப்பு கொடுத்தால், அவருக்கு முன்னால் அவன் படுக்க வைக்கப்பட்டு அடிக்கப்படுவான். எத்தனை அடி கொடுக்கப்பட வேண்டும் என்பது அவன் செய்த குற்றத்தைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். 3 அவனுக்கு 40 அடிவரை கொடுக்கலாம்,+ அதற்குமேல் அடிக்கக் கூடாது. அப்படி அடித்தால் உங்கள் சகோதரனை உங்கள் கண் முன்னால் கேவலப்படுத்துவதாக இருக்கும்.

4 போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டக் கூடாது.+

5 கூடப்பிறந்த சகோதரர்கள் ஒரே இடத்தில் வாழும்போது அவர்களில் ஒருவன் ஆண் வாரிசு இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய மனைவி அந்தக் குடும்பத்துக்கு வெளியே கல்யாணம் செய்யக் கூடாது. அவளுடைய கணவனின் சகோதரன் அவளை மனைவியாக ஏற்றுக்கொண்டு, கொழுந்தனுடைய* கடமையைச் செய்ய வேண்டும்.+ 6 அவளுக்குப் பிறக்கிற மூத்த மகன், இறந்துபோன அவளுடைய கணவனின் மகனைப் போலக் கருதப்படுவான்.*+ அதனால், அவளுடைய கணவனின் பெயர் இஸ்ரவேலிலிருந்து மறைந்துபோகாது.+

7 ஆனால், விதவையாகிவிட்ட தன் சகோதரனுடைய மனைவியைக் கல்யாணம் செய்ய அவனுக்கு இஷ்டம் இல்லையென்றால், நகரவாசலில் இருக்கிற பெரியோர்களிடம்* அவள் போய், ‘என் கொழுந்தனார் என் கணவனுடைய பெயரை இஸ்ரவேலில் கட்டிக்காக்க முடியாது என்றும், கொழுந்தனுடைய* கடமையைச் செய்ய முடியாது என்றும் சொல்கிறார்’ என்று முறையிட வேண்டும். 8 அப்போது, நகரத்துப் பெரியோர்கள் அவனைக் கூப்பிட்டுப் பேச வேண்டும். ‘அவளைக் கல்யாணம் செய்ய எனக்கு இஷ்டமில்லை’ என்று அவன் பிடிவாதமாகச் சொல்லிவிட்டால், 9 அவள் அந்தப் பெரியோர்களின் முன்னிலையில் அவனுடைய செருப்பைக் கழற்றிப்போட்டு,+ அவனுடைய முகத்தில் துப்ப வேண்டும். ‘தன் சகோதரனுடைய வம்சத்தைக் கட்டிக்காக்க முடியாது என்று சொல்கிறவனுக்கு இப்படித்தான் செய்ய வேண்டும்’ என்று சொல்ல வேண்டும். 10 அதன்பின், இஸ்ரவேலில் அவனுடைய குடும்பம், ‘செருப்பு கழற்றப்பட்டவன் குடும்பம்’ என அழைக்கப்படும்.

11 இரண்டு ஆண்கள் சண்டை போடும்போது, அவர்களில் ஒருவனுடைய மனைவி தன் கணவனைக் காப்பாற்றுவதற்காக, அவனை அடிக்கிறவனின் பிறப்புறுப்பைக் கை நீட்டிப் பிடித்தால், 12 அவளுடைய கையை வெட்ட வேண்டும். அவள்மேல் பரிதாபப்படக் கூடாது.

13 உங்களுடைய பையில், சிறியதும் பெரியதுமான* இரண்டு வித எடைக்கற்களை வைத்துக்கொள்ளக் கூடாது.+ 14 உங்களுடைய வீட்டில், சிறியதும் பெரியதுமான இரண்டு வித படிகளை வைத்துக்கொள்ளக் கூடாது.+ 15 சரியான எடைக்கற்களையும் படிகளையும் நீங்கள் வைத்திருக்க வேண்டும். போலியானவற்றை வைத்திருக்கக் கூடாது. அப்போதுதான், உங்கள் கடவுளாகிய யெகோவா தருகிற தேசத்தில் நீடூழி வாழ்வீர்கள்.+ 16 வியாபாரத்தில் அநியாயம் செய்கிற எவனும் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவன்.+

17 எகிப்திலிருந்து வரும் வழியில் அமலேக்கியர்கள் உங்களுக்குச் செய்ததை நினைத்துப் பாருங்கள்.+ 18 நீங்கள் அலுத்துக் களைத்துப் போயிருந்தபோது வழியிலே அவர்கள் உங்களை எதிர்த்து, உங்கள் பின்னால் வந்துகொண்டிருந்த எல்லாரையும் தாக்கினார்கள். கடவுளுக்கு அவர்கள் பயப்படவில்லை. 19 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்துக்கு நீங்கள் போன பின்பு, சுற்றியுள்ள எல்லா எதிரிகளையும் உங்கள் கடவுளாகிய யெகோவா வீழ்த்தி உங்களுக்கு நிம்மதி தரும்போது,+ அமலேக்கியர்களை இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழித்துவிட வேண்டும்.+ இதை மறந்துவிடாதீர்கள்” என்றார்.

26 பின்பு அவர், “உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு அங்கே குடியிருக்கும்போது, 2 உங்கள் கடவுளாகிய யெகோவா தரும் தேசத்தின் முதல் விளைச்சல் எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சத்தை ஒரு கூடையில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு, உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடத்துக்கு அதைக் கொண்டுபோக வேண்டும்.+ 3 அந்தச் சமயத்தில் பொறுப்பில் இருக்கிற குருவானவரிடம் போய், ‘யெகோவா நமக்குத் தருவதாக நம் முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்த தேசத்துக்கு+ நான் வந்துவிட்டேன் என்பதை யெகோவாவின் முன்னிலையில் இன்று அறிக்கையிடுகிறேன்’ என்று சொல்ல வேண்டும்.

4 அந்தக் கூடையை உங்கள் கையிலிருந்து குருவானவர் வாங்கி, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பலிபீடத்துக்கு முன்னால் வைப்பார். 5 அப்போது, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் நீங்கள், ‘அரமேயராக+ இருந்த என் மூதாதை நாடோடியாக* வாழ்ந்துவந்தார். பின்பு, கொஞ்சம் பேராக இருந்த அவருடைய குடும்பத்தாருடன்+ எகிப்துக்குப் போய்+ அன்னியனாகக் குடியிருந்தார். அதன்பின், அங்கே பலம்படைத்த மிகப் பெரிய தேசமாக ஆனார்.+ 6 எகிப்தியர்கள் எங்களை மோசமாக நடத்தினார்கள், அடக்கி ஒடுக்கினார்கள், கொத்தடிமைபோல் வேலை வாங்கினார்கள்.+ 7 அதனால், எங்கள் முன்னோர்களின் கடவுளாகிய யெகோவாவிடம் முறையிட்டோம். யெகோவா எங்கள் மன்றாட்டைக் கேட்டார். எங்களுடைய வேதனையையும் துன்பத்தையும் கொடுமையையும் பார்த்தார்.+ 8 கடைசியில், யெகோவா பயங்கரமான செயல்களையும் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்து,+ தன்னுடைய கைபலத்தாலும் மகா வல்லமையாலும் எங்களை எகிப்தைவிட்டு வெளியே கொண்டுவந்தார்.+ 9 அவர் எங்களை இங்கே கொண்டுவந்து, பாலும் தேனும் ஓடுகிற இந்தத் தேசத்தைக் கொடுத்தார்.+ 10 யெகோவா எனக்குத் தந்த நிலத்தின் முதல் விளைச்சலை இப்போது கொண்டுவந்திருக்கிறேன்’+ என்று சொல்ல வேண்டும்.

பின்பு, அதை உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் வைத்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவை வணங்க வேண்டும். 11 உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தாருக்கும் உங்கள் கடவுளாகிய யெகோவா செய்த நன்மைகளுக்காக நீங்களும் லேவியர்களும் உங்களோடு வாழ்கிற வேறு தேசத்து ஜனங்களும் சந்தோஷப்பட வேண்டும்.+

12 மூன்றாம் வருஷத்தில், அதாவது பத்திலொரு பாகத்தைச் செலுத்துகிற வருஷத்தில்,+ உங்கள் விளைச்சல் எல்லாவற்றிலும் பத்திலொரு பாகத்தை எடுத்துவைக்க வேண்டும். லேவியர்களுக்கும், உங்களோடு வாழ்கிற வேறு தேசத்து ஜனங்களுக்கும், அப்பா இல்லாத பிள்ளைகளுக்கும்,* விதவைகளுக்கும் அவற்றைக் கொடுக்க வேண்டும். அவர்கள் உங்களுடைய நகரங்களில் திருப்தியாகச் சாப்பிடுவார்கள்.+ 13 பின்பு நீங்கள் உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம், ‘நீங்கள் கட்டளை கொடுத்தபடியே, இந்தப் பரிசுத்த பங்கு முழுவதையும் என் வீட்டிலிருந்து எடுத்து லேவியர்களுக்கும், வேறு தேசத்து ஜனங்களுக்கும், அப்பா இல்லாத பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும் கொடுத்துவிட்டேன்.+ உங்கள் கட்டளைகளை நான் மீறவோ அசட்டை செய்யவோ இல்லை. 14 துக்கம் அனுசரிக்கும்போது அவற்றைச் சாப்பிடவில்லை, தீட்டாக இருக்கும்போது அவற்றைத் தொடவில்லை, இறந்தவர்களுக்காக அவற்றில் எதையும் கொடுக்கவில்லை. என் கடவுளாகிய யெகோவா சொன்னபடியே நடந்திருக்கிறேன், நீங்கள் கட்டளை கொடுத்த எல்லாவற்றையும் செய்திருக்கிறேன். 15 அதனால், உங்கள் பரிசுத்த வீடாகிய பரலோகத்திலிருந்து உங்கள் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களைப் பார்த்து அவர்களை ஆசீர்வதியுங்கள். எங்கள் முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்தபடியே+ நீங்கள் எங்களுக்குத் தந்த தேசமாகிய பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை+ ஆசீர்வதியுங்கள்’+ என்று சொல்ல வேண்டும்.

16 இந்த விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் கடைப்பிடிக்க வேண்டுமென்று உங்கள் கடவுளாகிய யெகோவா இன்று கட்டளை கொடுக்கிறார். நீங்கள் அவற்றை முழு இதயத்தோடும்+ முழு மூச்சோடும் பின்பற்ற வேண்டும். 17 நீங்கள் யெகோவாவின் வழியில் நடந்து, அவருடைய விதிமுறைகளையும்+ கட்டளைகளையும்+ நீதித்தீர்ப்புகளையும்+ கடைப்பிடித்து, அவருடைய பேச்சைக் கேட்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறீர்கள். அதனால், அவர் உங்கள் கடவுளாக இருப்பாரென்று இன்றைக்கு உங்களுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார். 18 நீங்களும், யெகோவா வாக்குறுதி தந்தபடியே அவருடைய ஜனங்களாகவும் விசேஷ சொத்தாகவும் இருப்பீர்கள்+ என்றும், அவருடைய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவீர்கள் என்றும் இன்று வாக்குக் கொடுத்திருக்கிறீர்கள். 19 நீங்கள் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமான ஜனங்களாக இருந்தால்,+ அவர் சொன்னபடியே, அவர் உருவாக்கிய மற்ற எல்லா தேசத்தாருக்கும் மேலாக உங்களை உயர்த்தி+ பேர்புகழும் மகிமையும் தருவார்” என்றார்.

27 பின்பு, இஸ்ரவேலின் பெரியோர்களுடன்* சேர்ந்து மோசே ஜனங்களிடம், “இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற எல்லா கட்டளைகளையும் கடைப்பிடியுங்கள். 2 நீங்கள் யோர்தானைக் கடந்து உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்துக்குப் போனவுடன், பெரிய கற்களை நாட்டி அவற்றுக்குச் சாந்து பூசுங்கள்.*+ 3 அந்தக் கற்கள்மேல் இந்தத் திருச்சட்ட வார்த்தைகள் எல்லாவற்றையும் எழுதுங்கள். உங்கள் முன்னோர்களின் கடவுளாகிய யெகோவா உங்களுக்கு வாக்குறுதி தந்தபடியே, உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசமாகிய பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குப் போக நீங்கள் யோர்தானைக் கடந்தவுடன் இப்படிச் செய்யுங்கள்.+ 4 இன்று நான் உங்களுக்குக் கட்டளை கொடுக்கிறபடியே, நீங்கள் யோர்தானைக் கடந்தவுடன், அந்தக் கற்களை ஏபால் மலையில்+ நாட்டி அவற்றுக்குச் சாந்து பூச* வேண்டும். 5 அங்கே உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குக் கற்களால் ஒரு பலிபீடம் கட்ட வேண்டும். இரும்புக் கருவிகளால் அந்தக் கற்களை வெட்டக் கூடாது.+ 6 வெட்டப்படாத முழு கற்களால் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பலிபீடம் கட்டி, அதன்மேல் யெகோவாவுக்குத் தகன பலிகள் செலுத்த வேண்டும். 7 அங்கே சமாதான பலிகளைச்+ செலுத்தி, அவற்றைச் சாப்பிட்டு,+ உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னால் சந்தோஷமாக இருக்க வேண்டும்.+ 8 நீங்கள் நாட்டிய கற்கள்மேல் இந்தத் திருச்சட்ட வார்த்தைகள் எல்லாவற்றையும் தெளிவாக எழுத வேண்டும்”+ என்று சொன்னார்.

9 பின்பு, மோசே லேவியர்களான குருமார்களுடன் சேர்ந்து இஸ்ரவேலர்கள் எல்லாரிடமும், “இஸ்ரவேலர்களே, அமைதியாகக் கேளுங்கள். நீங்கள் இன்று உங்கள் கடவுளாகிய யெகோவாவின் ஜனங்களாக ஆகியிருக்கிறீர்கள்.+ 10 அதனால் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சை நீங்கள் கேட்க வேண்டும், நான் இன்று உங்களுக்குச் சொல்கிற அவருடைய கட்டளைகளையும் விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்”+ என்று சொன்னார்.

11 அன்றைக்கு மோசே எல்லாரிடமும், 12 “யோர்தானைக் கடந்த பின்பு, ஜனங்களுக்கு ஆசீர்வாதத்தை அறிவிப்பதற்காக சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் ஆகிய கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் கெரிசீம் மலையில் நிற்க வேண்டும்.+ 13 சாபத்தை அறிவிப்பதற்காக ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி ஆகிய கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் ஏபால் மலையில் நிற்க வேண்டும்.+ 14 எல்லா இஸ்ரவேலர்களிடமும் லேவியர்கள் இப்படிச் சத்தமாகச் சொல்ல வேண்டும்:+

15 ‘யெகோவாவுக்கு அருவருப்பானதும்+ மனுஷனின்* கைவேலையுமான செதுக்கப்பட்ட சிலையையோ உலோகச் சிலையையோ செய்து அதை மறைத்துவைப்பவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’* என்று சொல்ல வேண்டும்.)

16 ‘அப்பா அம்மாவை மதிக்காதவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.)

17 ‘ஒருவனுடைய நிலத்தின் எல்லைக் குறியைத் தள்ளி வைப்பவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.)

18 ‘கண் தெரியாதவனைத் தவறான வழியில் போக வைப்பவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.)

19 ‘உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்துக்காரனுக்கோ, அப்பா இல்லாத பிள்ளைக்கோ,* விதவைக்கோ+ இருக்கிற வழக்கில் நீதியைப் புரட்டுபவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.)

20 ‘தன் அப்பாவுடைய மனைவியுடன் உடலுறவுகொள்வதன் மூலம் தன் அப்பாவைக் கேவலப்படுத்துகிறவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.)

21 ‘ஏதாவது ஒரு மிருகத்தோடு புணர்ச்சி செய்கிறவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.)

22 ‘அப்பாவுக்கோ அம்மாவுக்கோ பிறந்த மகளாகிய தன் சகோதரியோடு உடலுறவுகொள்பவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.)

23 ‘மாமியாருடன் உடலுறவுகொள்பவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.)

24 ‘பதுங்கியிருந்து கொலை செய்பவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.)

25 ‘ஒரு அப்பாவியைக் கொலை செய்வதற்கு லஞ்சம் வாங்குபவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.)

26 ‘இந்தத் திருச்சட்ட வார்த்தைகளைக் கடைப்பிடிக்காதவன் சபிக்கப்பட்டவன்’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்)” என்று சொன்னார்.

28 பின்பு அவர், “இன்று நான் கொடுக்கிற கட்டளைகள் எல்லாவற்றையும் கவனமாகக் கடைப்பிடித்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடந்தால், பூமியிலுள்ள எல்லா தேசத்தாருக்கும் மேலாக யெகோவா உங்களை உயர்த்துவார்.+ 2 எப்போதும் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடந்தால், இந்த எல்லா ஆசீர்வாதங்களும் உங்கள்மேல் வந்து குவியும்:+

3 நீங்கள் நகர்ப்புறத்திலும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள், கிராமப்புறத்திலும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.+

4 உங்களுடைய குழந்தைகுட்டிகளும் வயல்களின் விளைச்சலும் ஆடுமாடுகளின் குட்டிகளும் கன்றுகளும் ஆசீர்வதிக்கப்படும்.+

5 உங்களுடைய கூடையும் பாத்திரமும் ஆசீர்வதிக்கப்படும்.*+

6 நீங்கள் செய்கிற எல்லா காரியங்களும் ஆசீர்வதிக்கப்படும்.

7 உங்களைத் தாக்க வருகிற எதிரிகளை யெகோவா தோற்கடிப்பார்.+ ஒரு திசையில் அவர்கள் உங்களைத் தாக்க வருவார்கள், ஆனால் ஏழு திசைகளில் உங்களைவிட்டு ஓடிப்போவார்கள்.+ 8 உங்களுடைய களஞ்சியங்களை யெகோவா ஆசீர்வதிப்பார்.+ நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் உங்கள் கடவுளாகிய யெகோவா ஆசீர்வதிப்பார். அவர் கொடுக்கிற தேசத்தில் நீங்கள் நிச்சயம் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். 9 உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கட்டளைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து அவருடைய வழிகளில் நடந்தால், யெகோவா உங்களுக்கு வாக்குக் கொடுத்தபடியே,+ உங்களைத் தன்னுடைய பரிசுத்தமான ஜனமாக ஆக்குவார்.+ 10 நீங்கள் யெகோவாவின் பெயரைத் தாங்கியிருப்பதைப் பூமியிலுள்ள எல்லா ஜனங்களும் பார்த்து,+ உங்களுக்குப் பயப்படுவார்கள்.+

11 உங்களுக்குத் தருவதாக உங்கள் முன்னோர்களுக்கு யெகோவா வாக்குக் கொடுத்த தேசத்தில்,+ ஏராளமான பிள்ளைகளையும் ஆடுமாடுகளையும் விளைச்சலையும் யெகோவா தருவார்.+ 12 நிரம்பி வழியும் களஞ்சியமாகிய வானத்தை யெகோவா திறந்து, உங்கள் தேசத்தில் பருவ மழையைப் பொழிய வைப்பார்,+ நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார். நீங்கள் எத்தனையோ தேசத்தாருக்குக் கடன் கொடுப்பீர்கள், ஆனால் நீங்கள் யாரிடமிருந்தும் கடன் வாங்க மாட்டீர்கள்.+ 13 இன்று நான் கொடுக்கிற கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடந்தால், யெகோவா உங்களை மிகவும் உயர்ந்த நிலையில் வைப்பார், நீங்கள் தாழ்ந்துபோவதற்கு விட மாட்டார்.+ எல்லா ஜனங்களையும் நீங்கள் அடக்கி ஆளுவீர்கள், யாரும் உங்களை அடக்கி ஆள மாட்டார்கள். 14 இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற கட்டளைகளை நீங்கள் அச்சுப்பிசகாமல் கடைப்பிடிக்க வேண்டும்.+ வேறு தெய்வங்களைத் தேடிப்போய் வணங்கக் கூடாது.+

15 ஆனால், இன்று நான் கொடுக்கிற கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கவனமாகக் கடைப்பிடிக்காமலும், உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடக்காமலும் இருந்தால் இந்த எல்லா சாபங்களும் உங்கள்மேல் வந்து குவியும்:+

16 நீங்கள் நகர்ப்புறத்திலும் சபிக்கப்படுவீர்கள், கிராமப்புறத்திலும் சபிக்கப்படுவீர்கள்.+

17 உங்களுடைய கூடையும் பாத்திரமும் சபிக்கப்படும்.+

18 உங்களுடைய குழந்தைகுட்டிகளும் வயல்களின் விளைச்சலும் ஆடுமாடுகளின் குட்டிகளும் கன்றுகளும் சபிக்கப்படும்.+

19 நீங்கள் செய்கிற எல்லா காரியங்களும் சபிக்கப்படும்.

20 நீங்கள் யெகோவாவைவிட்டு விலகி கெட்ட வழியில் போனால், நீங்கள் செய்கிற எல்லாவற்றிலும் அவர் சாபத்தையும் குழப்பத்தையும் தண்டனையையும் வரவைப்பார். நீங்கள் அடியோடு அழிந்துபோகும்வரை இதையெல்லாம் வரவைப்பார்.+ 21 நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளும் தேசத்திலிருந்து யெகோவா உங்களை அடியோடு அழிக்கும்வரை நோயால் உங்களைத் தாக்குவார்.+ 22 காசநோய், கடுமையான காய்ச்சல்,+ வீக்கம், கடுமையான சூடு, போர்,+ வெப்பக்காற்று, தாவர நோய்+ ஆகியவற்றால் யெகோவா தாக்குவார். நீங்கள் அழியும்வரை அவை உங்களைவிட்டுப் போகாது. 23 உங்கள் வானம் செம்பைப் போலவும் பூமி இரும்பைப் போலவும் ஆகும்.*+ 24 யெகோவா வானத்திலிருந்து மழையைக் கொடுப்பதற்குப் பதிலாக, புழுதியையும் மண்ணையும்தான் கொட்டுவார். நீங்கள் அடியோடு அழிந்துபோகும்வரை இதைத்தான் செய்வார். 25 விரோதிகளுக்கு முன்னால் யெகோவா உங்களைத் தோற்கடிப்பார்.+ நீங்கள் அவர்களை ஒரு திசையில் தாக்குவீர்கள், ஆனால் அவர்களைவிட்டு ஏழு திசைகளில் ஓடிப்போவீர்கள். உங்களுடைய கோரமான நிலைமையைப் பார்த்து உலகமே கதிகலங்கும்.+ 26 வானத்துப் பறவைகளும் பூமியின் மிருகங்களும் உங்களுடைய பிணங்களைத் தின்னும். அவற்றை விரட்டிவிட யாரும் இருக்க மாட்டார்கள்.+

27 எகிப்தியர்களை வாட்டிய கொப்புளங்கள், மூலநோய், படை, தோல் தடிப்புகள் ஆகியவற்றால் யெகோவா உங்களைத் தாக்குவார். அவற்றிலிருந்து நீங்கள் குணமடைய முடியாது. 28 யெகோவா உங்களைப் பைத்தியமாக்குவார், குருடாக்குவார்,+ குழப்புவார். 29 நீங்கள் பட்டப்பகலில் குருடனைப் போல் தட்டுத்தடுமாறுவீர்கள்.+ எந்தக் காரியத்திலும் உங்களுக்கு வெற்றி கிடைக்காது. நீங்கள் எப்போதும் மோசடி செய்யப்படுவீர்கள், கொள்ளையடிக்கப்படுவீர்கள். உங்களைக் காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள்.+ 30 நீங்கள் ஒரு பெண்ணுடன் நிச்சயிக்கப்படுவீர்கள், ஆனால் வேறொருவன் அவளைப் பலாத்காரம் செய்வான். நீங்கள் வீடு கட்டுவீர்கள், ஆனால் அதில் குடியிருக்க மாட்டீர்கள்.+ திராட்சைத் தோட்டம் அமைப்பீர்கள், ஆனால் அதன் பழங்களைச் சாப்பிட மாட்டீர்கள்.+ 31 உங்கள் காளைமாடு உங்களுடைய கண் முன்னால் வெட்டப்படும், ஆனால் அதன் இறைச்சி உங்களுக்குக் கொஞ்சம்கூட கிடைக்காது. உங்கள் கழுதை உங்களுடைய கண் முன்னால் திருடப்படும், ஆனால் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்காது. உங்கள் ஆடுகள் எதிரிகளின் கையில் கொடுக்கப்படும், ஆனால் யாரும் உங்களுடைய உதவிக்கு வர மாட்டார்கள். 32 உங்கள் கண் முன்னால் உங்கள் மகன்களையும் மகள்களையும் வேறு ஆட்கள் பிடித்துக்கொண்டு போவார்கள்.+ அந்தப் பிள்ளைகளுக்காக எப்போதும் ஏங்கிக்கொண்டே இருப்பீர்கள், ஆனால் ஒன்றுமே செய்ய முடியாமல் தவிப்பீர்கள். 33 உங்கள் நிலத்தின் விளைச்சலையும் உழைப்பின் பலனையும் யார் யாரோ அனுபவிப்பார்கள்.+ நீங்கள் எப்போதும் மோசடி செய்யப்படுவீர்கள், அடக்கி ஒடுக்கப்படுவீர்கள். 34 உங்கள் கண் முன்னால் நடப்பதையெல்லாம் பார்த்து பைத்தியம் பிடித்ததுபோல் அலைவீர்கள்.

35 குணப்படுத்த முடியாத கொப்புளங்களை உங்களுடைய தொடைகளிலும் கால்களிலும் யெகோவா வரவைப்பார். அவை உங்களுடைய உச்சந்தலைமுதல் உள்ளங்கால்வரை பரவி, வலி உண்டாக்கும். 36 உங்களுக்கோ உங்கள் முன்னோர்களுக்கோ தெரியாத தேசத்துக்கு உங்களையும் உங்கள் ராஜாவையும் யெகோவா துரத்தியடிப்பார்.+ அங்கே மரத்தாலும் கல்லாலும் உருவாக்கப்பட்ட பொய் தெய்வங்களை வணங்குவீர்கள்.+ 37 யெகோவா உங்களைத் துரத்தியடிக்கிற தேசங்களில் இருக்கிற ஜனங்கள் உங்களுக்கு வந்த கோரமான முடிவைப் பார்த்து ஏளனமாகப் பேசுவார்கள். உங்களைக் கேலியும் கிண்டலும் செய்வார்கள்.+

38 வயலில் ஏராளமாக விதைப்பீர்கள், ஆனால் கொஞ்சம்தான் அறுப்பீர்கள்.+ ஏனென்றால், வெட்டுக்கிளிகள் அவற்றைத் தின்றுதீர்த்துவிடும். 39 திராட்சைத் தோட்டத்தை அமைத்து அதைப் பராமரிப்பீர்கள், ஆனால் உங்களுக்குத் திராட்சமதுவோ திராட்சைப் பழங்களோ கிடைக்காது.+ ஏனென்றால், புழுக்கள் அவற்றைத் தின்றுதீர்த்துவிடும். 40 எல்லா இடங்களிலும் ஒலிவ மரங்கள் வளர்ந்து நிற்கும், ஆனால் உங்கள் உடலில் தேய்க்க ஒலிவ எண்ணெய் இருக்காது. ஏனென்றால், ஒலிவ மரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்துவிடும். 41 மகன்களையும் மகள்களையும் பெற்றெடுப்பீர்கள், ஆனால் அவர்கள் உங்களோடு இருக்க மாட்டார்கள். ஏனென்றால், எதிரிகள் அவர்களைப் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள்.+ 42 பூச்சிகள் படையெடுத்து வந்து உங்களுடைய எல்லா மரங்களையும் செடிகொடிகளையும் மொட்டையாக்கிவிடும். 43 உங்கள் நடுவில் வாழ்கிற மற்ற தேசத்து ஜனங்கள் உயர்ந்துகொண்டே போவார்கள், ஆனால் நீங்கள் தாழ்ந்துகொண்டே போவீர்கள். 44 அவர்களால் உங்களுக்குக் கடன் கொடுக்க முடியும், ஆனால் உங்களால் அவர்களுக்குக் கடன் கொடுக்க முடியாது.+ அவர்கள் உயர்ந்த நிலையில் இருப்பார்கள், ஆனால் நீங்கள் அடிமட்டத்துக்குப் போய்விடுவீர்கள்.+

45 உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்காமலும் அவருடைய கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கடைப்பிடிக்காமலும் போனால்,+ இந்த எல்லா சாபங்களும்+ கண்டிப்பாக உங்கள்மேல் வந்து குவியும். நீங்கள் அழியும்வரை+ அவை உங்களைப் பின்தொடரும், உங்களைவிட்டுப் போகவே போகாது. 46 அவை உங்கள்மேலும் உங்கள் வம்சத்தின் மேலும் நிரந்தர அடையாளமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கும்.+ 47 ஏனென்றால், எல்லாமே உங்களுக்கு ஏராளமாகக் கிடைத்தபோது உங்கள் கடவுளாகிய யெகோவாவை மகிழ்ச்சியோடும் சந்தோஷம் பொங்கும் இதயத்தோடும் நீங்கள் வணங்கவில்லை.+ 48 யெகோவா உங்களுக்கு எதிராக விரோதிகளை அனுப்புவார். உங்களிடம் ஒன்றுமே இல்லாமல், பசியோடும்+ தாகத்தோடும் கிழிந்த துணிமணிகளோடும் அவர்களுக்கு வேலை செய்வீர்கள்.+ அவர் உங்களை அழிக்கும்வரை உங்கள் கழுத்தில் இரும்பு நுகத்தடியை* சுமத்துவார்.

49 பூமியின் ஒரு எல்லையில் இருக்கிற தொலைதூர தேசத்தாரை உங்களுக்கு எதிராக யெகோவா அனுப்புவார்.+ அவர்கள் கழுகைப் போல் வேகமாகப் பாய்ந்து வருவார்கள்.+ அவர்களுடைய மொழி உங்களுக்குப் புரியாது.+ 50 பார்க்கவே அவர்கள் பயங்கரமாக இருப்பார்கள். வயதில் பெரியவர்களுக்கு மதிப்புக் காட்டவோ, வயதில் சிறியவர்களுக்குக் கரிசனை காட்டவோ மாட்டார்கள்.+ 51 நீங்கள் அழியும்வரை உங்களுடைய ஆடுமாடுகளின் குட்டிகளையும் உங்கள் நிலத்தில் விளைகிறவற்றையும் அவர்கள் சாப்பிடுவார்கள். உங்களை ஒழித்துக்கட்டும்வரை தானியத்தையோ புதிய திராட்சமதுவையோ எண்ணெயையோ கன்றுகளையோ ஆட்டுக்குட்டிகளையோ உங்களுக்காக விட்டுவைக்க மாட்டார்கள்.+ 52 உங்கள் தேசத்திலுள்ள எல்லா நகரங்களையும் சுற்றிவளைத்து, வெளியேற வழியில்லாமல் உங்களை அடைத்து வைப்பார்கள். நீங்கள் நம்பியிருக்கிற உயரமான, பலமான மதில்களைத் தரைமட்டமாக்கும்வரை உங்களை வளைத்துக்கொள்வார்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுத்திருக்கிற தேசத்திலுள்ள நகரங்களைவிட்டு வெளியேற முடியாதபடி உங்களைச் சூழ்ந்துகொள்வார்கள்.+ 53 அப்போது நிலைமை படுமோசமாக இருக்கும். எதிரிகள் உங்களை வாட்டி வதைப்பார்கள். பெற்றெடுத்த பிள்ளைகளையே நீங்கள் சாப்பிடுவீர்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா தந்த மகன்களின் சதையையும் மகள்களின் சதையையும் தின்பீர்கள்.+

54 இளகிய மனதுள்ளவனும் சொகுசாக வாழ்ந்தவனும்கூட தன் மகன்களுடைய சதையைத் தின்னும்போது, அண்ணன் தம்பிக்கோ ஆசை மனைவிக்கோ உயிரோடு இருக்கிற மகன்களுக்கோ அதைக் கொடுக்க மாட்டான். அவர்களுக்கு இரக்கம் காட்ட மாட்டான். 55 ஏனென்றால், சாப்பிட அவனிடம் வேறு எதுவும் இருக்காது. எதிரிகள் உங்கள் நகரங்களைச் சுற்றிவளைத்து, உங்களை அந்தளவுக்கு வாட்டி வதைப்பார்கள்.+ 56 இளகிய மனதுள்ளவளும் கால் தரையில் படாத அளவுக்கு சொகுசாக வாழ்ந்தவளும்கூட,+ ஆசை கணவனுக்கோ மகனுக்கோ மகளுக்கோ இரக்கம் காட்ட மாட்டாள். 57 தான் பெற்றெடுக்கிற பிள்ளையையும் பிரசவத்தின்போது வெளியேறுகிற எதையும் அவர்களுக்குக் கொடுக்க மாட்டாள். அவள் மட்டும் ரகசியமாகத் தின்றுதீர்ப்பாள். ஏனென்றால், எதிரிகள் உங்கள் நகரங்களைச் சுற்றிவளைத்து, உங்களை அந்தளவுக்கு வாட்டி வதைப்பார்கள்.

58 இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள திருச்சட்ட வார்த்தைகளை நீங்கள் கவனமாகப் பின்பற்றாமலும்,+ உங்கள் கடவுளாகிய யெகோவாவின்+ மகா அற்புதமான* பெயருக்குப்+ பயப்படாமலும் இருந்தால், 59 உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் பயங்கரமான வேதனைகளையும் தீராத வேதனைகளையும் யெகோவா கொண்டுவருவார்.+ தீராத கொடிய நோய்களை அவர் வர வைப்பார். 60 நீங்கள் எகிப்தில் பார்த்த நோய்கள் எல்லாவற்றையும் உங்கள்மேல் வரவைப்பார். நீங்கள் எந்த நோய்களை நினைத்துப் பயந்து நடுங்கினீர்களோ அதே நோய்கள் நிச்சயமாக உங்களைத் தாக்கும். 61 இந்தத் திருச்சட்ட புத்தகத்தில் எழுதப்படாத எல்லா நோய்களையும் வேதனைகளையும்கூட நீங்கள் அழிந்துபோகும்வரை யெகோவா உங்கள்மேல் கொண்டுவருவார். 62 நீங்கள் வானத்து நட்சத்திரங்களைப் போல் ஏராளமாக இருந்தாலும்,+ உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்காவிட்டால் கொஞ்சநஞ்ச பேர்தான் மிஞ்சுவீர்கள்.+

63 உங்களை ஏராளமாகப் பெருக வைப்பதிலும் சீரும் சிறப்புமாக வாழ வைப்பதிலும் ஒருசமயம் சந்தோஷப்பட்ட யெகோவா, இப்போது உங்களை அழிப்பதிலும் ஒழிப்பதிலும் சந்தோஷப்படுவார். நீங்கள் சொந்தமாக்கப்போகும் தேசத்திலிருந்து யெகோவா உங்களை வேரோடு பிடுங்கி எறிவார்.

64 பூமியின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைவரை இருக்கிற எல்லா தேசங்களிலும் யெகோவா உங்களைச் சிதறிப்போக வைப்பார்.+ அங்கே மரத்தாலும் கல்லாலும் செய்யப்பட்ட பொய் தெய்வங்களைக் கும்பிடுவீர்கள்; உங்களுக்கோ உங்கள் முன்னோர்களுக்கோ தெரியாத தெய்வங்கள் அவை.+ 65 அந்தத் தேசங்களில் உங்களுக்குச் சமாதானம் இருக்காது,+ நீங்கள் குடியிருப்பதற்கு இடம் இருக்காது. யெகோவா உங்கள் இதயத்தைக் கவலையில் கரைய வைப்பார்,+ கண்களைப் பூத்துப்போகச் செய்வார், மனதைப் பதற வைப்பார்.+ 66 உங்களுடைய உயிர் பயங்கர ஆபத்தில் இருக்கும். ராத்திரி பகலாகப் பயத்தில் நடுங்குவீர்கள். தப்பிப்பிழைப்பதே உங்களுக்குக் கேள்விக்குறியாக இருக்கும். 67 காலைநேரத்தில், ‘எப்போது சாயங்காலம் வருமோ!’ என்றும், சாயங்காலத்தில், ‘எப்போது காலைநேரம் வருமோ!’ என்றும் சொல்வீர்கள். உங்கள் இதயத்திலுள்ள திகிலினாலும், கண் முன்னால் நடக்கிற காட்சிகளாலும் அப்படிச் சொல்வீர்கள். 68 ‘நீங்கள் இனி ஒருநாளும் பார்க்க மாட்டீர்கள்’ என்று நான் சொன்ன இடத்துக்கு யெகோவா உங்களைத் திரும்பிப் போகும்படி செய்வார். நீங்கள் கப்பல்களில் எகிப்துக்கே திரும்பிப் போகும்படி செய்வார். அங்கு எதிரிகளிடம் நீங்களே உங்களை அடிமைகளாக விற்க வேண்டிய நிலை வரும், ஆனால் உங்களை விலைக்கு வாங்க யாருமே முன்வர மாட்டார்கள்” என்று சொன்னார்.

29 யெகோவா இஸ்ரவேலர்களுடன் ஓரேபில் செய்த ஒப்பந்தத்தைத்+ தவிர, மோவாப் தேசத்தில் இன்னொரு ஒப்பந்தத்தையும் செய்யும்படி மோசேயிடம் கட்டளை கொடுத்தார். அந்த ஒப்பந்தத்தின் வார்த்தைகள் இவைதான்.

2 மோசே எல்லா இஸ்ரவேலர்களையும் கூப்பிட்டு அவர்களிடம், “பார்வோனுக்கும் அவனுடைய ஊழியர்களுக்கும் எகிப்து தேசத்துக்கும் உங்கள் கண் முன்னால் யெகோவா செய்ததையெல்லாம் நீங்கள் பார்த்தீர்கள்.+ 3 அவர் கொடுத்த கடுமையான தண்டனைகளையும் அவர் செய்த மாபெரும் அதிசயங்களையும் அற்புதங்களையும் உங்கள் கண்களாலேயே பார்த்தீர்கள்.+ 4 ஆனால், நீங்கள் கண்களால் பார்த்தவற்றையும் காதுகளால் கேட்டவற்றையும் புரிந்துகொள்ளும் சக்தியை* இன்றுவரை யெகோவா உங்களுக்குக் கொடுக்கவில்லை.+ 5 அவர் உங்களிடம், ‘வனாந்தரத்தில் 40 வருஷங்களாக நான் உங்களை வழிநடத்தி வந்தபோது+ உங்கள் உடைகள் பழையதாகவும் இல்லை, உங்கள் செருப்புகள் தேயவும் இல்லை.+ 6 நீங்கள் ரொட்டி சாப்பிடவில்லை, திராட்சமதுவோ வேறெந்த மதுவோ குடிக்கவில்லை. நானே உங்கள் கடவுளாகிய யெகோவா என்பதை உங்களுக்குக் காட்டினேன்’ என்று சொன்னார். 7 கடைசியாக, நீங்கள் இங்கே வந்துசேர்ந்தீர்கள். எஸ்போனின் ராஜா சீகோனும்+ பாசானின் ராஜா ஓகும்+ நம்மோடு போர் செய்ய வந்தார்கள், ஆனால் நாம் அவர்களைத் தோற்கடித்தோம்.+ 8 அதன்பின், அவர்களுடைய தேசத்தைக் கைப்பற்றி ரூபன் கோத்திரத்துக்கும், காத் கோத்திரத்துக்கும், மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்கும் சொத்தாகக் கொடுத்தோம்.+ 9 அதனால், இந்த ஒப்பந்தத்தைக் கவனமாகக் கடைப்பிடியுங்கள். அப்போது, நீங்கள் செய்வதெல்லாம் வெற்றி பெறும்.+

10 இன்று உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் உங்களுடைய கோத்திரத் தலைவர்கள், பெரியோர்கள்,* அதிகாரிகள், ஆண்கள், 11 உங்களுடைய பிள்ளைகள், மனைவிகள்+ ஆகிய எல்லாரும் நிற்கிறீர்கள். உங்கள் முகாமில் இருக்கிற மற்ற ஜனங்களும்,+ அதாவது உங்களுக்காக விறகு வெட்டுகிறவர்கள்முதல் தண்ணீர் சுமக்கிறவர்கள்வரை அத்தனை பேரும், உங்களோடு நிற்கிறார்கள். 12 உங்கள் கடவுளாகிய யெகோவா இன்று இந்த ஒப்பந்தத்தை உங்களோடு செய்யப்போகிறார், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்கு உறுதிமொழி கொடுக்கப்போகிறார்.+ 13 கடவுள் உங்களுக்கும் உங்கள் முன்னோர்களான ஆபிரகாம்,+ ஈசாக்கு,+ யாக்கோபு+ ஆகியவர்களுக்கும் வாக்குக் கொடுத்தபடியே இன்று உங்களைத் தன்னுடைய ஜனமாக ஏற்றுக்கொண்டு,+ உங்களுடைய கடவுளாக இருக்கப்போகிறார்.+

14 இந்த ஒப்பந்தத்தையும் உறுதிமொழியையும் அவர் உங்களுடன் மட்டும் செய்வதில்லை. 15 நம் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் இன்று நம்மோடு நிற்கிறவர்களோடும் வருங்காலச் சந்ததிகளோடும்* செய்கிறார். 16 (எகிப்து தேசத்தில் நாம் எப்படி இருந்தோம், மற்ற தேசங்கள் வழியாக எப்படிப் பயணம் செய்தோம்+ என்பதெல்லாம் உங்களுக்கே நன்றாகத் தெரியும். 17 அங்கிருந்த ஜனங்கள் செய்த அருவருப்பான உருவங்களை, அதாவது மரம், கல், வெள்ளி, தங்கம் ஆகியவற்றால் செய்த அருவருப்பான* சிலைகளை,+ நீங்களே பார்த்தீர்கள்.) 18 ஜாக்கிரதை! நம் கடவுளாகிய யெகோவாவை விட்டுவிட்டு அந்த ஜனங்களுடைய தெய்வங்களைத் தேடிப்போய் வணங்கும் அளவுக்கு மோசமான இதயமுள்ள ஆணோ பெண்ணோ குடும்பமோ கோத்திரமோ இன்று உங்கள் நடுவில் இருக்கக் கூடாது.+ விஷப் பழத்தையும் எட்டியையும் முளைப்பிக்கிற வேரைப் போன்றவர்கள் உங்கள் நடுவில் இருக்கக் கூடாது.+

19 ஆனால், இந்த உறுதிமொழியின் வார்த்தைகளைக் கேட்ட பின்பும் ஒருவன் பெருமையோடு, “நான் என் இஷ்டப்படிதான்* நடப்பேன், எனக்கு ஒன்றும் ஆகாது’ என்று உள்ளத்தில் சொல்லிக்கொண்டு, தன் வழியிலுள்ள எல்லாவற்றையும் சீரழித்தால், 20 யெகோவா அவனை மன்னிக்க மாட்டார்.+ யெகோவாவின் கோபம் அவன்மேல் பற்றியெரியும். இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள சாபங்கள் எல்லாமே நிச்சயம் அவன்மேல் வரும்.+ அவனுடைய பெயர் இந்த உலகத்திலேயே இல்லாதபடி யெகோவா செய்துவிடுவார். 21 இந்தத் திருச்சட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் எல்லா சாபங்களையும் இஸ்ரவேல் கோத்திரங்களின் நடுவிலுள்ள அவன்மேல் யெகோவா கொண்டுவருவார்.

22 இந்தத் தேசத்து நிலங்களை யெகோவா அழித்திருப்பதை உங்களுடைய வருங்காலத் தலைமுறையினரும் தொலைதூர தேசத்திலிருந்து வரும் மற்ற தேசத்தாரும் பார்ப்பார்கள். 23 யெகோவா தன்னுடைய கோபத்தாலும் ஆக்ரோஷத்தாலும் சோதோம், கொமோரா,+ அத்மா, செபோயீம்+ ஆகிய இடங்களை அழித்ததுபோல், இந்தத் தேசத்து நிலங்களையெல்லாம் கந்தகத்தாலும் உப்பாலும் நெருப்பாலும் அழித்திருப்பதைப் பார்ப்பார்கள். அவை விதை விதைக்கப்படாமலும், பயிர்கள் முளைக்காமலும், எதுவுமே வளராமலும் கிடப்பதைப் பார்க்கும்போது 24 அவர்களும் எல்லா தேசத்தாரும், ‘இந்தத் தேசத்தை யெகோவா ஏன் அழித்துப்போட்டார்?+ அவருடைய கோபம் இந்தளவு பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன?’ என்று கேட்பார்கள். 25 அதற்கு ஜனங்கள், ‘அவர்களுடைய முன்னோர்களின் கடவுளாகிய யெகோவா அவர்களை எகிப்து தேசத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தபோது செய்த ஒப்பந்தத்தை+ அவர்கள் மீறிவிட்டார்கள்.+ 26 முன்பின் தெரியாத தெய்வங்களை வணங்கக் கூடாது என்று அவர் சொல்லியிருந்தும் அவர்கள் அவற்றை வணங்கினார்கள்.+ 27 அவர்கள்மேல் யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்ததால், இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா சாபங்களையும் கொண்டுவந்தார்.+ 28 யெகோவா பயங்கரமான கோபத்தாலும் ஆக்ரோஷத்தாலும் அவர்களுடைய தேசத்திலிருந்து அவர்களை வேரோடு பிடுங்கி+ வேறொரு தேசத்தில் எறிந்துவிட்டார். அங்குதான் அவர்கள் இப்போது இருக்கிறார்கள்’+ என்று சொல்வார்கள்.

29 ரகசியமாக வைக்கப்படுகிற எல்லா விஷயங்களும் நம் கடவுளாகிய யெகோவாவுக்குத் தெரியும்.+ ஆனால், இந்தத் திருச்சட்டத்திலுள்ள எல்லா வார்த்தைகளின்படியும் நாம் நடக்க வேண்டும் என்பதற்காக, நமக்கும் நம்முடைய சந்ததிகளுக்கும் இந்த விஷயங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்”+ என்று சொன்னார்.

30 பின்பு அவர், “நான் உங்கள் முன்னால் வைத்த ஆசீர்வாதங்களும் சாபங்களும் நிறைவேறும்போது,+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைச் சிதறிப்போக வைக்கும் தேசங்களில்+ அவற்றை நினைத்துப் பார்த்து,+ 2 உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் ஒருவேளை நீங்கள் திரும்பி வரலாம்.+ ஒருவேளை நீங்களும் உங்கள் மகன்களும் இன்று நான் கொடுக்கிற எல்லா கட்டளைகளையும் கேட்டு, முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால்,+ 3 சிறைபிடிக்கப்பட்டிருந்த உங்களை உங்கள் கடவுளாகிய யெகோவா விடுதலை செய்வார்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள்மேல் இரக்கம் காட்டுவார்.+ உங்களைச் சிதறிப்போக வைத்த தேசங்களிலிருந்து மறுபடியும் உங்களைக் கூட்டிச்சேர்ப்பார்.+ 4 நீங்கள் பூமியின் எல்லைக்கே துரத்தப்பட்டிருந்தாலும், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வருவார்.+ 5 உங்களுடைய முன்னோர்கள் சொந்தமாக்கிக்கொண்ட தேசத்துக்கு உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைக் கொண்டுவந்து சேர்ப்பார். நீங்களும் அதைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள். அப்போது அவர் உங்களைச் சீரும் சிறப்புமாக வாழ வைப்பார். நீங்கள் உங்களுடைய முன்னோர்களைவிட ஏராளமாகப் பெருகுவீர்கள்.+ 6 நீங்கள் உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் அன்பு காட்டி, வாழ்வு பெறும்படி,+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுடைய இதயத்தையும் உங்கள் பிள்ளைகளின் இதயத்தையும் சுத்தமாக்குவார்.+ 7 உங்களை வெறுத்து உங்களைப் பாடாய்ப் படுத்திய எதிரிகள்மேல் உங்கள் கடவுளாகிய யெகோவா இந்தச் சாபங்கள் எல்லாவற்றையும் கொண்டுவருவார்.+

8 அப்போது, நீங்கள் யெகோவாவிடம் திரும்பி வந்து அவருடைய பேச்சைக் கேட்பீர்கள். இன்று நான் கொடுக்கிற அவருடைய கட்டளைகள் எல்லாவற்றையும் கடைப்பிடிப்பீர்கள். 9 நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் உங்கள் கடவுளாகிய யெகோவா அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்.+ உங்களுக்கு ஏராளமான பிள்ளைகளையும் மந்தைகளையும் விளைச்சலையும் தருவார். யெகோவா உங்கள் முன்னோர்களை ஆசீர்வதிப்பதில் சந்தோஷப்பட்டது போலவே உங்களை ஆசீர்வதிப்பதிலும் சந்தோஷப்படுவார்.+ 10 அப்போது, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு, இந்தத் திருச்சட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கடைப்பிடிப்பீர்கள். முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் திரும்பி வருவீர்கள்.+

11 நான் இன்று உங்களுக்குக் கொடுக்கிற இந்தக் கட்டளை நீங்கள் கடைப்பிடிக்க முடியாத அளவுக்குக் கஷ்டமானது இல்லை, கண்டுபிடிக்க முடியாத அளவுக்குத் தூரத்திலும் இல்லை.+ 12 ‘பரலோகத்துக்கு ஏறிப்போய் நமக்காக யார் அதைக் கொண்டுவருவார்? அப்போதுதானே அதைக் கேட்டு நடக்க முடியும்’ என்று நீங்கள் சொல்லும் அளவுக்கு அது பரலோகத்திலும் இல்லை,+ 13 ‘கடல் தாண்டிப்போய் நமக்காக யார் அதைக் கொண்டுவருவார்? அப்போதுதானே அதைக் கேட்டு நடக்க முடியும்’ என்று நீங்கள் சொல்லும் அளவுக்கு அது கடலைத் தாண்டியும் இல்லை. 14 அந்த வார்த்தை உங்களுக்கு ரொம்பப் பக்கத்திலேயே இருக்கிறது. உங்கள் வாயிலும் இதயத்திலும் இருக்கிறது.+ அதனால் அதை உங்களால் கடைப்பிடிக்க முடியும்.+

15 இன்று நான் உங்கள் முன்னால் வாழ்வையும் சாவையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன்.+ 16 உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் அன்பு காட்டி,+ அவருடைய வழிகளில் நடந்து, அவருடைய கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் நீதித்தீர்ப்புகளையும் கடைப்பிடித்தால், அதாவது உங்கள் கடவுளாகிய யெகோவா இன்று என் மூலம் கொடுக்கிற கட்டளைகளைக் கேட்டு நடந்தால், வாழ்வு பெறுவீர்கள்.+ ஏராளமாகப் பெருகுவீர்கள். நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளும் தேசத்தில் உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை ஆசீர்வதிப்பார்.+

17 ஆனால் உங்கள் இதயம் அவரைவிட்டு விலகிவிட்டால்,+ அதாவது நீங்கள் அவருடைய பேச்சைக் கேட்காமல் வேறு தெய்வங்கள்மேல் ஆசைப்பட்டு அவற்றை வணங்கினால்,+ 18 நிச்சயம் அழிந்துபோவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.+ நீங்கள் யோர்தானைக் கடந்துபோய் சொந்தமாக்கிக்கொள்ளும் தேசத்தில் ரொம்பக் காலம் வாழ மாட்டீர்கள். 19 இன்று பரலோகத்தையும் பூமியையும் சாட்சியாக வைத்துச் சொல்கிறேன், உங்கள் முன்னால் நான் வாழ்வையும் சாவையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன்.+ நீங்களும் உங்கள் சந்ததிகளும்+ பிழைப்பதற்காக, 20 நீங்கள் உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் அன்பு காட்டி,+ அவருடைய பேச்சைக் கேட்டு நடந்து, அவருக்கு உண்மையாக* இருப்பதன் மூலம்+ வாழ்வைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.+ ஏனென்றால், யெகோவாதான் உங்களுக்கு வாழ்வு தருவார். உங்கள் முன்னோர்களான ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தருவதாக வாக்குக் கொடுத்த தேசத்தில்+ அவர்தான் உங்களை நீண்ட காலம் வாழ வைப்பார்” என்று சொன்னார்.

31 பின்பு மோசே இஸ்ரவேலர்கள் எல்லாரிடமும், 2 “எனக்கு இப்போது 120 வயது.+ இனிமேல் நான் உங்களை வழிநடத்திக்கொண்டு போக முடியாது. ஏனென்றால் நான் யோர்தானைக் கடந்துபோக மாட்டேன் என்று யெகோவா என்னிடம் சொல்லிவிட்டார்.+ 3 உங்கள் கடவுளாகிய யெகோவாதான் உங்கள்முன் யோர்தானைக் கடந்துபோவார். அவர்தான் மற்ற தேசத்து ஜனங்களை உங்கள் கண் முன்னால் அழிப்பார், நீங்கள் அவர்களை விரட்டியடிப்பீர்கள்.+ யெகோவா சொன்னபடியே, யோசுவாவின் தலைமையில் நீங்கள் யோர்தானைக் கடந்துபோவீர்கள்.+ 4 எமோரியர்களின் ராஜாக்களான சீகோனையும்+ ஓகையும்+ அவர்களுடைய தேசத்தையும் யெகோவா எப்படி அழித்தாரோ அதேபோல் இந்தத் தேசத்தாரையெல்லாம் அழிப்பார்.+ 5 உங்களுக்காக யெகோவா அவர்களை வீழ்த்துவார். நான் சொன்னபடியே நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டும்.+ 6 தைரியமாகவும் உறுதியாகவும் இருங்கள்.+ அவர்களைப் பார்த்துப் பயந்து நடுங்காதீர்கள்.+ ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களோடு வருகிறார். அவர் உங்களைவிட்டு விலக மாட்டார், உங்களைக் கைவிடவும் மாட்டார்”+ என்று சொன்னார்.

7 பின்பு மோசே யோசுவாவைக் கூப்பிட்டு, எல்லா இஸ்ரவேலர்களுக்கும் முன்னால் அவரிடம், “நீ தைரியமாகவும் உறுதியாகவும் இரு.+ நம் முன்னோர்களுக்குத் தருவதாக யெகோவா வாக்குக் கொடுத்த தேசத்துக்கு இந்த ஜனங்களை நீதான் கூட்டிக்கொண்டு போக வேண்டும். அந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள அவர்களுக்கு நீதான் உதவி செய்ய வேண்டும்.+ 8 யெகோவா உனக்கு முன்னால் போகிறார், அவர் உன்னோடு இருப்பார்.+ அவர் உன்னைவிட்டு விலக மாட்டார், உன்னைக் கைவிடவும் மாட்டார். அதனால் பயப்படாதே, திகிலடையாதே”+ என்று சொன்னார்.

9 பின்பு, மோசே இந்தத் திருச்சட்டத்தை எழுதி+ யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைச் சுமக்கிற லேவியர்களான குருமார்களிடமும் இஸ்ரவேலின் பெரியோர்கள்* எல்லாரிடமும் கொடுத்தார். 10 மோசே அவர்களிடம், “விடுதலை வருஷமாகிய ஒவ்வொரு ஏழாம் வருஷத்தின் முடிவிலும்,+ கூடாரப் பண்டிகை+ சமயத்தில், 11 உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிற இடத்திலே அவர் முன்னிலையில் இஸ்ரவேலர்கள் எல்லாரும் வர வேண்டும்.+ அவர் குறித்திருக்கிற அந்தச் சமயத்தில், அவர்களுடைய காதில் விழும்படி இந்தத் திருச்சட்டத்தை நீங்கள் வாசிக்க வேண்டும்.+ 12 ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், உங்கள் நகரங்களில் வாழ்கிற மற்ற தேசத்து ஜனங்கள் எல்லாரையும் நீங்கள் ஒன்றுகூட்ட வேண்டும்.+ அப்போதுதான், அவர்கள் உங்கள் கடவுளாகிய யெகோவாவைப் பற்றிக் கேட்டு, கற்றுக்கொண்டு, அவருக்குப் பயந்து நடப்பார்கள். இந்தத் திருச்சட்டத்தில் உள்ள எல்லா வார்த்தைகளையும் கவனமாகக் கடைப்பிடிப்பார்கள். 13 இந்தத் திருச்சட்டத்தைப் பற்றித் தெரியாத அவர்களுடைய மகன்களும் கேட்டுக் கற்றுக்கொள்வார்கள்.+ நீங்கள் யோர்தானைக் கடந்து சொந்தமாக்கிக்கொள்ளும் தேசத்தில் வாழ்நாளெல்லாம் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து நடப்பார்கள்”+ என்று சொன்னார்.

14 அதன்பின் யெகோவா மோசேயிடம், “நீ இறக்கப்போகும் நேரம் வந்துவிட்டது.+ இப்போது பொறுப்பை நான் யோசுவாவுக்குக் கொடுக்க வேண்டும்.+ அவனைச் சந்திப்புக் கூடாரத்துக்குக் கூட்டிக்கொண்டு வா” என்று சொன்னார். அதனால், மோசேயும் யோசுவாவும் சந்திப்புக் கூடாரத்தில் போய் நின்றார்கள். 15 அப்போது, யெகோவா அந்தக் கூடாரத்தின் மேல் மேகத் தூணில் தோன்றினார். அந்த மேகத் தூண் கூடார வாசலில் நின்றது.+

16 யெகோவா மோசேயிடம், “நீ இறக்கப்போகிறாய். இந்த ஜனங்கள், நான் கொடுக்கப்போகிற தேசத்திலுள்ள தெய்வங்களை வணங்கி எனக்குத் துரோகம் செய்வார்கள்.+ என்னைவிட்டு விலகி,+ நான் அவர்களோடு செய்த ஒப்பந்தத்தை மீறுவார்கள்.+ 17 அப்போது, அவர்கள்மேல் என் கோபம் பற்றியெரியும்.+ நான் அவர்களைக் கைவிட்டுவிடுவேன்.+ அவர்கள் அழிந்துபோகும்வரை என் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக்கொள்வேன்.+ அவர்கள் பிரச்சினைகளிலும் கஷ்டங்களிலும் சிக்கித் தவிக்கும்போது,+ ‘நம் கடவுள் நம்மோடு இல்லாததால்தானே இப்படியெல்லாம் கஷ்டப்படுகிறோம்?’ என்று சொல்வார்கள்.+ 18 அவர்கள் பொய் தெய்வங்களை வணங்கி அக்கிரமம் செய்ததால், அந்த நாளில் நான் என் முகத்தை மறைத்துக்கொள்வேன்.+

19 இப்போது நீங்கள் இந்தப் பாடலை எழுதி+ இஸ்ரவேலர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.+ அவர்களை மனப்பாடம் செய்ய வைக்க வேண்டும். இந்தப் பாடல், நான் கொடுத்த எச்சரிக்கைகளை அவர்களுக்கு ஞாபகப்படுத்தும்.+ 20 அவர்களுடைய முன்னோர்களுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்த தேசமாகிய+ பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்கு+ அவர்களை நான் கூட்டிக்கொண்டு வந்த பின்பு, அவர்கள் நன்றாகச் சாப்பிட்டுக் கொழுத்துப்போய் இருக்கும்போது,+ பொய் தெய்வங்களை வணங்கி, என்னை அவமதிப்பார்கள். என் ஒப்பந்தத்தை மீறுவார்கள்.+ 21 அவர்களுக்குப் பிரச்சினைகளும் கஷ்டங்களும் வரும்போது,+ நான் கொடுத்த எச்சரிக்கைகளை இந்தப் பாடல் அவர்களுக்கு ஞாபகப்படுத்தும். (அவர்களுடைய சந்ததிகள் இந்தப் பாடலை மறக்கக் கூடாது.) நான் வாக்குக் கொடுத்த தேசத்துக்கு அவர்களைக் கூட்டிக்கொண்டு போவதற்கு முன்னாலேயே அவர்களுடைய மனம் எப்படி மாறியிருக்கிறது என்று எனக்குத் தெரியும்”+ என்றார்.

22 அதனால், அன்றைக்கு மோசே இந்தப் பாடலை எழுதி இஸ்ரவேலர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.

23 நூனின் மகனாகிய யோசுவாவுக்கு அவர்* பொறுப்பு கொடுத்து,+ “தைரியமாகவும் உறுதியாகவும் இரு.+ இஸ்ரவேலர்களிடம் நான் வாக்குக் கொடுத்த தேசத்துக்கு நீதான் அவர்களைக் கூட்டிக்கொண்டு போக வேண்டும்.+ நான் எப்போதும் உன்னோடு இருப்பேன்” என்று சொன்னார்.

24 இந்தத் திருச்சட்டம் முழுவதையும் மோசே ஒரு புத்தகத்தில் எழுதி முடித்தவுடன்,+ 25 யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைச் சுமக்கிற லேவியர்களிடம், 26 “இந்தத் திருச்சட்ட புத்தகத்தை+ எடுத்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டிக்குப் பக்கத்தில் வையுங்கள்.+ கீழ்ப்படியாதவர்களுக்கு எதிராக இது ஒரு சாட்சியாய் இருக்கும். 27 உங்களுடைய கீழ்ப்படியாத போக்கும்+ பிடிவாத குணமும்+ எனக்கு நன்றாகத் தெரியும். நான் உயிரோடு இருக்கும்போதே நீங்கள் யெகோவாவின் பேச்சை இந்தளவுக்கு மீறுகிறீர்கள் என்றால், நான் இறந்த பின்பு இன்னும் எந்தளவுக்கு மீறுவீர்கள்! 28 உங்கள் கோத்திரத்தைச் சேர்ந்த பெரியோர்களையும் அதிகாரிகளையும் என் முன்னால் கூடிவரச் சொல்லுங்கள். அவர்களுக்கு எதிராகப் பரலோகத்தையும் பூமியையும் சாட்சியாக வைத்து,+ அவர்களுடைய காதில் விழும்படி நான் இந்த வார்த்தைகளைச் சொல்வேன். 29 ஏனென்றால், நான் இறந்த பின்பு நீங்கள் அக்கிரமம் செய்வீர்கள் என்றும் நான் காட்டிய வழியைவிட்டு விலகிப்போவீர்கள்+ என்றும் எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்வீர்கள். உங்களுடைய கைகளின் செயல்களால் அவரைக் கோபப்படுத்துவீர்கள். அதனால், கடைசி காலத்தில் நிச்சயம் உங்களுக்கு அழிவு வரும்”+ என்று சொன்னார்.

30 பின்பு இஸ்ரவேல் சபையாரின் காதில் விழும்படி, மோசே இந்தப் பாடலின் வார்த்தைகளை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை சொன்னார்:+

32 “வானமே,* நான் பேசுவதைக் கேள்.

பூமியே, என் வார்த்தைகளைக் கவனி.

 2 என் அறிவுரைகள் மழைபோல் பொழியும்.

என் வார்த்தைகள் பனிபோல் இறங்கும்.

அவை புல்மேல் விழும் தூறல்போல் இருக்கும்.

பயிர்மேல் கொட்டும் மழைபோல் இருக்கும்.

 3 யெகோவாவின் பெயரை நான் புகழ்வேன்.+

நம் கடவுளுடைய மகத்துவத்தை+ எல்லாருக்கும் சொல்லுங்கள்!

 4 அவர் கற்பாறை போன்றவர், அவருடைய செயல்கள் குறை இல்லாதவை.+

அவருடைய வழிகளெல்லாம் நியாயமானவை.+

அவர் நம்பகமான கடவுள்,+ அநியாயமே செய்யாதவர்.+

அவர் நீதியும் நேர்மையும் உள்ளவர்.+

 5 அவர்கள்தான் தறிகெட்டு நடந்தார்கள்.+

அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல.

குறையெல்லாம் அவர்கள்மேல்தான் இருக்கிறது.+

அவர்கள் சீர்கெட்டும் நெறிகெட்டும் நடக்கிற தலைமுறை!+

 6 அறிவில்லாதவர்களே! முட்டாள்களே!+

யெகோவாவுக்கு இப்படித்தான் நன்றி காட்டுவீர்களோ?+

உங்களுக்கு உயிர் கொடுத்த தகப்பன் அவர்தானே?+

உங்களை உருவாக்கி, உங்களை நிலைநாட்டியவர் அவர்தானே?

 7 பழங்காலத்தை நினைத்துப் பாருங்கள்.

கடந்த தலைமுறைகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.

உங்கள் அப்பாவைக் கேளுங்கள், அவர் சொல்வார்.+

உங்கள் பெரியோர்களை* கேளுங்கள், அவர்கள் விளக்குவார்கள்.

 8 உன்னதமான கடவுள், ஆதாமின் பிள்ளைகளை* தனித்தனியாகப் பிரித்து,+

எல்லாருக்கும் சொத்தைப் பங்குபோட்டபோது,+

இஸ்ரவேலர்களின்+ எண்ணிக்கையை மனதில் வைத்து,

அந்தந்த தேசத்தின் எல்லையைத் தீர்மானித்தாரே.+

 9 யெகோவாவின் ஜனங்கள்தான் அவருடைய செல்வம்.+

யாக்கோபுதான் அவருடைய சொத்து.+

10 அவனை வனாந்தரத்தில்+ அவர் கண்டுபிடித்தார்.

மிருகங்கள் ஓலமிடும் வெறுமையான பாலைவனத்தில்+ அவனைப் பார்த்தார்.

வேலிபோல் அவனைச் சூழ்ந்து நின்று பாதுகாத்தார்,+

கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டார்.

கண்மணிபோல் காத்தார்.+

11 கழுகு தன் குஞ்சுகளைக் கூட்டிலிருந்து கலைத்து,*

அவற்றின் மேல் வட்டமிட்டுப் பறந்து,

பின்பு கீழாக வந்து தன் இறக்கைகளை விரித்து,

சிறகுகளில் அவற்றைச் சுமந்துகொண்டு போவது போல,+

12 யெகோவா ஒருவரே அவனை* சுமந்து வந்தார்.+

வேறு எந்தத் தெய்வமும் அவரோடு இல்லை.+

13 பூமியின் உயர்ந்த இடங்களை அவன் கைப்பற்றும்படி செய்தார்.+

வயலின் விளைச்சலைச் சாப்பிடக் கொடுத்தார்.+

மலையிலிருந்து தேனையும் கற்பாறையிலிருந்து எண்ணெயையும் தந்து போஷித்தார்.

14 பசுமாட்டு வெண்ணெயும் ஆட்டுப் பாலும் ஊட்டினார்.

கொழுத்த செம்மறியாடுகளையும், பாசானின் செம்மறியாட்டுக் கடாக்களையும்,

வெள்ளாட்டுக் கடாக்களையும் தந்தார்.

தரமான கோதுமையைக் கொடுத்தார்.+

திராட்சைப் பழங்களின் ரசத்தை* நீ குடித்தாய்.

15 ஆனால் யெஷுரனே,* நீ கொழுத்தபோது அவரையே எட்டி உதைத்தாய்.

நீ பெருத்துப்போனாய், தடித்துப்போனாய், ஊதிப்போனாய்.+

அதனால் உன்னைப் படைத்த கடவுளைவிட்டே விலகினாய்.+

உன்னுடைய மீட்பின் கற்பாறையை அவமதித்தாய்.

16 பொய் தெய்வங்களை வணங்கி அவருடைய எரிச்சலைக் கிளப்பினாய்.+

அருவருப்பான காரியங்களைச் செய்து அவரைக் கோபப்படுத்தினாய்.+

17 கடவுளுக்குப் பலி செலுத்தாமல், பேய்களுக்குப் பலி செலுத்தினாய்.+

முன்பின் தெரியாத தெய்வங்களுக்கு,

நேற்று முளைத்த தெய்வங்களுக்கு,

உன் முன்னோர்களுக்குத் தெரியாத தெய்வங்களுக்குப் பலி செலுத்தினாய்.

18 கற்பாறைபோல் இருக்கும் உன் கடவுளை மறந்துவிட்டாய்.+

உனக்கு உயிர் கொடுத்தவரை நினைக்கத் தவறிவிட்டாய்.+

19 யெகோவா அதைப் பார்த்தார்.

தன்னுடைய மகன்களும் மகள்களும் தன்னைக் கோபப்படுத்தியதால் அவர்களை உதறித்தள்ளினார்.+

20 பின்பு அவர், ‘என் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக்கொள்வேன்.+

அவர்களுக்கு நடக்கப்போவதைப் பார்ப்பேன்.

அவர்கள் நெறிகெட்ட தலைமுறை.+

உண்மை இல்லாத வம்சம்.+

21 ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை* கும்பிட்டு என் கோபத்தைக் கிளறினார்கள்.+

வீணான சிலைகளை வணங்கி என்னை நோகடித்தார்கள்.+

அதனால், ஒன்றுக்கும் உதவாத ஜனத்தைக்கொண்டு நானும் அவர்களுடைய கோபத்தைக் கிளறுவேன்.+

முட்டாள்தனமான தேசத்தைக்கொண்டு நானும் அவர்களை நோகடிப்பேன்.+

22 என் கோபத் தீ பற்றியெரிகிறது.+

அது கல்லறையின் அடிமட்டத்தையும் சுட்டெரிக்கும்.+

பூமியையும் அதன் விளைச்சலையும் பொசுக்கும்.

மலைகளின் அஸ்திவாரங்களையே கொழுந்துவிட்டு எரிய வைக்கும்.

23 நான் வேதனைக்குமேல் வேதனையைக் கொண்டுவருவேன்.

அவர்கள்மேல் என் அம்புகளை எறிவேன்.

24 பசி அவர்களை வாட்டியெடுக்கும்.+

கடுமையான காய்ச்சலும் பயங்கரமான அழிவும் அவர்களைத் தாக்கும்.+

கொடிய மிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும்.+

நிலத்தில் ஊரும் விஷப் பிராணிகள் அவர்களைக் கடிக்கும்.

25 வாலிபர்களோ கன்னிப்பெண்களோ,

குழந்தைகளோ கிழவர்களோ,+

வெளியே இருக்கிற எல்லாரையும் வாள் வெட்டித்தள்ளும்!+

உள்ளே இருக்கிற எல்லாரையும் திகில் கவ்விக்கொள்ளும்!+

26 நான் உங்களிடம், “உங்களைச் சிதறிப்போக வைத்துவிடுவேன்,

உங்களைப் பற்றிய நினைவே உலகத்தில் இல்லாதபடி செய்துவிடுவேன்” என்று சொல்ல நினைத்தேன்.

27 ஆனால் எதிரிகள் உண்மையைப் புரட்டி,+ “எங்கள் வீரத்தால்தான் ஜெயித்தோம்,+

யெகோவா எதுவும் செய்யவில்லை” என்று பெருமையடிப்பார்களோ என்று நினைத்தேன்.+

அதனால் அப்படிச் சொல்லாமல் விட்டுவிட்டேன்.

28 இஸ்ரவேலர்கள் அறிவில்லாத* ஜனங்கள்,

அவர்களுக்குப் புத்தியே* இல்லை.+

29 அப்படிப் புத்தி இருந்தால்+ இதை யோசித்துப் பார்ப்பார்களே.+

வரப்போகும் கதியை நினைத்துப் பார்ப்பார்களே.+

30 அவர்களுக்குக் கற்பாறைபோல் இருந்தவர் அவர்களைக் கைவிட்டுவிட்டார்.+

யெகோவா அவர்களை எதிரிகளின் கையில் கொடுத்துவிட்டார்.

அதனால்தான் அவர்களில் ஆயிரம் பேரை ஒருவனால் விரட்ட முடிந்தது.

அவர்களில் பத்தாயிரம் பேரை வெறும் இரண்டு பேரால் துரத்த முடிந்தது.+

31 (அவர்களுடைய கடவுள்* நம்முடைய கடவுளுக்கு* ஈடாக முடியாது.+

நம்முடைய எதிரிகளுக்கும் இது தெரியும்.+)

32 அவர்களுடைய திராட்சைக் கொடி சோதோமின் திராட்சைக் கொடி,

கொமோராவின் தோட்டங்களில் விளைந்த திராட்சைக் கொடி.+

அவர்களுடைய திராட்சைப் பழங்கள் விஷம் நிறைந்தவை.

அவர்களுடைய திராட்சைக் குலைகள் கசப்பானவை.+

33 அவர்களுடைய திராட்சமது பாம்புகளின் விஷம்,

அது நாகப்பாம்புகளின் கொடிய நஞ்சு.

34 இதையெல்லாம் நான் முத்திரைபோட்டு மூடியிருக்கிறேன்.

என் களஞ்சியத்தில் அடைத்து வைத்திருக்கிறேன்.+

35 பழிவாங்குவதும் பழிதீர்ப்பதும் என் பொறுப்பு.+

குறித்த நேரத்தில் அவர்கள் தடுக்கி விழுவார்கள்.+

அவர்களுடைய அழிவு நாள் நெருங்கிவிட்டது.

அவர்களுக்கு நடக்க வேண்டியதெல்லாம் சீக்கிரத்தில் நடக்கும்’ என்று சொன்னார்.

36 யெகோவா தன்னுடைய ஜனங்களுக்குத் தீர்ப்பு கொடுப்பார்.+

தன்னுடைய ஊழியர்களின் பலம் குறைந்துவிட்டதைப் பார்க்கும்போதும்,

ஆதரவற்றவர்களும் அற்பமானவர்களும் மட்டுமே மீந்திருப்பதைப் பார்க்கும்போதும்,

அவர் பரிதாபப்படுவார்.+

37 அப்போது அவர், ‘அவர்களுடைய தெய்வங்கள் எங்கே?+

அவர்கள் அடைக்கலம் தேடிய கற்பாறை எங்கே?

38 அவர்களுடைய பலிகளின் கொழுப்பைத் தின்ற தெய்வங்கள் எங்கே?

அவர்கள் செலுத்திய திராட்சமதுவைக் குடித்த தெய்வங்கள் எங்கே?+

அவை வந்து அவர்களுக்கு* உதவி செய்யட்டும்.

அவை அவர்களுக்குப் பாதுகாப்பு தரட்டும்.

39 நான் மட்டும்தான் கடவுள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.+

என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.+

உயிர் கொடுக்கிறவரும் உயிர் எடுக்கிறவரும் நானே.+

காயப்படுத்துகிறவரும்+ குணப்படுத்துகிறவரும் நானே.+

என் கையிலிருந்து யாரையும் யாராலும் காப்பாற்ற முடியாது.+

40 என் கையை உயர்த்தி,*

“என்றென்றும் வாழ்கிற என்மேல்” ஆணையாகச் சொல்கிறேன்,*+

41 என்னுடைய பளபளப்பான வாளைத் தீட்டுவேன்.

தீர்ப்பு கொடுப்பதற்குத் தயாராவேன்.+

என் எதிரிகளைப் பழிவாங்குவேன்.+

என்னை வெறுக்கிறவர்களைப் பழிதீர்ப்பேன்.

42 எதிரிகளுடைய தலைவர்களின் தலைகளை

என் வாள் விழுங்கும்.

வெட்டப்பட்டவர்களின் இரத்தத்தையும், சிறைபிடிக்கப்பட்டவர்களின் இரத்தத்தையும்

என் அம்புகள் குடிக்கும்’ என்று சொல்வார்.

43 தேசங்களே, அவருடைய ஜனங்களோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள்.+

ஏனென்றால், அவருடைய ஊழியர்களின் இரத்தத்துக்காக அவர் பழிவாங்குவார்.+

எதிரிகளுக்குப் பதிலடி தருவார்.+

தன்னுடைய ஜனங்களின் தேசத்தைச் சுத்திகரிப்பார்.”

44 மோசே இந்தப் பாடல் வரிகளை ஜனங்களுடைய காதில் விழும்படி சொன்னார்.+ நூனின் மகன் ஓசெயாவும்*+ அவரோடு இருந்தார். 45 இஸ்ரவேலர்கள் எல்லாரிடமும் இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபின், 46 மோசே அவர்களிடம், “இன்று நான் கொடுக்கும் எச்சரிக்கையை இதயத்தில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.+ இந்தத் திருச்சட்டத்தின்படி நடக்க வேண்டுமென்று உங்களுடைய மகன்களுக்குக் கட்டளை கொடுங்கள்.+ 47 இவையெல்லாம் வெற்று வார்த்தைகள் அல்ல, வாழ்வு தரும் வார்த்தைகள்.+ இவற்றின்படி நடந்தால், நீங்கள் யோர்தானைக் கடந்துபோய் சொந்தமாக்கப்போகிற தேசத்தில் நீடூழி வாழ்வீர்கள்” என்று சொன்னார்.

48 அதே நாளில் யெகோவா மோசேயிடம், 49 “மோவாப் தேசத்தில், எரிகோவைப் பார்த்தபடி இருக்கிற இந்த அபாரீம் மலைத்தொடரிலுள்ள+ நேபோ மலைக்கு+ நீ ஏறிப்போ. நான் இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்போகிற கானான் தேசத்தை+ அங்கிருந்து பார். 50 ஓர் என்ற மலையில் உன் அண்ணன் ஆரோன் இறந்தது போல,+ நேபோ மலையில் நீயும் இறந்துபோவாய்.* 51 ஏனென்றால், சீன் வனாந்தரத்திலுள்ள காதேசில் இருக்கிற மேரிபாவின் தண்ணீர் விஷயத்தில், நீங்கள் இரண்டு பேரும் இஸ்ரவேலர்களின் முன்னால் எனக்கு உண்மையாக நடக்கவில்லை,+ என்னை மகிமைப்படுத்தவில்லை.+ 52 இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் தருகிற தேசத்தை நீ தூரத்திலிருந்துதான் பார்ப்பாய், அதற்குள் நீ போக மாட்டாய்”+ என்று சொன்னார்.

33 உண்மைக் கடவுளின் ஊழியராகிய மோசே தான் இறப்பதற்கு முன்பு இஸ்ரவேலர்களை ஆசீர்வதித்தார்.+ 2 அப்போது அவர்,

“சீனாயிலிருந்து யெகோவா வந்தார்.+

சேயீரிலிருந்து அவர்கள்மேல் ஒளிவீசினார்.

லட்சக்கணக்கான பரிசுத்த தூதர்கள் அவரோடு இருந்தார்கள்.+

அவருடைய வலது பக்கத்தில் அவருடைய போர்வீரர்கள் இருந்தார்கள்.+

பாரான் மலைப்பகுதியிலிருந்து அவர் மகிமையில் பிரகாசித்தார்.+

 3 அவருடைய ஜனங்கள்மேல் பாசம் காட்டினார்.+

பரிசுத்தமான அந்த ஜனங்கள் எல்லாரும் அவருடைய கையில் இருக்கிறார்கள்.+

அவருடைய காலடியில் அவர்கள் உட்கார்ந்தார்கள்.+

அவருடைய வார்த்தைகளைக் கேட்க ஆரம்பித்தார்கள்.+

 4 (மோசே நமக்குக் கட்டளையையும் சட்டத்தையும் கொடுத்தார்.+

அது யாக்கோபின் சபையாருடைய சொத்து.)+

 5 ஜனங்களின் தலைவர்களும் இஸ்ரவேல் கோத்திரத்தார்+ எல்லாரும் ஒன்றுகூடி வந்தபோது,+

கடவுள் யெஷுரனில்*+ ராஜாவானார்.

 6 ரூபன் சாகாமல் என்றும் வாழட்டும்.+

அவனுடைய வம்சம் குறையாமல் பெருகட்டும்”+ என்று சொன்னார்.

 7 பின்பு மோசே யூதாவை ஆசீர்வதித்து,+

“யெகோவாவே, யூதாவின் குரலைக் கேளுங்கள்.+

அவனுடைய ஜனங்களிடமே அவனைத் திரும்பி வரச் செய்யுங்கள்.

அவன் தனக்குச் சொந்தமானதைக் காப்பாற்ற தன் கைகளால் போராடினான்.

எதிரிகளைத் தோற்கடிக்க அவனுக்கு உதவி செய்யுங்கள்”+ என்று சொன்னார்.

 8 பின்பு லேவியைப் பற்றி,+

“கடவுளே, உங்களுக்கு உண்மையாக* இருக்கிறவனிடம்+ உங்களுடைய தும்மீமையும், ஊரீமையும் கொடுத்தீர்கள்.+

அவனை மாசாவில் சோதித்துப் பார்த்தீர்கள்.+

மேரிபாவின் தண்ணீருக்குப் பக்கத்தில் அவனோடு வழக்காடினீர்கள்.+

 9 அவன் தன்னுடைய அப்பா அம்மாவை மதிக்கவில்லை.

தன்னுடைய சகோதரர்களின் பக்கம் சாயவில்லை.+

சொந்த பிள்ளைகளையும் சட்டை பண்ணவில்லை.

அவர்கள் உங்களுடைய வார்த்தைகளைக் கடைப்பிடித்தார்கள்.

உங்களுடைய ஒப்பந்தத்தை மதித்தார்கள்.+

10 உங்கள் நீதித்தீர்ப்புகளை+ அவர்கள் யாக்கோபுக்குச் சொல்லித்தரட்டும்.

உங்களுடைய திருச்சட்டத்தை இஸ்ரவேலுக்குக் கற்றுக்கொடுக்கட்டும்.+

உங்களுக்கு வாசனையான தூபத்தைக் காட்டட்டும்.+

உங்களுடைய பலிபீடத்தில் தகன பலி செலுத்தட்டும்.+

11 யெகோவாவே, அவனுக்கு நிறைய பலம் கொடுங்கள்.

அவன் செய்வதையெல்லாம் பார்த்து சந்தோஷப்படுங்கள்.

அவனுக்கு எதிராகக் கிளம்புகிறவர்களுடைய கால்களை ஒடித்துப்போடுங்கள்.

அவர்கள் மறுபடியும் எழுந்திருக்க முடியாதபடி செய்துவிடுங்கள்” என்று சொன்னார்.

12 பின்பு பென்யமீனைப் பற்றி,+

“யெகோவாவுக்குப் பிரியமானவன், அவனுடைய* பாதுகாப்பு நிழலில் தங்கியிருக்கட்டும்.

நாள் முழுக்க அவன்* அவனுக்குத் தஞ்சம் தரட்டும்.

அவனைத் தன் தோள்களில் சுமக்கட்டும்” என்று சொன்னார்.

13 பின்பு யோசேப்பைப் பற்றி,+

“அவனுடைய தேசம் யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்படட்டும்.+

வானத்திலிருந்து பனித்துளியும் ஆசீர்வாதங்களும் அங்கே பொழியட்டும்.

ஆழத்திலிருந்து ஊற்றுகள் பொங்கி எழட்டும்.+

14 சூரிய வெளிச்சத்தில் அழகான செடிகொடிகள் முளைக்கட்டும்.

ஒவ்வொரு மாதமும் நல்ல விளைச்சல் கிடைக்கட்டும்.+

15 என்றென்றுமுள்ள* மலைகள் வளங்களை வாரி இறைக்கட்டும்.+

அழியாத குன்றுகள் பொக்கிஷங்களைக் கொடுக்கட்டும்.

16 பூமி எல்லா செல்வங்களையும் தரட்டும்.+

முட்புதரில் தோன்றிய கடவுள்+ ஆசீர்வாதம் பொழியட்டும்.

எல்லாமே யோசேப்பின் தலைமேல் இறங்கட்டும்.

சகோதரர்களில் விசேஷமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவனின் உச்சந்தலைமேல் வரட்டும்.+

17 அவனுடைய கம்பீரம் காளையின் முதல் கன்றைப் போன்றது.

அவனுடைய கொம்புகள் காட்டு எருதின் கொம்புகள் போன்றவை.

அவற்றால் ஜனங்களை அவன் முட்டி மோதுவான்,

அவர்கள் எல்லாரையும் பூமியெங்கும் விரட்டியடிப்பான்.

அந்தக் கொம்புகள்தான் எப்பிராயீமின் பத்தாயிரக்கணக்கான வீரர்கள்.+

அந்தக் கொம்புகள்தான் மனாசேயின் ஆயிரக்கணக்கான வீரர்கள்” என்று சொன்னார்.

18 பின்பு செபுலோனைப் பற்றி,+

“செபுலோனே, நீ வெளியே போகும்போது* சந்தோஷப்படு.

இசக்காரே, நீ கூடாரங்களில் தங்கியிருக்கும்போது சந்தோஷப்படு.+

19 அவர்கள் ஜனங்களை மலைக்கு அழைப்பார்கள்.

நீதியின் பலிகளைச் செலுத்துவார்கள்.

ஏனென்றால், ஆழ்கடலின் செல்வங்களையும்

மண்ணுக்குள் மறைந்திருக்கும் புதையல்களையும்

அவர்கள் அனுபவிப்பார்கள்” என்று சொன்னார்.

20 பின்பு காத்தைப் பற்றி,+

“காத்தின் எல்லைகளை+ விரிவாக்குகிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.

அவன் சிங்கத்தைப் போலப் பதுங்கியிருப்பான்.

கையையும் உச்சந்தலையையும் கடித்துக் குதறிப்போடக் காத்திருப்பான்.

21 முதல் பங்கை அவனே எடுத்துக்கொள்வான்.+

சட்டம் கொடுப்பவர் அதைத்தான் அவனுக்காக ஒதுக்கியிருந்தார்.+

அவனுடைய ஜனங்களின் தலைவர்கள் ஒன்றுகூடுவார்கள்.

யெகோவாவின் சார்பாக அவன் நீதி செய்வான்.

இஸ்ரவேலில் அவருடைய நீதித்தீர்ப்புகளை நிறைவேற்றுவான்” என்று சொன்னார்.

22 பின்பு தாணைப் பற்றி,+

“தாண் ஒரு சிங்கக்குட்டி,+

பாசானிலிருந்து பாய்ந்து வரும் சிங்கக்குட்டி”+ என்று சொன்னார்.

23 பின்பு நப்தலியைப் பற்றி,+

“நப்தலி யெகோவாவின் பிரியத்தைப் பெற்று, திருப்தியாக இருக்கிறான்.

அவருடைய ஆசீர்வாதத்தை நிறைவாகப் பெற்றிருக்கிறான்.

மேற்கையும் தெற்கையும் நீ சொந்தமாக்கிக்கொள்” என்று சொன்னார்.

24 பின்பு ஆசேரைப் பற்றி,+

“ஆசேருக்குக் கடவுள் நிறைய மகன்களைத் தந்து ஆசீர்வதிக்கட்டும்.

அவனுடைய சகோதரர்கள் அவனிடம் பிரியமாக இருக்கட்டும்.

அவன் தன்னுடைய பாதங்களை எண்ணெயில் கழுவட்டும்.”*

25 இரும்பும் செம்பும் உன் கதவின் தாழ்ப்பாள்கள்.+

காலமெல்லாம் நீ பாதுகாப்போடு இருப்பாய்.

26 யெஷுரனின்+ உண்மைக் கடவுளைப் போல யாரும் இல்லை.+

உனக்கு உதவி செய்ய அவர் வானத்தில் பவனி வருகிறார்.

மகிமையோடு மேகத்தில் உலா வருகிறார்.+

27 பழங்காலத்திலிருந்தே கடவுள் உன் கோட்டை.+

அவருடைய கைகள் என்றென்றும் உன்னைத் தாங்குகின்றன.+

உன் எதிரியை உன் கண் முன்னால் அவர் துரத்திவிடுவார்.+

‘அவர்களை ஒழித்துக்கட்டு!’ என்று சொல்வார்.+

28 இஸ்ரவேல் பாதுகாப்பாகத் தங்குவான்.

தானியமும் புதிய திராட்சமதுவும் நிறைந்த தேசத்திலே,+

பனி பொழியும் தேசத்திலே,+

யாக்கோபின் வம்சம்* மட்டும் இருக்கும்.

29 இஸ்ரவேலே, நீ சந்தோஷமானவன்.+

உன்னைப் போல் யாரும் இல்லை.+

யெகோவாவினால் மீட்கப்படுகிற ஜனம் நீ.+

உன்னைக் காக்கும் கேடயம் அவர்தான்.+

உன்னுடைய வீர வாளும் அவர்தான்.

உன் எதிரிகள் உன் முன்னால் அடங்கி ஒடுங்கி நிற்பார்கள்.+

நீ அவர்களுடைய முதுகில்* ஏறி மிதிப்பாய்” என்று சொன்னார்.

34 பின்பு, மோசே மோவாபின் பாலைநிலத்திலிருந்து, எரிகோவைப் பார்த்தபடி+ இருக்கிற நேபோ மலைக்கு,+ அதாவது பிஸ்காவின் உச்சிக்கு,+ ஏறிப்போனார். அப்போது, யெகோவா அவருக்கு முழு தேசத்தையும் காட்டினார். கீலேயாத்திலிருந்து தாண்+ வரையும், 2 நப்தலி முழுவதையும், எப்பிராயீம் மற்றும் மனாசே என்பவர்களுடைய தேசத்தையும், மேற்குக் கடல்* வரையில் இருக்கிற யூதா தேசம் முழுவதையும்,+ 3 நெகேபையும்,+ யோர்தான் பிரதேசத்தையும்,+ அதாவது பேரீச்ச மரங்கள் நிறைந்த எரிகோ நகரத்தின் சமவெளியிலிருந்து சோவார் வரையில்+ இருக்கிற முழு பகுதியையும், காட்டினார்.

4 யெகோவா அவரிடம், “‘உன் சந்ததிக்குக் கொடுப்பேன்’+ என்று சொல்லி, ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் நான் வாக்குக் கொடுத்த தேசம் இதுதான். இதை உன் கண்களாலேயே பார்க்கும் பாக்கியத்தை உனக்குக் கொடுத்திருக்கிறேன், ஆனால் நீ அங்கு போக மாட்டாய்”+ என்று சொன்னார்.

5 அதன்பின் யெகோவாவின் ஊழியராகிய மோசே, மோவாப் தேசத்திலுள்ள அந்த இடத்தில் யெகோவா சொன்னது போலவே இறந்துபோனார்.+ 6 மோவாப் தேசத்தில் பெத்-பேயோருக்கு எதிரில் இருக்கிற பள்ளத்தாக்கில் கடவுள் அவரை அடக்கம் செய்தார். அவருடைய பிரேதக்குழி இன்றுவரை யாருக்கும் தெரியாது.+ 7 சாகும்போது மோசேக்கு 120 வயது.+ அந்த வயதிலும் அவருடைய பார்வை மங்கவோ அவருடைய பலம் குறையவோ இல்லை. 8 இஸ்ரவேலர்கள் மோசேக்காக மோவாப் பாலைநிலத்தில் 30 நாட்கள் அழுதார்கள்.+ அதன்பின், அவர்கள் மோசேக்காகத் துக்கம் அனுசரித்த நாட்கள் முடிவுக்கு வந்தன.

9 மோசே தன் கைகளை நூனின் மகனாகிய யோசுவாவின் மேல் வைத்து அவரை நியமித்திருந்ததால், யோசுவா கடவுளுடைய சக்தியாலும் ஞானத்தாலும் நிறைந்திருந்தார்.+ இஸ்ரவேலர்கள் அவருடைய பேச்சைக் கேட்டு நடந்தார்கள். மோசே மூலம் யெகோவா கொடுத்திருந்த கட்டளைகளின்படியே செய்தார்கள்.+ 10 யெகோவா மிக நன்றாக* தெரிந்து வைத்திருந்த+ மோசேயைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலில் இருந்ததே இல்லை.+ 11 எகிப்துக்குப் போய், பார்வோனுக்கும் அவனுடைய எல்லா ஊழியர்களுக்கும் அவனுடைய முழு தேசத்துக்கும் எதிராக யெகோவா செய்யச் சொன்ன எல்லா அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்து,+ 12 இஸ்ரவேலர்களின் கண்களுக்கு முன்பாக கைபலத்தையும் பிரமிக்க வைக்கிற வல்லமையையும் காட்டியவர் அவர்தான்.+

அல்லது, “அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாழ்ந்துவந்த பாசானின் ராஜாவான ஓகை வீழ்த்திய பின்பும்.”

அநேகமாக, “லீபனோன் மலைத்தொடர்.”

அதாவது, “ஐப்பிராத்து.”

அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கை.”

வே.வா., “உளவு பார்ப்பதற்காக.”

அல்லது, “கடவுள் அவனைப் பலப்படுத்தியிருக்கிறார்.”

இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.

வே.வா., “அவர்களுடைய கோபத்தைத் தூண்டக் கூடாது.”

அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கை.”

அதாவது, “கிரேத்தாவிலிருந்து.”

அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கை.”

வே.வா., “பிரசவ வேதனைப்படுவதுபோல் வேதனைப்படுவார்கள்.”

அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கின்.”

அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கிலிருந்து.”

பீடபூமி என்பது மேடாக இருக்கிற பரந்த நிலப்பகுதி.

அல்லது, “கருங்கல்லினால்.”

ஒரு முழம் என்பது 44.5 செ.மீ. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கின்.”

அர்த்தம், “யாவீரின் கிராமங்கள்.”

அதாவது, “சவக் கடலாகிய.”

வே.வா., “புரிந்துகொள்ளுதலும்.”

வே.வா., “கொடுக்கிற முழு திருச்சட்டத்திலும் உள்ளதைப் போன்ற.”

பீடபூமி என்பது மேடாக இருக்கிற பரந்த நிலப்பகுதி.

வே.வா., “நினைப்பூட்டுதல்களும்.”

அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கின்.”

அதாவது, “உப்புக் கடல்; சவக் கடல்.”

வே.வா., “என்னை மீறி.”

அதாவது, “ஆண் அடிமையையும், பெண் அடிமையையும்.”

வே.வா., “மூப்பர்களையும்.”

வே.வா., “பிள்ளைகளிடம் திரும்பத் திரும்பச் சொல்லவும் வேண்டும்.”

வே.வா., “நிலத்தடி தண்ணீர்த் தொட்டிகளையும்.”

வே.வா., “நினைப்பூட்டுதல்களையும்.”

வே.வா., “நினைப்பூட்டுதல்களையும்.”

சொல் பட்டியலைப் பாருங்கள்.

அல்லது, “பீதியடைய.”

வே.வா., “கண்ணியில்.”

நே.மொ., “ரொட்டியால்.”

நே.மொ., “விரலால்.”

வே.வா., “அநாதைக்கும்.”

வே.வா., “கால்களால்.” இங்கே, கால்களால் நீர்விசைச் சக்கரத்தை இயக்குவதையோ வாய்க்கால்களை அமைப்பதையோ குறிக்கிறது.

நே.மொ., “நான் செய்வேன்.” இந்த வசனத்திலும் அடுத்த வசனத்திலும் “அவர்” என்பது கடவுளைக் குறிக்கிறது.

அதாவது, “ஐப்பிராத்து.”

அதாவது, “பெருங்கடல்; மத்தியதரைக் கடல்.”

வே.வா., “கொடுக்க.”

சொல் பட்டியலைப் பாருங்கள்.

அதாவது, “வேட்டையாடப்பட்டு வீட்டில் சாப்பிடப்படும் மான் போன்ற விலங்குகளின் இறைச்சியை.”

12:15-ன் அடிக்குறிப்பைப் பாருங்கள்.

இது புருவத்தையும் உட்படுத்தலாம்.

இது கற்பாறைகளுக்கு நடுவே வாழ்கிற ஒருவகையான பெரிய முயல்.

வே.வா., “தசமபாகத்தை.”

வே.வா., “அநாதையும்.”

12:15-ன் அடிக்குறிப்பைப் பாருங்கள்.

இணைப்பு B15-ஐப் பாருங்கள்.

வே.வா., “அநாதைகளும்.”

சொல் பட்டியலைப் பாருங்கள்.

இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.

வே.வா., “சுருளை.”

வே.வா., “உள்ளத்தில் பெருமையோடு.”

அதாவது, “அவருடைய வணக்கத்தின் மையமாக அவர் தேர்ந்தெடுக்கிற இடத்துக்கு.”

நே.மொ., “நெருப்பைக் கடக்க வைக்க.”

இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.

அதாவது, “கொலை செய்யப்பட்டவனின் நெருங்கிய சொந்தக்காரன்.”

வே.வா., “இரத்தப்பழியும்.”

வே.வா., “மூப்பர்கள்.”

வே.வா., “அப்பாவியின் இரத்தப்பழியை.”

வே.வா., “திறப்பு விழா நடத்தாமல்.”

வே.வா., “எல்லா உயிர்களையும்.”

வே.வா., “மூப்பர்களும்.”

வே.வா., “இரத்தப்பழி.”

வே.வா., “அவளை அவமானப்படுத்திவிட்டான்.”

வே.வா., “அவனுடைய ஆண்மையின் முதல் பலன்.”

வே.வா., “இரத்தப்பழி.”

அதாவது, “லினனையும்.”

வே.வா., “தொங்கல்கள்.”

வே.வா., “மூப்பர்களிடம்.”

ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

வே.வா., “விபச்சாரம் செய்திருக்கிறாள்.”

வே.வா., “நிராகரித்து.”

வே.வா., “திரிகைக் கல்லின்.”

வே.வா., “உயிரையே.”

இதற்கான எபிரெய வார்த்தை, பலவிதமான தோல் நோய்களைக் குறிக்கலாம். துணிமணிகளிலும் வீடுகளிலும் பரவுகிற பூஞ்சணத்தைக்கூட குறிக்கலாம்.

வே.வா., “அநாதையின்.”

வே.வா., “நீதிமானை.”

அதாவது, “கணவனின் அண்ணனுடைய அல்லது தம்பியுடைய.”

வே.வா., “இறந்தவனின் பெயர் நிலைத்திருக்கும்படி செய்வான்.”

வே.வா., “மூப்பர்களிடம்.”

அதாவது, “கணவனின் அண்ணனுடைய அல்லது தம்பியுடைய.”

வே.வா., “சரியானதும் போலியானதுமான.”

அல்லது, “ஆபத்தான சூழ்நிலைகளில்.”

வே.வா., “அநாதைகளுக்கும்.”

வே.வா., “மூப்பர்களுடன்.”

வே.வா., “சுண்ணாம்பினால் வெள்ளையடியுங்கள்.”

வே.வா., “சுண்ணாம்பினால் வெள்ளையடிக்க.”

வே.வா., “ஆசாரியின்.”

அதாவது, “அப்படியே ஆகட்டும்!”

வே.வா., “அநாதைக்கோ.”

அதாவது, “கூடையில் தானியமும் பாத்திரத்தில் மாவும் எப்போதுமே நிரம்பி வழியும்.”

அதாவது, “வானம் மழை பொழியாது, பூமி வறண்டுபோகும்.”

இரும்பு நுகத்தடி என்பது கடுமையான அடிமைத்தனத்தைக் குறிக்கிறது.

வே.வா., “யெகோவாவின் மகிமையான, பயபக்தியூட்டுகிற.”

வே.வா., “ஆனால், புரிந்துகொள்கிற இதயத்தையும், பார்க்கிற கண்களையும், கேட்கிற காதுகளையும்.”

வே.வா., “மூப்பர்கள்.”

நே.மொ., “நம்மோடு இல்லாதவர்களோடும்.”

இதற்கான எபிரெய வார்த்தை “சாணம்” என்ற வார்த்தையோடு தொடர்புடையதாக இருக்கலாம். வெறுப்பைக் காட்டுவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது.

வே.வா., “என் இதயம் போகிற போக்கில்தான்.”

நே.மொ., “அவரைப் பற்றிக்கொண்டு.”

வே.வா., “மூப்பர்கள்.”

அநேகமாக, “கடவுள்.”

வே.வா., “பரலோகமே.”

வே.வா., “மூப்பர்களை.”

அல்லது, “மனித இனத்தை.”

வே.வா., “கழுகு தன் குஞ்சுகளுக்குப் பறக்கக் கற்றுக்கொடுக்கும்போது.”

அதாவது, “யாக்கோபை.”

நே.மொ., “இரத்தத்தை.”

இந்தப் பெயரின் அர்த்தம், “நேர்மையானவன்”; இது இஸ்ரவேலின் கௌரவப் பட்டம்.

வே.வா., “தெய்வமே இல்லாத ஒன்றை.”

அல்லது, “புத்திமதியைக் கேட்காத.”

வே.வா., “புரிந்துகொள்ளுதலே.”

நே.மொ., “கற்பாறை.”

நே.மொ., “கற்பாறைக்கு.”

நே.மொ., “உங்களுக்கு.”

நே.மொ., “பரலோகத்துக்கு நேராக உயர்த்தி.”

அதாவது, “நான் என்றென்றும் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”

இதுதான் முதலில் யோசுவாவின் பெயர். ஓசி 1:1-ன் அடிக்குறிப்பைப் பாருங்கள்.

நே.மொ., “உன் முன்னோர்களுடன் சேர்க்கப்படுவாய்.” எபிரெயுவில் கவிதை நடையிலுள்ள இந்த வார்த்தைகள் மரணத்தைக் குறிக்கின்றன.

இந்தப் பெயரின் அர்த்தம், “நேர்மையானவன்”; இது இஸ்ரவேலின் கௌரவப் பட்டம்.

வே.வா., “பற்றுமாறாமல்.”

அல்லது, “அவருடைய.”

அல்லது, “அவர்.”

அல்லது, “கிழக்கிலுள்ள.”

வே.வா., “நீ வியாபாரம் செய்யும்போது.”

வே.வா., “நனைக்கட்டும்.”

நே.மொ., “ஊற்று.”

அல்லது, “மலைகளை.”

அதாவது, “பெருங்கடல்; மத்தியதரைக் கடல்.”

வே.வா., “நேருக்கு நேர்.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்